SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனி மாதத்தில் ஏன் கிரஹப்ரவேசம் செய்யக்கூடாது?

2018-04-03@ 16:46:27

புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்தல், புதிய வீடு வாங்குதல், பால்காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என குடியிருக்கும் வீடு சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும்  பங்குனியில் செய்வதில்லை. வாஸ்து புருஷன் இந்த மாதத்தில் நித்திரையில் இருந்து எழுவது இல்லை. பூமிக்கு அடியில் உறங்கும் வாஸ்து புருஷன் என்று  அழைக்கப்படும் பூதத்தை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் வீடு சார்ந்த நிகழ்வுகளை இந்த மாதத்தில் நடத்துவதில்லை. இதே விதி ஆனி, புரட்டாசி, மார்கழி  ஆகிய மாதங்களுக்கும் பொருந்தும்.

சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான மொழியா?- சுப்ரமணியன், புதுக்கோட்டை.

நிச்சயமாக இல்லை. நீங்கள் சூசகமாகக் குறிப்பிடும் அந்தணர் என்ற பிரிவினர் மட்டும்தான் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த  சாஸ்திரமும் சொல்லவில்லை. அந்தணன் என்ற தகுதியைப் பெறுவதற்காகச் செய்யப்படும் பிரம்மோபதேசத்தின்போது உபதேசிக்கப்படும் காயத்ரி மந்திரத்தை  இந்த உலகத்திற்கு அருளியது க்ஷத்திரிய வம்சத்தில் தோன்றிய விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் அருளிய வால்மீகி ஒரு  வேடுவன். மஹாபாரதத்தை நமக்குத் தந்த வியாச மகரிஷி ஒரு மீனவப் பெண்ணின் மகன்.

புராண காலத்து உண்மைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வரலாற்று உண்மைகளையாவது ஏற்றுக் கொள்ளலாமே! சாகுந்தலம், ரகுவம்சம், மேகதூதம்,  குமாரசம்பவம் முதலான சமஸ்கிருத காவியங்களைப் படைத்த கவியரசன் காளிதாசன் இடையர் வம்சத்தில் தோன்றியவர். இரண்டாம் சந்திரகுப்தனின் காலம்  இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாம் சந்திரகுப்தனின் அவையை அலங்கரித்த அஷ்டதிக்கஜங்களில் முக்கியமானவர்  காளிதாசன். இந்த அரசனையே போஜராஜன் என்றும் அழைக்கிறார்கள். இந்த போஜராஜன் சமஸ்கிருத மொழியில் காவியங்களைப் படைத்தவன்.

ஹர்ஷவர்த்தனன் என்ற அரசன் சமஸ்கிருத மொழியில் புலமை பெற்றவன் என்பதற்கு இன்றளவும் சான்றுகள் உள்ளன. போஜராஜனும், ஹர்ஷவர்த்தனரும்  க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். உண்மைநிலை இவ்வாறு இருக்க சமஸ்கிருத மொழி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உரியது என்று நீங்கள்  குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறு. இன்றும் நம் பள்ளியில் அனைத்துத் தரப்பு மாணவர்களும் சமஸ்கிருத மொழியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருவதே  சமஸ்கிருத மொழி, உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது என்பதற்கான சான்று.

அரச மரத்திற்கும், வேப்பமரத்திற்கும் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அறிவியல் உலகில் இது மூடநம்பிக்கையாகத் தோன்றவில்லையா?
- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம்.


