SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோபம், ஆசை ஒழித்து உன் திருவடி கூட முத்தி அருள்வாய்!

2018-04-20@ 15:25:12

அருணகிரி உலா

வலிவலம் மனத்துணை நாதரையும் மாழையொண்கண்ணியையும் வேண்டி வலிவலத்திலிருந்து புறப்பட்டு, நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கிறோம். மற்றொரு கடற்கரைத் திருத்தலமாகிய நாகை, சென்னையிலிருந்து 334 கி.மீ. தொலைவிலும், திருவாரூரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடலை ஒட்டிய நிலப்பகுதி, பட்டினம் எனப்படும். நாகர்கள் எனும் வகுப்பினர் கடற்கரையை ஒட்டிக் குடியேறிய தலமாதலால் நாகப்பட்டினம் எனப்பட்டது. ஆதிசேஷன் பூஜித்த திருத்தலம். குடந்தைக் காரோணம், கச்சிக் காரோணம் என்பன போன்று இத்தலம் நாகைக் காரோணம் என்றழைக்கப்படுகிறது. இங்கு புண்டரிக முனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவரைத் தன் திருமேனியோடு அணைத்து முத்தி அளித்ததால் இப்பெயர் ஏற்பட்டது. காயம் = உடல், ஆரோகணம் = சேர்த்தணைப்பது, காயாரோகணம் என்பது சுருங்கி காரோணம் என்றானது.

நாகை இறைவன் காயாரோகணர், இறைவி நீலாயதாட்சி. காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி வரிசையில் நாகை நீலாயதாட்சி  பெருமை வாய்ந்தவள். 64 சக்தி பீடங்களுள் நாகையும் ஒன்று. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் இறைவன் தியாகராஜர் சோமாஸ்கந்த வடிவத்தில் சுந்தரவிடங்கர் எனும் பெயர் கொண்டு விளங்குகிறார். இங்கு பாராவார தரங்க நடனம் (கடல் அலைகள் வீசுவது போன்ற நடனம்) செய்கிறார்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து உள்ளே செல்கிறோம். வாயிலில் நாகாபரணப் பிள்ளையார், தலை மேல் ஐந்து தலை நாகம் குடை விரித்து நிற்க, மிக அழகாக காட்சியளிக்கிறார். இவர் விஸ்வரூப விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். பலிபீடம், சுதையாலான பெரிய நந்தி உருவம் இவற்றை அடுத்து உள்ளே செல்கிறோம். முதலில் தரிசிப்பது அதிபத்த நாயனாரின் திருவுருவம். தாமரை மலர்களாலான பெரிய மாலை
அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

நாகையில் வாழ்ந்த அதிபத்தர் எனும் மீனவர் சிறந்த சிவபக்தர். தான் தினமும் பிடிக்கும் மீன்களுள் சிறந்த மீன் ஒன்றினைத் திரும்பக் கடலில் சிவனுக்கென விட்டு விடுவார். சிவனார் அவர் அன்பைச் சோதிக்க எண்ணினார். தொடர்ந்து சில நாட்கள் ஒரே ஒரு மீன் மட்டுமே தான் வலையில் சிக்கியது. அதையும் சிவபெருமானுக்கென நீரில் விட்டு வந்தார்.

ஒருநாள் விலை மதிப்பற்ற நவமணிகள் பதிக்கப் பெற்ற பொன் மீன் ஒன்று அதிபத்தர் வலையில் சிக்கியது. அதையும் அதிபத்தர் சிவனுக்குரியது என்று கடலில் விட்டு விட்டார். இவர் பக்தியை மெச்சிய இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்து அறுபத்து மூவருள் ஒருவராகச் சிவப்பேறு கிட்டச் செய்தார். அதிபத்தர், படவர் எனும் பரதவர் குலத்தில் பிறந்தவர். பின்னாளில், சிவன் படவர் எனப்பட்டார். அதுவே பிறகு ‘செம்படவர்’ என்றாயிற்று. இந்நிகழ்ச்சி, இன்றளவும் கடற்கரையில் ஆவணி ஆயில்யத்தன்று ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் இவ்வரலாறு சிற்பக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. அதிபத்த நாயனார் நினைவாக, மீனவர் குலத்தில் இறக்கும் எவருக்கும் கோயில் வெளி வாயிலில் கோயில் சார்பாக இறைவனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையும் வஸ்திரமும் சாத்தப்பட்டு மரியாதை செய்த பின்னரே உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

