SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்கு உங்களுக்கு சாதகமாகவே முடியும்!

2018-04-09@ 15:10:42

என்னுடைய பெற்றோர் வயதானவர்கள். நான் போலியோவினால் பாதிக்கப்பட்டவள். என்னால் எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாது. 10ம் வகுப்பு படித்துள்ள என் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- புவனேஸ்வரி, ஈரோடு.


நாற்பத்தியேழு வயது ஆகும் உங்களது கவலை நியாயமானதே. இத்தனை ஆண்டுகள் வரை உங்களைப் பேணிக்காத்து வரும் உங்கள் பெற்றோரை எவ்வளவு போற்றினாலும் தகும். பூசம் நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ளீர்கள். உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி நீசம் பெற்று அமர்ந்துள்ளார். சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரனும், ராகுவும் இணைந்திருப்பதால் உங்கள் எதிர்கால வாழ்வினைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய 50வது வயது வரை தற்போதைய சூழல் தொடரும்.

அதன் பின்னர் உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும். உறவினர் ஒருவரின் துணையோடு உங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் இடத்தில் அவர்களோடு ஒன்றிணைந்து வாழ்வீர்கள். 62வது வயது வரை உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம். நாளை எப்படி இருக்கும் என்பதை எண்ணி எண்ணி இன்று கையில் இருக்கும் கனியை நழுவவிடாதீர்கள். மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று சொல்வார்கள். உங்களைப் படைத்த இறைவனுக்கு உங்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். இறைவனின் பால் நம்பிக்கை கொண்டு நீங்கள் கண்ணால் காணும் கடவுளர்களாக உங்கள் பெற்றோரை தினமும் வணங்கி வாருங்கள். உங்கள் எதிர்காலம் சுகமானதாகவே அமைந்துள்ளது என்பதையே உங்கள் ஜாதகம் சொல்கிறது.

என் மகனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சுமாரான வேலையில் தான் உள்ளான். படிப்பும் குறைவுதான். அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்து கொண்டிருக்கிறோம். - மல்லிகா, ஊரப்பாக்கம்.

28 வயதாகும் உங்கள் மகனின் ஜாதகப்படி ஜென்ம லக்னத்திற்கு அதிபதியாகிய குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். உங்கள் மகனின் வாழ்வில் என்றென்றும் சுகத்திற்குக் குறைவிருக்காது. சதா சுகவாசியாக வாழுகின்ற யோகம் அவருக்கு உள்ளது. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகப்படி தற்போது சூரிய தசை நடந்து வருகிறது. சூரியன் தன ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் அவருக்கு பொருளாதார ரீதியாக எந்தக் குறையும் உண்டாகாது. அவருக்கு வரவிருக்கும் மனைவியைக் குறிக்கும் களத்ர ஸ்தான அதிபதி புதன், இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குடும்ப வாழ்வு சிறப்பானதாக அமையும்.

வரும் மனைவியினால் உங்கள் பிள்ளைக்கு ஆதாயம் உண்டு. இவருடைய ஜாதகத்தில் 5ல் அமர்ந்திருக்கும் கேது சிந்தனையில் விரக்தியான எண்ணத்தை உருவாக்குவார். இவருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தால் எல்லாவற்றிற்கும் ஒரு பதிலைத் தயாராக வைத்திருப்பார். தற்போதைய சூழலில் அவருடைய தாயாரான நீங்கள் அவரை கவனித்துக் கொள்வது போலவே திருமணத்திற்குப் பின் இவரது மனைவி இவரை கவனித்துக் கொள்வார். இவருடைய ஜாதக பலத்தின்படி நல்ல குணவதியான மனைவி இவருக்கு அமைவார். வருகின்ற 08.07.2018ற்கு மேல் 08.07.2019ற்குள் இவரது திருமணம் நடந்துவிடும்.

உங்கள் பிள்ளை அமாவாசை நாளில் பிறந்தவர் என்பதால் பிரதி மாதந்தோறும் அமாவாசை நாட்களில் வயது முதிர்ந்த, ஆதரவற்ற நிலையில் உள்ள பெரியவர்களுக்கு அன்னதானம் செய்து வாருங்கள். புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கத்தில் கொள்ளுங்கள். விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து வருவதும் நன்மை தரும். மருமகள் வந்ததும் பிள்ளையைப் பற்றி கவலை உங்களுக்கு சுத்தமாக இருக்காது என்பதையே உங்கள் பிள்ளையின் ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

பி.இ., படித்திருக்கும் எனக்கு வேலை எப்போது கிடைக்கும்? வெளிநாடு போகும் யோகம் உண்டா? மேற்படிப்பு படிக்கலாமா? தோல்வி அடைந்த மூன்று பாடத்தை இப்போதுதான் மீண்டும் எழுதியுள்ளேன். என் ஜாதக பலம் எப்படி உள்ளது?- ஹரிராம், வந்தவாசி.
 
