SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிந்த குடும்பம் ஒன்றிணையும்!

2018-04-03@ 15:57:25

என் கணவர் தன் வருமானம் முழுவதையும் நண்பர்களுக்கு செலவு செய்து விடுகிறார். இவர் ஊதாரியாக செலவழிப்பதால் குழந்தைகளின் படிப்பு தடைபடுமா? எனக்கும் மன அமைதி குறைந்து உடல்நலம் கெடுகிறது. நண்பர்களின் சேர்க்கையை தடை செய்து நல்லபடியாக குடும்பம் நடத்த உரிய வழி என்ன? லட்சுமி, அவிநாசி.

உத்திரம் நட்சத்திரம், கன்னிராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. இவருடைய ஜாதகத்தில் அமைந்திருக்கும் சனி  கேதுவின் இணைவு நல்ல நட்பைத் தராது. ஜென்ம லக்னத்தில் உள்ள ராகுவும் இந்த உண்மையினை உணரவிடாது. 27.06.2018க்குப் பின் நடக்கும் சம்பவங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அவரது மனதை மாற்றும். அந்த நேரத்தில் உண்டாகும் பிரச்னைகள் உண்மையான நட்பு எது என்பதை அவருக்கு உணர்த்தும். உங்கள் பிள்ளைகளின் கேள்விகள் இவரது மனதில் மாற்றத்தை உண்டாக்கும்.

இந்த வருடத்தின் பிற்பாதியில் இவரது தொழில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணும் என்பதால் வருமானத்திற்கு எந்தவிதமான குறையும் உண்டாகாது. பிள்ளைகளையே தகப்பனிடம் பேச வையுங்கள். பிரார்த்தனை இருப்பதாகச் சொல்லி உங்கள் கணவரையும், மகனையும் மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய வையுங்கள். மாதந்தோறும் வருகின்ற உத்திர நட்சத்திர நாளில் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். ஐயனின் அருளால் கணவரின் நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

காதலித்து கல்யாணம் செய்த என் இளைய மகன் தற்போது மனைவியைப் பிரிந்து வாழ்கிறான். ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. அந்தப் பெண் தனது பெற்றோர் மட்டும்தான் வேண்டும் என்றும் எங்களை வேண்டாம் என்றும் ஒதுக்குகிறாள். நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும். மாதேஸ்வரி, சேலம்.


பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திரதசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது. உங்கள்
மகனின் ஜாதகம் பலம் பொருந்தியது. மனைவி, மகனை பிரிந்து வாழுகின்ற இந்த நிலை வெகு விரைவில் முடிவிற்கு வந்துவிடும். 21.07.2018க்குப் பின் தொழில் முறையில் உங்கள் மகனுக்கு உண்டாகின்ற இடமாற்றம் உங்கள் மருமகளை யோசிக்க வைக்கும்.

தொழில் முறையிலான முன்னேற்றத்தை உங்கள் மகனை தைரியமாக ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். அந்த நேரத்தில் உண்டாகின்ற மாற்றம் அவருடைய எதிர்காலத்திற்கு புதிய திருப்புமுனையை உண்டாக்கும். உங்கள் மருமகளின் ஜாதகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நேரம் அத்தனை சிறப்பாக இல்லை. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அவர் புரிந்துகொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும். பிரதி புதன்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்தில் சோமாஸ்கந்தர் சந்நதியில் மூன்று நெய்விளக்குகள் ஏற்றிவைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். பிரிந்த குடும்பம் ஒன்றிணையும்.

“சிவாய கௌரீ வதநாப்ஜப்ருந்த ஸூர்யாயதக்ஷாத்வரநாசகாய
ஸ்ரீநீலகண்ட்டாய வ்ருஷபத் த்வஜாயதஸ்மைசிகாராயநம:சிவாய.”


பிறந்த போது மிகவும் அழகுடன் இருந்த என் தங்கை மகளின் காலில் திடீரென ஒரு வெள்ளைபுள்ளி தோன்றியது. பிறகு அது பரவி குழந்தையின் உடலில் ஆங்காங்கே வெள்ளைப் புள்ளிகள் விழுந்தது. தலைமுடி நரைக்கவும், உதிரவும் ஆரம்பித்துள்ளது. இதற்காக செய்யாத வைத்தியம் இல்லை. குழந்தை பழைய நிலையை அடைய வழி சொல்லுங்கள். ஒரு வாசகர், திருச்செந்தூர்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தங்கை மகளின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் மூன்றாம் பாவத்தில் சந்திரன், சுக்கிரன், கேது ஆகியோர் இணைந்திருப்பதால் இந்த நிலை உண்டாகி இருக்கிறது. ‘ஆட்டோ இம்யூனோ டிசீசஸ்’ என்று இதனை மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். ஏன் இவ்வாறு உண்டாகிறது என்பது இதுவரை அறிவியலுக்கு எட்டாத புதிர். ஜோதிட சாஸ்திரப்படி இது சந்திரனால் உண்டாகின்ற தோஷம் என்பார்கள். இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அந்தக் கூற்று உண்மை என்பது நிரூபணமாகி உள்ளது. சந்திர தசையின் துவக்கத்திலிருந்து இவரது மேற்தோலில் வெண்புள்ளி விழ ஆரம்பித்திருக்கிறது. எனினும் ஜென்ம லக்னாதிபதி புதன் ஆட்சி பலத்தில் இருப்பதால் இந்தப் பிரச்னையை கட்டுப்படுத்த இயலும். அரிசி களையும் கழுநீரை தினமும் குழந்தையின் உடலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கச் செய்யுங்கள்.

