SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வு வளம் பெறும்!

2018-03-14@ 17:15:36

எனக்கு வயது 52. நீண்ட காலமாக பதட்டம், தூக்கமின்மை, நிம்மதியின்மை, சோர்வு, தலைசுற்றல் இருந்து வருகிறது. மருத்துவர்கள் ‘டிப்ரஷன்’ என்று சொல்லி மருந்து கொடுத்தார்கள். நடுவில் மருந்தை நிறுத்தச் சொன்னார்கள். மீண்டும் வந்தது. திரும்பவும் மருந்து சாப்பிட்டேன். தலைசுற்றல் மட்டும் நிற்கவேயில்லை. எனக்கு வந்திருப்பது மனம் சார்ந்ததா அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்னையா? - சீதாலெட்சுமி, ஸ்ரீரங்கம்.

தென்னகத்து கங்கையாம் காவிரி பிரவாகிக்கும் புண்ணிய க்ஷேத்திரத்தில் வசித்து வரும் உங்களுக்கு கவலையே தேவையில்லை. சதய நக்ஷத்ரம், கும்ப ராசி, துலாம் லக்னம், லக்னத்தில் சூரியன் என பலம் பொருந்திய அம்சத்துடன் பிறந்திருக்கும் நீங்கள் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கத் தெரிந்தவர்கள். உள்ளூர பயம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திறமையான பேச்சின் மூலம் சமாளிக்கத் தெரிந்தவர்கள். உங்கள் ஜாதகத்தில் 2005ம் ஆண்டு ஜனவரி முதல் புதன் தசை துவங்கியுள்ளது. உங்கள் ஜாதகத்தில் புதன், சனியின் சாரம்பெற்று கேதுவுடன் இணைந்து அமர்ந்திருக்கிறார். நரம்பியல் பிரச்னைகளைத் தரக்கூடியவர் புதன் பகவான். முதலில் உங்களுக்கு நரம்புப் பிரச்னையே துவங்கியிருக்கிறது.

அதனால் ஏற்பட்ட தலைசுற்றலையும், மயக்கத்தையும் நினைத்து, நினைத்தே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளீர்கள். இந்தப் பிரச்னையை கௌரவக் குறைவாக நீங்கள் எண்ணியதன் விளைவுதான் உங்களுக்கு ஏற்பட்ட டிப்ரஷன். உங்களுடைய நரம்புப் பிரச்னை எளிதில் கட்டுப்படுத்தக் கூடியதே, ஆகவே நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தற்போது உங்கள் ஜாதகப்படி புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரித்தாலும் உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளார். உங்கள் சமூகத்தில் நீங்கள் குருவாக எண்ணி வணங்குபவரை சந்தித்து ஆசி பெறுங்கள்.

ஒவ்வொரு புதன், வியாழக்கிழமைகளில் காவிரி ஆற்றில் ஸ்நானம் செய்து, அரங்கனின் ஆலய பிராகாரத்தைச் பிரதக்ஷிணம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மனதில் கவலை தோன்றும் போதெல்லொம் பெருமாளை மனதில் தியானித்து,  ‘வனமாலீ கதீசார்ங்கீ சங்கீ சக்ரீச நந்தஹி ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ பிரக்ஷது’ என்ற விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பூர்வாங்க வரிகளை உச்சரித்து வாருங்கள். கொஞ்சம், கொஞ்சமாக மருந்து மாத்திரைகளின் அளவைக் குறைத்து முற்றிலும் அவற்றின் துணையின்றி உங்களால் வாழ இயலும். அரங்கனின் அருளால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவீர்கள்.

எனக்கு கல்யாணத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் பல ஜோதிடர்கள் நான் கல்யாணம் செய்தால்தான் உருப்படுவேன், இல்லையேல் வீணாக போய்விடுவேன் என்கிறார்கள். அப்படியா? என் ஜாதகம் என்ன சொல்கிறது? - பாரிவேள் சரவணன், கோவை.


அழகான தமிழ்ப்பெயரோடு பலமான ஜாதக அமைப்பினையும் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஜாதகம் எந்த விதத்திலும் சந்நியாச யோகத்தினைக் கொண்டது அல்ல. திருமணம் செய்யாவிட்டால் வீணாகப் போய்விடுவீர்கள் என்ற கருத்திலும் உண்மை இல்லை. ஆயினும் திருமணம் செய்துகொண்டால் மேலும் வளமோடு வாழ்வீர்கள். உத்திராட நக்ஷத்ரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானாதிபதி சனி பகவான், நான்காம் வீட்டில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கிறார். ஜென்ம லக்னாதிபதி சந்திரனும் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளது நல்ல நிலையே.

