SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் ஒடுக்கு பூஜை

2018-03-14@ 14:18:24

குளச்சல்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த வருட மாசிப் பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை கணபதி ஹோமம், பஞ்சாபிஷேகம், தீபாராதனை, மதியம் உச்சிகால பூஜை, மாலை சாயரட்சை தீபராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது. மற்றும் சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

3ம் நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனியும் நடந்தது. கடந்த 9ம் தேதி நள்ளிரவு மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான வலிய படுக்கை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு மற்றொரு முக்கிய  வழிபாடான பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனியுடன் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடந்தது. 10ம் நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலிலிருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி,4.30 மணி முதல் 5 மணி வரை அடியந்திர பூஜை  குத்தியோட்டம் ஆகியவை நடந்தது. 10 ம் நாள் விழாவை முன்னிட்டு  நேற்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தக்கலை, குமாரகோவில் களியக்காவிளை, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அருகில் உள்ள தோப்புகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பொங்கலிட்டனர்.

இதனால் கடற்கரை, கடற்கரை சாலை, கோயில் வளாகம், பொங்கலிடும் மண்டபம் ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை சமய மாநாடு திடலில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கல், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை  நடந்தது. ஒடுக்கு பவனியின்போது சாஸ்தான் கோயில் வளாகத்தில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகளை கோயில் பூசாரிகள் வாயில் துணியை கட்டி 13 பானைகளில் தலையில் சுமந்து அம்மன் சன்னதிக்கு எடுத்து வந்தனர். இதை காண்பதற்கு திரளான பக்தர்கள் கோயிலை சுற்றி தரையில் நிசப்தத்துடன் அமர்ந்து இருந்தனர். 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை, தீபாராதனையுடன் விழா நிறைவடைந்தது.  வரும் 20ம் தேதி எட்டாம் கொடையும், 21ம் தேதி மீன பரணிக்கொடையும் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்