SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணவாழ்க்கையில் இணக்கமும், மகிழ்ச்சியும் அருளும் இறைவி!

2018-03-14@ 09:46:55

காரடையான் நோன்பு

சிவபெருமானுக்குரிய எண்ணற்ற திருநாமங்களில் “ஸ்ரீகேதாரேஸ்வரர்“ என்பதும் ஒன்று, ஸ்ரீ கேதாரேஸ்வரர் என்ற திருப்பெயரோடு சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஆலயங்கள் இந்தியாவில் பல இருந்தாலும், அவற்றில் மிகப் பிரபலமானது உத்தரகாண்ட் மாநிலம், மந்தாகினி நதிக் கரையோரம் அமைந்துள்ள கேதார்நாத் திருத்தலமாகும். தங்களைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு பஞ்ச பாண்டவர்கள் இங்கு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பழைய பெயரான கேதார் காண்டின் தலைவர் என்ற பொருள் படும் ஸ்ரீகேதார் நாத் என்றும், ஸ்ரீகேதாரேஸ்வரர் என்றும் இங்கு சிவபெருமான் வழிபடப்படுகிறார். பார்வதிதேவியை கேதார கௌரி என்று அழைப்பதும் நம் வழக்கமாக இருக்கிறது. கணவனுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நிலைத்து, மணவாழ்க்கையில் இணக்கமும் மகிழ்ச்சியும் ஏற்படும் பொருட்டு  பார்வதி தேவியைக் குறித்து பெண்களால் பல விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. கௌரி விரதங்கள் என்று அழைக்கப்படும்  இவற்றில் ஒன்றான ‘கேதார கௌரீ விரதம்’ தீபாவளி அன்று இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவபெருமானை மட்டுமே வணங்கி, வழிபட்டு வலம் வரும் உறுதிப்பாடு கொண்ட பிருங்கி என்ற முனிவரை தன்னையும் வணங்குமாறு செய்ய பார்வதி தேவி கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற, சிவபெருமான் அர்த்த நாரீஸ்வரர் ஆனார். இதன் பொருட்டு பார்வதி தேவி மேற்கொண்ட  விரதத்தை அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்படுவது கேதார கௌரி விரதம். இது தவிர, வடசாவித்ரி விரதம் என்ற பெயரிலும் வட மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. காரடையான் நோன்பு, தமிழ்நாட்டில் அனுஷ்டிக்கப்படுகிறது.

மணமக்களிடையே மகிழ்ச்சியும் இணக்கமும் ஏற்படவும், காதல் வயப்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், பக்தர்கள் பிரார்த்தனை செய்யும் தலமாக ஒடிஷா மாநிலத்தின் தலைநகரான புவனேஷ்வர் மாநகரில் உள்ள ஸ்ரீகேதாரேஷ்வர் மந்திர் திகழ்கிறது. இந்த ஆலயம் இங்கு அமைந்ததன் பின்னணி நிகழ்ச்சி சுவாரசியமானது. கேதார் என்ற இளைஞன் தான் உயிருக்குயிராய் நேசித்த கௌரியைத் திருமணம் செய்து கொள்வதை உறவினர்கள் தடுத்ததால் அவர்கள் இருவரும் இவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றனர். காட்டு வழியில் செல்லும்போது, கௌரியின் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் தேடிச்சென்ற கேதார், ஒரு புலியால் கொல்லப்பட்டான்.  

நடந்ததை அறிந்த கௌரி, ஒரு குளத்தில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள். இவர்கள் பெயராலேயே இங்கள் ஈசன், இறைவி இருவரும் அழைக்கப்படுகின்றனர் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அக்காலத்தில் உட்கல் என்ற இப்பகுதியை ஆண்டு வந்த லலாடேந்து கேசரி என்ற மன்னன் இச்சம்பவத்தைக் கேள்விபட்டு மனம் வருந்தி, காதலர்களுக்கு தெய்வீக தம்பதிகளான கேதாரநாதரும், கௌரீ தேவியும் அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த அழகிய ஆலயத்தை அமைத்ததாக கூறப்படுகிறது.