கோயிலில் நுழைந்து வலப்புறம் திரும்பி, பழநி ஆண்டவர், இடும்பன் சந்நிதிகளைத் தரிசிக்கிறோம்.
‘‘பரகிரி உலாவு செந்தி மலையினுடனே இடும்பன் பழநிதனிலே இருந்த குமரேசா, பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகுகோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர் காமா’’ என்ற திருப்புகழ் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
அருகே அழகணிச் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர் தேவி சந்நதியில் பலவாறு அரற்றிய வண்ணம் அழுகைச் சுவை நிறைந்த பாடல்களைப் பாடி வந்ததால் அழுகுணிச் சித்தர் என்றும், அவர் பாடலில் இருந்த கவிதை நயத்தை மனதிற் கொண்டு அழகணிச் சித்தர் என்றும் அழைக்கப்பட்டார்! அவரது பின்வரும் பாடல் மிகப் பிரசித்தி பெற்றது:

‘‘ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா, உன் பாதம் சேரேனோ?’’
(பாரதியாருக்கு முன்னால் ‘கண்ணம்மா’ என விளித்துப் பாடியவர் இவர் ஒருவரே!)

திருச்சுற்றில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், ஆத்மலிங்கம் சந்நதிகள் உள்ளன. உள்ளே மூலவர் காயாரோகணர் பெரிய பாணத்துடன் காட்சி அளிக்கிறார். பின்புறம், தனி மாடத்தில் இறைவன்-இறைவி திருக்கோலம் உள்ளது. மூலவர் சந்நதிக்கருகில் சுந்தரவிடங்கரான தியாகராஜர் குடிகொண்டுள்ளதைக் கண்டு மகிழலாம். திருவாரூர் போலவே இங்கும் அவர் எதிரே சுந்தரர், பரவை நாச்சியார் இருவரையும் காணலாம்.

கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர்
சந்நதிகள் அணிவகுக்கின்றன. மூலவர் கருவறைக்கும், தியாகராஜர் சந்நதிக்கும் இடைப்பட்ட மிகக் குறுகலான இடத்தில் பெரிய கம்பீரமான தட்சிணாமூர்த்தி எழில்மிகு திருவுருவைக் காணலாம். (பிராகாரத்தில் வேகமாக வலம் வரும்போது இவரைத் தரிசிக்காமல் வந்து விட வாய்ப்பு உள்ளது. கட்டாயம் தரிசிக்க வேண்டிய, பக்தி பரவசமூட்டும் அழகிய உருவம் இது) இவரை வணங்கி, வந்த வழியே பின்னால் சென்று திரும்ப, இடப்புறம் வள்ளி-தெய்வானையுடன் காட்சி அளிக்கும் சுப்ரமணிய சுவாமியைத் தரிசிக்கிறோம். நாகையில் அருணகிரியார் பாடியுள்ள மூன்று திருப்புகழ்ப் பாக்களை இங்கு பார்ப்போம்.

‘‘ஓலமிட்டிரைத்தெழுந்த வேலை வட்டமிட்ட    இந்த
ஊர் முகில் தருக்களொன்றும் அவராரென்று
ஊமரைப் பிரசித்தரென்று மூடரைச் சமர்த்த ரென்றும்
ஊனரைப் பிரபுக்களென்றும் அறியாமல்
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து
                  அநந்த
கோடி இச்சை செப்பி வம்பில் உழல்நாயேன்
கோபமுற்று மற்றும் அந்த மோகமற்று உனைப்
                  பணிந்து
கூடுதற்கு முத்தி என்று தருவாயே’’
(வேலை = கடல்)

(ஓலமிட்டிரைத்தெழுந்த வேலை: தான் பொருள் வேண்டி ஓலமிட்டுத் தனவந்தர்களிடம் செல்வதால், கடலும் ஏதோ வேண்டித்தான் ஒருவரிடம் முறையிடுவதுபோல, வந்து வந்து அவர் பாதங்களைத் தொட்டுச் செல்வதாகத் தனக்குத் தோன்றுகிறது என்கிறார் போலும்! அல்லது தன்னுள் வந்து தஞ்சமடைந்து கிடக்கும் சூரபத்மனாகிய மாமரத்தை அழிக்க முருகனது வேல் வந்து கொண்டிருக்கிறதே என்று கடல் அலறுகிறதோ? அல்லது உக்ர பாண்டியன் கடல் வற்றும்படி வேலைச் செலுத்தியதை நினைத்துக் கடல் ஓலமிடுகிறதோ என்றெல்லாம் நினைத்தார் போலும்!)