மும்மூர்த்திகளின் ஸ்வரூபம் அரசமரம். முப்பெருந்தேவியரின் வடிவம் வேப்பமரம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தெய்வத்திருமணமாக இவ்விரு  மரங்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த அறிவியல் உலகில் ஒரு உண்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? மரங்களின் அரசன் என்று  கருதப்படும் அரசமரத்திற்கு அருகில் வேப்பமரம் தவிர வேறு எந்த மரமும் வளராது. வேண்டுமென்றே நீங்கள் வேறு எந்தச் செடியை அரசமரத்திற்கு அருகில்  நட்டுவைத்தாலும், எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து பராமரித்து வந்தாலும், நீங்கள் நட்ட மரம் பட்டுதான் போகுமே தவிர, அந்த மரத்தினை அரச மரம் வளர  விடாது. அதனருகில் இயற்கையாக வளருகின்ற மரம் வேப்ப மரம் மட்டுமே.

அதுவும் அரசமரம் இருக்கும் எல்லா இடங்களிலும் வேப்பமரம் இயற்கையாக வளர்ந்துவிடாது. தெய்வசாந்தித்தியம் இருக்கும் இடத்தில் மட்டுமே இயற்கையாக  அரசமரமும், வேப்பமரமும் ஒன்றோடொன்று இறுகத் தழுவிய வடிவில் வளருகின்றன. அவ்வாறு ஒன்றோடொன்று இணைந்திருக்கும் மரங்களுக்கு மட்டுமே  திருமணம் செய்து வைக்கிறார்கள். தாவரவியல் ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அரசமரமும், வேப்பமரமும் ஒன்றாக வளர்வதற்கான காரணம் புரியும்.  அரசமரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம் செய்விப்பதை மூடநம்பிக்கை என்று கருதமுடியாது.

நீண்ட ஆயுள் கிடைக்கவும், ஆரோக்கியம் உண்டாகவும் எந்தக் கடவுளை வழிபடவேண்டும்?- இரா.பாஸ்கரன், குடியாத்தம்.

“த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”
“ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸய சர்வாய மஹாதேவாயதே நம:”
“மஹாதேவம் மஹேசானம் மஹேச்வர உமாபதிம்
மஹாசேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்”

- ஆகிய மந்திரங்களை தினசரி சொல்லி பரமேஸ்வரனை வணங்கி வருவதன் மூலம் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

“ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய சர்வ ஆமய
விநாசனாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:”

- என்ற மந்திரத்தைச் சொல்லி மஹாவிஷ்ணுவின் அம்சமான தந்வந்திரி பகவானை வழிபட்டு வருவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தினைப் பெற இயலும்.

பூஜையறையில் பீடம், மேற்கூரையில் கும்பம் போன்ற அமைப்பு வைத்துக் கட்டியுள்ளேன். இது சரியா?- சுந்தரலிங்கம், விருத்தாசலம்.

வீட்டிற்குள்ளேயே ஆலயத்தினை அமைக்க முயற்சித்திருக்கிறீர்கள். இவ்வாறாக பூஜையறையை அமைப்பதில் தவறில்லை. ஆசைப்பட்டு கட்டிவிட்டால் மட்டும்  போதாது, அதற்கு ஏற்றவாறு ஆசார, அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு ஆசார, அனுஷ்டானங்களை முறையாக உங்களால் கடைபிடிக்க  இயலும் என்றால் இதுபோன்ற பூஜையறை அமைப்பு நல்லதே. முறையாக அனுஷ்டானங்களை கடைபிடிக்க இயலாதவர்கள் அலமாரியில் சுவாமி படத்தினை  வைத்து சாதாரணமாக விளக்கேற்றி வழிபட்டு வந்தாலே போதுமானது.

இறையருளை வேண்டுவோர்க்கு முக்கியமானது எளிமையும், சிரத்தையுடன் கூடிய உண்மையான பக்தியும் மட்டுமே. ஆடம்பர அலங்காரங்களால் இறையருளைப்  பெற இயலாது. அதே நேரத்தில் நீங்கள் இறைவனின் பால் கொண்ட பக்தியின் காரணமாக இதைப் போன்ற அமைப்பினை வீட்டினில் உருவாக்கி இருந்தாலும்,  ஆசார, அனுஷ்டானங்களையும் முறையாகக் கடைபிடித்து வந்தீர்களேயானால் அதற்குரிய பலன் நிச்சயமாக வந்து சேரும்.

