SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலின் வலியை மனம் ஏற்காது!

2018-04-17@ 15:47:45

திருமூலர் மந்திரம் ரகசியம்

சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியிடப்பட்ட இரு காட்சிகள்: முதலாவது, காட்டில் இருந்து மனிதர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த மத யானையுடன் புகைப்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்ள முயன்ற ஒருவரை அந்த யானை கொன்று விட்டது. அடுத்து, ஏராளமான கொடிய விலங்குகளைப் பராமரித்து வரும் மிருக காட்சிசாலையில், தடுப்புச் சுவரைத் தாண்டிக் குதித்து, சிங்க குகையை நோக்கி ஒருவர் ஓடினார். நல்ல வேளை! சிங்கம் ஏதோ ஓய்வில் இருந்து விட்டது போலும். அதற்குள் சிலர் உள்ளே குதித்து, குகையை நோக்கி ஓடிய அவரை இழுத்து வந்து காப்பாற்றி விட்டார்கள். இந்த இரு நிகழ்வுகளில், யானை வழி மாறி வந்தது. அதை நெருங்கியவர் கதை முடிந்தது. சிங்கம் அது பாட்டுக்கு இருந்தது. அதன் இருப்பிடத்தை நோக்கி ஓடியவரை, சிலர் காப்பாற்றி விட்டார்கள்.

இந்த இருவரில், நாம் யார்? திருமூலர் சொல்கிறார்:

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்ததும் அஞ்சகமே புகும்
அஞ்சின் உகிரும் எயினும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே
(திருமந்திரம் - 2026)

கருத்து: ஐந்து சிங்கங்கள் காட்டில் வாழ்கின்றன. அவை தம் விருப்பப்படி வெளியே போய், இரை புசித்துவிட்டு, தம் இருப்பிடத்திற்குத் திரும்பிவிடும். அந்த ஐந்து சிங்கங்களின் நகங்களையும், பற்களையும் அறுத்து எறிந்துவிட்டால், எந்தத் தடையும் இல்லாமல் இறைவனின் அருளை அடையலாம். அதாவது ‘இரை மேய்ப்பவரை விட்டு, இறையருளைப் பெறு!’ என்கிறார் திருமூலர்.

மிருகங்கள் உண்பது - இரை, மனிதர்கள் உண்பது - உணவு.

நாம் இரை எடுத்துக் கொண்டிருக்கிறோமாம். அதாவது, விலங்காக இருக்கிறோமாம். மனிதர்களைப் பலவிதமான விலங்குகளாகப் பலர் சொல்லியிருந்தாலும், இப்பாடலில் சிங்கமாகச் சொல்லியிருக்கிறார் திருமூலர் என்று சந்தோஷப்படலாம்! திருமூலர் சொல்லியிருக்கும் ஐந்து சிங்கங்கள் எவை என்பது புரிந்திருக்குமே! ஆம்! நம்மிடம் உள்ள கண், காது, மூக்கு, நாக்கு, மெய் (உடம்பு) என்பவையே!இப்பாடலில் அடவி, சிங்கங்கள், சிங்கங்கள் வேட்டைக்குப் போய்த் திரும்புவது, நகங்களையும் பற்களையும் அறுத்து எறிவது ஆகியவை பொருள் பொதிந்த அருஞ்சொற்கள். அடவி - வனம் என்ற சொல் மரம், செடி, கொடிகளுடன், அடர்ந்து, அழகாக இருப்பதைக் குறிக்கும். காடு என்ற சொல், பெரும் பெரும் மரங்கள், செடி கொடிகள் ஆகியவை வரைமுறையே இல்லாது (ஒழுங்கீனமாக) மிருகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