உங்கள் ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் இணைந்து ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது மிகவும் பலமான அம்சம் ஆகும். உத்யோக ரீதியாகவும், தொழில் முறையிலும் சிறப்பான முன்னேற்றத்தை இது எடுத்துக் காட்டுகிறது. அரசியல் ரீதியாகவும் உங்களால் பரிணமிக்க இயலும். சேவை மனப்பான்மை கொண்ட உங்களுக்கு திருமணம் எந்தவிதத்திலும் தடையாக இருக்காது. நீங்கள் செய்ய நினைக்கும் சேவைகளை தம்பதியராக இணைந்தே செய்யலாம். உங்கள் ஜாதகத்தில் புதன், குரு, சனி ஆகியோர் வக்கிர கதியில் அமர்ந்திருப்பதால் தேவையற்ற பயத்திற்கு ஆளாகியுள்ளீர்கள். வருகின்ற மே மாதத்துடன் ராகு தசை முடிவிற்கு வந்து குரு தசை துவங்க உள்ளதால் உங்கள் கொள்கைகளுக்குத் துணை நிற்கக்கூடிய பெண்ணை வெகுவிரைவில் சந்திப்பீர்கள்.

உங்களுடைய செயல் திட்டங்களை நிறைவேற்றும் காலமாக குரு தசை அமையும். திருமணம் செய்துகொண்டால்தான் வாழ்க்கை முழுமை பெறும். உங்கள் ஜாதகத்தில் அதற்கான அம்சம் நிறைந்திருப்பதாலும், திருமணத்திற்கான நேரம் கூடிவருவதாலும் உங்கள் எண்ணங்களோடு ஒத்துப்போகும் பெண்ணை கரம்பிடித்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள். மனம் தெளிவு பெறும். வாழ்வு வளம் பெறும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகன் ப்ளஸ் ஒன் வகுப்பில் எந்த குரூப் எடுத்து படிக்கலாம்? பட்டப்படிப்பு படிக்கும் யோகம் உண்டா? அவன் ஆயுள் தீர்க்கமா? என் மகனின் ஜாதகம் எவ்வாறு உள்ளது?- இசக்கி அப்பன், திருநெல்வேலி.


ஜென்ம லக்னத்தில் சூரியனின் இணைவினைக் கொண்ட உங்கள் மகனின் ஜாதகம் தலைமைப் பொறுப்பிற்கு தகுதியான ஜாதகம் ஆகும். பரணி நட்சத்திரம் தரணி ஆளும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருப்பது வலுவான நிலை ஆகும். மேலும் சூரியனும், குருவும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதும் சிறப்பான அம்சமே.

வணிகவியல் துறை சார்ந்த படிப்பு இவருக்கு ஏற்றத்தைத் தரும். பட்டப்படிப்பு மாத்திரம் அல்ல, பட்ட மேற்படிப்பு, அதற்கு மேலும் பி.எச்.டி போன்ற ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கான அம்சமும் அவர் ஜாதகத்தில் நிறைந்துள்ளது. அவருடைய ஜாதகம் மிகவும் வலிமையானது என்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் மகன் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவர் எதை விரும்புகிறாரோ அதனை படிக்க வையுங்கள். உங்கள் குலதெய்வமான சாஸ்தாவின் அருள் அவருடைய ஜாதகத்தில் நிறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் பிள்ளையாக உங்கள் மகன் உருவெடுப்பார்.

என் பேரன் இ.சி.இ., வரை படித்துள்ளான். இதற்கு மேல் படிக்க மறுக்கிறான். இவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது திருமண யோகம் வரும்? தனியாக தொழில் ஏதேனும் செய்வாரா? - சிவகுருநாதன், புளியங்குடி.

உங்கள் பேரன் அவருடைய பெயருக்கு ஏற்றவாறு சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற்றிருக்கிறார். அவருடைய ஜாதகப்படி தற்போது உத்யோகம் பார்க்க வேண்டிய வேளை வந்துவிட்டதால் மேற்படிப்பு படிக்க வற்புறுத்தாதீர்கள். உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. குரு பகவான் இவருடைய ஜாதகத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். மேலும் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், கேது ஆகிய நான்கு கிரஹங்கள் இணைந்திருப்பது மிகவும் வலிமையான அம்சம் ஆகும்.

இவருடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு தரப்பு தேர்வுகள் அனைத்திலும் பங்கு பெறச் சொல்லுங்கள். அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளத் தனியாக பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பதும் நல்லது. இன்னும் இரண்டு வருடத்திற்குள் இவருக்கு நிரந்தர உத்யோகம் சாத்தியமாகிவிடும். 27வது வயதில் திருமணம் செய்வது இவரது எதிர்காலத்திற்கு நல்லது. தற்போதைய சூழலில் தனியாக தொழில் தொடங்குவதைவிட பணிக்குச் செல்வதே நல்லது. 47வது வயதில் தனியாக தொழில் தொடங்கும் அம்சம் உண்டு. ஏழரைச் சனி தொடங்கியிருந்தாலும், தசாபுக்தி ரீதியாக சிறப்பான நேரம் நடப்பதால் தொடர்ந்து முயற்சித்து வரச்சொல்லுங்கள். வெகுவிரைவில் நிரந்தர உத்யோகத்தில் அமர்ந்துவிடுவார். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள சிவாலயத்தில் பைரவர் சந்நதியில் விளக்கேற்றி, வழிபட்டு வாருங்கள். சிவனின் அருளும், வேலவனின் துணையும் இணைந்திருப்பதால் வேலை கிடைக்கும் வேளை நெருங்கிவிட்டது. கவலை வேண்டாம்.

