SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீல் குதிரை வாகனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2018-02-23@ 12:31:05

திருமால் திருத்தலங்களில் ஒவ்வொரு நாளும் விசேஷம்தான். இந்த விசேஷங்களைப் பொதுவாக நித்யோத்ஸவம், பட்ஸோத்ஸவம், மாஸோத்ஸவம், ஸம்வத்ஸர உத்ஸவம் என்று பலவகையாக குறிப்பிடுவர். மாதங்களில் பஞ்சபர்வம் என்றழைக்கப்படும் ஏகாதசி, மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, பிரதான பெருமாளின் நட்சத்திர தினத்தில் விசேஷ திருமஞ்சனம், வீதியுலா மற்றும் பொதுவாக ‘சிரவண’ நன்னாளில் சிறப்பு உத்ஸவம் என்று நடக்கும். அதேபோன்று திருக்கோயில்களில் வருட உத்ஸவங்களில் பிரம்மோத்ஸவம், வசந்த உத்ஸவம், பவித்ரோத்ஸவம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டும் பின்பாகவும் பகல்பத்து, ராப்பத்து உத்ஸவங்கள் மற்றும் அந்தந்த மாதங்களில் அழ்வாராதிகள் மற்றும் ஆசார்யர்களின் அவதார உத்ஸவங்கள் என்று எதாவது ஒரு திருவிழா நடந்துகொண்டேயிருக்கும்.

பூவுலகில் காஞ்சி மாநகரில் அத்திகிரி அருளாளனுக்கு (வரதராஜனுக்கு) வைகாசி மாதத்தில் முதன்முதல் நடந்த பிரம்மோத்ஸவம், திருமாலுக்கு பிரம்மாவினாலேயே நடத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல திருக்கோயில்களில் அந்தந்த ஸ்தல புராணப்படி பிரம்மோத்ஸவம் அந்தந்த மாதங்களில் நடைபெறும். காஞ்சிபுரம்-வேலூர் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்புட்குழி திவ்ய தேசத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ‘வறுத்த பயிர் முளைக்கும்’ மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமானுக்கு மாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெறும். அது என்ன ‘வறுத்த பயிர் முளைக்கும்’ மரகதவல்லி? விளக்கம்  கடைசியில்.பிரம்மோத்ஸவத்தில் (இந்த வருடம் பிப்ரவரி 12 முதல் 21வரை 10 நாட்கள்), பெருமாள் காலை, மாலை வேளைகளில் கருடன், மங்களகிரி, யானை, ஹம்சம், அனுமன், சிம்மம், சூரியபிரபை, சந்திரபிரபை, யாளி என்று பல வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா கண்டருள்வார்.

7ம் நாள் பொதுவாக ரதோத்ஸவமும், 8ஆம் நாள் (19.02.2018) இரவு குதிரை வாகனமும் நடைபெறும். குதிரை வாகன சேவை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருபவர், சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குவதுதான். அதேபோன்று திருப்புட்குழி பிரம்மோத்ஸவ எட்டாம் நாள் இரவு, குதிரை வாகன சேவையும் மிகவும் புராணப் பெருமையும், புதுமையும் கொண்டது. இந்த குதிரை வாகனத்தை செய்த விஸ்வகர்மா, மிக உயர்ந்த கலைஞன் ஆவான். இக்குதிரை மூன்று பாகங்களாக இருக்கும். மூன்று பாகங்களையும் தக்கபடி இணைத்தால் தாவியோடும் குதிரையாக  அது அமைந்துவிடும். பெருமாள் நிஜமான ஒரு குதிரையில் ஆரோகணிக்க, அது தாவித்தாவிச் செல்வதுபோல அமைந்திருக்கும். அந்த வாகனத்தை உருவாக்கிய கலைஞன் இப்பெருமாளின் மேலுள்ள பக்தியினால், வேறு எந்த ஒரு பெருமாளுக்கும் செய்வதில்லை என்று உறுதியோடு இருந்தான்.

