SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீகாளஹஸ்தி பிரமோற்சவத்தின் 9வது நாளில் விடிய விடிய கோலாகலமாக நடந்த சிவன்பார்வதி திருக்கல்யாண உற்சவம்

2018-02-17@ 13:07:17

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி பிரமோற்சவத்தின் 9வது நாளில் சிவன் பார்வதிக்கு விடிய விடிய கோலாகலமாக திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாகவும் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பூஜை செய்யும் பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் உலக பிரிசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 8ம் தேதி கண்ணபர் மலைமீதுள்ள கண்ணப்பர் கொடியேற்றத்துடன் கோலாகலமாக பிரமோற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, 9ம் தேதி ஸ்ரீகாளத்தீஸ்வரர் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
பிரமோற்சவத்தையொட்டி காலை, மாலை என்று இருவேளையும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை தாயாரும் எழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்றுமுன்தினம் காலை அலங்கரிக்கப்பட்ட அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசூனாம்பிகை தாயாரும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து இரவு அலங்கார மண்டபத்தில் இருந்து திருமண கோலத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை தாயாரும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு பிக்‌ஷால கோபுரம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு தங்க யானை வாகனத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் தாயாரும் எழுந்தருளி ஊர்வலமாக நேரு வீதி, தேர் வீதி வழியாக சென்று திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தனர். அங்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு சிவன்பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புராணத்தில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் பிரம்மா புரோகிதராகவும், விஷ்ணு கன்னிகாதானம் செய்து கொடுப்பவராகவும் இருந்து சிவன்பார்வதி திருக்கல்யாண உற்சவத்தை நிகழ்த்துவார்கள்.

மேலும், இத்திருக்கல்யாணத்துக்கு பார்வதி தேவியின் தந்தையான தட்சன் மகாராஜனிடம் சண்டிகேஸ்வரர் சுவாமி சம்மதம் பெற்று நிகழ்த்துவார். இதேபோல் அர்ச்சகர்கள் சிவன் தரப்பிலும், பார்வதி தரப்பிலும் தனித்தனியாக நின்று கொண்டு திருமண பேச்சுவார்த்தை நடத்துவதுபோன்று நடத்திக்காண்பித்தனர்.
பின்னர் பிரதான அர்ச்சகர் தங்க யானை மீது எழுந்தருளிய சிவன் தரப்பில் இருந்து மங்கள நாணை எடுத்து காண்பித்தவுடன் எதிர்தரப்பில் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பார்வதிதேவியின் கழுத்தில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க மங்கள நாணை கட்டி திருக்கல்யாண நிகழ்வை விடிய விடிய கோலாகலமாக நிகழ்த்திக்காட்டினர். பின்னர் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்யப்பட்டது. இந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, திருமண கோலத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை தாயாரும் திருமண மண்டபத்தில் இருந்து கோயில் வரை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து, ருத்ராட்சை அம்பாரி வாகனங்களில் தனித்தனியாக ஸ்ரீகாளத்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை தாயாரும் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்தர்கள் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்டபடி பங்கேற்றனர். தொடர்ந்து, சுவாமிகள் வீதி உலாவுக்கு பின்னர் கோயிலை அடைந்தனர். இரவு நடராஜர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்