SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகர் எழுந்தருளும் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில்

2018-04-16@ 09:22:36

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 7 கிமீ தொலைவில் வைகையாற்றின் வடக்கு கரையில் உள்ளது வண்டியூர். புராண காலத்தில் சாப விமோசனம் வேண்டி இப்பகுதிக்கு வந்த மண்டூக முனிவருக்கு அழகர் விமோசனம் அளித்தார். இதன் காரணமாக இப்பகுதி ‘மண்டியூர்’ என வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி ‘வண்டியூர்’ என அழைக்கப்பட்டது. மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இப்பகுதியில் அவரது தேர் நிறுத்தப்பட்டதால் வண்டியூர் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இங்கு பழமையான வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், நவக்கிரக சிலைகள் உள்ளன. பெருமாள் சன்னதி முன்பு கலைநயத்துடன் கூடிய அழகிய பிரகாரம் உள்ளது. இங்குள்ள கல் தூண்களில் விநாயகர், சிவபெருமான், கிருஷ்ணன் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலில் கொடி மரம் உள்ளது. தலமரமாக அரசமரம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது.

தல வரலாறு

இந்த கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானது. அருகில் உள்ள வைகையாற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மூலவர் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் கட்டப்பட்ட இந்த கோயில் பிற்காலத்தில் மதுரையை ஆட்சி செய்தவர்களால் முன்புற பிரகாரத்துடன் விரிவுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத் தடை, குழந்தை வரம், வழக்குகளில் வெற்றி, தொழில் வளர்ச்சி, எதிரிகள் தொல்லை உள்ளிட்டவைகளில் இருந்து விடுபட பக்தர்கள் இங்கு அதிகளவில் வந்து வேண்டுகின்றனர். திருமண வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு புதிய சேலை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். சித்திரை திருவிழா, ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும்.

சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் கால் பதிக்கும் கள்ளழகர், அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு முழுவதும் அழகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். மறுநாள் காலையில் அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் சேஷ வாகனத்தில் எழுந்தருளும் அழகர், வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்துக்கு வீதியுலா செல்கிறார். அங்கு மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 4.15 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வாசலிலேயே பஸ் ஸ்டாண்ட் உள்ளதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்