SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கங்கையில் கரையும் அசுத்தங்கள் என்னவாகின்றன?

2018-04-16@ 15:19:55

பகவத் கீதை  - 65

ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த காலேனாத்மனி  விந்ததி (4:38)

‘‘ஞானம்தான் மிகவும் உயர்ந்தது, பரிசுத்தமானது. அதற்கு ஒப்புமை கூற எதுவுமேயில்லை. அதனால் பிற எல்லாமும்தான் தூய்மையாகுமே தவிர, அதை எதனாலும் மாசுபடுத்த இயலாது.’’

அப்பழுக்கற்றதும், மிகவும் சிறந்ததுமான ஞானத்தை, முறையாகக் கர்மயோகம் செய்பவனால் அடைய முடியும். அவன் எப்போதுமே விழித்தெழுந்தவன் போன்றவன். உறக்கமோ, உறக்கத்தில் ஒருவன் காணும் கனவோ, அவன் தூங்கியெழுந்ததும் எப்படி ஒன்றுமில்லாமல் போகிறதோ, அதுபோன்ற ஒரு தெளிவை, ஞானத்தை, தூங்கியெழுந்தபோது மட்டுமல்லாமல் நாள்பூராவும், எந்நேரமும், ஏன் அந்தத் தூக்கத்திலும்கூட கொண்டிருப்பவன், கர்மயோகத்தை முறையாகச் செய்பவனாக இருப்பான்.

பிற அனைத்தையும் பரிசுத்தமாக்குவதோடு, அவற்றை ஆரோக்கியமாகவும் ஆக்கும் வல்லமை ஞானத்துக்கு உண்டு - சூரியப் பிரகாசம்போல.

ஞானமடைந்தவன் நோயுறவும் மாட்டான்.புலன்கள் இருந்தும் இல்லாததுபோல அவன் இயங்குவதால், அவை எந்த இச்சைக்கும் ஆட்படுவதில்லை, அதனால் அந்த இச்சை அவனுள் எந்த நோயையும் உருவாக்குவதில்லை.நோய் என்பது உடல் பிணி மட்டுமல்ல, உள்ளப் பிணியும்கூட. அதனாலேயே அவன் எதிலும் ஆசை கொள்வதுமில்லை, ஏமாற்றமடைவதும் இல்லை.பொறாமை இல்லை, அவதூறு இல்லை, பகை இல்லை, வன்மம் இல்லை; அதேபோல சந்தோஷமில்லை, குதூகலித்தல் இல்லை, இன்பக் கிளர்ச்சி இல்லை, களியாட்டமில்லை.நிர்ச்சலனம்தான் அவனுடைய மனோநிலை.அதனாலேயே அவன் முகத்தில்  சாந்தம் பூத்திருக்கிறது. அதுவே அவனிடம் நல்லெண்ணம் கொண்டோர் நெருங்குவதற்கும், துர் எண்ணம் கொண்டோர் விலகுவதற்கும் ஏதுவாகிறது.

கங்கை நதி, தன்னிடம் சேரும் அசுத்தங்களையும் தூய்மைப்படுத்துகிறது. அதாவது அவற்றைத் தன்னுள் கரைத்துக்கொண்டு,  அதேசமயம் தான் அசுத்தப்படாமலும் திகழ்கிறது.அந்த அசுத்தங்கள் எங்கே போகின்றன? ஆவியாகிவிடுகின்றனவா? கரைந்து உருத்தெரியாமல் போய்விடுகின்றனவா? அப்படியே கரைந்தாலும் அசுத்தங்களின் துர்நாற்றம், கசடு போன்ற கூறுகள் எங்கே போய்விட்டன?

அதுதான் கங்கையின் சிறப்பு. பிற சேர்க்கைகளால் தான் அசுத்தமாகாததோடு, அவற்றையும் சுத்தமாக்கும் அற்புத சிறப்பு. இத்தகையவன்தான் ஞானி. துர்புத்தி கொண்ட யாரும் அவனை நெருங்கினாலும், அவர்கள் தம் உரு இழந்துவிடுவார்கள், அதாவது தன்மை மாறிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஞானி அவர்களைப் புடம்
போட்டுவிடுவான், வெகு இயல்பாகவே!

ஞானியின் நடவடிக்கைகள் சமுதாய அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால் உணர்ச்சி
வசப்படுதலால் சமுதாயத்துக்கு நலன் ஏற்படும் என்று அவன் நம்புவதில்லை. அதனாலேயே அவன் அமைதியாக இருக்கிறான்.

