SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமாயணம் எனும் வாழ்வியல் நெறி!

2018-04-21@ 10:26:22

மயக்கும் தமிழ் - 44

திவ்யப் பிரபந்தம் என்றாலே அழகான அற்புதக் கருத்துக்களை உடைய எளிய இனிய தமிழ். நம்மையெல்லாம் காத்து ரட்சிக்கும் பாசுரம். அந்த மாயங்கள் புரிகிற  மாதவனின் பெருமையை அவனுடைய அற்புத விளையாட்டுக்களை ரசித்து ருசித்து ஆழ்வார்கள் அனுபவித்து நமக்கு அந்த பேரின்பத்தைத் தந்திருக்கிறார்கள்.  திருமழிசையாழ்வாரின் ஓர் அபாரமான பாசுரம் எத்தகைய துள்ளல் நடையில் அமைந்திருக்கிறது. அவருடைய திருச்சந்த விருத்தம் என்ற பகுதியில் வருகிற ஒரு  பாசுரத்தைப் பார்ப்போம்...

‘‘சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து
தோன்றினான்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல
வல்லரே?’’

‘சொல் என்று ஆழ்வார் சொல்வது வேதங்களை. வேதங்களின் தொடர்ச்சி நீ என்று எம்பெருமானை பணிந்து வணங்கி தொழுது சொல்கிறார். நீ வேதங்களின்  தொடர்ச்சி மட்டும் இல்லை. அந்த வேதம் முன்வைக்கும் பொருளும் நீதான் என்கிறார்!’

வேதங்களின் மூலம் அறியப்படாமல்
வெளிப்படும் பரஞ்சோதியும் நீதான்!
நீ கொடுத்த வேதத்தாலே படைப்பதற்கு
தோன்றிய பிரம்மனும் நீதான்!

இப்படிப்பட்ட பெருமையும் புகழும் படைத்த உன்னை, உன் குணங்களை உன்னுடைய அளப்பரிய லீலைகளை எப்படி என்னால் எளிய வெறும் சொற்களால்  சொல்ல முடியும் என்று எளிய இனிய சொற்களின் படைவீச்சால் விளக்கியிருக்கிறார், திருமழிசை ஆழ்வார்! வைணவத்தின் உயிர்நாடியான சரணாகதி  தத்துவத்திற்கு வலு சேர்க்கும் பாசுரம், இந்தப் பாசுரம். ஆழ்வார்கள் பன்னிருவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி, தனித்தனி சிந்தனை.  ஆனால், எல்லாம் உயர்ந்த அந்த பரம்பொருளைப் பற்றியதுதான். ஒருவித ஞானத்தேடல்தான். இதிலே பக்தி, மயக்கம், அன்பு, காதல், பிரேமை போன்றவை  உள்ளுணர்வின் வெளிப்பாடு, உடல்சார்ந்த காமம் அல்லாமல் உள்ளம் சார்ந்த காமம் என்று எத்தனையோ இருக்கிறது. இவற்றைப் பட்டியல் இட பக்கங்கள்  போதாது. குலசேகராழ்வாரின் ராமாயணத்தை உள்ளடக்கிய பாசுரங்களில் நம் மனதைச் செலுத்த முற்பட்டால் நம் கண்களில் தண்ணீர் தானாகப் பெருக்கெடுத்து ஓடும்.  காவிரி நீர் வருகிறதோ இல்லையோ நம் கண்களில் அத்துணை உணர்ச்சிகளை காண்பிக்க வைப்பார். இதோ தசரதன் புலம்புவதாக ஒரு பாசுரம்.

‘‘வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு
நிலத்தை
வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனையெம் இராமாவோ
எம்பெருமான் என் செய்கேனே.’’

