SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழங்கணக்குகள் பரிசீலிக்கப்படும் காலமே முதுமை!

2018-02-14@ 17:09:43

அர்த்தமுள்ள இந்து மதம் - 49

காலங்கள், கடவுள் பாடும் ராகங்கள். அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை. ஒரு வருஷம் முடிகிறது என்றால், ஒரு வயது முடிகிறது  என்று பொருள். வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர, இறங்குகிற சக்தி கிடையாது. எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல;  ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பதே கேள்வி. மராட்டிய வீரன் சிவாஜியின் வயதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்? அவன் நடத்திய வீர  சாகஸங்கள் வரலாறாயின!

ஆதிசங்கரர் சமாதி அடையும்போது வயது முப்பத்து இரண்டுதான். ஆனால், அந்த வயதுக்குள் அவர் ஆற்றிய காரியங்களின் பயனே இன்றைய பீடங்கள். இந்து  தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதிசங்கரர் ஒரு மைல் கல். இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவரும் அவரே. வயதுகள் கூடலாம்,  குறையலாம்; ஆனால் ஓடுகிற வருஷங்கள் உருப்படியான வருஷங்களாக இருக்க வேண்டும். இன்ன ஆண்டில், இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு  எழுதப்படுமானால், அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.

உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே! பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் பயனற்ற பிறவிகளே! எந்தக்  காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும். எனது  இளமைக்காலங்கள் - அவற்றை நான் எண்ணிப் பார்க்கிறேன். எழுத உட்கார்ந்தால் மளமளவென்று என் கைப்படவே நாற்பது ஐம்பது பக்கங்கள் எழுதியதை  எண்ணிப் பார்க்கிறேன்.

பரபரப்பான நடை; சுறுசுறுப்பான சிந்தனை; துருதுருவென்றிருந்த மூளை. எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிறேன். அவை, எவ்வளவு வீணாகி விட்டன என்பதை  ’எண்ணும்போது, ‘இறைவா, இன்னொரு முறை இளமையைத் தரமாட்டாயா?’ என்று கெஞ்சத் தோன்றுகிறது. ‘அதைப் புத்தகமாக எழுத வேண்டும். இதைப்  புத்தகமாக எழுத வேண்டும்’ என்றெல்லாம் இப்போது ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது.

திடீர் திடீரென்று உடம்பு சோதனை செய்கிறது. இந்தச் சோதனை இல்லாத காலங்களில் பயனற்ற அரசியல் கட்டுரைகளை எழுதினேன்; பயனற்ற மேடைகளில்  காட்சியளித்தேன்; வீண் வம்புகளில் ஈடுபட்டேன்; விளையாட்டுகளையே வாழ்க்கை என்று கருதினேன். சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆசைகள் வளர்ந்தபோது  அந்தச் சக்தியை வழங்க, உடம்பு அடிக்கடி மறுக்கிறது.

இரணியனுக்கும் பிரஹலாதனுடைய வயதிருந்தால் அவன் நரசிம்ம அவதாரத்துடனேயே சண்டை போட்டுப் பார்த்திருப்பான். அறிவும், உணர்ச்சியும் தாமதித்தே  வருகின்றன; ஆனால், காலம் முந்திக்கொண்டு வருகிறது. இருபது வருஷங்களுக்கு முன்பு குமரியாக இருந்தவள் இப்போது கிழவியாகக் காட்சியளிக்கிறாள்.  அப்போது அவளுக்காக ஏங்கிய ஆடவர்களும், இப்போது அவளிடம் ஆத்ம விசாரம்தான் பேச முடிகிறது. முன்பு எனக்கு வந்த வருமானம் இப்போது இல்லை.

அந்த வருமானத்தை நான் செலவழித்தபோது இதேபோல் வந்துகொண்டே இருக்கும் என்று கருதினேன். ஆனால், அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும்  உள்ள பேதம் இப்போதுதான் புரிகிறது. மலர் பூத்தவுடனேயே அது கூந்தலுக்குப் போகாவிட்டால், அது வாடியவுடனேயே காலடியில் விழத்தான் வேண்டியிருக்கும்.  ஈயம் பத்திரமாக இல்லாவிட்டால், அது பேரீச்சம்பழத்துக்குத்தான் விலையாக இருக்கும். குருக்ஷேத்திரம் எப்போது நடந்தது? பாண்டவர்கள் வனவாசம்  முடிந்தபிறகு.