அடவி என்பது இரண்டும் கலந்தது. அடர்ந்து பரந்து விரிந்து இருக்கும். ஆனால், வரன் முறையே இருக்காது. குகைகளும் சிறு சிறு மலைகளும் நிறைந்து இருக்கும்.இப்போது புரிந்திருக்குமே திருமூலர் ஏன் நமது உடம்பை ‘அடவி’ என்ற சொல்லால் குறித்தார் என்று.நமது உடம்பு ஒழுங்காக அமைந்ததைப் போல இருக்கிறது. ஆனால் உடலில் உள்ளே ரத்தம், சதை, நரம்பு எனப் பலவும் அடர்ந்து பரந்து விரிந்து இருக்கின்றன.வெளியிலோ கண், காது முதலானஐம்பொறிகளும் உள்ளன. அவற்றைச் சிங்கங்கள் எனச் சொல்லும் நயம், அழகு!ஒரு சிங்கம் இருந்தாலே, கேட்க வேண்டாம். அது எப்போது வெளி வருமோ? என்ன செய்யுமோ? என்ற நிலை உண்டாகும். ஐந்து சிங்கங்கள் இருந்து விட்டால்...?நமது கண், காது முதலான ஐந்து இந்திரியங்களும் பொதுவாக பொறிகள் -புலன்கள் எனப்படும். காரணம்? அவை அறிவோடு செயல்படும்போது புலன்கள் எனவும், அறிவற்ற செயல்களில் ஈடுபடும்போது பொறிகள் எனவும் அழைக்கப்படும்.

சிங்கங்கள் எப்படிக் குகையை விட்டு வெளியே போய், மனம் போன போக்கில் வேட்டையாடி விட்டு, மறுபடியும் குகைக்குத் திரும்புகின்றனவோ, அதுபோல நமது ஐம்புலன்களும் வெளியே பல விவகாரங்களில் போய் மேய்ந்துவிட்டு, மறுபடியும் உடம்பிற்குள்ளேயே வந்து நிலைபெறும். மறுபடியும் அவை எப்போது வெளியே போய் என்ன செய்யும் என்பது நமக்குத் தெரியாது.சிங்கம் வேட்டைக்குப் போய் திரும்பினால், அது தங்கியிருக்கும் குகையைத் தேடி, வேட்டைக்காரர்கள் வருவர். குகையில் சிங்கம் இருந்தால், அதன் கதை முடிந்தது. ஒருவேளை குகையில் சிங்கம் இல்லையென்றால், குகையே அழிக்கப்பட்டு விடும்.அது போல நமது பொறி-புலன்களில் செய்கைகளால், அவை இடம் பெற்ற நமது உடம்பு அழிக்கப்பட்டு விடும். இதில் இருந்து தப்ப என்ன வழி?

திருமூலர் சொல்கிறார். அதற்கு உதாரணம்தான் சிங்கங்கள். சிங்கம் வேட்டையாடப் பெரிதும் உறுதுணையாக இருப்பது அதன் நகங்களும் பற்களுமே, அவற்றை நீக்கி விட்டால், சிங்கத்தின் வேட்டை கட்டுப்படுத்தப்பட்டு விடும். அதுபோல நமது ஐம்புலன்களையும் அவை தவறான செயல்களில் ஈடுபட எண்ணும் போதே, அவற்றிலிருந்து மீண்டு நாம் திரும்ப வேண்டுமே தவிர, அவற்றின் போக்கிலேயே போய்க் கொண்டிருந்தால், நாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.இருப்போம், உயிரோடு, நாம் எதிர்பார்த்த நல்லவை யாவும் கிடைக்கும். ஆனால் அவற்றை நம்மால் அனுபவிக்க முடியாது. அதனால் ஓரளவிற்காவது உடல் நல்ல நிலையில் இருக்கும்போதே, மனதை நல்வழியில் திருப்பி இறையருளைப் பெற முயல வேண்டும் என்பதே திருமூலரின் உபதேசம்.இவ்வாறு சொன்ன திருமூலர், அடுத்த பாடலில் தேரில் ஏறிப் போகச் சொல்கிறார். அப்பாடலில் அவர் ‘தேர்! தேர்!’ என நான்கு வகையான தேர்களைக் கூறினாலும் ‘தேர்ச்சி பெறு! தேர்ச்சி பெறு!’ என நான்கு திக்குகளிலிருந்தும் கூறுவதைப் போலவே இருக்கிறது.

