SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயல் தொடாத புண்ணிய தலம்!

2018-04-20@ 15:23:00

புனித ராமேஸ்வரம் -  11

*  16  ஏக்கர் பரப்பளவில், கிழக்கு-மேற்காக 865 அடி, தெற்கு-வடக்காக 657 அடி நீளத்தில் மதில் சுவர்களைக் கொண்டிருக்கும் இக்கோவிலை ஆரம்பகாலத்தில் தீர்த்தப் பெருமைகளுக்குரியதாக மட்டுமே மக்கள் போற்றி வந்துள்ளனர்;

அப்போது ஆலயமாக உருப்பெறவில்லை. ஏனென்றால், இங்கே ஆலயம் அமையுமானால், தீர்த்த நீராலுக்கு அது தடையாகலாம் என்று மன்னர்கள் கருதியிருக்கிறார்கள். பின்னர் ஆட்சி புரிந்த சேதுபதிகள் தீர்த்தங்களை மறைக்காமலும், தீர்த்த நீராடலுக்கு பாதிப்பு வராத வகையிலும் ஆலயத்தை வடிவமைத்து கோபுரங்களைக் கட்டினர்.

*  ஆலயத்தின் முகப்பில் இருக்கும் அனுமனின் திருமேனி வித்தியாசமானது - இடுப்பு வரை மட்டுமே வெளியில் தெரிகிறது. முகம் பெரியதாய் வீங்கி சிவந்தும், கண்களும், வாயும் சிறுத்து அமைந்திருக்கின்றன. சாதிலிங்கக் குழம்பால் பூசப்பட்டிருக்கும். அனுமனின் இவ்வடிவத்தை விஸ்வரூப அம்சமாகக் குறிப்பிடுகின்றனர். இக்கருவறைக்குள் மழைக்காலத்தில் நீர் உயர்ந்தும், மற்ற காலங்களில் நீர் இன்றியும் இருக்கிறது.

*  ராமேஸ்வர ஆலய மூன்றாம் பிராகாரம் உலகப்புகழ் பெற்றது. முத்துராமலிங்க சேதுபதியால் கட்டப்பட்டது. கி.பி.1740 ல் தொடங்கி முப்பது ஆண்டுகள் இப்பிரhகாரம் கட்டும் பணி நடைபெற்றது. கிழக்கு-மேற்கில் 690 அடியும், வடக்கு-தெற்கில் 435 அடியும் கொண்டு பிரமாண்டமாய் விளங்குகிறது. முக்கிய சந்நதிகளைச் சுற்றி, கிழக்கு-மேற்காக 117 அடி, வடக்கு-தெற்காக 172 அடி நீளம் கொண்ட பிராகாரம் 17 அடி அகலத்தில் விசாலமாக விளங்குகிறது. இந்த பிராகாரங்களை உள்ளடக்கிய மூன்றாம் பிராகாரம் நான்காயிரம் அடி சுற்றளவு கொண்டது. இருபுறமும் 23 அடி உயரம் கொண்ட தூண்கள் கம்பீரமாக நிற்கின்றன. தூண்களை ஒட்டி சுமார் முப்பது அடி அகலம், ஐந்து அடி உயரத்தில் நீண்ட திண்ணை அமைந்திருக்கிறது. மொத்தம் 1212 தூண்கள், ஒரே நேர்வரிசையில், ஒன்றையொன்று மறைக்காத வகையில்! ஒவ்வொரு தூணிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள். உப்புக் காற்றால் தூண்கள் பழுதுபட ஆரம்பித்ததால், ரசாயனப் பூச்சு பூசி அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். அவற்றில் இரண்டு தூண்கள் மட்டும் இன்றும், பாரம்பரியத் தொன்மை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே மிகநீண்ட நடைபாதை (CORRIDORS) எனப் புகழ் பெற்றது. 1973ம் ஆண்டில் இச்சுற்றின் மேற்குப்பகுதியில் தீப்பிடித்து மேல்தளம் சேதமுற்றது. இதன் பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு 1975 ல் குடமுழுக்கு நடைபெற்றது.

* மூன்றாம் திருச்சுற்றில் வீற்றிருக்கும் நடராஜ சந்நதி விமானம், நேபாளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. ராமநாதருக்கு அபிஷேகம் செய்த 1,25,000 ருத்திராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டது. முன்பகுதியில் நடராஜர் சிவகாமி அம்மையாரோடு வீற்றிருக்க பின்பகுதியில் பதஞ்சலி தனி சந்நதி கொண்டிருக்கிறார். பதினெண் சித்தர்களில் பதஞ்சலிக்கு உரிய தலம் ராமேஸ்வரம்!

* பிராகாரங்களின் மொத்த நீளம் 3850 அடியாகும். கிழக்கு ராஜ கோபுரம் 126 அடி உயரம், 9 அடுக்கு, 9 கலசங்கள் கொண்டது. மேற்கு ராஜ கோபுரம் 78 அடி உயரம்,  5 அடுக்கு, 5 கலசங்கள் கொண்டது. 1925, 1947 மற்றும் 1975ல் இக்கோயில் கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நிகழ வேண்டும் என்ற நியதி, ராமேஸ்வரம் ஆலயத்திற்கு பொருந்தாமல் போனதாலேயே வட, தென் கோபுரங்கள் மொட்டையாக இருப்பதாய் சொல்லப்படுவதுண்டு.

