SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஞானக்கண் திறக்கும்!

2018-03-14@ 17:05:23

வெளிநாட்டு வேலை உட்படஎந்த வேலைக்குச் சென்றாலும் பணிநிரந்தரம் ஆகும் சமயத்தில் வேலையை விட்டுத் தூக்கி விடுகிறார்கள். சுயதொழில் செய்தும் கடனாளியானதுதான் மிச்சம். எனக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையவும், மனைவி, குழந்தைகளுடனும், பெற்றோருடனும் நல்ல வாழ்க்கை வாழவும் உரியவழிகாட்டுங்கள். - அஷோக்குமார், திருச்சி.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மேஷலக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் புதன் புக்தி தொடங்கி உள்ளது. உங்கள் ஜாதகத்தில் ஜென்மலக்னத்தில் புதன் அமர்ந்திருப்பதால் உங்கள் சொந்த முயற்சியில் முன்னேற வேண்டிய சூழலில் உள்ளீர்கள். புதன் சூரியனின் சாரம் பெற்று, சூரியன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பேச்சுத் திறமையால் சம்பாதிக்கத் துவங்குவீர்கள். இனி வருங்காலத்தில் வெளிநாட்டு வேலை உங்களுக்கு பயன் தராது. அந்நிய தேசம் செல்லும் எண்ணத்தைக் கைவிடுங்கள். அதே நேரத்தில் அந்நிய தேசம் செல்லக் காத்திருப்போருக்கு உதவி செய்யும் வகையில் டிராவல் ஏஜென்சி ஒன்றைத் துவக்குங்கள். பாஸ்போர்ட், விசா பெற்றுத் தருகின்ற ஏஜெண்ட்டாக நீங்கள் செயல்படலாம். பத்தாம் இடத்து ராகு உங்கள் முயற்சிக்குத் துணை இருப்பதோடு வருமானத்தையும் பெருக்குவார். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுக்கிரனின் அருள் பரிபூரணமாக உள்ளது. பிரதி வெள்ளி தோறும் சுக்கிர தலமான ஸ்ரீரங்கத்திற்கு மனைவியுடன் சென்று பிராகாரத்தை வலம் வந்து வணங்கி உங்கள் பணியைத் துவக்குங்கள். உங்களால் இயன்ற திருப்பணியை அரங்கனுக்கு அவ்வப்போது செய்து வாருங்கள். அரங்கனின் அருளால் அற்புதமாக வாழ்வீர்கள்.

கடந்த 2014ல் நடந்த அரசுத் தேர்வில் வெற்றி பெற்றேன். அந்த நேரத்தில் கொலை வழக்கில் சம்பந்தம் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல இயலாமல் போய்விட்டது. மனம் தளராமல் அரசு தேர்வுகளுக்கு படித்து வருகிறேன். வழக்கில் இருந்து விடுதலை பெறவும், அரசுப்பணி கிடைக்கவும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். - சூரியமூர்த்தி, விழுப்புரம்.


அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது சூரியதசையில் கேது புக்தி நடந்து வருகிறது. இதே சூரியதசையில் ராகுபுக்தி காலத்தில் பிரச்னையை சந்தித்திருக்கும் நீங்கள் தற்போது நடந்து வரும் கேது புக்தி காலத்தில் இதிலிருந்து வெளியேற முடியும். உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சூரியன் - ராகுவின் இணைவு தீய நண்பர்களின் தொடர்பினைக் குறிக்கிறது. ஜென்ம லக்னாதிபதி புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் போராட்டம் நிறைந்த வாழ்க்கையைத் தந்துள்ளது. அரசுத் தேர்வுகளுக்காக படித்து வரும் அதே நேரத்தில், 26 வயதினை முடித்திருக்கும் நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்காமல் ஏதேனும் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணியில் சேர்ந்து கொள்ளுங்கள். உடன் சட்டம் சார்ந்த படிப்பிற்கும் விண்ணப்பிப்பது நல்லது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞராக உருவாக முடியும். உங்கள் ஜாதக  அமைப்பு உங்களை திறமை வாய்ந்த சட்ட நிபுணராக உருவாக்கும். உங்கள் வழக்கு முடிவிற்கு வரும் வரை ஞாயிறு தோறும் உங்கள் ஊரில் உள்ள கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று ஏழு விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பிராகாரத்தை ஏழுமுறை வலம் வந்து வணங்குங்கள். உங்களுடைய பிரச்னை தீர்வதோடு வளமான வாழ்விற்கும் வழிபிறக்கக் காண்பீர்கள்.

“விஹிதம் அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
 ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவசம்போ.”