காயத் தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே
(திருமந்திரம் - 1651)

கருத்து: உடம்பு எனும் தேரில் மனம் என்னும் தேரோட்டி கூட்டுவிக்கிறான். அதன் காரணமாக உலக இன்பங்கள் என்னும் மாயத்தேரில் ஏறி, அதிலிருந்து இறங்கும் எண்ணமே இல்லாமல் இருக்கின்றன ஆன்மாக்கள். அதை விடுத்து அவ்வான்மாக்கள் அன்புத் தேரில் ஏறி, சிவனருளைப் பெற்றால் சிவனடியார்களுடன் சேர்ந்து தெய்வ நிலையை அடையலாம்.உடம்பைத் தேராகவும், மனதைத் தேர்ப் பாகனாகவும் கூறும் அற்புதப் பாடல் இது.முதல் இரண்டு வரிகள் ஓர் அற்புதமான கூட்டணியைச் சொல்கின்றன. அடுத்த இரு வரிகள், நமக்குத் தேவையான இரு தகவல்களைத் தருகின்றன.முதலாவதாக உடம்பைத் தேராக உருவகப்படுத்துகிறது பாடல். தேர் எப்படி ஒவ்வோர் இடமாக, மாறி மாறிப் போகின்றதோ அது போல, உடம்பும் பால பருவம், இளைய பருவம், நடுத்தரப் பருவம், வயோதிகப் பருவம் என ஒவ்வொன்றாக மாறி மாறிப் போகும்.

தேரில் சக்கரங்கள், அவற்றை இணைக்கும் கீழ்ப்பகுதி, பீடம், அதற்கு மேல் கூரை எனப் பல பகுதிகள் உண்டு. அதே போலத்தான் உடம்பும். எலும்பு, ரத்தம், சதை, நரம்பு எனப் பலவும் இணைந்ததே உடம்பு. தேரோட்டி, தேரைப் பொறுப்பாகச் செலுத்தாவிட்டால், அது சுக்கு நூறாகச் சிதைந்து போய் விடும். உடம்புக்கும் அதே நிலைதான்! மனம் எனும் தேரோட்டி, உடம்பு எனும் தேரை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால், உடம்பு சிதைந்து போய் விடும்.தேர் - உடம்பு, மனது - தேரோட்டி. மனதைத் தேரோட்டியாக நாம் கொண்டாலும், திருமூலர் மனதைப் ‘பாகன்’ என்றே கூறுகிறார். தேரோட்டி காரோட்டி எனப் பல ‘ஓட்டி’களைச் சொன்னாலும், யாரும் ‘யானை ஓட்டி’ எனக் கூறுவதில்லை, பாகன் என்றுதான் கூறுவோம்.

மற்ற வாகனங்களை ஓட்டக் கூடியவர்களுக்கு, அதைச் செலுத்தத் தெரிந்திருந்தால் போதும். ஆனால், யானையைச் செலுத்தக்கூடிய பாகனுக்கு, யானையின் நடவடிக்கைகள் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். எந்த நேரத்தில் யானைக்கு ‘மதம்’ பிடிக்கும், அதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும், என்பவற்றையெல்லாம் பாகன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால், பல ஆட்கள் பல நாட்கள் சேர்ந்து செய்தாலும், உருவாக்க முடியாத அளவிற்குச் சேதங்கள் உண்டாகி விடும். அதே பாகன், யானையின் போக்கைத் தெரிந்துகொண்டு, மெள்ள மெள்ள அதைத் தன் வசப்படுத்தி வைத்தால், கடினமான வேலைகள் பற்பலவற்றையும் அந்த யானை செய்து விடும்.இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு திருமூலரிடம் போகலாம்!

