SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவியல் நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆலயத் திருப்பணி!

2018-03-13@ 14:04:45

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - திருமங்கலம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்திலுள்ள திருமங்கலம் எனும் திருவூர், காவிரியிலிருந்து பிரியும் விக்கிரமனாறு எனும் கிளை நதியின் கரையில் அமைந்துள்ளது. திருமணங்கள் கைகூடும் பிரார்த்தனைத் தலமான திருமணஞ்சேரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் திகழும் சோழநாட்டுக்குரிய இத்திருமங்கலம், சோழப்பேரரசர்கள் காலத்தில் ‘ராஜராஜன் திருமங்கலம்’ என்ற பெயரால் அழைக்கப்பெற்றதாக இவ்வூர் பூலோகநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள சோழர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் இவ்வூரில் ஓடும் விக்கிரமனாற்றை ‘விக்கிரம சோழப் பேராறு’ என்றும் சிவாலயத்தினை ‘விக்கிரம சோழீச்சரம்’ என்றும் அவை குறிப்பிடுகின்றன. முதற்குலோத்துங்க சோழனின் மைந்தனான விக்கிரம சோழனால் இவ்வாலயம் எடுக்கப்பெற்றதால் அவ்வேந்தனின் பெயரால் விளங்குகிறது.

இறைவனின் பழம் பெயர்,  விக்ரம சோழீஸ்வரமுடையார் என்பதாகும். பின்னாளில் அவர் திருநாமம் பூலோகநாத சுவாமி என்றும் அம்பிகையின் திருப்பெயர் பூலோக நாயகி என்றும் அழைக்கப்படலாயின. காவிரியின் வடகரை வழியாகச் செல்லும் கும்பகோணம்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் திருமணஞ்சேரி சாலை வழியாகவும், கும்பகோணம் மயிலாடுதுறை காவிரித்தென்கரைச் சாலை வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் திருமணஞ்சேரி சாலை வழியாகவும் சென்று திருமங்கலத்தை அடையலாம். ஊரின் நடுவண் இரண்டு தனித்தனி திருச்சுற்றுக்களுடன் கிழக்கு நோக்கியவாறு மூலவர் கோயிலும், அம்மன் கோயிலும் திகழ்கின்றன.

மிக அழகான கற்றளியாக இவ்வாலயம் காட்சி நல்குகின்றது. வேலைப்பாடு மிகுந்த கல்ஹாரமாக, ஒரு கோபுரத்துக்குரிய அங்கங்களுடன் கிழக்கு வாயில் அமைந்துள்ளது. மேல்நிலைக்கோபுரக் கட்டுமானம் இல்லாமல் மொட்டைக் கோபுர வாயிலாகவே இப்பிரதான வாயில் திகழ்கின்றது. அம்மன் ஆலயத்திற்கு மூலவர் கோயிலின் வடபுற மதிலில் உள்ள வாயில் வழியே செல்ல வேண்டும். முன்பு இரண்டாம் பிராகாரம் திகழ்ந்திருந்து, காலப்போக்கில் அழிந்துவிட்டது. மூலவர் கருவறை இருதள விமானத்துடன் காட்சி நல்க, அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம் ஆகியவை அழகான கற்றூண்களுடன் திகழ, விக்கிரம சோழீஸ்வரம் ஒரு கலைக்கோயிலாகக் காட்சியளிக்கின்றது.

மகா மண்டபத்தின் பக்கச் சுவர்களில் தொடங்கி எல்லா சுவர்களிலும் கோஷ்ட மாடங்களும், அவற்றில் கோஷ்ட தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன. தட்சிணாமூர்த்தி கோஷ்டத்திற்கு முன்பாக பாயும் இரு சிம்மங்களைத் தாங்கி நிற்கும் முன்நோக்கிய மண்டப அமைப்பு காணப்பெறுகின்றது. இது சோழர் கட்டடக் கலையில் அமைந்த அரிய அமைப்பாகும். முகமண்டபத்தின் வடபுறம் நடராஜ மூர்த்திக்கென அமைந்த கூத்தம்பல மண்டபம் இணைந்துள்ளது. அவ்விணைப்புப் பகுதியில் திகழும் தூண்களில் நாட்டிய நங்கையர் நடனமாடும் சிற்பக் காட்சிகளும், மத்தளக்காரர் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. மூலமூர்த்தியாகத் திகழும் பூலோகநாதர் திருமேனி, லிங்க வடிவிலும், உமா பரமேஸ்வரியின் திருவுருவம் நின்ற கோலத்தில் அக்கமாலை, தாமரை மலர் ஏந்தி, அபய வரத ஹஸ்தங்களுடன் அருள்பாலிக்கும் வண்ணமும் திகழ்கின்றன.