காதல் திருமணம் செய்த எங்கள் ஜாதகத்தில் தோஷம் உள்ளதாக எங்கள் பெற்றோர் கூறுகிறார்கள். எனக்கு நாக தோஷமும், என் மனைவிக்கு செவ்வாய் தோஷமும் உள்ளதாகச் சொல்கிறார்கள்.இதனால் எனக்கு ஆபத்து வருமோ என்று என் மனைவி பயம் கொள்கிறாள். இதற்கு ஒரு நல்ல தீர்வும் பரிகாரமும் கூறுங்கள். - ஓம்பிரகாஷ், திருவண்ணாமலை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் பெற்றோர் சொல்வது போல உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் எந்தவிதமான தோஷமும் இல்லை. பத்தாம் வீட்டில் ராகுவைக் கொண்டிருக்கும் உங்களுக்கு நாகதோஷம் என்பது இல்லை. சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவிக்கு செவ்வாய் தோஷம் என்பதும் இல்லை. சுத்தமான ஜாதக அமைப்பினைக் கொண்டிருக்கும் உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்பது மிகநன்றாக உள்ளது. சரியான நேரத்தில்தான் திருமணமும் நடந்திருக்கிறது. உங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் ராகு தசை நடந்து கொண்டிருப்பதைக் கொண்டு யாராவது தோஷம் உள்ளது என்று சொல்லியிருக்கலாம். உங்கள் ஜாதகத்தில் ராகு தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தற்போது உங்கள் தொழில் நிலை பலமாக உள்ளது. உங்கள் பெற்றோருக்கு உண்மை நிலையைச் சொல்லிப் புரிய வைத்து உங்கள் பணியினில் முழுகவனத்தையும் செலுத்துங்கள். சந்திரனின் உச்சபலத்தினைப் பெற்றிருக்கும் உங்கள் இருவருக்கும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. அனுதினமும் அண்ணாமலையாரை மனதாற வணங்கி வந்தாலே போதும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள்ஆகிவிட்டன.இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. பரிகாரம் செய்துவிட்டோம். மருத்துவம் பார்த்துவிட்டோம். எந்தப்பலனும் இல்லை. குழந்தைச் செல்வம் கிட்ட உரிய பரிகாரம் சொல்லுங்கள். - வேலுமணி, கரூர்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தையும், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் இருவருக்கும் குழந்தை பாக்கியம் என்பது நிச்சயம் உண்டு என்பது தெளிவாகிறது. எனினும் இருவரின் ஜாதகங்களிலும் புத்ர ஸ்தானத்தின் மீது சனிபகவானின் தாக்கம் இருப்பதால் சற்று தாமதமாகிறது. உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சனி ஜென்ம லக்னத்தில் உச்சபலத்துடன் அமர்ந்திருக்கிறார். உங்கள் மருமகளின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிலேயே சனியின் அமர்வு உள்ளது. தற்போது உங்கள் மருமகளின் ஜாதகத்தில் சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருவதால் இந்தச் சனி புக்தியின் காலத்திற்குள் குழந்தை பிறந்துவிடும். தம்பதியர் இருவரையும் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். சனிக்கிழமை தோறும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு அன்னதானம் செய்து வருவதும் நல்லது. 15.02.2021க்குள் உங்களுடைய வம்சம் விருத்தி அடைந்துவிடும். கவலை வேண்டாம்.

“தேவகீ சுத கோவிந்தவாஸூதேவஜகத்பதே
தேஹிமேதநயம் க்ருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:   தேவதேவஜகந்நாத கோத்ர வ்ருத்தி கரப் ப்ரபு:
 தேஹிமேதநயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்.”


உயர்ந்த குணம், சிறந்த கல்வி கொண்ட எங்கள் மகன் வினோதமான நோயின் காரணமாக மாற்றுத் திறனாளியானான். அவனது தந்தையோ, என் மாமனார், மாமியாரோ எந்த உதவியும் செய்யவில்லை. கணவரின் அண்ணனும், அண்ணியும் என் குடும்பத்தை பிரிக்க நினைக்கின்றனர். நீதிமன்றம் மூலம் பணஉதவி பெற்றுள்ளேன். குடும்பம் ஒன்றிணைய பரிகாரம் கூறுங்கள்.- ரெங்கநாயகி, சிவபுரம்.

சித்திரைநட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகம் மிகவும் வலிமை பொருந்தியது. ஜென்ம லக்னத்தில் நான்கு கிரகங்களின் இணைவினைப் பெற்றிருக்கும் நீங்கள் பிரச்னையிலிருந்து விலகி இருக்க நினைக்காதீர்கள். உங்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களை எதிர்த்துப் போராடுங்கள். திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகள் தன் தந்தையுடன் இணைந்து வசிப்பாள். உங்கள் மகள் தன் தந்தையுடன் வசிப்பதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது. மாற்றுத் திறனாளியான உங்கள் மகன் தான் எதிர்பார்த்த படிப்பினில் சேருவார். அவரது கல்விஆசை நிச்சயம் நிறைவேறும். எதிர்காலத்தில் உயர்ந்த உத்யோகம் பார்ப்பதற்கான அம்சம் அவரது ஜாதகத்தில் பலமாக உள்ளது. உங்கள் மகனுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு எந்த ஊரில் கிடைக்கிறதோ, அங்கு சென்று அவருக்குத் துணையாக நீங்கள் இருந்து வாருங்கள். உங்கள் மகளை அவரது தந்தை பார்த்துக் கொள்வார். உங்கள் குடும்பத்தினை இணைக்கும் பாலம் உங்கள் மகள்தான். பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்கள் எதிரிகள் காணாமல் போவதோடு, உங்கள் மனதிலும் தன்னம்பிக்கை உயரக் காண்பீர்கள்.