ஓலமிடும் கடல் சூழ்ந்த இந்த பூமியில் மேகம் போலக் கைம்மாறு கருதாதவர்களும், கற்பக விருட்சம் போன்று கேட்டதனைத்தையும் கொடுப்பவர்களும் யாருள்ளனர் என்று தேடிப் போகிறேன்; பேச வராதவர்களையும், முட்டாள்
களையும், குற்றம் குறை உள்ளவர்களையும், பிரபுக்கள் என்று புகழ்கின்றேன்; என்னுடைய அறிவீனத்தால் அழகிய முத்தமிழ் நூல்களை உலகாயத விஷயங்களில் ஆசை கொண்டவர்களிடம் கொண்டு போய் எண்ணற்ற விருப்பங்களைத் தெரிவித்து வீணே திரிகின்றேன்; இத்தகைய நான் கோபம் என்பதை ஒழித்து, பின்னர் ஆசை என்பதையும் ஒழித்து உன்னைப் பணிந்து உன் திருவடிகளில் வந்து கூடுவதற்கு முத்தி என்று தந்தருள்வாய்!

‘‘வாலை துர்க்கை சத்தி அம்பிலோககத்தர்   பித்தர்பங்கில்
மாது பெற்றெடுத்துகந்த சிறியோனே’’

சக்தி பீடங்களுள் நாகையும் ஒன்றானதால் அம்பிகையை ‘‘என்றும் இளையாள், துர்க்கை, சக்தி, அம்பிகை, உலக கர்த்தாவாகிய பித்தராம் சிவனது இடப்பாகத்திலுள்ள தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த சிறியோனே!’’ என்று அன்னையின் பெருமையைச் சொல்லி முருகனைப் போற்றுகிறார்.

‘‘வாரி பொட்டெழுக்ரவுஞ்சம் வீழ நெட்டயில்
                 துரந்த
வாகை மற்புய ப்ரசண்ட மயில்வீரா’’

கடல் வற்றிப் போகவும், கிரெளஞ்சகிரி தூள்படவும் நெடிய வேலைச் செலுத்திய, மற்போருக்குத் தக்கதான வலிமை வாய்ந்த புயங்களை உடைய மயில் வீரனே! (‘‘வரைபுக, நிருதர்முடிபக, மகரமகோததி தீயின் வாயின் மறுக, விதிர்த்து அயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன’’ என்று புய வகுப்பில் பாடுகிறார்)

‘‘ஞால வட்டமுற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற
நாரணற்கருள் சுரந்த மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனைக்
                களைந்த
நாகப்பட்டினத்தமர்ந்த பெருமாளே’’

தெருவில் மற்ற குழந்தைகள் போல் தான் மண் தின்றதைக் கண்ட யசோதையிடம் தன் வாயைத் திறந்து தம்முள் அடங்கிய அண்டசராசரங்களையும் கண்ணம் காட்டினான் என்பதால் ‘‘ஞால வட்டமுற்ற உண்டு’’ என்கிறார்.
ஆதிசேஷனாகிய பாம்பு மெத்தையில் உறங்கிய நாரணனுக்கு அருள்பாலித்த மருகனே! நான்கு திசைகளிலும் வெற்றி கொண்டு சூரபத்மனை அடக்கி ஒடுக்கிய பெருமாளே! நாகப்பட்டினத்தில் அமர்ந்திருப்பவனே!

