SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரம்பரை தோஷம் மகளைத் தாக்குமா?

2018-04-09@ 15:17:17

என் பெண்ணுக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவ ரீதியாக செலவு செய்தும் பல கோயில்களுக்குச் சென்று மன்றாடியும் பலன் இல்லை. வம்சம் தழைக்க வழிகாட்டுங்கள். விஜயா, தேவகோட்டை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது.உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைப்பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சனிபகவான் 12ல் அமர்ந்திருப்பதும், மருமகனின் ஜாதகத்தில் சனிபகவான் நீசம் பெற்ற செவ்வாயுடன் இணைந்திருப்பதும் பலவீனமான நிலை ஆகும். எனினும் குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பினை முழுமையாக இழந்து விடவில்லை.

இருவரின் ஜாதகப்படியும் வரவிருக்கின்ற 24.07.2018 முதல் 16.04.2019வரை நேரம் கூடி வருகிறது. இந்தக் கால அவகாசத்திற்குள் உங்கள் மகள் கர்ப்பம் தரிக்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்கள் இருவரையும் தனிமையில் இருக்க விடுங்கள். புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று முழுமனதுடன் பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். அங்கு நடைபெறும் சண்டி ஹோமத்திற்கு உங்களால் இயன்ற திரவியங்களை வாங்கித் தருவது நல்லது. மறக்காமல் சண்டி ஹோம பிரசாதத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அம்பிகையின் அருளால் விரைவில் வம்சம் விருத்தி அடையக் காண்பீர்கள்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நான் கடந்த எட்டு மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறேன். மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்கிறேன். திரும்பவும் எனக்கு வேலை கிடைக்கவும், கடன் பிரச்னையில் இருந்து விடுபடவும் நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள். அறிவழகன், பட்டுக்கோட்டை.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன், 12ம் வீட்டிற்கு அதிபதியான சந்திரனுடன் இணைந்து ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அந்நிய தேசத்து உத்யோகம் என்பது சாத்தியமே. தற்போது நடந்து வரும் கிரக சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. தீவிரமாக முயற்சி செய்து வாருங்கள். 16.11.2018ற்குள் நீங்கள் மீண்டும் வெளிநாட்டு உத்யோகம் பார்க்கத் துவங்கி விடுவீர்கள்.

அடுத்து வரவுள்ள குரு தசையின் காலமும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் வெளிநாட்டுப் பணியில் நீடிப்பீர்கள். உங்கள் கடன் பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வருவதோடு 2020ம் ஆண்டு வாக்கில் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு சொந்த வீடு என்பதும் அமைந்துவிடும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் வீட்டில் உள்ளவர்களை உங்கள் சார்பாக காமதேனு பூஜை செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கித் தருவதும் நல்லது. கீழேயுள்ள அபிராமி அந்தாதி பாடலை தினந்தோறும் சொல்லி அம்பிகையை வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்.

“தண்ணளிக் கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொற்பரிமளயாமளைப் பைங்கிளியே.”


எட்டாம் வகுப்பு படிக்கும் என் பேரப் பிள்ளை சரியாக படிப்பில் கவனம் செலுத்துவது கிடையாது. எந்நேரமும் டி.வி. பார்த்துக் கொண்டும், செல்போனை பார்த்துக் கொண்டும் இருக்கிறான். பெரியவர்களை மதிப்பது கிடையாது. எதிர்த்துப் பேசுகிறான். அவன் படிப்பில் கவனம் செலுத்த உரியபரிகாரம் கூறுங்கள். முத்துராமன், கடலூர்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரப் பிள்ளையின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடக்கிறது. கல்வியைத் தரக்கூடிய புதன், குரு ஆகிய இரண்டு கிரஹங்களும் அவரது ஜாதகத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கின்றன. மேலும், வித்யா ஸ்தானாதிபதி செவ்வாயும் ஆறில் அமர்ந்துள்ளார். லக்னாதிபதி சூரியனும் எட்டில் அமர்ந்துள்ளதால் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். அவருடைய மனதிற்கு பிடிக்காத ஒன்றினை செய்யச் சொல்லி அவரை கட்டாயப்படுத்தாதீர்கள். அவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதாலும் 21.06.2018 முதல் குரு தசை துவங்க உள்ளதாலும் அவருடைய எதிர்கால வாழ்வினைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் மாற்றி யோசிக்கும் குணத்தினைக் கொண்டவர் உங்கள் பேரப்பிள்ளை. மற்ற பிள்ளைகளைப் போல பள்ளிக் கல்வியை அவர் மீது கட்டாயப்படுத்தி திணிக்காதீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பலவந்தப்படுத்தினால் அவரது போக்கு வேறு விதமாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அவரது போக்கிலேயே அவரை செல்ல அனுமதியுங்கள். அவ்வப்போது கண்காணித்து வருவது மட்டும் போதுமானது. மீடியா துறையில் உங்கள் பேரனுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அபிஷேகப்பாக்கம் நரசிம்மர் கோயிலுக்கு பேரனை அழைத்துச் சென்று வழிபடச் செய்யுங்கள். நடத்தையில் மாற்றம் காண்பீர்கள்.

