SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனவு நனவாகும்!

2018-04-16@ 16:54:09

பி.காம்., முடிக்காத நான் தந்தையின் சிபாரிசு மூலம் ஆடிட்டரிடம் வேலை பார்க்கிறேன். வருமானம் போதவில்லை. சினிமா சம்பந்தப்பட்ட துறையில் ஆர்வம் உள்ளது.குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து முயற்சிக்க இயலவில்லை. எனது எதிர்காலத்திற்கு வழிகாட்டுங்கள். சிங்கப்பூர் வாசகர்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் (தனுசு லக்னம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சிங்கப்பூரில் பிறந்திருக்கிறீர்கள் என்பதால் மகர லக்னம் என்பதேசரி) பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் நீங்கள் இருக்கும் பணியில் தொடர்ந்து கொண்டே உங்கள் கற்பனைத் திறனையும், கலைத்திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜோதிடர் சொன்னபடி 31வது வயதில் உங்களுக்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள். அதற்கு முன்னதாக தற்போதிருந்தே அதற்கான பணிகளில் ஆர்வம் செலுத்துங்கள்.

17.05.2020ற்கு மேல் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து இடம் பெயர வேண்டிய சூழல் உருவாகலாம். ஒரு வருட காலத்திற்கு அதிகப்படியான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் 2021ம் ஆண்டின் பிற்பாதியில் இருந்து உங்களுக்கான பாதையில் பயணிக்கத் துவங்குவீர்கள். சினிமாதான் என்றில்லாமல் தொலைக்காட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும் முயற்சி செய்யுங்கள். தினந்தோறும் காலையில் குளித்து முடித்து சரஸ்வதி தேவியை கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வாருங்கள். உங்கள் கனவு நனவாகும்.

“பாஸா குந்தேந்து சங்கஸ்படிகமணிநிபா பாஸமாநா ஸமாநா
ஸாமே வாக்தேவதேயம் நிவஸது வதநேஸர்வதா ஸூப்ரஸந்நா.”


ஆயுள்தண்டனை பெற்று கடந்த இரண்டு வருடங்களாக கோவை மத்திய சிறையில் இருக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் விடுதலை ஆக முடியுமா? ஏழரைச் சனி நடந்து வருகிறது. வழக்கில் இருந்து விடுதலை ஆகி நல்ல முறையில் திருமணம் நடந்து குடும்பத்துடன் வாழவழி காட்டுங்கள்.பூபதி புஷ்பராஜ், மத்தியசிறை, கோவை.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜென்ம ராசி, ஜென்ம லக்னம் இரண்டுமே குரு பகவானுக்கு உரியவை. குருவின் ராசியிலும், லக்னத்திலும் பிறந்தவர்கள் நீதி, நேர்மை, நாணயத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களாகவும், வாழ்க்கையின் விதிமுறைகளை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள். தெரியாமல் தவறு செய்தவனைவிட தெரிந்தே தவறு செய்தவனுக்குத்தான் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனுதர்மசாஸ்திரம் உரைக்கிறது. நீங்கள் தெரிந்தே தவறு செய்திருக்கிறீர்கள். தற்போது அதற்கான தண்டனையை அனுபவித்து வருகிறீர்கள்.

எனினும் செய்த தவறினை நினைத்து எப்போது வருந்தத் தொடங்கி விட்டீர்களோ, அப்போதே அதற்கான விமோசனமும் பிறந்து விடுகிறது. ஏழரைச் சனி என்பது நடந்தாலும், உங்களுடைய ஜாதகத்தில் சனி நல்ல இடத்தில் அமர்ந்திருப்பதால் கவலைப்பட வேண்டாம். விடுதலைக்கான முயற்சியினை தொடர்ந்து செய்து வாருங்கள். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தற்போது உகந்த நேரமே. வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆக இயலாவிட்டாலும், தண்டனைக் காலம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு. உங்களுடைய ஜாதக பலத்தின்படி 2022ம் ஆண்டு வாக்கில் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதுடன் நல்லபடியாக திருமணம் செய்துகொண்டு நலமுடன் வாழ்வீர்கள். சனிக்கிழமைதோறும் உங்களுடன் இருக்கும் வயது முதிர்ந்த கைதிகளுக்கு உங்களால் இயன்ற சிறு உதவிகளை செய்து வாருங்கள். மனநிம்மதி காண்பீர்கள்.

கோபுர உச்சியில் இருந்த வாழ்க்கை இன்று குப்பைமேடு ஆகிவிட்டது. பச்சை மையினால் கையொப்பம் இடும் உயர்ந்த பணியில் இருந்த என் கணவர் திடீரென்று ஒரு வழக்கில் கைதாகி 58 நாட்கள் சிறையில் இருந்து தற்போது இரண்டு ஆண்டுகளாக வழக்கினை எதிர்கொண்டு போராடி வருகிறார். அவர் நிரபராதி என்று நிரூபணமாகி மீண்டும் வேலை கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். உமா, மதுரை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது குருதசையில் புதன் புக்தி நடக்கிறது. குழந்தைகள் பிறந்த நேரத்தினால் தகப்பனின் பணி பறிபோய் விட்டது என்று சொல்வது முற்றிலும் தவறு. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்துள்ள ராகுபகவான் தந்த ஒரு நிமிட சலனம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. நடந்ததை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் கொள்ள வேண்டும். வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது எப்படிக் கரையேறுவது என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும். ஜீவன ஸ்தானத்தில் குருபகவான் ராகுவின் சாரம் பெற்று வக்ரகதியில் அமர்ந்துள்ளார்.

