SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் வேலை கிடைத்துவிடும்!

2018-03-05@ 10:55:58

நான் இருமுறை போலீஸ் தேர்வு எழுதி வெற்றி அடைந்தேன். உடல் தேர்விலும் தகுதி பெற்றேன். இருந்தும் வேலை கிடைக்கவில்லை. இந்த முறை  மீண்டும் போலீஸ் தேர்வு எழுதப் போகிறேன். இம்முறையாவது வேலைகிடைக்குமா? உரியபரிகாரம் சொல்லுங்கள்.
- அருண்குமார், சீர்காழி.


பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து  வருகிறது.உங்கள்ஜாதக அமைப்பு காவல் துறையில் பணி செய்வதற்கு முழுமையான தகுதியினைப் பெற்றுள்ளது. ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் 5ல்  அமர்ந்து சிந்தனையில் வேகத்தினையும், தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சபலத்துடனும் அமர்ந்து சட்டம் ஒழுங்கினைக் காக்க வேண்டும் என்ற  எண்ணத்தினையும் உங்களுக்குள் விதைத்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான் உங்களை ஒரு நேர்மையானஅதிகாரியாக  பணியாற்றச் செய்வார். விடாமுயற்சியுடன் தொடர்ந்து தேர்வினை எழுதி வாருங்கள். தற்போது நடக்கும் சனி புக்தியினால் ஒரு சில தடைகளைக்  காண நேரலாம். இருந்தபோதும் சனி தரும் சோதனைகளை தைரியமுடன் எதிர்கொண்டாலே போதும், சனிபகவான் அகமகிழ்ந்து உங்களுக்கு   வேலையைப் பெற்றுத் தருவார். தேர்விற்கு முன்னதாக வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று சுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு உங்கள் பெயரில்  அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இந்த வருடத்திற்குள் உங்களுக்கு போலீஸ் வேலை கிடைத்துவிடும்.

மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் ஆக சுறுசுறுப்புடன் பணியாற்றிக் கொண்டிருந்த என் கணவர் திடீரென்று 2014 பிப்ரவரியில் நரம்புக் கோளாறு காரணமாக  செயலிழந்து போனார். அறுவைசிகிச்சைக்குப் பின் இடுப்பிற்கு மேலே 80 சதவீதம் சரியாகி உள்ளது. இடுப்பிற்கு கீழ் இன்னமும் செயல்படவில்லை.  மருத்துவர்கள் நம்பிக்கை தருகின்றனர். நான்கு வருடங்களாக காத்திருக்கிறேன். எங்கள் வாழ்வினில் வசந்தம் எப்போது வரும்?
- சேலம் மாவட்ட வாசகி.


திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனிதசையில் ராகு புக்தி நடந்து  வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனிவக்ரம் பெற்று ஐந்தாம் வீட்டில் சந்திரன் மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பது இந்த  நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளுக்கு உள்ளாகி இருக்கும் உங்கள் கணவருக்கு தற்போதைய  தேவை தன்னம்பிக்கை மட்டுமே. அதிர்ஷ்டவசமாக உங்களைப் போன்ற மனைவியை அவர் பெற்றிருக்கிறார். உடல் செயலிழந்தாலும் அவருடைய  மூளை நன்றாக செயல்படுவதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவருடைய தொழில் சார்ந்த விஷயங்களை அதாவது மருந்து  மாத்திரைகளை டெலிஷாப்பிங் மூலம் வியாபாரம் செய்யும் முறை பற்றி அவரோடு அவ்வப்போது விவாதம் செய்து வாருங்கள். இன்றைய சூழலில்  ஆன்லைனில் எப்படி வியாபாரம் நடக்கிறது என்பது பற்றி ஆண்ட்ராய்டு tab போனைக் காண்பித்து அவரோடு உரையாடுங்கள். அவர் கையில் ஒரு  tab மொபைலைக் கொடுத்து ஆராயச் சொல்லுங்கள். தொழில்ரீதியாக அவரைத் தூண்டி விடுங்கள். உங்கள் கணவரிடம் தினந்தோறும் கீழேயுள்ள  ஸ்லோகத்தைச் சொல்லி நரசிம்மரை வழிபட்டு வரச் சொல்லுங்கள். நரசிம்மரின் அருளால் தன்னம்பிக்கையுடன் அவர் விரைவில் எழுந்து நடமாடத்  துவங்குவார். 03.07.2019க்குள் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும்.