* ஆலயத்தில் வெள்ளிரதம் உள்பட மொத்தம் 25 வாகனங்கள் உள்ளன.

* தனுஷ்கோடி என்ற முழு ஊரே அழிந்து போகும் படியாக 1964 டிசம்பர் 23 ல் அடித்த புயலால் ராமேஸ்வரம் நகரம் சேதமடைந்தாலும் ராமநாத சுவாமி ஆலயம் சேதமடையவில்லை.

* காசி யாத்திரையை முறையாகத் தொடங்கி அதை நிறைவு செய்யும்வகையில் ராமநாதருக்கும், விசுவநாதருக்கும் அபிஷேகம் செய்ய, கங்கை தீர்த்தத்தோடு வருவோரை மேளதாளங்கள் முழங்க, நடன மாதர்கள் ஆடியபடி மரியாதை தெரிவிக்க, பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது. ஆனால் இன்று வட இந்தியர்கள் நாள்தோறும் கங்கை தீர்த்தத்தைக் கொண்டு வருவதாலும், கங்கையிலிருந்து கொண்டு வரவேண்டிய தீர்த்தத்தை ஆலயத்திற்குள்ளேயே குப்பிகளில் அடைத்து விற்பனை செய்வதாலும் அந்த வழக்கம் தற்போது வழக்கொழிந்து போனது.

* ராமரின் பிரதிஷ்டைக்கான சிவலிங்கத்தை சீதை இங்குள்ள மண்ணைக் கொண்டு செய்ததால், உழவுத் தொழிலும், மண்பாண்டம் தயாரிப்பு போன்ற தொழிலும் ராமேஸ்வரத்தில் இல்லை. அதேபோல, ராமலிங்கத்தின் முகப்பை போலவே செக்கின் முகப்பும் இருப்பதால் இங்கு செக்கு மூலம் எண்ணெய் எடுப்பதில்லை. இத்தொழில்களைச் செய்வது தெய்வ குற்றமாகவே கருதப்படுகிறது!

*  பாரம்பரியமாக இக்கோயிலில் பூஜைகள் செய்பவர்களைத் தவிர ராமலிங்கத்தை தொட்டு பூஜை செய்யும் உரிமை ஸ்ரீ சிருங்கேரி சன்னிதானம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள், ராமபிரானின் குலத் தோன்றலாக கருதப்படும் நேபாள மன்னர் ஆகிய மூவருக்கு மட்டுமே உண்டு.

* அந்நியப் படையெடுப்புகளுக்கு ஆலயங்கள் தப்பியதில்லை என்பது வரலாறு. அதற்கு ராமேஸ்வரம் கோயிலும் விதிவிலக்கல்ல. டச்சுக்காரர்கள் இவ்வாலயத்தைத் தாக்கி கொள்ளையிட முயல்வதை அறிந்த தாயுமானவர், தன் தவச்சாலையில் இருந்து வெளியேறி இளைஞர்களையும், வீரர்களையும் திரட்டி படைத்தளபதியாய் மாறி அவர்களை எதிர்த்தார். மாலிக்காபூர் படையெடுப்பையும் இவ்வாலயம் எதிர் கொண்டது.

* 1935ம் ஆண்டு ஐந்தாம் ஜார் மன்னரின் முடிசூட்டு  வெள்ளி விழா ஆண்டின்போது ராமேஸ்வரம் கோயில் ஓவியத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

* வைகாசி விசாகத்துடன் முடியும் பத்து நாள் வசந்த விழா, சுக்லசஷ்டியில் தொடங்கி மூன்று நாள் நடைபெறும் ஆனிமாத ராமலிங்க பிரதிஷ்டை விழா, தேய்பிறை அஷ்டமி முதல் பதினேழு நாள் நடைபெறும் ஆடி மாத திருக்கல்யாண உற்சவ விழா, பத்து நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத நவராத்திரி விழா, ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா, பத்து நாட்கள் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா போன்றவற்றோடு சித்திரை பிறப்பு, பெரிய கார்த்திகை, சங்கராந்தி, தைப்பூச தெப்பம், வைகுந்த ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விழாக்களும் கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

இன்றைய வாகன வசதிகளால் ராமேஸ்வர யாத்திரையை ஒரே நாளில் முடித்துவிட்டுத் திரும்பி விடமுடியும். இருப்பினும் சிறப்பு மிக்க ராமேஸ்வர ஆலய விழாக்களில் ஏதாவது ஒன்றை அங்கு தங்கி, கண்டு, ரசித்து அந்நாளில் இறைவனை தரிசித்தால் ராமர் மற்றும் ஈசனின் அருளைப் பெறலாம். எனவே இறையருளை பரிபூரணமாகப் பெறும் வகையில் ராமேஸ்வர யாத்திரை பயணத்தை அமைத்துக் கொள்வது சிறப்பாகும். (யாத்திரை நிறைவு பெறுகிறது)

கோபி சரபோஜி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tamilnaduveyilend

  தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

 • 28-05-2018

  28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Thiruvarurchariot

  உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

 • 27-05-2018

  27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • modi_bahvan_bang

  வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்