மேலதிகாரியின் செயல் காரணமாக இவருக்கு இந்த நிலை உண்டாகி இருக்கிறது. அந்தப் பதவியில் வேறொருவர் வந்து அமரும்போது இவருக்கு நல்வழி பிறக்கும். விரக்தியான எண்ணங்களுக்கு இடமளிக்காமல் இறைவனின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து முயற்சித்து வாருங்கள். வியாழன்தோறும் மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள எல்லாம்வல்ல சித்தர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து ஆற அமர்ந்து நிதானமாக பிரார்த்தனை செய்வதோடு தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு தானம் செய்யுங்கள். 06.03.2019 முதல் வேகம் பிடிக்கும் வழக்கில் 12.02.2020க்கு மேல் சாதகமான முடிவினைக் காண்பீர்கள். இழந்த உத்யோகம் மீண்டும் வந்து சேர்வது உறுதி.

முப்பதோரு வயதாகும் என் மகளுக்கு இதுவரை வரன் ஒன்றும் சரியாக அமையவில்லை. அவருடைய கல்யாணம் எப்போது நடக்கும்? நல்ல வரன் அமைய நான் என்ன செய்ய வேண்டும்? பொன்னுத்தாய், மும்பை.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சந்திரதசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள சனி திருமணத் தடையை உண்டாக்கி வருகிறார். நீங்கள் வசிக்கும் இடத்திலேயே மாப்பிள்ளையைத் தேடாமல் தெற்கு திசையில் சற்று தொலைவில் வசிக்கும் மாப்பிள்ளையாகப் பாருங்கள். உங்கள் உறவு முறையில் வரன் அமையாது.

ஏழாம் வீட்டில் சனி உள்ளதால் எதிர்பார்ப்பினைக் குறைத்துக் கொள்ளுங்கள். சாதாரணப் பணியில் இருந்தாலும் நல்ல உழைப்பாளியாக இருப்பார். சனிக்கிழமை தோறும் 12 வயதிற்குட்பட்ட ஏழைச் சிறுவன் ஒருவனுக்கு உங்கள் மகளின் கையால் உணவளிக்கச் சொல்லுங்கள். தொடர்ந்து 12 வாரங்கள் செய்வது நல்லது. அதோடு விநாயகப் பெருமானுக்கு 12 கொழுக்கட்டை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். 02.12.2018க்குள் உங்கள் மகளின் திருமணம் நிச்சயமாகி விடும். கவலை வேண்டாம்.

எனக்கு மனக்கஷ்டம், பணக்கஷ்டம் எல்லாமே இருக்கிறது. உடலில் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கிறது. சர்க்கரை நோய், குடல் ஆப்ரேஷன், முதுகுத் தண்டுவடஆப்ரேஷன், கல்லீரல் கிருமி என ஏதோ ஒரு பிரச்சினை தொடர்கிறது. தொழில் எதிரியும் உண்டு. என் ஜாதகத்தில் மாந்தி உண்டு. என் பிரச்னைகள் தீர வழி சொல்லுங்கள். மணிகண்டன், அருப்புக்கோட்டை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி உட்பட சந்திரன், செவ்வாய், குரு, ராகு என ஐந்து கிரகங்கள் கஷ்டத்தைத் தரும் எட்டாம் இடத்தில் அமர்ந்து சிரமத்தைத் தருகிறார்கள். உங்கள் வாழ்வினில் எப்போதும் ஏதோவொரு வகையில் பிரச்னை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் சமாளிக்கின்ற வகையில் சிம்ம ராசியில் பிறந்திருக்கிறீர்கள். தன்னம்பிக்கையும், மனஉறுதியும் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாந்தி என்பது எல்லோருடைய ஜாதகத்திலும் இடம் பெற்றிருக்கும்.

மாந்தியின் அமர்வுநிலை குறித்து கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு இருந்து வரும் உடல்ரீதியான பிரச்னைகளை முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியாது. எனினும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். உங்கள் ஜாதகபலத்தின்படி ஏற்கெனவே செய்திருக்கும் அறுவை சிகிச்சைகளே அதிகம். மேற்கொண்டு உடலைக் கூறு போடாதீர்கள். உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்யத்தைப் பேணி வாருங்கள். தொழில்முறை எதிரியைப்பற்றிக் கவலைப்படாமல் உங்கள் கடமையைச் சரிவர செய்து வாருங்கள்.

தொழில்முறை போட்டி என்பது உங்களை மேலும் சுறுசுறுப்பாக செயல்பட வைத்து வெற்றியைப் பெற்றுத் தரும். ஹோட்டல் தொழில் தொடர்ந்து உங்களுக்கு கைகொடுக்கும். தினமும் காலையில் கடை திறந்தவுடன் முதல் இட்லியை காகத்திற்கு வைத்து விடுங்கள். கடை வாசலில் வந்து நிற்கும் பிச்சைக்காரனுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் இயன்ற அன்னதானத்தைச் செய்யுங்கள். அன்னதானம் ஒன்றே உங்கள் ஜாதகத்தில் உள்ள பலவீனத்தைச் சரி செய்ய உதவும். கவலையை மறந்து உற்சாகத்துடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • VeronicaStorm

  ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

 • vehicletest

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்