அதற்கு முன்னாலேயே கண்ணன் அந்தப் போரைத் துவக்கி இருக்கலாம். ஆனால் அந்தக் காலம், யுத்த தர்மத்திற்கு நியாயமான காலமாக இருக்காது.  இரண்டாவது உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கிய காலம் அற்புதமான காலம். அவன் திட்டம் ஒழுங்காக இருந்திருக்குமானால் அவனே உலகத்தின் ராஜா!  அதுபோலவே, தாமதித்து அமெரிக்கா போரில் இறங்கின காலமும் அற்புதமான காலம். பங்களா தேசத்துக்குள் இந்தியா புகுந்த காலமே அருமையான காலம்.  அதற்கு முந்தி இருந்தால் உலகத்தின் வசை இருந்திருக்கும்; பிந்தி இருந்தால் இந்தியப் பொருளாதாரம் நாசமாகி இருக்கும்.

இளம் பருவத்தில் பைரன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான்; அவள் மறுத்துவிட்டாள். நாற்பது வயதுக்குமேல் அவளே அவனைத்தேடி வந்தாள் ஆசையோடு;  அவன் மறுத்துவிட்டான். சகல வசதிகளும் படைத்த ராவணன், சீதையின் சுயம்வரத்திற்கு முன்பே அவளை சிறையெடுத்திருந்தால் அவன்மீது பழி வந்திருக்காது.  ஒருவேளை சீதையே அவனை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும். அரசாங்க வேலையில் சேருவதற்குக் குறிப்பிட்ட ஒரு வயது நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த வயது  கடப்பதற்கு முன்னாலேயே அதில் சேர்ந்துவிட வேண்டும். காலம் போய்விட்டால், பிறகு கடைகளில்தான் வேலை பார்க்க வேண்டிவரும்.

சபரிமலை, ஜோதிகூட ஒரு குறிப்பிட்ட நாளில்தான் தெரிகிறது; தினசரி தெரிவதில்லை. காலத்தின் பெருமையை உணர்ந்தவன்தான் காரியத்திலும் பெருமை  கொள்ள முடியும். இன்று நான் செய்யும் புத்தகப் பணிகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருந்தேனானால், எதிர்கால மாணவன் சிலப்பதிகாரத்திற்கும்,  மணிமேகலைக்கும் என் உரையைத்தான் படிப்பான். ‘இப்போது திருக்குறள் உரையை மட்டுமாவது எழுதி முடித்துவிட முடியாதா?’ என்று தோன்றுகிறது.  ‘முடியும்’ என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே எனது சினிமாப் பாடல்களையும், இசைத்தட்டுக்களையும் தொகுத்து வைத்திருந்தால், இன்று இது ஒரு தனி ‘லைப்ரரி’ ஆகியிருக்கும்.  முறையாக 1944ல் இருந்தே நான் டைரி எழுதத் தொடங்கி இருந்தால், உலகத்தில் வேறு எவனுக்கும் இல்லாத வரலாறு எனக்கு இருப்பதை உலகம் கண்டு  கொண்டிருக்கும். வெள்ளம்போல வருமானம் வந்தபோது ஒரு தோட்டத்தையும் வாங்கி, ஒரு கிருஷ்ணன் கோயிலையும் கட்டி வைத்திருந்தால், இப்போது அந்த  ஆசையால் வெந்து சாக வேண்டியிருக்காது.

அப்போது குழந்தைகள் பெயரால் குறைந்தபட்ச டெபாசிட் போட்டிருந்தால்கூட, மரணத்தைப் பற்றிய நினைப்பு வரும்போது குழந்தைகளைப் பற்றிய கவலை வராது.  அப்போது வாங்கிய சொத்துகளை விற்காமல் இருந்திருந்தால்கூட இப்போது எதிர்காலத்தைப் பற்றிய கவலையிராது. அப்போது காலம் கனிவாக இருந்தது. பணம்  வந்தது; உடம்பு துடிதுடிப்பாக இருந்தது; ‘போனால் போகட்டும் போடா’ என்ற புத்தியும் இருந்தது.