வயது 29 ஆகியும் என் மகளுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. வரும் வரன்கள் தட்டிச் செல்கின்றன. என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் இருந்து மணமகன் அமைவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- ஜெயராமன், திண்டிவனம்.


உங்கள் மகள், மூலம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் தோஷம் ஏதுமில்லை. அறியாமையின் காரணமாக பலர் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் என்று காரணம் காட்டி ஒதுங்கியிருக்கலாம். அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள். சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பெண்ணின் ஜாதகம் மிகவும் வலிமை பொருந்தியது. குடும்ப ஸ்தானம் நன்றாக உள்ளதால் எந்த வீட்டிற்கு இவர் மருமகளாகச் சென்றாலும், அந்தக் குடும்பம் வளமை பெறும். இவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதும், குருபகவான் 11ல் அமர்ந்திருப்பதும் வலிமையான அம்சம் ஆகும். ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் சந்திரனுடன் இணைந்து ஐந்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் மகளின் மனதிற்கு ஏற்ற மணாளன் அமைவார்.

உங்கள் பெண் பிறந்த இடத்திற்கு மேற்கு திசையில் இருந்து மணமகன் அமைவார். உங்களை விட வசதி வாய்ப்பு மற்றும் தகுதியில் குறைவானவராக இருந்தாலும் அதுபற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் மகள் அந்த வீட்டில் விளக்கேற்றும் நேரம், அவர்கள் குடும்பம் விருத்தியடையும். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகளில் திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று ஆலய பிராகாரத்தை 11 முறை வலம் வந்து வணங்குங்கள். புளிசாதம் நைவேத்யம் செய்து வரும் பக்தர்களுக்கு அளிப்பதும் நல்லது. திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததும், தம்பதியரை அழைத்து வந்து தரிசிக்க வைப்பதுடன் இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருகின்ற கார்த்திகை மாதத்திற்குள் (15.12.2018க்குள்) இவரது திருமணம் கூடிவரும்.

என் மகன் மற்றும் மருமகளின் ஜாதகம் இணைத்துள்ளேன். இவர்களுக்கு ஒரு சத்புத்ரன், சத்புத்ரி உண்டாக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- ஸ்வாமிநாதன், குமாரவயலூர்.

குமரக்கடவுளின் அருள் பெற்றிருக்கும் உங்கள் குடும்பத்திற்கு ஒரு குறையும் உண்டாகாது. உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள மருமகளின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மருமகள் பொங்கல் திருநாள் அன்று பிறந்தவர் என்றாலும், அவர் பிறந்த நேரத்தில் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கவில்லை. அன்றைய தினம் காலை 09.40 மணிக்குத்தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேசித்திருக்கிறார்.

அதனால் மருமகளின் ஜாதகத்தில் சூரியன் மகர ராசியில் அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது தவறு. பஞ்சாங்கக் கணிதத்தின்படி அவருடைய ஜாதகத்தில் சூரியன் 12ம் வீடாகிய தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். இருவரின் ஜாதகத்திலும் புத்ர ஸ்தானாதிபதிகள் நல்ல நிலையில் அமர்ந்திருப்பதாலும், புத்ர ஸ்தானம் சுத்தமாக இருப்பதாலும் புத்ரதோஷம் என்று எதுவுமில்லை. இருப்பினும் உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் குரு-சனியின் இணைவு தடையை உருவாக்குகிறது. ஏதேனும் ஒரு சனிக்கிழமை தம்பதியரை அமரவைத்து வடுக பைரவர் பூஜை, மற்றும் ஹோமம் செய்து அவர்களுக்குக் கலச தீர்த்தத்தை அபிஷேகம் செய்யுங்கள். அதன் பின்பு தொடர்ச்சியாக சஷ்டிவிரதம் மேற்கொள்ளச் சொல்லுங்கள்.

இதற்கிடையில் மார்ச் 24ம் தேதி, சனிக்கிழமை, சந்தான ஸப்தமி நாளில் சந்தான கணபதி ஹோமம் செய்து தம்பதியரை ப்ரஸாத ஸ்வீகரணம் செய்யச் சொல்லுங்கள். அவர்கள் ஜாதகப்படியும் வருகின்ற வைகாசி மாத வாக்கில் வம்சவிருத்தி சாத்தியமாகும். உங்கள் குடும்பத்து முன்னோர்கள் அம்சத்தில் உங்கள் பிள்ளைக்குக் குழந்தை பிறக்கும். குமரக்கடவுளுக்குக் கைங்கர்யம் செய்வதையே லட்சியமாகக் கொண்டு வாழும் உங்கள் குடும்பத்தில் குமரனின் அருளால் குழந்தையின் குரல் கேட்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

- சுபஸ்ரீ சங்கரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்