காசித்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஒருமுறை, காசியில் இரைச்சல் மிகவும் அதிமாகி தன்னால் தியானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதை நாரதரிடம் தெரிவித்து, தனக்கு ஒரு ஏகாந்தமான, அமைதியான இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு கூறினாராம். நாரதரும் அவரிடம், இந்த புவனேஷ்வர் தலமே அதற்குச் சிறந்தது என்று கூற, சிவபெருமான் இங்கு வந்து குடியேறியதாகவும், சில நாட்கள் கழித்து, பார்வதி தேவியும் இங்கு வந்து சிவபெருமானுடன் இணைந்து கொண்டாள் என்றும் தல புராணம் சொல்கிறது. ஒடிஷா புவனேஷ்வர், காஞ்சிபுரத்தைப் போன்றே ஏகாம்ர க்ஷேத்ரம் என்று புராணங்களில் வர்ணிக்கப்படுகிறது.

அடர்ந்த மாமரங்கள் நிறைந்திருந்த இப்பகுதியில், ஒற்றை  மாமரத்தின் கீழ் சிவபெருமான் காட்சி அளித்தால் இதுவும்  ஏகாம்ரத் தலமாக (ஏக=ஒற்றை ஆம்ரம்= மாமரம்) போற்றப்படுகிறது. காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பார்வதி தேவி தவமியற்றி வழிபட்டதைப் போன்றே, இங்கும் கௌரி தேவி சிவபெருமானை நோக்கித் தவம் செய்து மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம் உள்ளது. மேலும் காஞ்சிபுரம் போன்றே கோவில் மாநகராகப் போற்றப்படும் புவனேஷ்வரில், அக்காலத்தில் 3000க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருந்ததாகவும், தற்போது சுமார் 700 ஆலயங்களே இருப்பதாகவும் கூறுகிறார்கள். நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் அரிய ஆலயங்கள் உள்ளன.

இங்குள்ள ஆலயத்தை சிவபெருமான் தானே கட்டிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். ஸ்ரீகேதாரேஸ்வரர் ஆலய வளாகத்தில் ஸ்ரீகேதாரேஸ்வரருக்கும், ஸ்ரீகேதார கௌரி தேவிக்கும் தனித் தனியே இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒடிஷா பாணியில் அமைந்த  இந்த ஆலயத்தின் விமானம், பூரி விமானம் போன்றே கம்பீரமாகக் காட்சி தருகிறது. இங்கும் நுழைவாயிலில் இரு மருங்கிலும் வண்ணம் தீட்டப்பட்ட இரண்டு சிங்கங்கள் உள்ளன. பத்தாவது நூற்றாண்டில் சோம வம்ச அரசரால் இந்த ஆலயங்கள் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இரண்டு ஆலயங்களும் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

முதன் முதலில் இங்கு கேதார கௌரி ஆலயம் கட்டப்பட்டது என்றும் பின்னரே சிவபெருமானுக்கு ஆலயம் அமைந்தது என்றும் சொல்கிறார்கள். கருவறையில் ஸ்ரீகேதாரேஸ்வரர், சிவலிங்க உருவில் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஆனால், கேதார கௌரி தேவியோ கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கிறாள். பெரும்பாலான தமிழக ஆலயங்களில் சிவபெருமான் கிழக்கு திசை நோக்கியும், தேவி தெற்கு திசை நோக்கியும் இருப்பதைக் காணலாம். ஆனால், இத்தலத்தில் அந்த அமைப்பு  மாறியிருப்பது தனிச் சிறப்பாகும்.