நாரணற்கருள் சுரந்த மருகன்: முருகப்பெருமான் ஞானசம்பந்தராக அவதரித்தபோது சிவசாரூபம் வேண்டி கச்சித்திருமேற்றளியில் தவம் செய்து கொண்டிருக்க திருமாலுக்குத் தன் தந்தையின் சொற்படிச் சிவசாரூபம் அளித்த வரலாறு குறிப்பிடப்படுகிறது. (காஞ்சிப் புராணம் - திருமேற்றளிப் படலம்)

இனி இரண்டாவது திருப்புகழைப் பார்ப்போம். இதில் முருகன் குடைக்கூத்து அடிய விவரம் தரப்பட்டுள்ளது.

‘‘வீர வெண்டைய முழங்க வரி சங்கு முர
சோடு பொன்பறை ததும்ப விதியும் சுரரும்
வேத விஞ்சையருடன் குமுற வெந்து கவடர்ந்த சூரன் வீறடங்க முகிலும் கமற நஞ்சுடைய
ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே
கொளுந்த பல சிரந்தனை எறிந்து நடனம்   கொள்வேலா
நாரசிங்க வடிவங்கொடு ப்ரசண்ட இரணி
யோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி
ராவணன் குலமடங்க சிலை கொண்ட கரர் தந்தமூல
ஞான மங்கை அமுதஞ்சொருபி என்றன் ஒரு
தாயணங்கு குறமங்கையை மணந்த புய
நாகையம்பதி அமர்ந்துவளர் நம்பர் புகழ்
தம்பிரானே’’

வீரவெண்டையம் ஒலிக்க, வரிசையாக சங்கு, முரசு அழகிய பறை ஆகிய வாத்தியங்கள் பெரிய ஒலி எழுப்ப, பிரம்மனும், தேவர்களும், வேதம் வல்ல வித்யாதரரும் சேர்ந்து அஞ்சலிட, ெவந்து அழிய, நெருங்கி வந்த சூரனுடைய கொழுப்பு அடங்க மேகங்களும் சூடேறி வெந்து போக, விஷமுள்ள, ஆயிரம் யானை பலம் படைத்த சேடனின் தலை உச்சி வேக, அசுரர்களின் பல தலைகளை அறுத்துத் தள்ளி குடைக்கூத்து ஆடிய வேலா!

நரசிம்ம அவதாரம் எடுத்து கடுமையும் பலமும் உள்ள இரணியாசுரனை நடுங்க வைத்து வீர குடை நடனம் புரிந்தவரே! இலங்கையில் அடம் வாய்ந்த ராவணன் சுற்றத்தோடு மடிய, கோதண்டம் எனும் வில்லைக் கொண்ட கரத்தை உடையவராகிய திருமால் பெற்றெடுத்த ஆதிஞானசக்தியின் அவதாரமான அமுத உருவமான என் ஒப்பற்ற தாய், தெய்வப் பெண்ணாகிய வள்ளியை மணந்தவனே! நாகப்பட்டினத்தில் அமர்ந்திருக்கும் சிவனார் புகழும் தம்பிரானே!’’ என்பது பொருள்.

‘விழு தாதெனவே’ எனத் துவங்கும் மூன்றாம் திருப்புகழில், ‘‘முருகா எனக்கு என்று விருப்பு வெறுப்பு ஏதுமில்லை; எனக்கு எதைக் கொடுக்க வேண்டுமென்று நீ நினைக்கிறாயோ அதை மட்டுமே தந்தால் போதும் என்ற உயரிய
வேண்டுதலை முன் வைக்கிறார்.

‘‘விழு தாதெனவே கருதாதுடலை
வினை சேர்வதுவே புரிதாக
விருதாவினிலே உலகாயத,
மேலிடவே மடவார் மயலாலே
அழுதா கெடவே அவமாகிட,
நாளடைவே கழியாது உனைஓதி
அலர்தாள் அடியேன் உறவாய் மருவ ஓர்
அழியா வரமே தருவாயே
தொழுதார் வினை வேரடியோடறவே
 துகள்தீர் பரமே தருதேவா
சுரர் பூபதியே கருணாலயனே
சுகிர்தா அடியார் பெருவாழ்வே
எழுதாமறை மா முடிவே! வடிவேல்
இறைவா எனையாளுடையோனே!
இறைவா எதுதா அதுதா, தனையே
இணை நாகையில் வாழ் பெருமாளே!’’

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்