கோஷ்ட மூர்த்திகளாய் கணபதி, பிட்சாடணர், உமையுடன் திகழும் ரிஷபாந்திகர், தட்சிணாமூர்த்தி போன்ற தெய்வத் திருவடிவங்களும், பரிவார தெய்வங்களாக சூரியன், சந்திரன், பைரவர், சண்டீசர் போன்ற தெய்வ வடிவங்களும், அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், நாக தெய்வங்கள் ஆகிய வடிவங்களும் சோழர் கலையின் அழகுப் படைப்புகளாக  இவ்வாலயத்தை அணி செய்து நிற்கின்றன. துவார பாலகர் சிற்பங்கள் இருவகைகளில் இங்கு இடம் பெற்றுள்ளன. கூத்தம்பலத்துத் தூண்களில் ஒன்றில் நாட்டியத்திற்காக மத்தளத்தை இசைக்கும் கலைஞன் ஒருவனின் உருவம் உள்ளது. அவ்வுருவத்திற்கு மேலாக சோழர்கால கல்வெட்டுப் பொறிப்பாக ‘மத்தளப் பெருமாள்’ என்ற பெயர் காணப்பெறுகின்றது.

மற்றொரு தூணில் ‘சிவநாமத்து பொன்னடி கொண்ட எற்றி ஆன வீரப்பெருமாள்’ என்ற கல்வெட்டுப் பொறிப்பும் அதன்கீழ் சாமரத்துடன் நாட்டியமாடும் நங்கை ஒருத்தியின் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. அடுத்துள்ள மற்றொரு தூணில் ‘சிவநாமத்துப் பொன்னடி கொண்ட போகமார்த்தாளான புவனநாயக மாணிக்கம்’ என்ற கல்வெட்டுப் பொறிப்பும், சாமரத்துடன் ஆடுகின்ற நர்த்தகி ஒருத்தியின் உருவமும் இடம் பெற்றுள்ளன. மற்ற தூண்களில் மேலும் இரு ஆடல் மங்கையர் ஆடும் காட்சிகள் காணப்பெறுகின்றன. இவர்கள் அனைவரும் தூண்களை வடித்த சிற்பிகளால் கற்பனையாக வடிக்கப்பெற்ற நாட்டியக் கலைஞர்கள் அல்லர்; விக்கிரம சோழனால் இக்கோயில் எடுக்கப்பெற்றபோது அங்கு ஆடற்கலை புரிய நியமிக்கப்பெற்றவர்கள் ஆவர்.
சிலப்பதிகார காலத்திலிருந்து சோழர் காலம்வரை தலைசிறந்த நாட்டிய அணங்குகளுக்கு ‘தலைக்கோலி’ என்ற விருது அளித்தனர்.

சோழர் காலம் தொடங்கி விஜயநகரர், நாயக்கர் காலம் வரை அத்தகைய நாட்டிய மணிகளுக்கு ‘மாணிக்கம்’ என்ற விருது அளித்து வந்தனர். அவ்வகையில் இங்கு சிற்பங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள எற்றி, கோப மார்த்தாள் என்ற இரு அணங்குகளும் முறையே வீரபெருமாள் மாணிக்கம், புவனநாயக மாணிக்கம் என்ற விருதுகளைப் பெற்றவர்கள் ஆவர். போக மார்த்தாள் என்ற பெயர் திருநள்ளாறு திருக்கோயில் அம்பிகையின் பெயராகும். சிவபக்தியிலும், ஆடவல்லான் தந்த நாட்டிய கலையிலும் தன்னை கரைத்துக்கொண்ட தேவரடியார்களான அந்த இரு நாட்டிய நங்கையர்தம் சிவபக்தியை கண்ட விக்கிரம சோழன், அவர்கள் இருவருக்கும் ‘நமசிவாய’ என்ற சிவன் நாமம் பொறிக்கப்பட்ட சிவபாதுகைகளை விருதாகக் கொடுத்து அவர்கள் அவற்றைத் தலையால் தாங்கும்படி செய்தான்.

அதனால்தான் அவர்கள் பெயர்களுக்கு முன்பு ‘சிவநாமத்து பொன் அடி கொண்ட’ என்ற விருதினை கல்வெட்டில் பொறித்துள்ளான். சோழப் பெருவேந்தர்கள், சிவனடியைத் தலையில் சூடுவதை பெரும் பாக்கியம் எனக்கொண்டவர்கள். ராஜராஜ சோழன் தன்னை ‘சிவபாத சேகரன்’ என்றும், ராஜேந்திர சோழன் தன்னை ‘சிவசரண சேகரன்’ என்றும் கல்வெட்டில் குறிப்பிட்டுக்கொண்டனர். குலோத்துங்க சோழன் திருக்கோயில்களில், தன் உருவச்சிற்பங்களின் தலையில் சிவபாதுகைகள் இடம்பெறுமாறு செய்துகொண்டான். அம்மரபை ஒட்டியே விக்கிரம சோழன் இவ்விருதுகளை அளித்துள்ளான். இச்சிவாலயத்து கல்வெட்டு பொறிப்புகளில் மேலும் சில அற்புதக் குறிப்புகள் காணப்பெறுகின்றன. அண்மையில் கும்பகோணம் அருகிலுள்ள மானம்பாடி சிவாலயத்தைப் புதுப்பிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.