சாதம் வடித்த கஞ்சியை உட்கொள்வதும் நல்லது. பச்சை அரிசி தவிட்டினை லேசாகச் சுடவைத்து குழந்தையின் மேற்தோலில் படும்படியாக ஒத்தடம் கொடுத்து வருவதும் உகந்தது. பௌர்ணமி நாளில் இரண்டு மணி நேரத்திற்கு சந்திரனின் ஒளி குழந்தையின் உடலில் படுவதும் நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும். திருமலை திருப்பதிக்கு குழந்தையை அழைத்துச் சென்று அங்குள்ள புஷ்கரணியில் (குளத்தில்) குழந்தையை ஸ்நானம் செய்ய வைத்து வராஹ ஸ்வாமி சந்நதிக்குச் சென்று பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். மேற்கொண்டு இந்த நோய் பரவாமல் குழந்தை விரைவில் நலம் பெறுவாள்.

உதவி பேராசிரியையாக பணிபுரியும் என் மகளுக்கு அந்த வேலை நிலைக்குமா? திருமணம் கூடிவரும் நிலையில் வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலிப்பதாகக் கூறுகிறாள். அவர் மனம் மாறி எங்கள் விருப்பப்படி திருமணம் நடக்க உரிய பரிகாரம் கூறுங்கள். சோமநாதன், தஞ்சாவூர்.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி ஐந்தாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து அமர்ந்திருப்பதும், ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி குருபகவான் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும் காதல் திருமணத்திற்கான யோகத்தினை வலுப்பெறச் செய்கிறது. சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவருக்கு ஜென்ம லக்னத்திலேயே சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரின் இணைவும் அவரது பிடிவாத குணத்தினைக் காட்டுகிறது. களத்ர ஸ்தானஅதிபதி சனி, களத்ரகாரகன் சுக்கிரன் ஆகிய இருவரும் வக்ரகதியில் சஞ்சரிப்பதும் வேறு சமூகத்தில் மணமகன் அமைவதற்கான வாய்ப்பினைச் சொல்கிறது.

அவரது விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாதீர்கள். வலிமையான ஜாதக அமைப்பினைக் கொண்டிருக்கும் உங்கள் மகளின் உத்யோகம் வெகுவிரைவில் நிரந்தரமாகும். அவருடைய சம்பாத்யமும், எதிர்கால வாழ்வும் மிகவும் சிறப்பாக உள்ளது. அவருடைய எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். அவரது நல்வாழ்விற்காக புன்னைநல்லூர் மாரியம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 01.06.2018 முதல் திருமணயோகம் கூடி வருகிறது. அவருடைய மனம்போல் திருமணத்தை நடத்தி விடலாம்.

என் மகனுடைய மனைவி ஐந்து மாதத்திற்கு முன் உடல் நலிவுற்று இறந்துவிட்டாள். 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ள என் மகனுக்கு மறுமணம் எப்போது நடைபெறும்? துர்கா ஸ்ரீநிவாசலு, கோலார் தங்கவயல்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. வாழ்க்கைத் துணைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் மூன்றில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டில் ராகு இணைந்திருப்பதும் களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறது. உங்கள் மகன் மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவருடைய ஜாதகத்தின்படி அவர் மறுமணம் செய்து கொண்டாரேயானால் முதல் மனைவியின் மூலமாகப் பெற்ற பிள்ளைகளைப் பிரிய நேரிடும். ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுவின் குணத்தினைக் கொண்ட ஒரு பெண்தான் இவருக்கு இரண்டாம் தாரமாக அமைவார்.

