SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண வரமருளும் கல்யாண சுந்தரேஸ்வரர்

2018-04-21@ 09:26:44

சிவாயம்

குளித்தலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள சிவாயம் என்ற கிராமத்தில்  உள்ளது, சிவபுரீஸ்வரர் ஆலயம். சிவாயம் ஆலயத்தில் அருள்பாலிக்கும்  இறைவன் சிவபுரீஸ்வரர். இறைவி பெரியநாயகி அம்மன். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க  முகப்பில் இடது புறத்தில் விநாயகரும், வலதுபுறத்தில்   முருகன், வள்ளி  தெய்வானையும் அருட்பாலிக்கின்றனர். கோபுரத்தின் எதிரே 16 கால் மண்டபம்  உள்ளது. மண்டபத் துண்களில் நாகர் சிற்பங்களும் ஆஞ்சநேயர் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டு ஆலயத்தின் பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஊருக்கு அருகே அய்யர்மலை இருப்பதால் இந்த ஊர் சிவாயமலை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மாணிக்கம்போல் தோன்றுவதால் இந்த ஊர்  மாணிக்கமலை எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால், அய்யர்மலை என்பதே தற்போது அனைவரும் அறிந்த பெயர். ஆலயம் கிழக்கு திசை நோக்கி  அமைந்துள்ளது. முதல் கோபுரக் கதவுகள் பிரமாண்டமாக காட்சி தருகிறது. இதை ராமயணக் கதவுகள் என்று கூறுகின்றனர்.

கோபுரத்தைத் தாண்டியதும் நீண்ட பிராகாரம் உள்ளது. அடுத்து மூன்று மாடங்களை உடைய கோபுரம் உள்ளது. சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்களுடன் இரண்டு  பிராகாரங்களுடன் காட்சி தருகிறது ஆலயம். அடுத்துள்ள  முகப்பு மண்டபத்தின் இடது புறம் தூணில் கல்யாண சுந்தரேஸ்வரர் அருட்பாலிக்கிறார். திருமணம்  நடைபெற வேண்டியும் தடைபட்ட திருமணம் நடக்க வேண்டியும் கல்யாண சுந்தரேஸ்வரர் முன் ஹோமம் வளர்த்து ஆராதனைகள் செய்தால்  பலன் நிச்சயம்  என்று பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர். சிறப்பு மண்டபத்தின் வலதுபுறம் காலபைரவர் அருட்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு  நடக்கும்  சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக  நாயகர்கள் அருட்பாலிக்கின்றனர். அடுத்துள்ள மகாமண்டபத்தில் அர்த்த மண்டபத்தின் எதிரே நந்தியும் பெரிய அளவில் விநாயகர் சிலை அமைந்துள்ளது.   கருவறையில் இறைவன் சிவபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருட்பாலிக்கிறார்.

இறைவனுக்கு எதிரே வெளியே விநாயகர் பெரிய பீடத்துடன் அமர்ந்திருப்பதற்கு காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால், எந்த சிவாலயத்திலும்   இல்லாத  ஒரு அபூர்வ அமைப்பு இது என்கின்றனர் பக்தர்கள். உட்பிராகாரத்தின் தென் திசையில் நாயன்மார்களும், மேற்கில் கஜலட்சுமி, சித்தி விநாயகர், காசி விஸ்வநாதர்,  விசாலாட்சி, முருகன், வள்ளி, தெய்வானையும், வடக்குப் பிராகாரத்தில் சோழபுரீசர், சண்டீஸ்வரர்   சந்நதிகளும், வடக்கில் அம்மன் பெரியநாயகியின் சந்நதியும்  உள்ளன. வடகிழக்கு மூலையில் தல விருட்சமான மகிழமரம் தழைத்தோங்கி காட்சி தருகிறது. தேவக் கோட்டத்தின் தென்திசையில் தட்சிணாமூர்த்தியும்  வடக்கில் துர்க்கையும் அருட்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராஜர் சிவகாமித் திருமேனிகள் அருட்பாலிக்கின்றனர். ஐம்பொன்னாலான  இத்திருமேனிகளை வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டே இருக்கலாம்  அவ்வளவு அழகு. திருவாதிரை அன்று நடராஜருக்கும் சிவகாமிக்கும் சிறப்பு  அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அன்று இருவரும் ஆலயம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி ஒருநாள் பூராவும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்புரிவார்கள். சுற்று  வட்டாரத்திலுள்ள 32 கிராம மக்கள் அன்று ஆலயம் வந்து நடராஜரையும் சிவகாமி அம்மனையும் தரிசிக்க தவறுவதில்லை. இந்த ஆலயத்திலிருந்து ஒரு  சுரங்கப்பாதை அய்யர்மலைக்கு செல்ல அரசன் காலத்தில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் நுழைவாயில் இன்றும்  ஆலயத்தில் உள்ளது என்றும் பக்தர்கள்  கூறுகின்றனர். சூரியவன்னி என்ற  பெயர் கொண்ட மன்னன் மிக நேர்மையுடனும் மக்கள் மனம் கோணாது ஆட்சி செய்து வந்தான். அது சமயம் மயிடம் என்ற  அசுரன் பிரம்மனை நோக்கி தவம் இருந்தான். அவனது கடுந்தவத்தை கண்டு மனம் இரங்கிய பிரம்மன் அவன் முன்னே தோன்றினார். ‘‘மயிடா, உன் தவத்தைக்  கண்டு மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ என்றார், பிரம்மன். ‘‘பிரபோ, மானிடப் பிறவிகளாலோ அல்லது பிற உயிரினங்களாலோ எனக்கு  மரணம் ஏற்படக் கூடாது. தவிர இவர்களைவிட அசுர பலம் கொண்டவனாக நான் இருத்தல் வேண்டும்’’ எனக் கேட்டான் மயிடம்.

‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று வரம் தந்து மறைந்தார் பிரம்மன். அசுர பலம் பெற்ற அசுரனான மயிடம் கர்வம் தலைக்கேற ஆட்டம் போடத் தொடங்கினான்.   தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினான். கண்களில் பட்ட மக்களை எல்லாம்  துன்புறுத்தினான். அவனது துன்புறுத்தல் தாங்காது மக்கள்  மன்னனிடம் ஓடினர்.  அசுரனது அராஜகம் பற்றி அவனிடம் முறையிட்டனர். மன்னன் தன் படைபலத்தைக் கொண்டு அசுரனை அழிக்க முயன்றான்.  முடியவில்லை.  தோல்வியே எஞ்சியது. துவண்டு போன மன்னன் என்ன செய்வது என்று புரியாது தவித்தான். நேரே கயிலாயம்சென்ற மன்னன்  சிவபெருமானிடம் சென்று கண்ணீர் மல்க முறையிட்டான். மன்னனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த கயிலைநாதன் தேவியை அழைத்தார். அசுரனை  அழித்து வரும்படி பணித்தார். தேவி புறப்பட்டாள்.  துர்க்கையின் வடிவம் கொண்டாள். சப்த கன்னியர் புடை சூழ அசுரனை நோக்கிச் சென்ற தேவி அவனை  போருக்கு அழைத்தாள். அசுரன் யாருடன் போரிடுகிறோம் என்று புரியாது  துர்க்கையுடன் போரிட்டான்.  கடுமையான போர்  நடந்தது.

தேவி அசுரனின் இரு கொம்புகளைப் பிடித்து கீழே தள்ளினாள். தலைமேல் ஏறி நின்று வாளால் சிரசைத் துண்டித்தாள்.  அசுரனின் கதை முடிந்தது.  ஆனால்  தேவியை பிரம்மகத்தி தோஷம் தொடர்ந்தது. தேவி பல தலங்களுக்குச் சென்று இறைவனைத் துதித்தாள். மாணிக்கமலையை அடைந்து சிவபெருமானை வணங்க  தேவியின்   பிரம்மகத்தி தோஷம் நீங்கியது. தேவர்கள் இந்த இடத்தை சிவாயம் என்று கொண்டாடினர். இந்த இடம் தற்போது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு  பகுதி அய்யர்மலை எனவும் மற்றொரு பகுதி சிவாயம் கிராமமாகவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆறு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை 1913ல்  அரசின் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துள்ளனர். ஹோய்சாள நாட்டு வீர ராமனாதன், மூன்றாம் ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய அரசர்கள்  காலத்து கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் உள்ளதால் இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது என அறிய முடிகிறது. கண்டைக்காய்ப் பாறை கல்வெட்டில்  வீரமல்லன் சீயமித்திரன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

இந்தப் பாறையில் ஐந்து கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தின்  திருமதிற்சுவற்றில் உட்புறம் ஒருவர் நடந்து செல்லும் அளவிற்கு பாதை  அமைக்கப்பட்டுள்ளது வியக்க வைக்கக்கூடியது. மதிலின் உச்சியிலிருந்து சுமார் நான்கு அடி கீழே உட்புறமுள்ள இந்தப் பாதையில் பயணித்தால் ஆலயம் மற்றும்    வெளிப்புற கிராமத்தை முழுமையாக நாம் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் மிகப்பெரிய நாகம் ஒன்று உலா வருவதாகவும் பக்தர்கள் அதனை பலமுறை  பார்த்திருப்பதாகவும், கருவறை  வரை அந்த நாகம் சென்று திரும்பும் வழக்கம்   உள்ளதாகவும் இந்த நாகம் யாரையும் எதுவும் செய்வதில்லை எனவும் அர்ச்சகர்  கூறுகிறார். சிவாயம் செல்லும் பக்தர்கள் இங்கு அருட்பாலிக்கும் சிவபுரீஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்மனை தரிசிப்பதுடன் அருகே உள்ள சிவாயமலை என  அழைக்கப்பட்டு தற்போது அய்யர்மலை என அழைக்கப்படும் மலையில் அருட்பாலிக்கும் ரத்தினகிரீஸ்வரர் மற்றும் கரும்பார் குழலி அன்னையையும் தரிசித்து  பயன் பெறலாம். சிவாயம் செல்ல குளித்தலை  மணப்பாறை பேருந்தில் பயணித்து அய்யர்மலையில் இறங்கி  2 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும்.  திருச்சியிலுந்து நேரிடையாக சிவாயம் செல்ல சில பேருந்துகளும் உள்ளன.

ஜெயவண்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்