SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாராயண நாமம் ஒன்றே போதும்! ஞானியர் தரிசனம்

2018-03-05@ 10:52:52

சோழவள நாட்டில் ஆலங்குடி என்னும் கிராமத்தில் வேதநெறியைப் பின்பற்றுபவராக வாழ்ந்து வந்தார் நாராயணய்யர். தர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட  இல்லற தர்மங்களை நடத்தி வந்தார். கிருஷ்ண பகவானிடம் அளவு கடந்த பக்தி உடையவராகவும் திகழ்ந்தார். அவருக்கு வெகுகாலம் குழந்தை  பாக்கியம் இல்லாமல் இருந்தது. பிறகு, கிருஷ்ணரின் அனுக்கிரகத்தால் பிரகலாதனுக்கு சமமாக ஒரு புத்திரன் அவதரித்தார். அந்தக் குழந்தைக்கு  ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். ராமகிருஷ்ணனுக்கு ஏழாவது வயதில் உபநயனம் முடித்து, ஒரு மகா  பண்டிதரிடம்  வித்யா அப்பியாஸத்திற்காக ஒப்படைக்கப்பட்டார்.

பதினாறு வயதிற்குள் வேதத்தை பூர்ணமாக படித்து முடித்தார் ராமகிருஷ்ணன். இவ்வாறு வித்யையால் மஹாதேஜஸ்வியாய் விளங்கிய  ராமகிருஷ்ணனுக்கு திருமணம் நடத்த பெற்றோர்கள் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ராமகிருஷ்ணனுக்கோ குடும்பமாகிய பாழுங்கிணற்றில்  விழுந்து விட்டால் ஹரியை நினைக்கவே முடியாது என்னும் பயம் உண்டாயிற்று. வனத்திற்கு ஓடி ஹரியை அடைவதே வாழ்வின் லட்சியம் என்று  எண்ணினார். இதுவே சகல சாஸ்திரங்களுடைய சாரமும் ஆகும் என்றும் தீர்மானித்தார். இப்படியிருக்க தன்னுடைய ஞானம், பக்தி, வைராக்யத்தை  நிச்சயப்படுத்திக்கொள்ள குருவருள் முக்கியமென்று கருதி தக்க குரு ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் பாலகிருஷ்ணானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்பார் ராமகிருஷ்ணனின் கனவில் தோன்றி ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை உபதேசித்து மத்  பாகவதத்தையும் அனுக்கிரகித்துக் கொடுத்து மறைந்தார். அன்று முதல் ராமகிருஷ்ணனின் ஹரி பக்தி உச்ச நிலையை எட்டியது. எப்போதும்   ஏகாந்தமாக இருந்து, மந்திர ஜபமும், ஸ்ரீமத்பாகவதத்தையும் பாராயணம் செய்து கொண்டேயிருப்பார். மஹாத்மா பாலகிருஷ்ணானந்த சரஸ்வதிக்கு மத்  பாகவதத்தில் ருசி மிக அதிகம். கையில் வீணையை மீட்டிக்கொண்டு ஸ்ரீமத் பாகவத ஸ்லோகங்களை கானம் செய்து அதையே உபந்நியாசமாகவும்  செய்வார்.  பக்தர்களை அப்படியே தன்னை மறந்து சொல்லுகிற சரித்திரத்தில் ஊன்றிவிடச் செய்யும் சக்தி அவருக்குண்டு.

 பாலகிருஷ்ணானந்தருடைய அனுக்கிரகத்தினால் ஸ்ரீராமகிருஷ்ணன் ஸ்ரீஸ்ரீமத் பாகவதத்தில் அளவு கடந்த பிரேமையையும் ஞானத்தையும் பெற்றார்.
தன்னுடைய இருபத்தெட்டாவது வயதில் ஞானவானாக, அந்த சச்சிதானந்த சொரூபத்திலேயே நிலைபெற்று அவதூதராக புறப்பட்டார் ராமகிருஷ்ணன்.  சதாகாலமும் உன்மத்தனாகத் திரிவார். அவருடைய சிரசில் கேசங்கள் ஜடையாகத் தொங்கும். சரீரமும் மெலிந்தே இருக்கும். மனமோ முற்றிலும்  நிர்மலமாக இருக்கும். சதாகாலமும் மௌனம் அல்லது நாராயணனையே நினைத்துக் கொண்டிருக்கும். எங்கேயாவது யாரேனும் நாராயணனைப்பற்றி  பேசும்போது கேட்பார்.  ஆனால், இரண்டு வார்த்தைகள் கேட்டவுடன், தன்னை மீறி ஆட, பாட ஏன், அழவும் ஆரம்பித்து விடுவார்.