உங்கள் ஜாதகத்தில் ஜனன லக்னத்தில் சூரியனும், இரண்டாம் இடமாகிய வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என வரிசையாக நான்கு கிரஹங்கள் அமர்ந்திருப்பதும் சிறப்பான நிலையை உணர்த்துகின்றன. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு உதாரணமாக உங்கள் பேச்சுத் திறமையைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். பூசம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன் தசை நடந்து வருகிறது. உத்யோகத்தைப் பற்றி நமக்கு உணர்த்தும் 10ம் பாவக அதிபதி சூரியன், ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதால் ஜென்ம பூமியில்தான் உங்கள் உத்யோகம் என்பது அமையும். வெளிநாட்டு உத்யோகத்திற்கான வாய்ப்பு இல்லை.

தொழில் ஸ்தானத்தின் மீது ஆட்சி பலம் பெற்ற சனியின் பார்வையும் இணைந்துள்ளது. உங்களுடைய ஜாதக அமைப்பு அரசுப் பணியில் நீங்கள் அமர உள்ளதை உறுதி செய்கிறது. அரசாங்க உத்யோகத்திற்கான வாய்ப்பு உங்கள் ஜாதகத்தில் வலிமையாக உள்ளதால் அரசு தரப்பு தேர்வுகளுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். மேற்படிப்பு படிப்பதை விட அரசு தரப்பு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் இணைந்து படிப்பது நல்லது. உங்களுடைய நேரம் தற்போது நன்றாக உள்ளதால் அரியர்ஸ் பேப்பர்களில் இந்த வருடத்தில் தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள்.

உங்களுடைய அலட்சியப் போக்கினால்தான் நீங்கள் அந்த பாடங்களில் தோல்வி அடைந்துள்ளீர்கள் என்பது உங்கள் ஜாதகத்தைக் காணும்போது புரிகிறது. கிரஹ நிலையும், ஜாதக அமைப்பும் பலமாக அமைந்திருப்பதால் நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு கவனத்துடன் படித்து வாருங்கள். அரசு தரப்பு தேர்வுகளை தவறாது எழுதுங்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்பதையே உங்கள் ஜாதகம் தெளிவாகக் காட்டுகிறது.

12ம் வகுப்பு வரை நன்றாக படித்த என் மகன் என்ஜினியரிங் சேர்ந்ததில் இருந்து பழக்கவழக்கங்கள் மாறி, காதல் மோகம் ஏற்பட்டு படிப்பை முடிக்கவில்லை. 3 கல்லூரிகளில் சேர்ந்தும் படிப்பை முடிக்க இயலவில்லை. கெட்ட பழக்கம் உண்டு. பொய் பேசுகிறான். 33 வயது ஆகும் அவனை வெளிநாடு அனுப்ப முயற்சிக்கிறேன். அல்லது ஏதேனும் தொழில் செய்யச் சொல்லலாமா? அவனுடைய ஜாதக அமைப்பு எவ்வாறு உள்ளது?- பிச்சை, சிவகங்கை.
    
ஜென்ம லக்னத்தில் நான்காம் பாவக அதிபதியான சனியும், நான்காம் பாவத்தில் லக்னாதிபதி சுக்கிரனும் அமர்ந்து உங்கள் பிள்ளையின் சுகமான வாழ்வினை வலுப்படுத்துகிறார்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் சனி பகவான் உச்ச பலம் பெற்றிருக்கிறார். உங்கள் பிள்ளை யார் சொல்லியும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. அவர் மனதிற்கு சரியென்று தோன்றுவதை மட்டுமே செய்வார். அவரை வெளிநாட்டிற்கு அனுப்புவது விழலுக்கு இறைத்த நீராகவே அமையும். உள்ளூரிலேயே சுயமாக தொழில் செய்யும் அம்சம் பலமாக உள்ளது. அவருடைய ஜாதக அமைப்பின்படி அவருடைய மனைவி ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. அவருடைய மனதிற்கு பிடித்தமான வகையில் வாழ்க்கைத்துணைவி அமைவார். திருமணத்திற்குப் பின் மனைவியின் விருப்பத்திற்கிணங்க செயல்படுவார்.

பெட்டிக்கடை, கூல்டிரிங்ஸ் கடை முதலானவை இவருக்கு கைகொடுக்கும். 12.05.2018 முதல் இவருடைய வாழ்வில் திருமண யோகம் கூடி வருகிறது. அவருக்கு திருமணம் முடிந்த கையோடு உங்கள் கவலையும் காணாமல் போய்விடும். அசாத்தியமான தைரியமும், துணிவும் கொண்ட உங்கள் பிள்ளை தனக்கென்று தனியாக குடும்பம் உருவானதும் பொறுப்பானவராக மாறிவிடுவார். கவலையைத் துறந்து உங்கள் கடமையைச் செய்யுங்கள். அவர் காதலித்து மணம் புரிந்தாலும் அதில் தவறேதும் இல்லை. கல்யாணம் என்பது அவரது வாழ்வில் திருப்பு முனையாக அமையும். 35 வயது முதல் உங்கள் மகனின் வாழ்வு ஏறுமுகமாகவே உள்ளது. அவர் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக
நடந்துகொள்வார். கவலை வேண்டாம்.