திருப்புட்குழியில் எட்டாம் நாள் உத்ஸவத்தில் மதியம் விஜயராகவப் பெருமாளுக்கு விசேஷமாக திருமஞ்சனமும், அலங்காரங்களும் செய்யப்படும். பின்னர் ‘திருப்பாதம் ஜாடித் திருமஞ்சனம்’ என்ற தொட்டி திருமஞ்சனம் நடைபெறும். ஒரு பெரிய வெள்ளி கங்காளத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு அதில் விசேஷ வாசனாதி திரவியங்கள் கலக்கப்படும். பின்பு விஜயராகவப் பெருமாளை இரு அர்ச்சகர்கள் கைத்தலமாக எழுந்தருளப் பண்ணிக் கொண்டுவந்து கங்காளத்தில் உள்ள நீரில் பெருமானின் திருவடிகள் நனையும்படியாக செய்வர். பின்பு, ஆஸ்தானத்திற்குச் செல்வர். இதேபோன்று ஸ்ரீதேவி, பூதேவிக்கும் இம்முறையில் பாதங்கள் நனைக்கப்படும். பிறகு பெருமாளின் ‘சடாரி’யும் தக்க மரியாதைகளுடன் கொண்டுவரப்பட்டு கங்காள நீரில் நனைத்து எடுக்கப்படும். பின்பு கங்காள நீர் பக்தர்கள் மீது பிரசாதமாய் தெளிக்கப்படும். இதன் பின்னர் விஜயராகவப் பெருமாள் குதிரை வாகனத்தில் விசேஷ ராஜ அலங்காரத்துடன் எழுந்தருள்வார்.

‘கீல் குதிரை’ எனப்படும் இக்குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள், முதலில் நேராக இந்த வாகனத்தைச் செய்து தந்த விஸ்வகர்மாவின் வீட்டுக்கு எழுந்தருளி அவருடைய வம்சாவளியினருக்கும், குதிரைக்குப் புல் கொடுத்த குடும்பத்தவர்களுக்கும் அனுக்ரஹம் செய்வார். பின்பு திருக்கோயிலுக்கு திரும்பியவுடன் வீதி உலா தொடரும். காலப்போக்கில் இன்று அந்த கீல் குதிரை செயல்படவில்லை என்றாலும், உத்ஸவத்தின் மற்ற அம்சங்கள், முறையாக குறைவின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளின் பட்ட மஹஷியாக காட்சி தரும் பிராட்டி, மலடிக்கும் மக்கட்பேறு அளிக்கும் மகத்தான சக்தி வாய்ந்தவள். அமாவாசை தினத்தில் இத்தலத்திற்கு வந்து ஜடாயு புஷ்கரணியில் நீராடி கோயிலில் தாயார் சந்நதியில் கொடுக்கப்படும் வறுத்த பயிரை பிரசாதமாகப் பெற்று பெண்கள் தங்கள் மடியில் கட்டிக் கொண்டு இத்தலத்தில் அன்று இரவு தங்கி மரகதவல்லித் தாயாரை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தால் அடுத்தநாள் காலை மடியில் கட்டப்பட்டிருக்கும் வறுத்த பயிர்களில் முளை விட்டிருக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு நன்மக்கட்பேறு திண்ணம். இதனால் பயனை அடைந்தோர் பலர்.

ஆதனால் இப்பிராட்டி ‘வறுத்த பயிர் முளைக்கும் மரகதவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.திருப்புட்குழியில் ஸ்ரீதேவியான திருமகள் பெருமாளின் இடதுபுறம் சந்நதி கொண்டுள்ளார். பொதுவாக எல்லா வைணவத் தலங்களிலும் தாயார் சந்நதி வலதுபுறம் அமைந்திருக்கும். இப்பெருமான் ஜடாயுவை தன் மடியில் கிடத்தி பஞ்ச சம்ஸ்காரமென்ற அந்திம கிரியைகள் செய்து மோட்சமளித்ததால் அந்த அக்னி ஜுவாலை அனலைக் கண்டு திருமகள் இடதுபுறமாக ஒதுங்கியதால் இந்த அமைப்பு. இத்தலத்தில் ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்ததால் புஷ்கரணியும் ஜடாயு புஷ்கரணி என்று பெயர் பெற்றது. ராமானுஜர் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தப் பாடங்களை இத்தலத்தில்தான் கற்றறிந்தார்.

எம்.என். ஸ்ரீனிவாசன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்