மேனியெல்லாம் சிலிர்த்திருக்கும். உச்சஸ்வரத்தில் ‘நாராயண’ ‘நாராயண’ என்று கானம் செய்வார். கண்களில் தாரை தாரையாக நீர் பெருகும்.  சிலசமயம்  கூச்சலிடுவார். சிலசமயம் மூர்ச்சையாகி விடுவார். தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கிராமங்களில் சஞ்சரித்து வந்த இவர், ஒரு  நாளைக்கு மேல் எங்கும் தங்கமாட்டார். எப்போதும் மௌனமாக இருந்து கொண்டேயிருந்தவருக்கு சுகப்பிரம்ம ரிஷியைப்போல மத் பாகவதத்தை  சொல்ல வேண்டுமென்று பேரவா உண்டாயிற்று. அப்போதெல்லாம் அவர் அவதூதராகவே, திகம்பரராகவே ஆடைகள் ஏதும் தரிக்காமல் இருந்தார்.  ஒருசமயம் காமாட்சிபுரம் எனும் கிராமத்திற்குள் நுழைந்தார். சுவாமிகளைக் கண்டதுமே அவரின் உயர்ந்தநிலையை அறிந்தவர்களாக பாதங்களில்  விழுந்து நமஸ்கரித்தனர் ஊர் மக்கள்.

‘‘நான் இங்கு பிட்சை பெற்றுக் கொள்வதற்காக வரவில்லை. பாகவதம் சொல்லவே வந்திருக்கிறேன். சிரத்தையாக கேட்போருக்கு  சொல்லலாமென்றிருக்கிறேன்’’ என்றவுடன் எல்லோரும் ‘எங்கள் பாக்கியம், எங்கள் பாக்கியம்’ என்று கைகூப்பினர்.

‘‘சுவாமி, தாங்களோ அவதூதராக ஆடைகள் ஏதுமின்றி இருக்கிறீர்கள். தாங்கள் பக்குவமுற்று இருக்கிறீர்கள். ஆனால், எங்களுக்கு  பக்குவமில்லாதபடியால் சங்கோஜமாக இருக்கிறது’’ என்று அவர்கள் சொன்னவுடனேயே, ‘‘பாகவத சொற்பொழிவுக்கு இந்த அவதூதக் கோலம்  தடையாக இருந்தால் உடனே நியம ஆசாரத்தை கைக்கொண்டு சந்நியாச ஆஸ்ரமத்தை எடுத்துக் கொள்கிறேன்’’ என்றார். உடனே அங்கிருந்து  புறப்பட்டு பனங்குடி சுவாமிகள் என்பவரை குருவாக அடைந்து விதிப்படி சந்நியாச தீட்சை எடுத்துக் கொண்டார். அவருடைய குருவும் இவர் தானாகவே  பிரகாசிக்கும் ஆத்ம சொரூபத்தை எப்போதும் தரிசித்து அதுவாகவே இருப்பதால், இவருக்கு ஸ்வயம் பிரகாசானந்த சரஸ்வதி என்கிற தீட்சா  நாமத்தையும் சூட்டினார்.

ஸ்ரீமத் பாகவதத்தையே  எப்போதும் எல்லோருக்குமானதாக உபதேசம் செய்தபடி இருப்பார் பிரகாசானந்த சரஸ்வதி. ஆரம்பத்தில் அவதூதராகவும்  திகம்பரராகவும் இருந்தவர், மக்களின் மீதுள்ள கருணையால்  நியமத்திற்கு உட்பட்டு கோபீ சந்தனத்தை நெற்றியில் தரித்தவராக பரம பாகவத  கோலத்தோடு மக்களிடம் சகஜமாக பேசியும், அவர்களின் குறைகளை கேட்டும்,  சரியான பாதையில் அவர்களைச் செலுத்தி வந்தார். மத் பாகவதத்தை சப்தாஹ முறைப்படி, அதாவது ஏழு நாட்களுக்கு தொடர்ந்து கதையாகக் கூறிக்கொண்டே இருப்பார். வடரங்கம், திட்டச்சேரி,  காமாட்சிபுரம்,  கூத்தனூர், கோனேரிராஜபுரம், மேலப்பாலையூர், சிருகாமணி உள்ளிட்ட இன்னும் நிறைய ஊர்களுக்குச் சென்று பாகவதத்தை  உபந்நியாசம் செய்து பேரருளையும் பொழிந்தார்.