இப்போது பழங்கணக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன. பாய்மரக் கப்பல், காற்றை நம்பிப் போய்க்கொண்டிருக்கிறது. புயல் காலத்தில் வானளாவி எழுந்த அலைகள்,  இப்போது அமைதியாக நாகநர்த்தன மாடுகின்றன. நம்முடைய நண்பர்களும் காலங்களே; பகைவர்களும் காலங்களே. காலங்களே தருகின்றன; அவையே  பறிக்கின்றன. காலங்களே சிரிக்கச் செய்கின்றன; அவையே அழவும் வைக்கின்றன.

‘ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்.’

- என்றான் வள்ளுவன்.காலம் பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம். பத்து வருடங்களுக்கு முன்னால் கேரளாவில் பரபரப்பான கொலை  ஒன்று நடந்தது. கேரளா முழுவதிலும் அதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. அடுத்த மாதமே அதைக் கதையாக எழுதிப் படமாக எடுத்துவிட்டார் ஒருவர். அவர்  லட்சாதிபதியாகி விட்டார். கைவண்டிக்காரர்கள் காய்கறி விற்கிறார்கள்; மாம்பழ சீஸன் வந்தால் மாம்பழம் விற்கிறார்கள். பனிக்காலத்தில் ஐஸ் கட்டியையும்,  காற்றடிக்கிற காலத்தில் மாவையும் வியாபாரம் பண்ணக்கூடாது.

‘முறைகோடி மன்னவன் செய்யின்; உறைகோடி
ஒவ்வாது வானம் பெயல்.’

- என்றான் வள்ளுவன். சித்திரை, வைகாசி மாதங்களில் ஏரி குளங்களைத் தூரெடுக்க வேண்டும். அப்படித் தூரெடுக்கத் தவறினால், ஐப்பசி - கார்த்திகையில்  பெய்கிற மழைத் தண்ணீர் குளங்களிலும், ஏரிகளிலும் தங்காது. வானம் பார்த்த பூமியில் பங்குனி மாதம் விதை விதைக்கின்றவன் விதைத்த விதையையும்  சேர்ந்தே இழப்பான். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள். ஆவணியில் தண்ணீர் இறைத்தால் போதும், புரட்டாசியில் இருந்து மழை உதவி செய்துவிடும்.

காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன. நல்ல பெண் கிடைக்கும்போது திருமணத்தை முடிக்காமல் விட்டுவிட்டால், பிறகு  எந்தப்பெண் கிடைத்தாலும் போதும் என்ற நிலைமை வந்துவிடும். காலத்தால் கிடைக்கும் நல்ல நண்பர்கள் மீண்டும் கிடைக்க மாட்டார்கள். ராவணன் தோற்ற  பிறகு விபீஷணன் ராமனைத் தேடி வந்திருந்தால், ராமனே அவனை ஒரு அடிமையாகத்தான் நடத்தி இருப்பான். காலம் பார்த்து சுக்ரீவன், ராமனைச் சேராமல்  இருந்திருந்தால், வாலி வதமும் நடந்திருக்காது; சுக்ரீவனுக்குப் பட்டமும் கிடைத்திருக்காது. கம்சன் போட்ட தவறான காலக்கணக்கினால்தான் கிருஷ்ணாவதாரம்  நமக்குக் கிடைத்தது.

காலத்தின் கருணையால்தான் அசுரக் கூட்டம் அழிந்தது. காலத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டால், தெருப்பிச்சைக்காரியும் மகாராணியாகலாம். சினிமா  உலகிலேயே நான் பார்க்கிறேன். காலத்தால் தவறான ஆட்களைச் சந்தித்து, கல்யாணம் என்ற பெயரில் வாழ்வு இழந்துபோன நடிகைகளும் உண்டு.  பெரும்பணக்காரர்களைப் பிடித்துக்கொண்டு உலகம் முழுவதும் விஜயம் செய்யும் நடிகைகளும் உண்டு.

அதிர்ஷ்டம் என்பது வேறொன்றுமில்லை; வருகின்ற காலத்தை ஒழுங்காகப் பிடித்துக் கொள்வதே. நீங்கள் அதிர்ஷ்டக்காரர்களா என்பதைச் சோதிக்கக் காலம்  அறிந்து காரியம் செய்தீர்களா, என்பதை எண்ணிப்பாருங்கள். பொங்கல் விழா எப்போதும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவை முறையே போகி,  பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல். இந்த நான்கையும் பற்றி பல ஆண்டுகளாகவே பலர் தவறான விளக்கங்கள் கூறி வருகிறார்கள்.