இந்த நிலை குடும்பத்தில் பிளவினை உண்டாக்கலாம். மறுமணத்திற்கு முயற்சிக்காமல் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதே உங்கள் வம்சத்திற்கு நல்லது. இரண்டாவது மனைவியின் மூலமாக வம்சவிருத்தி காண்பதற்கான வாய்ப்பும் சிறப்பாக இல்லை. யோசித்து முடிவு செய்யுங்கள். பெரியவர்களாகிய நீங்கள் அவருக்குப் பக்க பலமாக இருந்து அவரது குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க உதவி செய்யுங்கள். மறுமணம் செய்வதால் அவர் வாழ்வினில் அமைதியை இழக்க நேரிடும். நன்மை தீமையை ஆராய்ந்து முடிவெடுங்கள். உங்களுடைய முடிவு உங்கள் மகனுக்கு மனநிம்மதியைத் தரும்
வண்ணம் அமையட்டும்.

எனக்கு எப்போதும் கனவில் யானை வருகிறது. யானை துரத்துவது போல் உள்ளது. சில கடவுள்கள் கனவில் வருகின்றனர். எதிர்மறையான எண்ணங்களால் இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளேன். பெண்ணாகிய நான் சில பெண்களைப் பார்க்கவே கூச்சப்படுகிறேன். என் எதிர்காலம் சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். ராஜஸ்ரீ மோகன்.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குருதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும் வக்ரகதியில் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு உண்டாகியுள்ள பிரச்னை தற்காலிகமானதே. தற்போது நடந்து வரும் தசாபுக்தி முடிந்தவுடன் அதாவது 04.07.2018 உடன் இதுபோன்ற எண்ணங்களும் மறைந்து விடும். அதுவரை மனதை ஒருமுகப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள். அநாவசியமாக உங்கள் சிந்தனையைச் சிதற விடாதீர்கள். இரண்டு குழந்தைகளின் தாயாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் நலனில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். கனவில் யானை துரத்துகிறது என்றால் விநாயகப் பெருமானுக்கு நீங்கள் நேர்ந்து கொண்ட வேண்டுதலை இதுவரை நிறைவேற்றவில்லை என்று பொருள்.

அது என்ன வேண்டுதல் என்பதை நினைவில் கொண்டுவந்து அதனை நிறைவேற்ற முயற்சியுங்கள். நினைவிற்கு வரவில்லை என்றால் சங்கடஹர சதுர்த்தி நாளில் 108 கொழுக்கட்டை செய்து அருகில் விநாயகர் கோயிலில் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிடுங்கள்.பகலில் உறங்காதீர்கள். ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள். வெள்ளிக் கிழமைகளில் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து நமஸ்கரியுங்கள். பெண்களைக் காணும்போது உண்டாகும் கூச்சம் காணாமல் போகும். இன்னும் மூன்று மாதங்களில் உங்கள் பிரச்னை முற்றிலும் முடிவிற்கு வந்து விடும். கவலை வேண்டாம்.

35 வயது ஆகும் என் மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தன்னைவிட வயது கூடுதலாக உள்ள பிறர் மனைவியிடம் பிரியமாக உள்ளான். இதுவரை மூன்று முறைக்கு மேல் கடிதம் எழுதி விட்டேன். நான் ஒரு விதவை என்பதால் பாராமுகமா? இந்த அபலைத் தாய்க்கு ஒரு வழி சொல்லுங்கள். பெயர் வெளியிட விரும்பாத விருதுநகர் வாசகி.


பாரபட்சம் ஏதுமின்றி உன்னதமான இந்த சேவையை தினகரன் ஆன்மிகமலர் செய்து வருகிறது. பிரச்னைகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் கேள்விகள் பிரசுரமாகின்றன. நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகமும், பிறந்த தேதி விவரமும் ஒன்றோடொன்று முரண்படுகின்றன. அவருடைய ஜென்ம நட்சத்திரம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது அந்தத் தேதியோடு பொருந்தவில்லை. சரியான ஜாதகத்தை அனுப்புங்கள். அல்லது பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்தஊரினைசரியாகக் குறிப்பிடுங்கள்.இரவு 1.00 மணியிலிருந்து 03.00 மணிக்குள்ளாக என்று பிறந்த நேரத்தினைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இரண்டு மணி நேரகால அளவினைக் குறிப்பிட்டால் ஜாதகத்தை சரியாகக் கணிக்க இயலாது. உங்களிடம் தொலைபேசியில் விவரத்தினை சேகரித்துக் கொள்ளலாம் என்றால் அதற்கும் நீங்கள் தொலைபேசி எண்ணையோ, முழுமையான விலாசத்தையோ குறிப்பிடவில்லை. சரியான விவரத்தோடு வினாவினை எழுதி அனுப்புங்கள். வாசகர்களுக்கு சரியான வழி காட்ட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் பாராமுகம் அல்லது பாரபட்சம் என்ற பேச்சிற்கேஇடமில்லை.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vehicletest

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்