நான் ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை ஓய்வூதிய பணம் கிடைக்கப் பெறவில்லை. இது குறித்து வழக்கு போட்டுள்ளேன். வழக்கு நல்ல முறையில் முடிவடையுமா? எப்போது முடிவடையும்?- முத்துவேல், தூத்துக்குடி.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில், ஜென்ம லக்னத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது ராகு தசை முடிவுறும் தருவாயில் உள்ளது. நீங்கள் ஓய்வு பெற்ற காலத்தில் இருந்த கிரக அமைப்பு உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பயனைத் தடை செய்துள்ளது. சிம்ம ராசிக்காரராகிய நீங்கள் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கும் திறன் கொண்டவர். உங்களுடைய விடாமுயற்சிக்கு பலன் வெகுவிரைவில் கிடைத்து விடும். உங்கள் ஜாதகக் கணக்கின்படி அதிக பட்சமாக 27.02.2019லிருந்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கத் துவங்கும். நீங்கள் நடத்தி வரும் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும்.

தீர்ப்பு உங்கள் தரப்பு நியாயத்தை வலுப்படுத்துவதாக இருக்கும். நிலுவையில் உள்ள தொகை உட்பட மொத்த பயனீட்டுத் தொகையும் அடுத்த வருடத்தில் உங்கள் கைகளில் வந்து சேர்ந்துவிடும். 2019ம் ஆண்டில் உங்கள் பெயரில் புதிய சொத்து சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. விடாமுயற்சியுடன் தொடர்ந்து வழக்கினை நடத்தி வாருங்கள். தைரியமாக உங்கள் தரப்பு வாதத்தை எந்த தயக்கமுமின்றி முன் வையுங்கள். குரு ஸ்தலமாகிய திருச்செந்தூர் முருகனிடம் உங்கள் பிரார்த்தனையைச் சொல்லுங்கள். குரு தசை பிறந்ததும் வழக்கில் வெற்றி காண்பீர்கள்.

பிறந்தவுடன் தாயை இழந்த ஒரு பிள்ளையை நான் என் மகனாக வளர்த்து வருகிறேன். இவன் சிறு வயதிலிருந்தே தனிமையை மட்டும் விரும்புகிறான். யாருடனும் சரியாகப் பழகுவதில்லை. கல்லூரி முடித்த பின்பு அவனுக்கு எந்த துறையில் வேலைவாய்ப்பு அமையும்? அவனுடைய எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - கமலம்மாள், கடலூர்.

தாயை இழந்த பிள்ளையை பெரியம்மாவாகிய நீங்கள் உங்கள் பிள்ளையாக வளர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவருடைய தந்தையைப் பற்றி உங்கள் கடிதத்தில் நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. பூசம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். வாக்கு ஸ்தானாதிபதி குரு பகவானும் 5ம் வீட்டில் ஆட்சி பலம் பெற்றுள்ளார். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அவர் யாருடனும் சரியாக பழகாதவர் போலத் தெரியவில்லை.

அவருடைய மனதிற்கு பிடித்த நண்பர்களுடன் அவர் நன்றாகத்தான் பழகி வருகிறார். மேலும் அவருடைய ஆழ்மனதில் தந்தையைப் பற்றிய சிந்தனை நன்றாக வேரூன்றி உள்ளது. தந்தையின் ஆதரவும், அரவணைப்பும் அவருடைய முன்னேற்றத்திற்கு துணை நிற்கும். 18.05.2018ற்குப் பின் அவரது நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ் துறையில் மேற்படிப்பு படிப்பதுடன் அதே துறையில் அவர் பணியில் அமரவும் செய்வார். பெரும்பாலும் அவருடைய பணியானது வெளிநாட்டில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களுடைய வளர்ப்பில் எந்தவிதமான குறையும் இல்லை. அவருடைய ஆழ்மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை விலகினாலே போதும். சுக்கிரன் ஆட்சி பலத்துடன் அவரது ஜாதகத்தில் இடம் பிடித்திருப்பதால் எல்லோருடனும் சகஜமாகப் பழகத் தொடங்கிவிடுவார். திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகள் அவருடைய மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும், அவற்றை அவரைப் பார்க்கச் சொல்லுங்கள். அவருடைய எதிர்காலம் சிறப்பாக உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் வாங்கித் தருவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். உங்கள் வளர்ப்பு மகனின் வாழ்வு வளமானதாக அமையும்.

- சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi1

  ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

 • dr

  மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

 • hongkong

  சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

 • jappan

  ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

 • fire

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்