சாலைப் போக்குவரத்தில் திடீரென்று ஒரு நெருக்கடி தோன்றுகிறது. அரை கிலோ மீட்டர் முன்னால் ஏதோ காரணத்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய தடங்கலால், சங்கிலித் தொடர் சம்பவமாக அடுத்தடுத்துப் பல வாகனங்கள் சிறிதும் முன்னேறிச் செல்ல முடியாதபடி முடங்கிவிடுகின்றன. காரணம் என்னவென்று தெரியாததாலும், அந்தக் காரணத்தை அறிந்துகொண்டு அதை நிவர்த்தி செய்து போக்குவரத்தையும் சீர்செய்ய இயலாததாலும், பல வாகனங்கள் பெருத்த ஒலி எழுப்பிக்கொண்டு தம் பொறுமையின்மையைக் காட்டிக்கொள்கின்றன. இப்படி ஒலி எழுப்புவதால் பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை என்பதோடு, அது தனக்கும் கூடுதல் மன உளைச்சலையும், முன்னே நிற்கக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு எரிச்சலையும்தான் உருவாக்குகின்றன.

இதுபோன்ற போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய ஒரு வாகனத்தில் ஒருவர் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல், அமைதியாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். உடன் பயணித்தவர்
களுக்கு வியப்பு மற்றும் அவர் மீது கோபம். சூழ்நிலையை உணராமல், சற்றும் எந்த வினையையும் ஆற்றாமல், கொஞ்சம்கூடக் கலங்காமல் வெகு சுவாதீனமாகப் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாரே என்று கோபம். சிக்கலாகிப்போன போக்குவரத்தை தம் கூக்குரலாலும், கண்டனங்களாலும் மேலும் குழப்பிக்கொண்டிருந்த அவர்களை, இவர் அமைதியாக இருப்பது எரிச்சலடையவைத்தது.‘இப்படிப் பொறுப்பில்லாமல் இருக்கிறாரே!’ என்று மனதுள் கறுவினார்கள்.

அவரிடம், ‘‘ஏன் கொஞ்சமும் சலனமின்றி இருக்கிறீர்கள்? இந்தப் போக்குவரத்து நெருக்கடியால் நீங்கள் பாதிக்கப்படவில்லையா?’ என்று கடுமையான குரலில் கேட்டார்கள்.

‘‘இல்லை. ஏனென்றால் இது எனக்கு மட்டுமான தனி பாதிப்பு இல்லையே!’’ என்று அமைதியாக பதிலளித்தார் அவர்.
சுற்றி நின்றவர்களுக்குக் குழப்பம்.யாராவது முயற்சி செய்யட்டும், அந்த முயற்சியால் பாதை சீரானால், அதன்பிறகு பயணத்தைத் தொடரலாம்.அதுவரை ஏன் சிரமப்படவேண்டும் என்ற சுயநலமியாக இருக்கிறாரே என்று ஆத்திரம்.

‘‘நீங்களும்தானே இந்த நெருக்கடியில் சிக்கியிருக்கிறீர்கள்? உங்கள் பங்குக்கு ஏதேனும் முயற்சிக்கக்கூடாதா?’’

‘‘வெறுமே கத்துவதாலும், எரிச்சலடைவதாலும், இதுவரை நீங்கள் இந்தப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்க எந்தவகையில் உதவிவிட்டீர்கள்? உங்களுக்கு முன்னால் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏற்பட்டிருக்கும் போக்குவரத்துத் தடையை அதன் ஆரம்பத்தில் இருப்பவரால் மட்டும்தானே விலக்க முடியும்? அல்லது நீங்களெல்லாம் அங்கே போய் ஏதேனும் யோசனை சொல்கிறீர்களா, தடை நீக்குகிறீர்களா?’’

அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் தயங்கி நின்றார்கள்.‘‘இந்த நிர்க்கதியில், இந்தப் பகுதியில் இருக்கும் நாம் என்னதான் செய்ய முடியும்.யாரோ எங்கோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக நாம் ஏன் நமக்கே கோபம் என்ற தண்டனையைக் கொடுத்துக்கொள்ளவேண்டும்?அமைதியாக இருங்கள். முன் பகுதியில் உள்ளவர்களும் அவரவர் பணிகளை கவனிக்கப் போகவேண்டியவர்கள்தான். ஆகவே அவர்கள் விரைவில் ஒரு தீர்வு காண்பார்கள். அதுவரை அவ்வாறு தீர்வு கிட்ட நாம் இறைவனை பிரார்த்திப்போம். நம் பிரார்த்தனையால் இறைவன் கருணை அவர்களை எட்டி, யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் தீர்வு காண உத்திகளை வழங்கும்,’’ என்று அவர்களை ஆறுதல்படுத்தினார் அவர்.

எந்தச் சூழ்நிலையிலும் பதட்டப்படாமலிருக்கும் அரிய குணம் கொண்டவன்தான் ஞானி.அவன், தான் பரிசுத்தமாக இருப்பதோடு, பிறரையும் பரிசுத்தவான்களாக்கிவிடுகிறான்.