‘போகி நாள்’ என்பதைப் ‘போக்கி நாள்’ என்கிறார்கள். அதாவது வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை, பழையனவற்றைப் ‘போக்கும் நாள்’ என்கிறார்கள்.  எப்போதுமே சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக எந்தக் காலத்திலும் கொண்டாடியதில்லை. ‘போகி’ என்ற வார்த்தை தெளிவாக இருக்கிறது. விளைச்சல்  என்பது, ‘போகம்’ எனப்படும். போகத்துக்குரியவன் நிலச்சுவான்தார். அதனால்தான் அந்த விழா, நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும்.

போகத்துக்குரியவனின் விழா ‘போகி விழா.’ வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா, பொங்கல் விழா, அவனுக்குப் பயன்படும் மாடுகளுக்கான  விழா, ‘மாட்டுப் பொங்கல்’ விழா. அந்த உணவைப் பகிர்ந்துகொள்ளும் நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொதுமக்களின் விழா, ‘காணும் பொங்கல்’  விழா.

இதுதானே வரிசை - நிலத்துக்குரியவன், விவசாயி, காளை மாடு, பொதுமக்கள். நான்கு நாள் விழாவிலும் பொங்கல் என்பது எங்கள் பக்கங்களில் திறந்த  இடத்திலேயே வைக்கப்படும்; அதாவது சூரிய வெளிச்சம் படுகிற இடத்தில். அது வானத்துக்குச் செலுத்தும் நன்றி. ஆரோக்கியத்திற்காக எந்தெந்தப் பொருட்களை  உபயோகப்படுத்துகிறோமோ, அவை எல்லாம் பொங்கலிலே பயன்படுத்தப்படும். திருவிழாக்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும், அடிப்படைகளையும்,  புரிந்து கொள்ளாமல் பலர் விளக்கம் கூறி விடுகிறார்கள்.

‘கற்பைக் காப்பாற்றிக் கொள்வது’ என்றால், ‘கர்ப்பப் பையைக் காப்பாற்றிக் கொள்வது’  என்கிறார்கள் கர்ப்பமானவளெல்லாம் கற்பை இழந்து  விட்டவளா  என்ன? இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் தமிழ் இலக்கிய மரபு. எங்கள் பக்கங்களில் ‘ஆடிவேவு’ என்று ஒன்று எடுப்பார்கள். புதிதாகக் கல்யாணமான  தம்பதிகளை ஆடியிலே பிரித்து வைப்பார்கள். காரணம், ஆடியிலே சேர்ந்திருந்தால், சித்திரை வெயிலிலே குழந்தை பிறக்குமே என்பதற்காக. சுயமரியாதை  விளக்கக் கூட்டங்களிலே ஒரு விளக்கம் சொல்லுவார்கள்.

‘கலி’யாணம் என்றால், ‘சனியன் பிடித்தல்’ என்று அர்த்தமாம். ‘கலி’ என்றால் சனியனாம்; ‘ஆணவம்’ என்றால் ‘பிடித்த’லாம். கலி-கலி புருஷன்;  சரிதான். ‘ஆணவம்’ என்றால் ‘பிடித்தல்’ என்று இவர்களுக்கு யார் சொன்னது? அதோடு அந்த வார்த்தை கல்யாணமா? கலியாணமா? சில காரியங்களுக்கான  காரணங்களை, சிலர் நன்றாகச் சொல்லுகிறார்கள். ‘‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’’ என்பது பழமொழி.

அதற்கு வாரியார் சுவாமிகள், ‘‘சஷ்டியில் விரதம் இருந்தால், அகம் என்னும் பையில் அருள் சுரக்கும்’’ என்றார்கள். இது ஒரு அற்புதமான விளக்கம்.  ‘அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததாம்.’ என்பார்கள். ரொம்பப் படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததென்று சொல்லுவார்கள். அதுவல்ல  பொருள். ‘அறவடித்த முன்சோறு கழுநீர்ப் பானையில் விழுந்ததாம்’ என்பது பழமொழி. சோற்றை வடிக்கத் தொடங்கும்போது, முன்னால் நிற்கும் சோறு கழுநீர்ச்  சட்டியில்தான் விழும்.