திருமணமாகி ஐந்து வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில் என் வாழ்வில் புயல் வீசியது. வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக என் மனைவி விஷம் குடித்து ஒருவழியாக காப்பாற்றி விட்டோம். சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் என் மனைவிக்கு என்மீது சந்தேகம் போகவில்லை. இருபெண்களுக்குத் திருமணமாகி பேரன், பேத்தி உள்ள நிலையில் என் மனைவி வீட்டை விட்டு சென்று விட்டார். காணாமல்போன அவர் திரும்பிவர பரிகாரம் சொல்லுங்கள். காசிம், புதுச்சேரி.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்மலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்ஜாதகப்படி தற்போது சனிதசையில் குரு புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி எட்டாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலையே. நடந்த தவறுக்குக் காரணம் நீங்கள்தான் என்பதை முற்றிலுமாக உணர்ந்திருக்கிறீர்கள். அப்படி உணர்ந்த நீங்கள் வெளிப்படையாக உங்கள் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதுண்டா? சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் அந்த லக்னத்திற்கே உரிய இயற்கையான சுபாவத்துடனும், ஆணாதிக்க மனப்பான்மையுடனும் நடந்திருக்கிறீர்கள்.

மனதில் தவறு என உணர்ந்தபோதிலும், அதனை உங்கள் மனைவியிடம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு மனம் விட்டுப் பேச தயங்கியதன் விளைவினை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். மானசீகமாக நீங்கள் கேட்கும் மன்னிப்பு உங்கள் மனைவியின் மனதிற்குள் புகுந்து, அவர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களில் ஆதரவற்ற நிலையில் உள்ள வயது முதிர்ந்த தம்பதியருக்கு உணவு வாங்கித் தந்து அவர்களது ஆசிர்வாதத்தினைப் பெறுங்கள். உங்கள் ஊரில் இருந்து வடக்கு திசைக்குச் சென்றிருக்கும் உங்கள் மனைவி விரைவில் உங்களை வந்து சேர்வார். கவலை வேண்டாம்.

என் மகளின் திருமணம் சம்பந்தமாக எனக்குள்ள பயத்தை தங்களிடம் கூறி தெளிவடைய விரும்புகிறேன். என் கணவரின் தந்தை வழியில் ஐந்து தம்பதியருக்கு 20 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. 5 பேருக்கு 45 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. பரம்பரை தோஷம் ஏதேனும் உள்ளதா? இந்த தாயின் தவிப்பினைப் போக்கி உதவிடுங்கள். லட்சுமி, திருவள்ளூர்.

உங்கள் தவிப்பு நியாயமானதே. 22 வயதுதான் ஆகிறது என்றாலும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் சரியானதே ஆகும். அஸ்வினிநட்சத்திரம், மேஷராசி, கன்யா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் செவ்வாய் புக்தி நடக்கிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் இணைந்துள்ள செவ்வாயும், கேதுவும் சற்றுசிரமத்தினைத் தருவார்கள். அவசரப்பட்டு தற்போது திருமண முயற்சியில் இறங்காதீர்கள். 02.04.2019க்கு மேல் 20.01.2020க்குள் திருமணத்தை நடத்தலாம். அதுவரை பொறுமையாய் இருங்கள். இவருடைய ஜாதகப்படி பரம்பரை தோஷம் தொடர்வதால் திருமணத்திற்கு முன்னதாக பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் குடும்ப புரோஹிதரின் துணை கொண்டு முதலில் சர்ப்ப பலி சாந்தி என்ற பரிகாரத்தைச் செய்து முடியுங்கள். அதன் பின்னர் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் ஒன்பது சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து நவசக்தி பூஜையையும், 3 முதல் 10 வயதிற்கு உட்பட்ட ஒன்பது கன்னிப் பெண்களை வைத்து நவகன்யா பூஜையையும் செய்து அவர்கள் 18 பேரையும் ஒன்றாகஅமர வைத்து உங்கள் மகளை வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். இவர்கள் அனைவருக்கும், வஸ்திரம் மற்றும் போஜனத்துடன் கூடிய தாம்பூலம் அளிக்க வேண்டியது அவசியம். இந்த பரிகாரங்களைச் செய்து முடித்த பிறகு திருமண முயற்சியில் இறங்குங்கள். உங்கள் மகளின் மணவாழ்வு சிறப்பானதாக அமையும்.