ச்ரத்தாவான்லபதே ஞானம் தத்பர ஸம்ய    தேந்த்ரிய
ஞானம் லப்த்வா பராம் சாந்திமசிரேணாதிகச் சதி (4:39)

‘‘தன் புலன்களை முற்றிலும் அடக்கி, அமைதியாக, மிகுந்த சிரத்தையுடன் கர்மாக்களை இயற்றுபவன் ஞானியாகிறான். இவ்வாறு ஞானத்தைப் பெற்ற அக்கணமே அவன் பரம ப்ராப்தியான சாந்தியை அடைகிறான்.’’

புலனடக்கம் என்றால் என்ன? புலன்களின் இயல்புக்கு எதிராக நடந்து கொள்வதா? அது சாத்தியமா? புலன்களுக்கு எதிராக, புறம்பாக, அவற்றை முற்றிலும் புறக்கணித்து வாழ இயலுமா? ஆகவே புலனடக்கம் என்பது புலன்களை முழுமையாக அறிவது, அவற்றின் ஈர்ப்புகளுக்குரிய பொருட்கள்மேல் நாம் ஆர்வம் காட்டாதிருப்பதுதான்.

அமரர் தென்கச்சி சுவாமிநாதன் புலனடக்கம் பற்றி மிக அழகாக ஒரு கதை சொன்னார்: ஒரு துறவி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த வழியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பெண் கடந்து செல்வாள். கண்களை மூடி, தன் மனதை ஒருநிலைப்படுத்த முயன்ற துறவி, அவளுடைய கால் கொலுசு சத்தம் கேட்டு சற்றே சலனமுற்றார்.தன்னுடைய இந்த பலவீனத்தை, தன் கோபத்தால் மறைக்க முயன்றார். உடனே கண் திறந்து பார்த்து, ‘‘ஏ, பெண்ணே! நான் ஆழ்ந்த நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறேன், நீ உன் கொலுசு சத்தத்தால் அதற்கு பங்கம் விளைவிக்கிறாயே!’’ என்று அவளிடம் சினந்தார்.

உடனே அந்தப் பெண் பதறிப்போய் அப்போதே தன் கால் கொலுசுகளைக் கழற்றி, சுமந்து வந்த கூடைக்குள் போட்டுக்கொண்டாள்.

‘ம்ம்ம்…’ என்று கர்வத்துடன் முனகினார் துறவி. அந்தப் பெண் அங்கிருந்து சென்றாள்.

மறுநாள் அதேநேரத்தில் அவள் வந்தபோது, துறவியை அவள் சூடியிருந்த மல்லிகை மலர் ஈர்த்தது. இன்றும் அவர் நிஷ்டை கலைந்தது. இன்றும் அவர் கோபப்பட்டார்.‘‘இந்தா, பெண்ணே, நீ மறுபடி என் நிஷ்டையை பாதிக்கிறாய். நீ சூடியிருக்கும் மல்லிகை மலரின் வாசத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை,’’ என்றார்.

இன்றும் அந்தப் பெண் உடனே தன் தலையிலிருந்து மல்லிகைச் சரத்தைக் கழற்றி தூர எறிந்தாள்.

‘ம்ம்ம்….’ என்று கர்வத்துடன் முனகினார் துறவி. அந்தப் பெண் அங்கிருந்து சென்றாள்.

அடுத்த நாள் துறவி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நேரமும் வந்தது. ஆனால் எந்த பாதிப்பும் இல்லை. கண் திறந்து பார்க்கவும் அவருடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை.கொலுசு சத்தம் இல்லை, மல்லிகை மணம் இல்லை. ஆனாலும், ‘அந்தப் பெண் இந்நேரம் இந்த வழியாக நடந்து சென்றிருப்பாள்’ என்று நினைத்துக்கொண்டார்!

ஆக புலனடக்கம் என்பது கொலுசு சத்தத்தையும் சரி, மல்லிகை வாசத்தையும் சரி, உணர்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பது. இதனால் கொலுசு சிணுங்கினாலும் அதன் ஓசை காதுகளில் விழாது, மல்லிகை மணத்தாலும் அதன் வாசனை நாசியை எட்டாது!

அந்த காலத்தில் குருகுலக் கல்வி முறையில் மாணவர்கள் குருவுடன் அவரது ஆசிரமத்திலேயே தங்கி பாடம் பயின்றார்கள்.பாட நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த மாணவர்கள் குருவுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்தார்கள். குருவினுடைய ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தல், ஆசிரமத்தைப் பெருக்கி, துடைத்து சுத்தம் செய்தல், சமையல் செய்தல், பாத்திரங்களைக் கழுவி வைத்தல் போன்ற ஆசிரமத்து வேலைகள் மட்டுமல்லாமல், காட்டிற்குச் சென்று அன்றாட உணவுக்குத் தேவையான காய்கறி, கனிகளைப் பறித்து வருதல், கொடிய விலங்கு அல்லது அந்நியரிடமிருந்து ஆசிரமத்தைப் பாதுகாத்தல் என்று அனாவசியமாக ஓய்வு கொள்ள முடியாதபடி, குரு, அவர்களை வேலை வாங்கிவந்தார்.

