SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைவண்ணம் கைகொடுக்கும்!

2018-02-21@ 14:37:43

மனைவி இறந்து நான்கரை வருடங்கள் ஆகிறது. மறுமணம் வேண்டாம் என்று இருந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து நான் காதலித்த பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவரது மணவாழ்வும் தோல்வியில் முடிந்துள்ளது. சேர்ந்து வாழலாம் என்று அவர் வற்புறுத்துகிறார். இரண்டு குழந்தைகளின் தந்தையாகிய எனக்கு ஒரு தெளிவானவழி காட்டுங்கள். எஸ். பாண்டியன், மதுரை.
 
மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷலக்னத்தில் பிறந்துள்ள அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் சந்திர புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிலும், அவரது ஜாதகத்தில் ஏழாம் வீட்டிலும் உண்டாகியுள்ள செவ்வாய்  சனியின் இணைவு உங்கள் இருவரின் பிணைப்பினை வலுப்படுத்துகிறது.

உங்கள் இருவர் ஜாதகத்திலும் பரஸ்பரம் ஈர்ப்பு சக்திஎன்பது அதிகமாகஉள்ளதால் இந்தபந்தம் தொடர்கிறது. கடந்தகாலத்தினை மறந்து புதுவாழ்விற்குத் தயாராகுங்கள். இந்த உறவு இரு குடும்பத்து பெரியவர்களின் சம்மதத்துடனும், உங்கள் பிள்ளைகளின் ஒப்புதலுடனும் மலரட்டும். குழந்தையில்லாத அந்தப் பெண் உங்கள் பிள்ளைகளை நன்கு கவனித்துக் கொள்வார். 02.03.2018க்குப் பின் திருப்பரங்குன்றம் கோயிலில் உங்கள் திருமணம் நடக்கட்டும். மறுமண வாழ்வு இருவருக்கும் மங்களகரமாக அமைய வாழ்த்துக்கள்.

அப்பா இறந்தபிறகு குலத்தொழிலை என்னால் தொடர இயலவில்லை. ஜாதகம் பார்த்ததில் ஆறு வருடம் கழித்துச் செய்யலாம் என்று சொன்னார்கள். சிலர் சொந்தமாக செய்ய இயலாது என்கிறார்கள். தற்போது சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நான் சொந்தத் தொழில் தொடங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மணிவேல், கரூர்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. தொழிலைப் பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் செவ்வாய்  சுக்கிரனின் இணைவும், லாப ஸ்தானத்தில் சூரியன்  புதனின் இணைவும் நல்லஅம்சமே. உங்களுடைய குலத்தொழிலை நீங்கள் தொடர முடியும்.உங்கள் முன்னோர்கள் செய்த முறையைவிட, தற்காலத்திற்கு ஏற்றவாறு நவீனமான முறையில் நீங்கள் தொடர்ந்து குலத் தொழிலைச் செய்வீர்கள்.

சிம்ம ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் அடுத்தவர்களிடம் கைகட்டி சம்பளத்திற்கு வேலை பார்ப்பதைவிட சொந்தமாக தொழில் செய்வது நல்லதே. 11.09.2018க்குப் பின் நீங்கள் சொந்தமாக தொழில் செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உங்களை நாடி வருபவர்கள் உள்ளம் குளிர மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார்கள். செவ்வாய் தோறும் அருகிலுள்ள அம்மனின் ஆலயத்தில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள துதியினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். உங்கள் கைவண்ணம் கை கொடுக்கும்.

“வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப்பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.”