தேவி கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளதால் இத்தலத்தில் முதன்முதலில் தேவிக்கு ஆலயம் அமைந்திருக்கலாம் என்றும், இது காஞ்சியைப் போன்றே ஒரு தேவித் தலம் என்றும் கருத இடமுள்ளதாகக் கூறுகின்றனர். கருவறையில் ஸ்ரீகேதாரேஸ்வரரின் ஆவுடை தரையோடு தரையாகப் பதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக சிவலிங்கம் பொருந்தும் பாணம் - ஆவுடை - காணப்படவில்லை. கருவறையைச் சுற்றிலும் உள்ள கோஷ்டங்களில் விநாயகர், கார்த்திகேயர், பார்வதி தேவி ஆகியோரை தரிசிக்கலாம். (இவர்களை பார்ச்வ தேவதைகள் என்று குறிப்பிடுகின்றனர்). எட்டு அடி உயரத்தில் பஞ்ச முக அனுமன் காட்சி தருகிறார்.

திருச்சுற்றில் மூன்று சிவலிங்கங்களுக்கு மூன்று தனித் தனிச் சந்நதிகள் விமானத்துடன் அமைந்துள்ளன. திருச்சுற்று மற்றும் மண்டபச் சுவர்களை  சிவ பார்வதி, அர்த்தநாரீஸ்வரர், விஷ்ணு போன்ற வண்ணச் சித்திரங்கள் அலங்கரிக்கின்றன. ஆலய வளாகத்தில் கீரா குண்ட் மற்றும் மரீசி குண்ட் என்ற இரண்டு தீர்த்தக் குளங்கள் உள்ளன. நன்கு பராமரிக்கப்படும் இந்தக் குளங்களின் நீர் தெளிந்து சுத்தமாகக் காட்சி தருகிறது. மருத்துவக் குணங்கள் கொண்டதாகக் கருதப்படும்  கீரா குண்ட் நீர் நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது எனவும்  மரீசி குண்ட் நீரைப் பெண்கள் அருந்தினால் கருத்தரிக்கும் வாய்ப்பு எளிதில் கிட்டும் எனவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

சைத்ர சுக்ல அஷ்டமி நாளன்று வட மாநிலங்களில் அசோகாஷ்டமி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் அதிக அளவில் பெண்கள் இந்த ஆலயத்திற்கு வந்து மரீசி குண்ட் புனித நீரை பிரசாதமாக வாங்கிச் செல்கின்றனர். சந்தானம் வேண்டி இயற்றப்படும் சந்தான சப்தமியும் இதையொட்டியே அனுஷ்டிக்கப்படுகிறது. மாத சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ஆலயத்தில், ஒவ்வோர் ஆண்டும் மஹாசிவராத்திரி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

புவனேஷ்வரில் உள்ள மிகப் பெரிய சிவாலயமான லிங்கராஜ் ஆலயத்தில் லிங்கராஜ் - கேதார கௌரி  தேவியின் திருக்கல்யாணம் மே மாதம் சீதள ஷஷ்டி அன்று மூன்று நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி  ஸ்ரீலிங்கராஜ் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக ஸ்ரீகேதாரேஸ்வரர்-கேதார கௌரி ஆலயத்திற்கு வருகை தர,  திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான மக்கள் கலந்து கொள்ளும் லிங்கராஜ் ஜாத்ரா நடைபெறுகிறது. ஸ்ரீகேதார் கௌரி ஆலயத்திற்கு அருகில் ஸ்ரீமுக்தேஷ்வர், ஸ்ரீசித்தேஷ்வர், ஸ்ரீராஜாராணி ஆகிய பிரபலமான ஆலயங்கள் உள்ளன.

ஒடிஷா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர்-பூரி சாலையில் புவனேஸ்வர் ஸ்ரீமுக்தேஷ்வர் ஆலயத்திற்கு அருகில் இந்த கேதாரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. காலை 5 முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. மணம்புரியவிருக்கும் பெண்களும் ஆண்களும் தங்கள் திருமணம் இனிதே முடிந்து மணவாழ்க்கை சிறப்பாக அமையவும், தாம்பத்தியத்தில் ஒற்றுமை வலுப்படவும்  இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீகேதாரேஸ்வரர், ஸ்ரீகேதார கௌரியை வழிபட்டுச் செல்கின்றனர்.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்