“பஞ்சாநநாயாகிலபாஸ்கராய பஞ்சாசதேகர்ணபராசராய    
பஞ்சாக்ஷரேசாயஜகத்திதாயநமோஅஸ்து துப்யம் சரபேஸ்வராய.”


என் மகனுக்கு புரிந்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளது. ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறான். கணிதப் பாடம் சுத்தமாகப் புரிவதில்லை. சைனஸ் பிரச்னை உள்ளது. வாய்வழியே சுவாசிக்கிறான். உரிய பரிகாரம் சொல்லுங்கள். - திருமலைச்செல்வி, திருநெல்வேலி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது குருதசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. நான்காவது வயதில் அவனைத் தாக்கிய ஜூரத்தினால் சிறு பிரச்னை உண்டாகியுள்ளது. எனினும் இதனை எளிதாகச் சரிசெய்ய இயலும். ஆசிரியர்களின் அறிவுரையின்படி உரிய மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. அவரது ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் இணைந்துள்ள கிரகங்களின் சேர்க்கை முன்னோர்களுக்கான கடன் பாக்கியைச் சொல்கிறது. உங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை சரிவரச் செய்து வருகிறீர்களா என்பதைக் கவனித்து அதனைச் சரிசெய்ய முயற்சியுங்கள். உங்கள் பிள்ளைக்குத் தேவை ஒரு சிறு தூண்டுதல் மட்டுமே. அவனது வாழ்வு பிரகாசமாய் ஒளிவீசும். மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகன் கணக்குப் பதிவியல் துறையில் சிறந்து விளங்குவான். பிரதிமாதந்தோறும் வருகின்ற பௌர்ணமிநாள் அன்று மாலையில் தென்காசி சிவன் கோயில் பிராகாரத்தில் அமைந்துள்ள சித்தர் சந்நதிக்கு முன்பாக அரைமணி நேர காலத்திற்கு உங்கள் பிள்ளையை அமர வையுங்கள். மாதந்தோறும் தவறாமல் செய்துவர அவரது நடவடிக்கையில் மாற்றத்தை உணர்வீர்கள். வெகுவிரைவில் உங்கள் பிள்ளையின் ஞானக்கண் திறக்கும்.

என் மகனுக்கு 20 வருடங்களாக மதுப் பழக்கம் இருக்கிறது. மது மறுவாழ்வு இல்லத்தில் ஒரு மாதம் இருக்கச் செய்தும் பலனில்லை. மனநோய் மருத்துவமனையில் ஒருமாதம் சேர்த்தும் பலனில்லை. திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவன் திருந்தி வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- கோபு, திருச்சி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகக் கணக்கின்படி தற்போது சந்திரதசையில் சந்திர புக்தி நடக்கிறது. சந்திரன் அவருடைய ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜென்மலக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் இந்த சந்திரதசையின் காலத்தில் அவரது மனதை மாற்ற இயலும். இவரது தாத்தாவான உங்களது தந்தைக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை ஒன்று நிலுவையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அதனை நினைவில் கொண்டு உங்கள் தந்தைக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையைச் சரிவர செய்து முடியுங்கள். முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்கள் பிள்ளையை நல்லபடியாக வாழ வைக்கும். இவரது ஜாதகப்படி 06.09.2018க்குப் பின் ஒரு திருப்பத்தை சந்திப்பார். சற்று சிரமத்தைத் தரக்கூடிய அந்த நிகழ்வினைக் கண்டு நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் அஞ்சத் தேவையில்லை. அந்த பிரச்னைக்குரிய நேரத்தில் அவருக்கு நேரடியாகச் சென்று உதவி செய்யாதீர்கள். சிரமப்பட்டாலும் பரவாயில்லை, அவராக தெளிந்து அதிலிருந்து வெளியே வரட்டும் என்று விட்டுவிடுங்கள். அனுபவப் பாடத்தினால்தான் அவரைத் திருத்த இயலும். பிரதி தமிழ் மாதத்தில் வருகின்ற முதல் திங்கட்கிழமை நாளில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்திற்குச் சென்று உச்சிக்காலபூஜையில் பங்கேற்று வழிபட்டு வாருங்கள். அம்மன் அருளால் உங்கள் மகனின் மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா்
229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்