SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணம் நடந்துவிடும்!

2018-02-13@ 15:59:31

முப்பத்தைந்து வயது ஆகும் என் மகனுக்கு இதுவரை திருமணம் கூடி வரவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துவிட்டோம். பல கோயில்களுக்கும் சென்று வந்தோம். பலனில்லை. இப்பிரச்சனைக்கு உரிய பரிகாரம் சொல்லி உதவிடுங்கள். பத்மாவதி, கோயமுத்தூர்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன்  செவ்வாய்  புதன் என மூன்று கிரகங்கள் இணைந்திருப்பதும், லக்னாதிபதியும், களத்ரகாரகனுமான சுக்கிரன் எட்டில் அமர்ந்திருப்பதும் திருமணத்தடையை உண்டாக்குகிறது. இவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனியும், குடும்ப ஸ்தானத்தில் குருவும் வக்கிர கதியில் சஞ்சரிப்பதும் சாதகமான நிலை அல்ல.

திருமணம் மட்டுமல்லாது, எந்த ஒரு நிகழ்வும் இவருடைய வாழ்வினில் மெதுவாகத்தான் நடந்து வருகிறது. இளம் வயதிலேயே கணவனை இழந்த விதவைப் பெண்ணாகப் பாருங்கள். வாழ்க்கையை இழந்த பெண்ணிற்கு வாழ்வளிப்பதன் மூலம் இவரது வாழ்வினில் வசந்தத்தைக் காண இயலும். உங்கள் பிள்ளையிடம் கடவுளின்பால் முழுநம்பிக்கையை வைக்கச் சொல்லுங்கள். தினமும் காலையில் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி வரச் சொல்லுங்கள். 01.02.2019ற்குப்பின் திருமணம் நடக்கும்.

“களத்ரம் ஸூதா பந்துவர்க: பசுர்வா நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா:
யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம் ஸ்மரந்தச்ச தேசந்து ஸர்வே குமார.”


முதுகலை 2ம் ஆண்டு படித்துவரும் நான் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறேன். இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுவயதில் காகம் ஒன்றின் மீது கல்லெறிந்ததில் அது அங்கேயே இறந்துவிட்டது. காகத்தைக் கொன்ற குற்ற உணர்வு இருந்துவருகிறது. என் பிரச்னைக்குத் தீர்வும் பரிகாரமும் கூறுங்கள். பாலகிருஷ்ணன், சென்னை.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. 29 வயது நடந்து வரும் நிலையில் இனிமேல் கிரிக்கெட்டில் பிரகாசிப்பது சாத்தியம்தானா என்பதை யோசித்துப் பாருங்கள். ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் விளையாட்டில் ஆர்வத்தைத் தூண்டினாலும், 5ம் இடத்து சனியும், 12ம் இடத்து புதனும் விளையாட்டுத் துறையில் ஒளிவீசுவதை தடை செய்வார்கள். விளையாட்டினை பொழுதுபோக்கிற்காக மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கையைப் பாருங்கள். ஒரு காகத்தின் மீது கல்லெறிந்ததை மட்டும் நினைத்துக் கொண்டிருக்காமல் ஆயிரம் காகத்திற்கு உணவளிக்க முயற்சியுங்கள்.

தினமும் காலையில் காகத்திற்கு பிஸ்கட் முதலான தின்பண்டத்தினைப் போட்டபின்பு நீங்கள் சிற்றுண்டி அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அரசுப் பணிக்காகக் காத்திருக்காமல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலான துறையில் உங்கள் பணியினைத் தேடுங்கள். 33வது வயதில் உங்களுக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படத் துவங்கினாலே உங்கள் இடுப்புவலி காணாமல் போய்விடும். செவ்வாய்க் கிழமை தோறும் கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள். நேரம் கிடைக்கும்போது பழனிமலைக்குச் சென்று முடிகாணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முன்னேற்றம் சாத்தியமாகும்.

தொழிலில் உண்டான நஷ்டத்தின் காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொல்லையினாலும் 2017 அக்டோபர் மாத வாக்கில் என் மகன் தன்னை மாய்த்துக் கொண்டான். உறவினர்கள் கைவிட்ட நிலையில் அவன் எடுத்த முடிவையே நானும் என் மனைவியும் எடுத்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிறோம். அவன் தவித்த தவிப்பு எங்கள் கண் முன்னே ஓடிக்கொண்டிருக்கிறது. அவன் மனம் அமைதி அடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாகராஜன், கோவை.

மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் உங்களின் உள்ளத் தவிப்பு நன்றாகப் புரிகிறது. இறைவன் நமக்கு அளித்த உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை நமக்குக் கிடையாது. நடந்த நிகழ்வுகளுக்கான காரணத்தைத் தேடாமல் நடக்கப்போவதைப் பற்றி யோசியுங்கள். இந்த உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் உங்கள் மகன் செய்த தவறை நீங்கள் செய்ய நினைக்காதீர்கள். ஆசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றிருக்கும் நீங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றி வாழ்கின்ற ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷன் சொல்லித் தாருங்கள்.