அவருக்குத் தெரியும், அனாவசிய ஓய்வு மாணவர்களுடைய வக்கிர உணர்வுகளைத் தூண்டிவிடும் என்று.

அந்தச் சூழ்நிலையும் ஒருசமயம் வந்தது.மாணவர்களில் சிலர் இவ்வாறு ‘எடுபிடி’ வேலைகளைச் செய்வதில் வெறுப்புற்றார்கள்.‘நாம் மாணவர்கள், வேலைக்காரர்கள் அல்ல’ என்ற அகம்பாவம் அவர்களிடம் விழித்துக்கொண்டது.குருவிடம், ‘‘யாராவது பெண்மணியை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். அவள் செய்யவேண்டிய வேலையெல்லாம் நாங்கள் செய்யவேண்டியிருக்கிறது!’’ என்று வெளிப்படையாகவே முறையிட்டார்கள்.

குரு அமைதியாகச் சொன்னார்: ‘‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேலைக்காக அமர்த்தப்படும் பெண், உங்கள் மனநிலையைப் பெரிதும் பாதித்துவிடக்கூடும். அதனால் வேண்டாம்.’’

‘‘இளம் பெண்ணாக ஏன் வேலைக்கு வைக்கவேண்டும்? வயது முதிர்ந்த பெண்ணை நியமிக்கலாமே!’’ என்று
மாணவர்கள் தொடர்ந்து வாதிட்டார்கள்.

அவர்களுக்கு அவர்களுடைய நிலையை உணர்த்த தீர்மானித்தார் குரு. ஒருநாள் அவர்அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவுப் பொருட்களில் அவர்களறியாமல் நிறைய காரத்தைச் சேர்த்தார்.

சக மாணவரால் பரிமாறப்பட்ட உணவை உண்ணத் தொடங்கிய மாணவர்கள், அதிலிருந்த காரம் காரணமாகக் கதற ஆரம்பித்தார்கள்.நாக்கு, வாய், மூக்கு, கண் எல்லாமே எரிந்தன! குருவின் முன்னேற்பாட்டின்படி அவர்களருகே குடிநீர் வைக்கப்படவில்லை. பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே எழுந்துவிட்ட மாணவர்கள் தண்ணீரைத் தேடி ஓடினார்கள். வெளியே ஒரு தொட்டியில் நீர் நிரப்பப்பட்டிருந்தது. உடனே அதனருகே ஓடிய அவர்கள் அருகிலிருந்த
குவளையால் மொண்டு அந்த நீரைக் குடித்தார்கள்.காரம் கொஞ்சம் மட்டுப்பட்டது போலிருந்தது.சற்றே ஆறுதலடைந்தார்கள்.

அவர்களிடம் குரு வந்தார்.‘‘என்ன, உணவு ரொம்பவும் காரமாக இருந்ததோ?’’ என்று கேட்டார்.
‘‘ஆமாம்,’’ என்றார்கள் மாணவர்கள்.
‘‘அந்தக் காரம் தீர இந்தத் தண்ணீரையா குடித்தீர்கள்?’’
‘‘ஆமாம், ஏன்?’’
‘‘அடடா, இது சாணம் கரைத்த நீரல்லவா? ஆசிரம சுவர்களில் பூச்சி வராமலிருக்கப் பூசுவதற்காக வைத்திருந்தேனே!’’
மாணவர்கள் அருவெறுப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  ‘‘வயதான பெண்மணியாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு வேலைக்காரியை நியமிக்க வேண்டும் என்றுதான் இப்போது நீங்கள் கேட்பீர்கள்.ஆனால் அவளை ஒரு பெண்ணாக மட்டும் பார்த்து உங்கள் மனதை நீங்கள் அலையவிடுவீர்கள், அவளை அடையவும் முற்படுவீர்கள். ஆகவே, இந்த விஷப் பரீட்சை வேண்டா்த உணவில் காரத்தை நீங்கள் உணராமல் சாப்பிட்டிருந்தீர்களானால், அதனால் எரிச்சலடையாமல் இருந்தீர்களானால், நீங்கள் பக்குவப்பட்டவர்கள், உங்களுக்காக வேலைக்காரியை அமர்த்துவதில் ஆபத்தில்லை என்று நான் புரிந்து கொண்டிருந்திருப்பேன். அப்படி இல்லாததால், அவரவர், அவரவர் பணிகளை வழக்கம்போல செய்துகொண்டிருங்கள்,’’ என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் குரு.

(தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்