முதலாம் ராஜேந்திர சோழன் எடுத்த அந்த கோயிலின் கட்டுமானக் கற்களுக்கு செந்தூரத்தால் எண்கள் இடாமலும், முறையான படப்பதிவு, வரைவு ஆவணங்கள் எதுவும் செய்யப்படாமலும், கட்டுமானம் முழுவதையும் பிரித்து எடுத்துவிட்டனர். பின்பு மீண்டும் கோயில் எடுக்க முற்பட்டபோது கல்வெட்டுகள் உள்ள கற்பலகைகள், சிற்பப் படைப்புகள் ஆகியவற்றுடன் உள்ள கட்டுமானத்தை மீண்டும் முறையாக முன்னிருந்த வரிசைப்படி அமைக்க முடியாததால் அத்திருப்பணி பற்றிய வழக்குகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளன. ஆனால் பண்டை நாளில் நம் முன்னோர்கள் ஆலயங்களைப் பிரித்துத் திருப்பணி செய்ய முயலும்போது கற்களின் மேல் வரிசை எண்களை செந்தூர எழுத்தில் எழுதி பிறகு கட்டுமானத்தைப் பிரிப்பது, கல்வெட்டுகளை படி எடுத்துக்கொள்வது,

கோயில் கட்டுமானத்தின் வரைபடம் தயார் செய்துகொள்வது ஆகிய முன்னேற்பாடுகளைச் செய்துகொண்ட பிறகே திருப்பணிகளை மேற்கொண்டிருந்திருக்கின்றனர். இவற்றுக்கான சான்றுகள் பல கோயில்களில் காணக்கிடைக்கின்றன. இப்பணிகளை மிஞ்சும் வண்ணம் விக்கிரம சோழீச்சரத்து திருவாயில் திருப்பணி ஏறத்தாழ 15ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கட்டடத்தின் தரை மட்டத்திலிருந்து உபபீடம், அதிட்டானம், பித்தி, பிரஸ்தளம் வரை உள்ள கருங்கல் கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள ஒவ்வொரு அங்கங்களின் வரிசையான கற்களின்மேல் அந்தந்த அங்கங்களுக்கென தனித்தனியாக ஒவ்வொரு குறியீட்டையும், தமிழில் அக்கல்லுக்குரிய எண்ணையும் ஒவ்வொரு கல்லிலும் கல்வெட்டாகப் பொறித்துள்ளனர். பின்பே கட்டடத்தைச் சீர்செய்துள்ளனர்.

இவ்வாறு திட்டமிட்டு செய்துகொண்ட பிறகு,  ஒரு கட்டடம் பிரிக்கப் பெற்றால், மீண்டும் அக்கட்டடத்தை எந்தவித மாற்றமும் சிக்கலும் இல்லாமல் எந்த ஒரு கட்டடக் கலைஞனாலும் எளிதில் திருப்பணி செய்ய முடியும். அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்த இவ்வகை திருப்பணி முறை எக்காலத்துக்கும் துணை புரியும். கோபுர வாயிலின் நிலைக்கால்களில் தென், வடல் என்றும் நிலை உத்தரங்களின்மேல் அகவணை, புறவணை, கதவடை என்ற குறிப்புகளும் கல்வெட்டாக எழுதப்பெற்றிருப்பது நம்மை மேலும் வியப்படையச் செய்கின்றன.

சோழ மண்டலத்து விருதராஜ பயங்கர வளநாட்டின் குறுக்கை நாட்டில் ராஜராஜன் திருமங்கலமும், விக்கிரம சோழீஸ்வரமும் திகழ்ந்ததாக இவ்வாலயத்துக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. விக்கிரம சோழ பேராற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இவ்வாலயத்து நிலங்களும், இவ்வூர் அருகே இருந்த சிவபாத சேகர நல்லூரிலிருந்த ராஜராஜேச்சரம் எனும் கோயிலின் நிலங்களும் மற்ற ஆலயங்களின் நிலங்களும் ஊர் மக்களின் நிலங்களும் பாழ்பட்டபோது அவற்றைத் திருத்தி மீண்டும் நில அளவை செய்து அவரவர்களுக்கும், கோயில்களுக்கும் உரிமையுடையதாக ஆவணப்படுத்தியதை திருமங்கலம் ஆலயத்துக் கல்வெட்டு விவரிக்கின்றது.

திருமங்கலத்தில் ‘ராஜேந்திர சோழீச்சரம்’ என்ற பெயரில் ஒரு சிவாலயம் இருந்தமைக்கான தரவுகள் இவ்வாலயத்திலேயே காணப்பெறுகின்றன. அழிஞ்சி மங்கலம் எனும் ஊரில் இருந்த திருவாலீஸ்வரம் மேலும் அருகமைந்த ஊர்களில் திகழ்ந்த அவிமுத்தீஸ்வரம் வீரராஜேந்திர சோழீஸ்வரம் போன்ற கோயில்களைப் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. பூலோகநாதரையும், அவர்தம் தங்கத் திருவடிகளை விருதாகப் பெற்ற நாட்டிய நங்கையரையும் காண ஒரு முறையேனும் திருமங்கலம் சென்று வாருங்கள். நம் மரபுப் பெருமையினை அறியலாம்.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்