நோய் வருவதற்கான காரணம் பூர்வஜென்மத்தில் செய்த பாவமா அல்லது முறையற்ற உணவு முறையா? தீயபழக்கத்தினாலும் நோய் வருகிறதே, நோய்க்கான  உண்மையான காரணம் எது?- வெங்கடேசன், புதுச்சேரி.

வந்திருக்கும் நோயைப் பொறுத்து காரணிகளும் மாறுபடுகின்றன. எந்தவொரு நோய் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் குணமாகவில்லையோ, எந்த ஒரு நோய்  நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறதோ, அது பூர்வஜென்ம வினையால் வந்த நோயாக இருக்கும். மருந்து மாத்திரைகளாலும், பத்திய உணவினாலும்  கட்டுப்படுத்தப்படுகின்ற நோய் முறையற்ற உணவுமுறையால் வந்திருக்கும். புகை பிடித்தல், மது அருந்துதல் முதலான தீய பழக்கத்தால் வருகின்ற  நோய்களையும், மருந்து மாத்திரைகளாலும், பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்வதாலும் இந்த நோய்களைக் கட்டுப்படுத்த இயலும்.

இதில் முற்பிறவியில் செய்த வினையின் காரணமாக வருகின்ற நோயினை ‘ப்ராரப்தஜன்யம்’ என்று அழைப்பார்கள். நல்ல அழகுடனும், ஆரோக்கியத்துடனும்  வாழ்ந்து கொண்டிருப்பார்கள்; திடீரென்று ஒரு நாள் உடலில் வெள்ளை நிற புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக உடல் முழுவதும் பரவி  வெண்குஷ்டம் என்ற நோய் உடலினை முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். இந்த நோயினை எந்தவிதமான மருந்தினாலும் குணப்படுத்த இயலாது. நன்கு படித்து  சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருப்பார் ஒருவர். திடீரென்று ஒரு நாள் வீட்டிற்கு வரும்போது எதையோ கண்டு பயந்தது போல் காணப்படுவார்.

அந்த நாள் முதல் மனோவியாதி அவரைத் தொற்றியிருக்கும். காரணத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் மற்றவர்கள் தடுமாறுவார்கள். இவையனைத்தும்  ப்ராரப்தஜன்யம் அதாவது, முன்ஜென்ம பலன் தொடர்ந்து வருவதால் உண்டாகும் நோய்கள் என்று புரிந்துகொள்ளலாம். முறையற்ற உணவுகளாலும், தீய  பழக்கங்களாலும் ஏற்படும் நோய்களை ‘குபத்யஜன்யம்’ என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு ஒழுங்கீனத்தால் வருகின்ற நோய்களை நான்கு வகையாகப்  பிரிக்கிறார்கள். ஸாத்யம், க்ருச்ரஸாத்யம், யாப்யம், அஸாத்யம் என்று நான்கு வகை நோய்களைச் சொல்வார்கள்.

சாதாரணமாக மருந்து மாத்திரைகளால் குணமாகும் நோயினை ஸாத்யம் என்று சொல்வர். தொடர்ந்து சில நாட்கள் மருந்து சாப்பிட்டும், பத்திய  உணவுமுறைகளை கடைபிடித்தும் குணமாகிற நோய்களை க்ருச்ரஸாத்யம் என்று அழைப்பர். ஒருசில நோய்கள் முற்றிலுமாக குணமாகாமல், பத்திய உணவு  முறையை கடைபிடித்து வரும்போது மட்டும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். அந்த வகை நோய்களை யாப்யம் என்ற பெயரால் அழைப்பார்கள். மருந்துகள்  சாப்பிட்டும், பத்தியமாக இருந்தும் குணமாகாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நோயினை அஸாத்யம் என்று குறிப்பிடுவர்.

