SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அப்பருக்கு அமுது அளித்த ஆதிசிவம்!

2018-02-14@ 09:32:51

திருப்பைஞ்சீலி

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்சீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இங்கு அருள்பாலிக்கிறார், ஞீலிவனேஸ்வரர். மொட்டை கோபுரத்துடன் ஆலயம் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நான்கு கால் மண்டபமும் அதன் பின்புறம் மூன்று நிலைகளை உடைய ராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளன. இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்சீலிதலம்வரை கூட்டிவந்து விட்டு, சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நதியில் அருள் பாலிக்கிறது. சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிராகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நதியைக் காணலாம். இச்சந்நதி ஒரு குடைவரைக் கோயிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன்அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சந்நதியில் திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவற்றை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் பணியைத் தொடருமாறு அருள்செய்தார்.

சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நதி உள்ளதாலும் இந்த ஆலயத்தில் நவகிரகங்களுக்கு எனத் தனி சந்நதி இல்லை. ராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும். இந்த படிகள் ராவணின் சபையில் ஒன்பது நவகிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். சுவாமி சந்நதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவகிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர். ராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்னி பகவான், ராமர், அர்ச்சுனன், வசிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

மூலவர் சந்நதியில் ரத்தின சபை இருக்கிறது. வசிஷ்ட முனிவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய ரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு. இக்கோயிலில் இரண்டு அம்மன் சந்நதிகள் இருக்கின்றன. இரு அம்மன்கள் பெயரும் விசாலாட்சிதான். பார்வதிதேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்வோருக்கு விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 830 முதல் பகல் 1230 மணி வரையிலும், மாலை 430 முதல் 530 மணிவரையிலும் நடத்தப்படுகிறது.

திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க எண்ணிய இறைவன், அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி, கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு பொதிச்சோற்றையும், குளத்து நீரையும் அளித்தார். அப்பரும் உண்டு களைப்பாறினார். பிறகு இருவரும் திருப்பைஞீலி நோக்கிச் செல்ல, ஆலயம் அருகே, அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.

ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலச்சிதம்பரம் முதலியன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள். மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றதாம்.) இரண்டாம் கோபுரவாயிலில் அப்பருக்குக் கட்டமுது தந்து அருள்புரிந்து மறைந்த இடமான  கோயில், நிலமட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது. கோயில் அமைப்பு பல்லவர் காலத்தியது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் ‘பைஞீலி மகாதேவர்’, ‘பைஞீலி உடையார்’, என்னும் பெயர்களால் இறைவன் குறிக்கப்படுகிறார். இத்தலத்திற்கு மதுரை மெய்ப்பாத புராணிகர் தலபுராணம் பாடியுள்ளார். இத்தலம் திருச்சி அருகிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்சீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

தொகுப்பு: ப. பரத்குமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்