இல்லையென்றால் மூஞ்சுறுக்கும், படிப்பிற்கும், கழுநீர்ப்பானைக்கும் என்ன சம்பந்தம்? ‘கடவுள்’ என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்லும்போது,  ‘எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன்’ என்று வராது. கட+உள்=கடவுள். ‘நீ பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட, உனக்குள்ளே கடவுள் இருப்பான்’  என்பது பொருளாகும். தமிழில், ‘பகுபதம் பகாபதம்’ என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப் பார்க்க வேண்டியவை; பிரித்துப் பார்க்கக் கூடாதவை.

கோ+இல்=கோயில். இது பகுபதம். ‘புரவி’ இது பகாபதம். இதை, புர்+ அவி என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. அறிஞர் அண்ணா அவர்களும், மற்றும் நாவலரும்  மறியல் செய்து கோர்ட்டில் நின்றபோது, அறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் கேட்டார்கள், ‘‘மறியல் என்ற வார்த்தையை மறு+இயல் என்று பிரித்துப் பொருள்  கொள்ளலாமா?’’ என்று. மறு+இயல், ‘மறுவியல்’ என்று வருமே தவிர, மறியல் என்று வராது. ஆக, தமிழ் இலக்கண மரபிலும், வடமொழி மரபிலும் லேசான  மாற்றங்களே கிராமங்களிலும் ஏற்பட்டிருந்தன.

அற்புதமான இலக்கியச் சொற்களெல்லாம், வழக்கு சொற்களாகப் பயன்படுகின்றன. இவற்றை உலகிற்குச் சொல்லும்போது, இளைஞனின் எதிர்காலத்தையும்  கருத்தில் கொள்ள வேண்டும். பெரியவர்கள் தவறாகச் சொல்லிவிட்டால், அவன் அப்படியே அதை நம்பித் தவறாகப் பொருள் கொண்டு விடுவான். என்  வாழ்க்கையில் ஒரு உதாரணம்: பதினெட்டுச் சித்தர்களில் தேரையார் என்பவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதில், ‘இரண்டடக்கோம்; ஒன்று விடோம்,’  என்று  ஒரு இடம் வருகிறது.

அதன் பொருள், ‘மலஜலம் வந்தால் அடக்க மாட்டோம்,  விந்தை வீணாக வெளிப்படுத்த மாட்டோம்’ என்பதாகும். இந்தப் பொருளே, எனக்கு இப்போதுதான்  புரிந்தது. நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, ஒரு ஆசிரியர் எனக்கு சொன்ன பொருள்: ‘இரண்டடக்கேல்’ என்றால் ‘‘மலஜலம்  வந்தால் அடக்காதே;’’  ‘ஒன்றை விடேல்’ என்றால் ‘‘சிறுநீரை அடிக்கடி விடாதே’’ என்பதாகும். ஒன்றுக்குப் போவதென்றால் சிறுநீர் கழிப்பதென்றும், இரண்டுக்குப் போவதென்றால்  மலம் போவதென்றும் முடிவு கட்டி, அவர் அப்படிச் சொல்லி விட்டார்.

விளைவு, அடிக்கடி ஒன்றுக்குப் போவதென்றால் நான் பயப்பட ஆரம்பித்தேன்; அடக்க ஆரம்பித்தேன். வாத்தியார் சொன்னதாயிற்றே! பயப்படாமல் இருக்க  முடியுமா? ஆகவே, அறிஞர்கள் எனப்படுவோர் வார்த்தைகளுக்குப் பொருள் சொல்லும்போது, அது எதிர்கால இளைஞனின் புத்தியைப் பாதித்து விடாமல்  கூறவேண்டும். தமிழிலே சில விஷயங்கள் இயற்கையாகவே மரபாகி இருக்கின்றன.

அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, அத்தை, அம்மான் எல்லாமே ‘அ’ கரத்தில் தொடங்குகின்றன. தம்பியும், தங்கையும் ‘த’கரத்தில் தொடங்குகின்றன.மாமன்,  மாமி, மைத்துனன், மைத்துனி, ‘ம’ கரத்தில் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் திட்டமிட்டுச் செய்தார்களா இவற்றை என்பது தெரியவில்லை. ஆனால், சொல்லும்  பொருளும் சுவையாக ஒட்டிவரும் மரபு தமிழில் அதிகம். வடமொழியில் இருந்து ஏராளமான வார்த்தைகளை தமிழ் பின்னாளில் எடுத்துக் கொண்டிருக்கிறது.  உருதுக்காரர்களும் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எந்த மொழி என்று தெரியாமலே பல  வார்த்தைகளும் வழங்கப்படுகின்றன. விவஸ்தை அவஸ்தை சபலம் வஜா லவலேசம் லஞ்சம் லாவண்யம் ஜீரணம் -  இப்படி ஏராளமான திசைச் சொற்கள், ஒன்றா இரண்டா? சரியான பொருள் தரும் சொற்களை அப்படியே கையாளுவதால் மயக்கம் நீங்குகிறது. உலகத்துக்கும்,  இறைவனுக்கும் சக்தியை வழங்குவதால், உமாதேவியார் ‘சக்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