“ஸ்மரணாத் ஸர்வபாபக்நம்கத்ரூஜவிஷநாசநம்
    ஸிம்ஹநாதேநமஹதா திக்தந்திபயநாசநம்.”


12ம் வகுப்பு படிக்கும் என் மகள் படிப்பில் அக்கறை இன்றி இருக்கிறாள். உடல் அழகில் மட்டும் மிகுந்த கவனம் செலுத்துகிறார். பெரியவர்களையும்,  பெற்றோரையும் மதிப்பது கிடையாது. துணிச்சலான பெண்ணாக இருக்கிறார். அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய நல்ல பதில் சொல்லுங்கள்.
- சரஸ்வதி, நாமக்கல்.


மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிரதசையில் சனி புக்தி நடந்து வருகிறது.  உங்கள் மகளின் ஜாதகபலத்தின்படி அவர் ஆண்பிள்ளையைவிட வலிமை அதிகம் கொண்டவர் என்பது புலனாகிறது. மூன்றாம் இடமாகிய தைரிய  ஸ்தானம் வலிமையாக இருப்பதால் அவருடைய வீரமும், தைரியமும் வாழ்வினில் என்றென்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும். அவருடைய  கல்வி நிலையும் வெற்றிகரமாக அமையும். கல்லூரிப் படிப்போடு உடல்வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் அவரது கவனத்தை திசைதிருப்பி  விடுங்கள். பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச் சண்டை போன்ற தோள்வலிமை சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதோடு கராத்தே, சிலம்பம்  முதலான தற்காப்பு கலைகளிலும் பயிற்சி பெற அறிவுறுத்துங்கள். அழகில் ஆர்வம் செலுத்துவது என்பது இந்த வயதிற்கே உரியது. தைரியம் நிறைந்த  பெண் என்பதால் பெரியவர்களை மதிக்காததுபோல் உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையில் உங்கள் மகள் மரியாதை கொடுப்பவர்களிடம் மிகுந்த  மரியாதையுடன் நடந்து கொள்வார். அதிகாரம் செய்து பேசுபவர்களை அலட்சியப்படுத்துவார். அவருடைய வேகம் காவல்துறை சார்ந்த உத்யோகத்தில்  அவரை அமர்த்தும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

பி.இ., முடித்து 4 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. பேங்க் போட்டித் தேர்வுகளில் முதல்நிலையில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்த  தேர்வுகளில் வெற்றிபெற இயலவில்லை. என் கல்லூரித் தோழியை 7 ஆண்டுகளாக காதலிக்கிறேன். நல்லவசதி படைத்த அந்தப் பெண் எனக்காகக்  காத்திருக்கிறாள். விரைவில் வேலை கிடைக்கவும், காதலியின் கரம் பற்றவும் வழிகாட்டுங்கள்.
- பாஸ்கரன், வேலூர்.


மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. உங்கள்  ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும், லக்னம் மற்றும் 10ம் வீட்டிற்கு அதிபதியாகிய புதன் 12ல்  அமர்ந்திருப்பதும் தொலைதூர உத்யோகத்தைச் சொல்கிறது. நீங்கள் எதிர்பார்ப்பது போல் உள்ளூர் அரசு உத்யோகமோ அல்லது வங்கி சார்ந்த பணியோ  கிடைப்பது கடினம். 12ம் பாவகத்தில் நான்கு கிரகங்களின் இணைவு உங்களை உள்ளூரில் உத்யோகம் பார்க்க விடாது. வெளிநாட்டில் உள்ள  உறவினர்கள் மூலமாக உத்யோகம் தேடுங்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் உங்கள் காதலியின் ராசியும், உங்கள் ராசியும் ஒன்றோடொன்று வசியம்  கொண்டிருப்பதால் பரஸ்பரம் நட்பு நீடித்து வருகிறது.அதே நேரத்தில் அவரது எதிர்காலவாழ்வின் நலன் கருதி நீங்கள்அவரைஉங்களின் வருங்கால  மனைவி என்று நினைப்பதை மாற்றிக் கொள்ளுங்கள். அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் வருகின்ற 2019ம் வருடத்தில் திருமண யோகம் கூடி வருகிறது.  உங்கள் ஜாதகப்படி நீங்கள் திருமணத்திற்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் இருவரின் ஜாதகப்படியும் நீங்கள் இருவரும்  வாழ்க்கையில் இணைவதைவிட பிரிவதே இரு குடும்பத்திற்கும் நல்லது. அந்தப் பெண்ணின் நல்வாழ்விற்காக உங்கள் காதலைத் தியாகம் செய்வதில்  தவறேதும் இல்லை. வாழ்க்கையின் நிஜத்தைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். வாழ்த்துக்கள்.

நானும் என் தம்பியும் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று வரும்போது பாம்பின் மீது வண்டியைத் தெரியாமல் ஏற்றி விட்டோம். மேலும்,  காதல்தோல்வியால் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எப்போதும் இறந்து விடலாம் என்ற எண்ணமே மேலெழுகிறது. வாழவும் முடியாமல், சாகவும்  முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- அகிலா, விழுப்புரம்.


உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்பலக்னத்தில் பிறந்துள்ள உங்கள்ஜாதகப்படி தற்போது ராகு தசை நடந்து வருகிறது. படிப்பு முடித்தவுடன்  குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்குப்போக ஆரம்பித்த உங்கள் உழைப்பினால் தற்போது உங்கள் குடும்பத்தில் பணக் கஷ்டம் என்பது நீங்கி உள்ளது.  எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் நீங்கள் இப்படி யோசிக்கலாமா? தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டதை எண்ணி நிம்மதி  அடையுங்கள். பொய்யான ஒரு காரணத்தைச் சொல்லி உங்களைத் துறந்த அந்த மனிதனை நம்பி உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருந்தால் என்ன  ஆவது என்று யோசித்துப் பாருங்கள். கடவுளின் அருளால் நம்மைப் பிடித்திருந்த தோஷம் விலகிவிட்டது என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள்  உத்யோகம் உங்களுடைய தற்போது ராகு தசை நடப்பதால் பாம்பின்மேல் வாகனத்தை ஏற்ற வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. உங்கள் ஊருக்கு  அருகிலுள்ள மயிலம் முருகன் கோயிலுக்கு உங்கள் சகோதரருடன் செவ்வாய்க்கிழமை நாளில் சென்று ராகுகால வேளையில் நான்கு விளக்குகளை  ஏற்றி வைத்து வழிபடுங்கள். அறியாமல் செய்த பிழை நீங்கிவிடும். 10.06.2018க்கு மேல் உங்களுக்கு திருமண யோகம் கூடி வருவதால் நடந்ததை  மறந்து புது வாழ்விற்குத் தயாராகுங்கள். வளமான வாழ்வு உங்களுக்காகக் காத்திருக்கிறது.

அரசுப்பணியில் உள்ள என் மகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வேறு ஒருவர் அரசியல்வாதியின் துணையுடன் பெற்று  விட்டார்.அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியும், விசாரணைக்கு வரதாமதம் ஆகிறது. இந்த வழக்கு வெற்றி  பெறுமா? நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கப் பரிகாரம் உண்டா?
- மணி, நாகர்கோவில்.


ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சந்திரதசையில் செவ்வாய் புக்தி நடந்து  கொண்டிருக்கிறது. உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சூரியன், புதன், குரு ஆகியோரின் இணைவு நிலையான உத்யோகத்தைத்  தந்திருக்கிறது. அவருடைய ஜாதகப்படி உத்யோகத்தில் பதவி உயர்வு என்பது நிச்சயமாக உண்டு. அவருக்குக் நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி  உயர்வினை வேறொருவர் அரசியல்வாதியின் துணையுடன் தட்டிப் பறித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அடுத்தவருக்கு கிடைத்த பதவி  உயர்வினைப்பற்றிக் கவலைப்படாது, தனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வினைக் கோரி உயர் அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கலாம்.  பதவிஉயர்விற்காக நீதிமன்றத்தை நாடியிருப்பதால் தற்போது வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு  வந்து சேர்வதிலும் தாமதம் உண்டாகிக் கொண்டிருக்கிறது. இவருடைய ஜாதகபலத்தின்படி இந்த வழக்கு உடனடியாக முடிவிற்கு வருவதற்கான  வாய்ப்பு இல்லை. தனது துறை ரீதியாக உள்ள உயரதிகாரிகளை நேரில் சந்தித்து பதவி உயர்விற்கான வழிமுறைகள் என்ன என்பதை அறிந்து  முயற்சிக்கச் சொல்லுங்கள். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது நல்லது. 17.12.2019க்கு மேல் இவர் எதிர்பார்க்கும் பதவி உயர்வு  வந்து சேரும்.

நான்கு வயதாகும் என் பேரனுக்கு இன்னும் பேச்சு வரவில்லை. எல்லா மருத்துவரிடமும் பார்த்து விட்டோம். எல்லா கோயிலுக்கும் சென்று  வந்துவிட்டோம். பலனில்லை. எதிர்காலத்தில் அவன் பேசுவானா? மற்ற பிள்ளைகள்போல் நன்றாக இருப்பானா? அதற்கான பரிகாரம் சொல்லுங்கள்.
- மலர், திருவாரூர்.


பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகக் கணக்கின்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி  நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்கள் வக்ர கதியில் சஞ்சரிக்கின்றன. மேலும் வாக்கு ஸ்தானாதிபதி  சந்திரன் கேதுவின் இணைவினைப் பெற்று அமர்ந்துள்ளார். ஜென்ம லக்னாதிபதி புதனும் எட்டில் அமர்ந்திருப்பது பலவீனமான நிலை ஆகும்.  இதுபோன்ற அம்சங்கள் அவருடைய வளர்ச்சியில் தாமதத்தை உண்டாக்குகின்றன. எனினும் வித்தைக்கு அதிபதியும், லக்னாதிபதியும் ஆன புதனின்  பார்வை வாக்கு ஸ்தானத்தின்மீது விழுவதால் திடீரென்று ஒருநாள் இவர் பேசத் துவங்குவார். நன்கு சரளமாக வசனம் பேசும் பழைய தமிழ்  திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது இந்தக் குழந்தையையும் பார்க்க வையுங்கள். அவரைச் சுற்றியுள்ளோர் எப்போதும்  பேசிக்கொண்டே இருங்கள். த மிழில் உள்ள வல்லின எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை அடிக்கடி உரக்கச் சொல்லி வாருங்கள். பிரதிதமிழ்மாதத்தில்  வருகின்ற முதல் புதன்கிழமை நாளில் சீர்காழி சட்டநாதர் ஆலயத்திற்கு பிள்ளையை அழைத்துச் சென்று கோயில் குளத்தில் ஸ்நானம் செய்து  இறைவனைவழிபடச் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களை பாடி பிள்ளையை கேட்கச் செய்வதும் நன்மை  தரும். 18.09.2018ற்குள் உங்கள் பேரனின் குரலைக் கேட்பீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்