திருமூலர் மனதைப் ‘பாகன்’ எனக் கூறுகிறார். பாகன் சொன்னபடிதான் யானை கேட்க வேண்டுமே தவிர, யானை சொன்னபடிப் பாகன் கேட்கக்கூடாது. கேட்டால் யானை மட்டுமல்ல, அத்துடன் சேர்ந்து பாகனும் போய் விடுவார்.அதுபோல, மனம் காட்டும் நல்வழியில்தான் உடம்பு செயல்பட வேண்டுமே தவிர, உடம்பு கேட்கும் வழியில் மனம் செயல்பட ஆரம்பித்தால் கதை முடிந்து விடும். ‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்’ என்று ஒளவை சொன்னது இதைத்தான்.ஆனால், பிரச்னை எங்கு முளைக்கிறது என்றால், சரியில்லாத கூட்டணியில்தான் ஆரம்பிக்கின்றது. உடம்பும் மனமும் சேர்ந்து கூட்டணியாகச் செயல்படுகின்றன என்று பார்த்தோமல்லவா? அக்கூட்டணியில் இரண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட்டாலும், அந்த இரண்டில் மிகவும் பலம் வாய்ந்தது உடம்புதான்.

மனம் ஒவ்வொன்றிலும் இருக்கக்கூடிய இன்ப துன்பங்களை அறிவித்தாலும், கூட்டணி தர்மத்தை அனுசரித்து, உடம்பு என்ன சொல்கிறதோ, அதையே மனம் கேட்கும். இன்பங்களை அனுபவிப்பதற்காகப் பல வழிவகைகளை மனம் சொல்லும். அதன்படியே செயல்பட்டு உடம்பும் எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவிக்கும்.ஆனால், அதன் பலனாகத் துன்பம் விளையும் போதோ, கூட்டணி தர்மத்தையும் மீறி, மனம் கற்புக்கரசனாக மாறி, நமக்கு, அதாவது உடம்பிற்கு அறிவுரையும், அறவுரையும் கூறும். ‘நான் அப்போதே சொன்னேன். நீதான் கேட்காமல் அலைந்தாய். இப்போது கஷ்டப்படுகிறாய்’ என ஒதுங்கி நின்று பேசும்.
நோயால் வலி கண்டு உடம்பு துடிக்கும்போது மனம் என்பது சாட்சி மாத்திரமாகவே இருக்குமே தவிர, எந்த விதத்திலும் உடம்பின் வலியை அது ஏற்காது.இதிலிருந்து விடுபட, விடுபட்டு ஆனந்தம் அடைய என்ன வழி? பாடலின் பிற்பகுதி விளக்கம் சொல்கிறது.

‘‘அன்பைக் கைக்கொள்! தெய்வ அருள் கிடைக்கும். ஈசன் அடியார்கள் உறவு கிடைக்கும். தெய்வீக நிலை கிட்டும்’’ எனக் கூறி பாடல் நிறைவு பெறுகிறது.
ஆம், அன்பும் அடியார்கள் உறவுமே அமைதியைத் தரும்; ஆனந்தத்தை அருளும். திருமூலர் இவ்வாறு பாடம் நடத்திய இதே தகவலை அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மைப் பதிகமும் கூறுகிறது. ‘கலையாத கல்வியும்’ எனும் பாடலில் பதினாறு பேறுகளையும் விவரித்த அபிராமி பட்டர், பாடலை நிறைவு செய்யும்போது ‘‘துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி ‘பெரிய தொண்டரொடு’ கூட்டு கண்டாய்’’ என நிறைவு செய்கிறார். அதாவது ‘நல்லவர்கள் தொடர்பே - நலன்கள் அனைத்தும் அருளும்’ என்பதே அப்பதிகத்தின் பொருள். திருமூலர் போன வழியிலே தான் அபிராமி பட்டரும் போயிருக்கிறார்.நல்லவர்கள் தொடர்பை விரும்புவோம், நல்லவை நம் பக்கம் திரும்பும்.

(மந்திரம் ஒலிக்கும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்