SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிருகங்கள் வழிபட்ட தலங்கள்

2018-02-14@ 09:33:41

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், திருப்புலிவலமுடையார் அருள்கிறார். சாபத்தால் புலியாக உருமாறிய்  முனிவர் இங்கே பூஜித்திருக்கிறார்.

நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோயிலில், அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் அன்னை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.

திருச்சி, திருவெறும்பூரில் சிவசக்தி வடிவ ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

ஈ பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.

பாம்பு பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.

அணில், குரங்கு, காகம் மூன்றும் பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும், சாபவிமோசனம் பெற்ற இத்தலம், காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.

சாபம் காரணமாக மயில் உருவில் அம்பிகை பூஜை செய்த தலம், மயிலாடுதுறை. இங்கு ஈசனின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு த்ரிதளமாக உள்ளதும் நடராஜர் கௌரி தாண்டவம் ஆடுவதும் தனிச் சிறப்புகள்.

கழுகு பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.

சிலந்தி பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாக இது போற்றப்படுகிறது.

திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.

சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் ஈசனை வணங்கி பேறு பெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.

தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கரப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.

திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம் பெற்றது.

தஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.

காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.
கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.

ராமாயணத்தில் முக்கிய பங்கேற்ற ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில். இத்தல சாந்துருண்டையும் சித்தாமிர்த தீர்த்தமும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சாத்தப்பட்ட சந்தனமும் தீரா நோய்களைத் தீர்க்கும் அருமருந்துகள்.

தஞ்சாவூர், கபிஸ்தலத்தில் அருளும் கஜேந்திரவரதர், சாபத்தால் யானையாக மாறிய இந்திரத்யும்னனுக்கும், முதலையாக மாறிய கந்தர்வனுக்கும் சாப விமோசனம் அளித்தவர். இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்று.

திருச்சி, அன்பில் தலத்தில் அருளும் சுந்தரராஜப் பெருமாள், சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக முனிவருக்கு அருள் புரிந்து, சுயவுரு கிட்டச் செய்தவர். இத்தல தீர்த்தம் மண்டூக தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

தன்னை பூஜித்த சிட்டுக்குருவிக்கு மோட்சப் பதவி அளித்த ஈசன், சிட்டிலிங்கேஸ்வரராக வணங்கப்படுகிறார். இவர், தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் கோயில் கொண்டிருக்கிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

  • mexicoblast

    மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

  • 21-01-2019

    21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்