SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீரா வினையகற்றும் தீர்த்தங்கள்!

2018-03-13@ 09:37:22

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அதனதன் தீர்த்தத்தால் மகிமை உண்டு, பெருமை உண்டு. அவற்றில் நீராடுவோருக்குப் பல்வகையான நலன்கள் உண்டு. அந்தவகையிலான சில தலங்களை இங்கே தரிசிப்போம்.

1. தலத்தின் பெயர்: திருக்கழுகுன்றம், இறைவன்: வேதகிரீஸ்வரர் (மலைமேல் திகழ்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் உள்ளவர்). இறைவி: சொக்கி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்) செங்கல்பட்டு-மகாபலிபுரம் வழியில் செங்கல்பட்டிலிருந்து 14 கி.மி. தொலைவு. கடற்கரைச் சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்திலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியாகவே செல்கின்றன. கோயில் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

கிழக்கில் உள்ள ராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறுகோடியில் மிக்க புகழ் வாய்ந்த ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறந்து மிதந்து வருகிறது. இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் இறைவனை வழிபட பாத்திரமின்றித் தவித்தபோது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்தான். அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகக் கூறப்படுகிறது. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலை நேரத்தில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் பறந்தோடிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.


2. தலத்தின் பெயர்: திருக்கருகாவூர். இறைவன்: முல்லைவன நாதர், இறைவி: கர்ப்பரட்சாம்பிகை

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில், கும்பகோணத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவு. தஞ்சாவூரிலிருந்து வடகிழக்கே 20 கி.மி. தொலைவு. தஞ்சாவூர்-மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில் திருக்கருகாவூர் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தல  கிழக்கு கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால் உருவாக்கப்பட்ட க்ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. திருமணம் கூடிவராத கன்னியரும், குழந்தைப்பேறு இல்லாத பெண்களும் இந்த கோயிலுக்கு நேரில் வந்து க்ஷீரகுண்டத்தில் நீராடி அம்பாள் சந்நதிப் படியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள், வெகு விரைவில் தம் விருப்பம் ஈடேறப் பெறுகிறார்கள்.

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சப்பிட்டு வர விரைவில் கருத்தரிக்கும். அதேபோல கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்ப ரட்சாம்பிகை திருப்பாதத்தில் வைத்துக் கொடுக்கப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எந்தக் கோளாறுமின்றி, சுகப்பிரசவம் உண்டாகும். இதனால் பின்விளைவுகள் ஏதும் இல்லை என்பதும் அம்பிகையின் கருணையே.

3. தலத்தின் பெயர்: திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருவாசி. இறைவன்: மாற்றுரைவரதீஸ்வரர், இறைவி: பாலாம்பிகை என்ற பாலசுந்தரி.

திருச்சி-முசிறி சாலையில் 14 கி.மீ. தொலைவில் உள்ள திருவாசி பேருந்து நிறுத்தத்திலிருந்து நகரத்திற்குள் ஒரு கிளைச்சாலையில் 1/2 கி.மீ. சென்றால் ஆலயத்தை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாசி செல்ல நகர பேருந்து வசதி உள்ளது. கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) ஏற்பட்டது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்துபார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனையின்படி, பெருமான் அருள்புரியும் கோவிலுக்குச் சென்று வழிபட்டான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர், மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். இைதயறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான்.

அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர், சிவனை வேண்டி, ‘துணிவளர் திங்கள் துலங்கி விளங்க….’ என்று பதிகம் பாட, நோய்நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன்மீது நின்று ஆடினார். இத்தலத்தில் உள்ள அன்னம் பொய்கை தீர்த்தத்தில் நீராடி பாம்பின் மேல் நடனமாடும் நடராஜரைத் தரிசித்தால்  நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் குணமாகும். அம்பாள் சந்நதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கிறார்கள். துவாரபாலகியர் மூலம் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

4. தலத்தின் பெயர்: திருவாஞ்சியம். இறைவன்: வாஞ்சிநாதர் என்ற வாஞ்சி லிங்கேஸ்வரர். இறைவி: மங்களநாயகி.

கும்பகோணத்திலிருந்து 28 கி.மீ. தொலைவு. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - நன்னிலம் பாதையில் உள்ள அச்சுதமங்கலம் ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவு. திருவாரூர், நன்னிலத்திலிருந்தும் வரலாம். நன்னிலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவு. இத்தலத்தில் அமைந்துள்ளது குப்தகங்கை தீர்த்தம். மக்கள் அனைவரும் தன்னில் நீராடித் தம் பாவங்கள அனைத்தையும் தன்னில் கரைத்துவிட, அதனால் பாவங்களைச் சுமந்த கங்கை, அவற்றைப் போக்கி உதவுமாறு இறைவனை வேண்டிக் கொண்டாள். ஈசனும், எமனுக்கே பாவவிமோசனம் தந்த ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் சென்று வழிபடுமாறு கூறினார். கங்கையும் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.

இதனாலேயே இந்த தீர்த்தம் குப்த கங்கை எனப் பெயர் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிராகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்கள். அச்சமயம் செய்யும் அனைத்துப் பிரார்த்தனைகளும் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

5. தலத்தின் பெயர்: திருமணஞ்சேரி. இறைவன்: அருள் வள்ளல் நாதர் என்ற உத்வாக நாதர். இறைவி: கோகிலாம்பாள் என்ற யாழின்மென்மொழியம்மை.

மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் குதுளம் என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவு. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்திலிருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.திருமணம் கைகூடாமல் தடைபட்டு வருந்துவோர் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் வெகுவிரைவில் திருமணம் நடைபெறும். மேலும் ராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் உன்னதமானது. ராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இந்த தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் கொண்டுள்ள ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும் பால் பொங்கல் நிவேதனமும் செய்து தாம் சாப்பிட, ராகு தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் கிட்டுவது நிச்சயம் என்கிறார்கள் அனுபவப்பட்ட பக்தர்கள்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2018

  18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

 • 17-06-2018

  17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramalanchennaifestival

  தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

 • DragonBoatTournament2018

  சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

 • fifa_wcer1

  2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்