எனக்கு திருமணம் ஆகி இந்த 4 வருடங்களில் என் மனைவி ஒரு மாதம் கூட என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். பலமுறை சென்று அழைத்தால் ஒரு நான்கு நாட்கள் மட்டும் இருப்பார். நான் வீட்டில் இல்லாத சமயம் தன் தாயார் வீட்டிற்கு சென்று விடுவார். என் மனைவியும், குழந்தையும் என்னுடன் சேர்ந்துவாழ உரிய பரிகாரம் கூறுங்கள். மலைச்சாமி, கோயமுத்தூர்.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் 12ம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று பலவீனமானநிலை என்றாலும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஏழில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. உங்கள் மனைவி ஆடம்பரமான விஷயங்களுக்கு அதிகம் ஆசைப்படுபவராகத் தெரிகிறார். உலக வாழ்க்கையில் அனுபவமின்மை அவரை இவ்வாறு நடந்து கொள்ளச் செய்கிறது. நடைமுறை வாழ்க்கைக்கு எது சாத்தியப்படும் என்பது புரிய அவருக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.

அதுவரை சற்று பொறுத்திருங்கள். உங்கள் மகள் வளர, வளர பிரச்னை முடிவிற்கு வந்துவிடும். 15.02.2019க்குப் பின் அவர் தன் வாழ்வில் சந்திக்கும் ஒரு சில சிரமமான அனுபவங்கள் அவரை யோசிக்க வைக்கும். 03.03.2020க்குப்பின் உங்கள் மனைவியும், குழந்தையும் உங்களோடு இணைந்து வாழ்வார்கள். புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வருவதும் நல்லது. விரைவில் உங்கள் குடும்பம் ஒன்றிணையும். கவலை வேண்டாம்.

“ருக்மிணீ கேளிசம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தேஜகத்குரும்.”


என் உறவுக்கார பெண் ஒருவர் தன் அருமை மகளை 16 வயதில் இழந்து விட்டதில் இருந்து கடும் மனஉளைச்சலில் உள்ளார். தற்கொலை எண்ணம் தலை தூக்கியுள்ளது. அவர் எப்போது என்ன செய்து கொள்வாரோ என்ற பீதியும், பயமும் ஒவ்வொரு நிமிடமும் எங்களை கடுமையாக சோதிக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகர்.

இறந்து விட்ட சிறுமி உட்படஅவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஜாதகங்களையும் அனுப்பியுள்ளீர்கள். 16வயது வரை ஆசையாக வளர்த்த மகளை திடீரென்று பெயர் தெரியாத ஒரு நோய்தாக்கி பறிகொடுப்பது என்பது எத்தனை கொடுமையானது என்பதை கண்கூடாகக் கண்டு விளக்கியுள்ளீர்கள். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்தப் பெண்ணை அவரது கணவரால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். வேறு யாராலும் அவரை சரியாக வழி நடத்த இயலாது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.

அவருடைய ஜாதகப்படி அவருடைய ஆயுள்கெட்டி என்றாலும் அவர் மனம் பேதலிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இந்தச் சம்பவத்திற்கு பின் இடம் மாறி வசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஓய்வு நேரத்தில் அவரைத் தனியாக இருக்க விடாமல் அநாதைக் குழந்தைகள் வசிக்கும் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அங்குள்ள பிள்ளைகளின் ஸ்பரிசம் இவருக்குள் மாற்றத்தை உண்டாக்கும். புத்திர சோகத்திலிருந்து விடுபட அடிக்கடி அருகிலுள்ள ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஷீரடிக்குச் சென்று சாயிபாபாவை தரிசித்து வருவதும் அவருடைய மனதினில் மாற்றத்தை உண்டாக்கும். 18.11.2018ற்குப் பின் அவருடைய மனம் தெளிவடையக் காண்பீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்