ஐம்பத்து நான்கு வயதாகும் என் கணவர் அச்சகத்தில் கூலி வேலை செய்பவர். கடந்த இரண்டரை வருடங்களில் பெரும் கடனாளி ஆகிவிட்டோம். மகளின் திருமணத்திற்கு சீர் எதுவும் செய்ய இயலவில்லை. பூர்வீகச் சொத்தில் உள்ள எங்கள் பங்கையோ, நாங்கள் சொந்தமாக கட்டிய வீட்டையோ விற்கவும் முடியவில்லை. எங்கள் சொத்து நிலைக்குமா? கடன் பிரச்னை தீர உரிய பரிகாரம் கூறுங்கள். தமிழ் செல்வி, சிவகாசி.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது 01.01.2018 முதல் காலநேரம் மாறத் துவங்கியுள்ளது. மகளின் திருமணம் அவளது சம்பாத்தியத்தில் நடந்தது என்றும், பெற்றோர் ஆகியநீங்கள் சீர் எதுவும் செய்ய இயலவில்லை என்றும் ஆதங்கத்துடன் உங்கள்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கூலி வேலை செய்த நிலையிலும், மகளை கல்லூரிவரை படிக்கவைத்து அவரை ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கின்ற அளவிற்கு வளர்த்தது நீங்கள்தானே. பெற்றோரின் கடமை பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவது மட்டுமே. அந்த வகையில் நீங்கள் மிகச்சிறந்த பெற்றோர்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அவருடைய திருமணத்தை அவருடைய சம்பாத்தியத்தில் நடத்தியதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் இளைய மகனின் ஜாதகப்படி பூர்வீகச் சொத்தினை அனுபவிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. அதனால் பூர்வீகச் சொத்தில் உள்ள உங்கள் பங்கினை தற்போது விற்க முயற்சிக்க வேண்டாம். நீங்கள் கட்டிய வீட்டினை விற்று உங்களால் கடன் பிரச்னையில் இருந்து மீள முடியும். தற்போது நேரம் நன்றாக உள்ளதால் நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு வீட்டை விற்க முடியும். உங்கள் மகன் வளர்ந்து குடும்பத்தைக் காப்பார். கவலை வேண்டாம். புதன்கிழமை தோறும் சிவன்கோயிலில் மூன்று விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். உங்கள் பிள்ளைகள் மூவரும் முத்தாகப் பிரகாசிப்பார்கள்.

வாய் பேசவும், காது கேட்கவும் இயலாத மாற்றுத் திறனாளியான 22 வயது ஆகும் என் மகளின் திருமண வாழ்வு நல்லபடியாக அமைய உரிய பரிகாரம் சொல்லுங்கள். விஜயகுமார், முசிறி.

மாற்றுத் திறனாளியான பெண் பிள்ளையை கல்லூரியில் படிக்க வைக்கும் தந்தையாகிய உங்களுக்கு எங்கள் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது புதன்தசையில் சனி புக்தி நடக்கிறது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பது பலமான நிலையைக் காட்டுகிறது. உங்கள் மகளுக்கு நிரந்தரமான உத்யோகம் அமையும். அவருடைய சுய சம்பாத்யமும் மிகநன்றாக உள்ளது. திருமணத்தைப் பொறுத்தவரை அவசரப்படாதீர்கள். மணவாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனிவக்ரம் பெற்று கேதுவுடன் இணைந்து எட்டில் அமர்ந்திருப்பதால் சற்று நிதானித்து திருமணம் செய்வதே நல்லது.

சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகள் யாரையும் சார்ந்து வாழாமல் சொந்தக் காலில் நிற்கவே விரும்புவார். தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அவர் தனது மேற்படிப்பினைத் தொடரட்டும். கூடவே அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு உரிய பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று வருவது நல்லது. 26வது வயதிற்குள் நிரந்தர உத்யோகத்தில் அமரும் அவரது மணவாழ்வு 29வது வயதில் அமையும். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்கு உங்கள் மகளை அழைத்துச் சென்று அர்ச்சனை செய்து வழிபடுங்கள். பெயருக்கு ஏற்றார் போல் அகிலம் போற்றும் வகையில் உங்கள் மகள் வாழ்வார்.

26 வயது ஆகும் என் பேத்தி திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கிறாள். உறவிலேயே நல்ல வரன்கள் தட்டிப் போய்விட்டது. 77 வயது ஆகும் என் கணவர், தான் ஆரோக்கியமாக இருக்கும்போதே தன் பேத்தியின் திருமணத்தை நடத்திவிட ஆசைப்படுகிறார். உரிய பரிகாரம் சொல்லுங்கள். வாணி, திருச்சி.
 
உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ராகு என நான்கு கிரகங்கள் இணைந்திருப்பது நல்ல நிலை அல்ல. உங்கள் பேத்தி திருமணம் வேண்டாம் என்று மறுப்பதற்கான காரணம் என்ன என்பதை அறிய முற்படுங்கள். ஜென்ம லக்னத்தில் அமர்ந்துள்ள கேதுவும், மூன்றாம் இடத்தில் அமர்ந்துள்ள குருவும் அவருடைய மனதில் பயத்தினை உருவாக்கியுள்ளார்கள். சிறுவயதில் நேர்ந்த கசப்பான அனுபவமும் காரணமாக இருக்கலாம்.