அயோத்தி மன்னராக இருந்துகொண்டு தன் அன்பு கொண்ட ஆசை மகனாக இருக்கும் ராமபிரானுக்கு பட்டம் சூட்டி மகிழ முடியாமல் கைகேயியின் பேச்சைக்  கேட்டு ராமபிரான் காட்டுக்குச் சென்றதை தசரதன் புலம்புவதாக ஜீவனோடு நமக்கு படைத்திருக்கிறார், குலசேகராழ்வார். என்னுடைய கொடுமையான ஆணையைக் கேட்டு ராஜ்ஜியத்தைத் துறந்து யானை, தேர் குதிரைகளையெல்லாம் துறந்து வேல் போன்ற கண்களைப் பெற்ற  மனைவி சீதாவுடனும் தம்பி இலக்குவணனுடனும் எவ்வாறு நடந்தாயோ?  ராமனே! எம்பெருமானே! நான் என்ன பாவம் செய்துவிட்டேன் என்று புலம்பித்  தீர்க்கிறான் தசரத மன்னன் இலக்கியப் பேராசிரியர்களும் பக்திக் கடலில் நீந்துகிற பெருமக்களும் குலசேகராழ்வாரின் இதுபோன்ற பாசுரங்களை தசரத சக்கரவர்த்தி இறந்து போவதற்கு முன் சாசனமாக அமைந்துவிட்டது  என்று சிலாகிக்கிறார்கள்! மயக்கத்திலும் கிறக்கத்திலும் நான் கொடுத்த வரத்தை எனக்கே சாபமாக பரிசளித்த கைகேயியை என்னென்று சொல்வது?  அதனால்தான் பாசுரத்தை ஆரம்பிக்கும்பொழுது...‘‘வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அதுவும் யார் வனத்திற்கு போகிறார் தெரியுமா? தவமாக தவமிருந்து பெற்ற  பிள்ளை இந்தப் பாசுரத்தில் இருக்கிற ஒவ்வொரு வார்த்தைகளும் ஓராயிரம் கதை சொல்லும். இன்னும் சொல்லப் போனால் நம்மை அந்த ராமாயண காலத்திற்கே  அழைத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவை. காட்டு  மேட்டில் மனைவி சீதையுடனும் இலக்குமணன் உடன்வர எப்படி நடந்தாயோ? என்பதை,

‘‘வேல் நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ
எம்பெருமான் என் செய்கேனே.’’

பெற்ற மகனாக இருந்தாலும் ராமன் சக்கரவர்த்தித் திருமகன் இல்லையா? அதனால் எம்பெருமானே என்று தசரதன் சக்கரவர்த்தி ஏக்கப் பெருமூச்சு விடுவதாக குலசேகராழ்வார் உருக்கத்தோடும் ஒருவித நெகிழ்வுத்தன்மையோடும் இந்தப்  பாசுரத்தை கோடிக்கணக்கான பக்தர்களின் அடியார்களின் மன உணர்வுகளுக்கு ஏற்ப இயற்கையாகவே அமைத்திருக்கிறார் பாசுரங்கள். குலசேகராழ்வார் என்றில்லை மற்ற ஆழ்வார்களும் ராமனையும் ராமாவதாரத்தையும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். நம்முடைய திருமழிசையாழ்வார் நடந்த  கால்கள் நொந்தவோ என்று ராமனுக்காகப் பரிதவிக்கிறார். நம்மாழ்வார் ஒருபடி மேலே போய், ‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்று  ராமனை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். ராமாவதாரம் என்பது வெறும் புராணம் அல்ல. அது வாழ்வியல் நெறி! கிருஷ்ண அனுபவத்தில் தம்மை  கற்பூரம்போல் கரைத்துக் கொண்ட பெரியாழ்வார் மற்ற அவதாரங்களைப் பற்றியும் பாசுரத்தை படைத்திருக்கிறார்.

‘‘தேவுடைய மினமாய் ஆமையாய்
ரனமாய் அரியாய்க் குறளாய்
மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பான் கோயில்.’’

என்று அற்புதமாக எம்பெருமானின் அத்துணை அவதாரங்களையும் பட்டியலிடுகிறார். கிருஷ்ணனுக்கு ஈடாக ராமனின் மேல் பெரும் ஈடுபாட்டோடு  பெரியாழ்வாரின் ஓர் அற்புதப் பாசுரத்தைப் பார்ப்போம்.

‘‘தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
தடந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
எம் புருடோத்தமன் இருக்கை,
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழு நின்ற
கண்டம் என்னும் கடிநகரே!

படித்தாலே பரவசம் தொற்றிக் கொள்ளும் இந்தப் பாசுரத்திற்கு விளக்கம் வேறு வேண்டுமா? சூர்பணகை மூக்கினையும் அண்ணன் ராவணன் தலைகளையும் அறுத்துப் போட்ட தாசரதி யார் இந்த தாசரதி சாட்சாத் ராமபிரான்தான். அவன் இலங்கையில்  நடந்த பெரும் போரில் வெற்றி பெற்று திரும்பி வந்தவன் எங்கிருக்கிறான் தெரியுமா?இமயமலைச் சாரலில் இயற்கை வனப்பும் வளமும் பொருந்திய கண்டம் என்றும், கடிநகர் என்றும் அழைக்கப்படுகிற தேவப் பிரயாகையில் குடிகொண்டிருக்கிறான்.  அவன் நம்மையெல்லாம் அனுதினமும் காத்து வருகிறான்.நம் அரங்கநாதன் காவிரிக்கரையில் இருப்பதுபோல் அங்கே கங்கைக்கரையில்  அருள்பாலிக்கிறான் என்கிறார் பெரியாழ்வார்!ஆழ்வார்கள் காட்டிய ராமபிரானையும் அவனுடைய பராக்கிரமங்களையும் நம் நெஞ்சில்  வைத்துப் போற்றிப் புகழ்வோம்!

ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

(மயக்கும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்