எல்லோரும் இவரை ஆலங்குடி பெரியவா என்றும், ஆலங்குடி ஸ்ரீஸ்வயம் பிரகாசானந்த சரஸ்வதி சுவாமிகள் என்றும் மிக்க மரியாதையோடு  வணங்கினர். ஒருமுறை அரசலாறு நதிக்கரையிலுள்ள கூத்தனூர் கிராமத்திற்குச் சென்று பாகவதத்தை கூறத் தொடங்கினார். சற்று நேரத்தில் பெரிய  ராஜநாகமொன்று அங்கு வந்து படமெடுத்து ஆடத் தொடங்கிற்று. எல்லோரும் பயந்தார்கள். ஆனால், சுவாமிகளோ சற்றும் சலனமின்றி பாகவதத்தைத்  தொடர்ந்து கூறியபடி இருந்தார். மெதுவாக அவர் அமர்ந்திருந்த பீடத்தின் அடியில் சென்று பதுங்கியது நாகம். சிலர் கோல் கொண்டு அடிக்க வந்தார்கள்.  அப்போது, சுவாமிகள் ‘‘நீங்கள் அடிப்பீர்கள் என்று பயந்துதானே இங்கு வந்திருக்கிறது. அப்படியே விட்டுவிடுங்கள்’’ என்றார். சற்று நேரம் கழித்து  பாகவதத்தை முடித்தவுடன் பீடத்தை புரட்டிப் போடச் சொன்னார். ஆச்சரியமாக அங்கு சர்ப்பத்தை காணவில்லை. சுவாமிகள், சிரித்தபடி நின்றிருந்தார்.  வந்தது யாரென்பதை அவரே அறிவார்.

இவ்வாறு இறையருள் எப்படி நடத்துகிறதோ அப்படியே சஞ்சரித்துக் கொண்டிருந்தவர், தான் நாராயணனோடு கலக்கும்  வைபவத்தையும் விதேக முக்தி  எப்போது என்பதையும் அறிந்துகொண்டு திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திற்கு அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்திற்கு வந்தார். 17.5.1935 அன்று,  வைகாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி திதி. அன்றே நரசிம்ம ஜெயந்தியும் ஆனதால், பிரகலாத சரித்திரத்தை நெஞ்சுருக நெக்குருக சொன்னார்.  பிரகலாதன் நரசிம்மரை துதிக்கும் கட்டத்தை உபந்நியாசம் செய்து கொண்டிருக்கும்போதே, கண்களில் நீர் வழிய, ‘‘எம்பெருமானே தாங்கள் சுதந்திரராய்  பிரகாசிக்கிறீர்.

அப்படியிருக்க இங்கு நான் மட்டும் ஸம்ஸார சக்கரத்தில் சுழலுகின்றவனாய்த் தவிக்கிறேன். ஹே, நரஸிம்ம பிரபுவே என்னைத் தங்கள் திருவடிப்  பக்கம் இழுத்துக் கொள்ளும்,’’ என்று பிரகலாதன் துதித்த ஸ்லோகத்தை விவரிக்கும்போதே, சுவாமிகளின்  கபாலத்திலிருந்து ஜோதி சொரூபமான  ஆத்மா பிரிந்தது. சில பக்தர்களுக்கு மட்டும் அந்த ஜோதி தரிசனமாயிற்று. பரம பவித்ரமான சுவாமிகளின் சரீரம், சந்நியாச விதிப்படி திருவாரூர்  மாவட்டம், நன்னிலத்திற்கு அருகேயே முடிகொண்டான் ஊரில் ஜீவசமாதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

(தரிசனம் தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்