இந்த அஸாத்ய வகை நோய்கள் மகான்களுடைய ஆசிர்வாதத்தாலும், மந்திர அனுஷ்டானத்தினாலும், இறையருளாலும் திடீரென்று ஒரு நாள் நீங்கிவிடும். இதில்  எந்த வகை நோய் வந்தாலும் அது நாம் செய்த அல்லது செய்துகொண்டிருக்கின்ற வினையால்தான் வந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அதற்கு  பிராயச்சித்தம் தேட முயற்சிக்க வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கை முறை ஒன்றே ஆரோக்கியத்தைக் காக்கும் மருந்து என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும்  இல்லை.

தற்கால சந்ததியினருக்கு ஆலயத்திற்குள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது தெரியவில்லையே?- கோமதி ரங்கநாதன், திருச்சி.

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. தற்காலத்திய பிள்ளைகளுக்கு ஆலயத்திற்கு வரும்போது அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கூடத் தெரிவதில்லை.  ஆடைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டியிருக்கிறது. ஆலயத்திற்குச் செல்லும்போது குளித்து முடித்து சுத்தமாக இருக்க வேண்டும். பாரம்பரிய ஆடைகளை  அணிந்திருக்க வேண்டும். அன்றைய நாளில் அசைவ உணவு சாப்பிட்டிருக்கக் கூடாது. பூ, பழம், வெற்றிலைப்பாக்கு, ஒரு தீபத்திற்கு வேண்டிய அளவிற்கு பசு  நெய், கற்பூரம் அல்லது இவற்றில் எது முடியுமோ அதனை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆலயத்திற்குள் தெய்வ சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் அல்லது கேட்க வேண்டும். தேவையற்ற விவகாரங்களை பேசுவதோ அல்லது  கேட்பதோ கூடாது. அவசியமான விஷயங்களைக் கூட உரக்க பேசக்கூடாது. அது மற்றவர்களின் பிரார்த்தனைக்கு இடைஞ்சல் செய்வதாகிவிடும். பலி பீடத்திற்கு  முன்பு விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். நமஸ்காரம் செய்யும்போது கால்களை நீட்டும் திசையில் சந்நதியோ,

பெரியவர்களோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்நதியில் திரை போட்டிருக்கும்போது நமஸ்காரம் செய்யக் கூடாது. குறைந்தது மூன்று  பிரதட்சிணமாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு சந்நதியிலும் அங்குள்ள தெய்வத்திற்கு உரிய துதியினைச் சொல்லி வணங்க வேண்டும். ஆலயத்திற்குள்ளேயே  உற்சவர் புறப்பாட்டிற்காக எழுந்தருளியிருக்கும்போது, உற்சவரை மட்டும் பிரதட்சிணம் செய்யக்கூடாது. முக்கியமாக ஆலயத்திற்குள் இருக்கும்போது மனிதர்கள்  ஒருவருக்கொருவர் நமஸ்காரம் செய்யக் கூடாது.

உதாரணத்திற்கு உறவினர்களில் எவரேனும் ஒரு பெரியவரை ஆலயத்திற்குள் சந்திக்க நேருகிறது என்றால், ஆலய வளாகத்திற்குள் அவரை நமஸ்கரிக்கக்  கூடாது. வெளியில் வந்து வணங்க வேண்டும். ஆலயத்திற்குள் மனிதர்களை வணங்குவது கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக தெய்வத்தின் மீதான சிந்தனையும்,  சிரத்தையுடன் கூடிய பக்தியும் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் நம்மிடம் வந்து சேர்ந்துவிட வேண்டும். இவ்விரண்டும் இருந்தாலே இறையருள் நம்மிடம் வந்து  சேர்ந்துவிடும்.

நம் வீட்டில் ஒரு தேவதை எப்போதும் ‘ததாஸ்து’ என்று சொல்லிக் கொண்டே இருக்கும் என்கிறார்களே, அது உண்மையா?- முத்துகிருஷ்ணன், மதுரை.