முதலில் அவர் மனதில் உள்ள அச்சத்தைப் போக்க முயற்சியுங்கள்.அவருடைய ஜாதகத்தைப் பொறுத்தவரை அவசரப்பட்டு ஏதோ ஒரு வரனுக்கு திருமணம் செய்து வைக்க இயலாது. உறவு முறையில் வரன் தேட வேண்டாம். நீங்கள் விரும்புவது போலவே ஆண் வாரிசு இல்லாத உங்கள் குடும்பத்தைக் கட்டிக்காக்கின்ற வகையில் மணமகன் அமைவார். பிரதி மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நாட்களில் வயலூர் குமாரஸ்வாமி ஆலயத்திற்கு உங்கள் பேத்தியைஉடன் அழைத்துச் சென்று அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். ஆலயத்திற்கு எதிரில் அமைந்திருக்கும் கருப்பண்ண ஸ்வாமியையும் வழிபட மறக்க வேண்டாம். குமரனின் திருவருளால் 28 வயது முடிந்தவுடன் அவரது திருமணம் நல்லபடியாக நடந்தேறும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரபல கம்பெனியில் வேலை பார்த்து வந்த என் மகன் சிங்கப்பூரில் வேலை காத்திருக்கிறது என்ற தன் நண்பரின் பேச்சை நம்பி வேலையை விட்டுவிட்டான். இரண்டு மாதம் ஆகியும் விசா வரவில்லை. மன உளைச்சலில் உள்ள என் மகனின் வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். கண்ணதாசன், நாகூர்.
 
மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அஷ்டமத்துச் சனி அவருக்கு சற்று சோதனையைத் தரும். உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதும், 10ம் வீட்டிற்கு அதிபதி குரு நீசம் பெற்ற நிலையில் உள்ளதும் சற்று பலவீனமான நிலை என்றாலும், குரு  சனியின் பரிவர்த்தனை யோகம் சற்று பலன் தரும். அயல்நாட்டு உத்யோகம் என்பது இவருக்கு நிரந்தரமல்ல. அந்நிய தேசப்பணி என்பது இவருக்கு முழுமையான மனநிம்மதியைத் தராது.

தற்போதைய கிரகநிலையின்படி உத்யோகரீதியாக ஸ்திரமற்ற தன்மை இருந்தாலும், 25வது வயதில் நிலையான உத்யோகத்தில் அமர்ந்து விடுவார். அந்நிய தேசத்தில் உத்யோகம் பார்ப்பதால் மட்டும் பொருளாதாரரீதியாக இவர் உயர்வினை சந்திக்க இயலாது. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல் உள்ளூரில் வேலை தேடிக் கொள்வதே இவரது எதிர்காலத்திற்கு நல்லது. சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி வைத்து உங்கள் பிள்ளையை வழிபட்டு வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள துதியைச் சொல்லி வணங்குவதும் நன்மை தரும்.

“குருகௌரஸ பூர்ணாயபலாபூபப்ரியாய ச
நாநாமாணிக்யஹஸ்தாயமங்களம்
ஸ்ரீஹநூமதே.”


எழுபது வயதாகும் நான் இன்னும் கடனால், பொருளாதாரகஷ்டத்தால் மனநிம்மதிஇல்லாமல் உள்ளேன். பாக்கி வைத்திருக்கும் கடனை யோக்கியமாய் அடைக்கும் நேரம் எப்போது வரும்? அதற்கு நான் என்னபரிகாரம் செய்ய வேண்டும்? மணியன், ஈரோடு.

இந்த வயதிலும் எல்லோருக்கும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பாராட்டிற்கு உரியது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் பிறந்த நேரத்தை வைத்துக் கணக்கிடும்போது அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருப்பதாகத் தெரிகிறது. உங்கள் ஜாதகக் கணக்கின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடக்கிறது. உங்களுடைய கடனை மாதந்தோறும் தவணை முறையில் கொஞ்சம், கொஞ்சமாக அடைத்து விடுவீர்கள். 27.10.2019க்குள் முற்றிலுமாகக் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பசுமாட்டுத் தொழுவத்தில் உள்ள வில்வ மரத்திற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ரிஷப வடிவில் காணும் உங்கள் செயல் ஏற்புடையதே. உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த வழிபாட்டினை விடாமல் தொடர்ந்து செய்து வாருங்கள். திங்கட்கிழமை தோறும் உங்கள் பூஜையின்போது தயிர்சாதம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். தினசரி பூஜை முடிந்தவுடன் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வில்வமர இறைவனை 11 முறை வலம் வந்து வணங்குங்கள். கடன் பிரச்னை தீர்வதோடு மனநிம்மதியும் காண்பீர்கள்.

“இந்துவாரேவ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேச்வர:
நக்தம் ஹோஷ்யாமி தேவேசஏகபில்வம் சிவார்ப்பணம்.”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்