‘ஸ்வம்’ என்றால், தானே எழுந்தது; ஆகவே ஆதிமூலம் ‘சிவம்’ ஆனது. ‘பருவத குமாரி’ பார்வதி ஆனாள். ‘ஸீதா ரஸ்தா’ என்றால் ஹிந்தியில் நேரான  சாலை. ‘ஸீதா’ என்றால் வடமொழியில் ‘நேரானவள்’ என்று பொருள். அவள் ஜனகனின் மகள்; ஆகவே, ‘ஜானகி.’ மிதிலைச் செல்வியாதலால்,  ‘மைதிலி.’ விவேகம் கொண்டவள் ஆதலால், ‘வைதேகி.’ ரகுவம்சத்தில் தோன்றியதால் ராமன்,  ‘ரகுபதி.’ ‘கோதண்டம்’ என்ற வில்லை ஏந்தியதால்,  ‘கோதண்டபாணி.’ தசரதனின் மகன் என்பதால், ‘தாசரதி.’ அதுபோலவே ‘மது’ என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணன், ‘மதுசூதனன்.’

கேசியைக் கொன்றதால் ‘கேசிநிகேதன்.’ அழகாய் இருப்பதால், ‘முருகன்.’ துன்பங்களை நாசப்படுத்துவதால்,  ‘விநாயகன்.’ இடையூறுகளைத் தீர்த்து  வைப்பதால், ‘விக்னேஸ்வரன்.’ யானை முகம் படைத்தால், ‘கஜானன்.’ கணங்களுக்குக் தலைவனானதால் ‘கணபதி’, ‘கணேசன்.’ நீர்வாழ் இனங்களில்  தூங்காதது, ‘மீன்’ ஒன்றுதான். தூங்காமலே இருப்பதால் மதுரையில் இருப்பவள், ‘மீனாட்சி.’‘காமம்’ என்றால் ‘விருப்பம்.’ மனித விருப்பதை ஆட்சி  செய்வதால் காஞ்சியில் இருப்பவள், ‘காமாட்சி.’ ‘தாமரை’யில் இருந்து உள்ளங்களை ஆள்வதால் இலக்குமிக்குப் பெயர், ‘பத்மாட்சி,’ ‘கமலாட்சி.’  வடதிசையில் இருந்தபடி அகில பாரதத்தையும் விசாலமாக ஆள்வதால், ‘விசாலாட்சி.’ - கிட்டத்தட்ட இந்து மதத்தின் சொற்பொருட்களுக்கு ஒரு அகராதியே  தயாரிக்கலாம்.

‘தேம்’ என்றாலும் தெய்வம், ‘தேவம்’  என்றாலும் தெய்வம். ‘தேங்காய்’ என்று சொல்லே தேம்+காய் தெய்வத்துக்கான காய்; இனிமையான காய் என்ற  இரண்டு பொருட்களைத் தரும். ஆக, காரணப் பெயர்கள், பொருட்பெயர்கள் என்று எடுத்துக்கொண்டு போனால், தமிழும், வடமொழியும் போட்டி போட்டுக்கொண்டு  மோதுகின்றன. மோசமானது ஒன்றை ‘கஸ்மாலம்’என்கிறோம் அல்லவா? இது ‘கச்மலம்’ என்ற வடமொழியின் திரிபு என்பதை காஞ்சிப் பெரியவாளின்  புத்தகத்தில் படித்தேன். சொற்களைக் கேட்கின்றபோது பொருட்களைச் சிந்தியுங்கள்! சொற்களுக்கும் பொருட்களுக்குமுள்ள தொடர்பைச் சிந்தியுங்கள்! அதுவும் மத  சம்பந்தமான சொற்களைக் கூர்ந்து கவனியுங்கள். கிட்டத்தட்ட பாதி விஷயங்கள் உங்களுக்கு இயற்கையாகவே புரிந்துவிடும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.
கவிஞர் கண்ணதாசன்

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்