உண்மைதான். நம் வீட்டில் எப்போதும் ஒரு தேவதை நம்மைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கும். நாம் எதைச் சொன்னாலும் ‘ததாஸ்து’ என்று பிரதிவசனம்  சொல்வதே அந்த தேவதையின் பணி. அதாவது, அப்படியே ஆகட்டும் என்று ஆமோதிப்பதே அந்த தேவதைக்கு விதிக்கப்பட்ட வேலை என்று பெரியவர்கள்  சொல்வார்கள். அதனால்தான் நாம் எதைப் பேசினாலும் மங்களகரமானதாக இருக்க வேண்டும், நாம் சொல்வது நல்வாக்காக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம்  அறிந்த பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உதாரணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒரு பொருளை நம்மிடம் கடனாகக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு கேட்கும்போது ‘என்னிடம்  சுத்தமாக இல்லை’ என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொல்லும்போது அப்படியே ஆகட்டும் என்று அந்த தேவதை ஆசிர்வதிப்பதால் அவ்வாறே நடந்துவிடும்.  நமக்குத் தருவதற்கு விருப்பம் இல்லையென்றாலும், அல்லது உண்மையிலேயே இல்லை என்றாலும் இப்படிச் சொல்லிப்பாருங்கள் “எங்களிடம் நிறைய இருந்தது,  தற்போது திரும்பவும் வாங்கி வரவேண்டும்” என்று சொல்ல வேண்டும்.

பணமாகக் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், “உங்களுக்கு தரும் அளவிற்கு என்னிடம் பணம் மிகுதியாக வந்து சேர வேண்டும்” என்று  சொல்லிப் பாருங்கள். நம் வீட்டினில் குறைவில்லாத செல்வம் வந்து சேரும். அதனை விடுத்து இல்லை என்று சொல்வதால் இருப்பதும் இல்லாமல் போய்விடும்.  எப்போதும் மங்களகரமான வார்த்தைகளேயே பேசவேண்டும். அவ்வாறான வார்த்தைகளால் உண்டாகும் அதிர்வலைகள் நம் குடும்பத்தை சந்தோஷமாய்  வைத்திருக்கும்.

குழந்தை பாக்கியத்திற்காக அரசமரத்தைச் சுற்றச் சொல்வதன் காரணம் என்ன?- ஆர். மாலதி, வில்லிவாக்கம்.

குழந்தை பாக்யம் பெறுவதற்காக அரசமரத்தைச் சுற்றிவரச் சொல்வார்கள். அரச சமித்து குருபகவானுக்கு உரியது. குருபகவானே குழந்தை பாக்யத்தைத் தருகின்ற  புத்ரகாரகன் என்பதால்தான் பிள்ளைப் பேற்றிற்காக காத்திருப்பவர்களை அந்நாளில் அரசமரத்தைச் சுற்றச்சொன்னார்கள். திருமணத்தின் போது அரசாணிக்கால்  நடுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது. அதுவும் சோமவார (திங்கள்கிழமை) அமாவாசை நாளன்று  அரசமரத்தைச் சுற்றிவந்தால்  உடனடியாக பலன்கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணமாக ஜோதிடம் சொல்லும் விதிமுறை என்ன தெரியுமா? தகப்பனாரைக் குறிக்கும் பிதுர்காரகன் - சூரியன், தாயாரைக் குறிக்கும் மாதுர்காரகன் -  சந்திரன், இவர்கள் இருவரும் ஒன்றிணையும் நாள்தான் அமாவாசை. தாயுமானவன் ஆன எம்பெருமானுக்கு உரிய சோமவாரத்தில் வரும் அமாவாசை அன்று  அரசமரத்தைச் சுற்றினால் உடனடியாக பிள்ளைப்பேறு கிட்டும் என்று முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்து மத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள  விஷயங்கள் நமது முன்னோர்களால் நன்கு அறிந்துதான் வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • VeronicaStorm

  ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

 • vehicletest

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்