உலகத்திலேயே மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி அல்லவா? ஆதரவற்ற பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதன் மூலம் உங்கள் மனம் நிம்மதி பெறும். உங்கள் மகன் இறந்து ஆறுமாத காலம் கழித்து தகுந்த புரோஹிதரின் துணைகொண்டு நாராயணபலி எனும் சடங்கினைச் செய்வதன் மூலம் உங்கள் மகனின் ஆன்மா சாந்தியடையும். ராமகிருஷ்ணா மிஷன் முதலான ஆசிரமங்களில் இணைந்து கல்வித்தொண்டாற்ற முயற்சியுங்கள். ஏழைப்பிள்ளைகளின் சிரிப்பினில் இறைவனைக் காண்பது மட்டுமல்ல, உங்கள் பிள்ளையின் ஏக்கத்தினையும் போக்கமுடியும்.

முப்பத்தொன்பது வயதாகும் என் மகளுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. பல பரிகாரங்கள் செய்து விட்டோம். பலனில்லை. அவருக்கு திருமணம் நடக்குமா, நடக்காதா என்ற வேதனையில் உள்ளோம். நல்ல வழி காட்டுங்கள். குழந்தைவேல், திருத்துறைப்பூண்டி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடக்கிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சனிராகுவின் இணைவு தாமதத்தைத் தந்து கொண்டிருக்கிறது. உங்கள் மகளின் மனதில் இருந்துவரும் இனம்புரியாத பயமும், சந்தேக எண்ணங்களும் அவருடைய திருமணத்தடைக்கான முக்கியமான காரணிகள். மேலும், அவர் அரசுத்துறையில் உயர்அதிகாரியாக பணியாற்றி வருவதால், அதேபோன்று உயர்பதவியில் இருக்கும் நபர் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்ற உங்களுடைய எதிர்பார்ப்பும் அவருடைய திருமணத்தைத் தடை செய்து வருகிறது.

அவர் பணி செய்யும் துறையிலேயே, ஆனால் அவரை விட தகுதியில் குறைந்த பணியில் பணியாற்றி வரும் நபர் ஒருவரை மாலையிடும் வாய்ப்பு கூடி வருகிறது. யோசிக்காமல் தயக்கமேதுமின்றி அவரைக் கணவராக ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். உங்கள் ஊருக்கு மேற்கு திசையில் உள்ள ஊரைச் சேர்ந்த நபராக அமைவார். எட்டுக்குடி முருகன் கோயிலுக்குச் சென்று உங்கள் மகளின் பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணத்தை முருகன் கோயிலில் வைத்துக்கொள்வதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். வருகின்ற 10.02.2019க்குள் அவருடைய திருமணம் நடந்துவிடும்.

என் திருமண வாழ்வு எந்த வகையிலும் எனக்கு அமைதியைத் தரவில்லை. எனக்கு ‘இவரை நம்பி வாழவேண்டுமா’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனது குழப்பம் தீர வழிகாட்டுங்கள். ஒரு வாசகி, வீரகேரளம்.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தின்படி நீங்கள் உங்கள் கணவரை நம்பி இருக்கவில்லை என்பதும், அவர்தான் உங்களை நம்பி இருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. ஆயிரம் குறைகளைச் சொன்னாலும் அவர் உங்களை நம்பி வாழ்ந்து வரும் பட்சத்தில் அவரை விட்டு நீங்கள் விலகினால் அவரது நிலை என்னவாகும் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா? எப்படியோ போகட்டும் என்று உதறிவிட்டுச் செல்வதற்காகவா கடவுள் உங்கள் இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்துள்ளார் என்பதையும் எண்ணிப் பாருங்கள். தற்போதைய கிரஹ நிலையின்படி உங்கள் இருவருக்கும் ஏழரை சனி நடந்து வந்தாலும், தசாபுக்தி உங்களுக்கு சாதகமாக உள்ளது.

நீங்கள் செய்ய நினைக்கும் சுயதொழிலைத் துவங்குவதற்கு நேரம் கூடி வந்துள்ளது. தாமதிக்காமல் உங்கள் முயற்சியைத் துவக்குங்கள். உங்கள் உழைப்பினை மட்டும் நம்பி நீங்கள் செய்யும் தொழிலில் பெயரளவில் முதலாளியாக உட்காருவதற்காவது உங்கள் கணவர் பயன்படுவார். உங்கள் ஜாதக அமைப்பின்படி குழந்தை பாக்கியத்திற்கு இனிமேல் வாய்ப்பு இல்லை. உறவு முறை அல்லாத ஏதோ ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பது உங்கள் மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். மனதில் சந்தோஷம் உருவானாலே உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காண இயலும். மனம் சஞ்சலப்படுகின்ற நேரத்தில் மருதமலைக்குச் சென்று பாம்பாட்டி சித்தரின் சந்நதிக்கு எதிரில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். மனம் தெளிவடையும்.

பதினாறு வயதாகும் என் மகனுக்கு இன்னும் நடக்கவோ, பேச்சோ வரவில்லை. மருத்துவர்கள் இவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு என்கிறார்கள். இவன் எழுந்து நடக்க ஒரு வழி கூறுங்கள். முத்துகிருஷ்ணன், தேனி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சூரியன் உட்பட சந்திரன், புதன், சனி, ராகு என ஒரே இடத்தில் ஐந்து கோள்கள் இணைந்திருக்கின்றன. இவர்கள் இணைந்திருக்கின்ற கோணத்தினை ஆராயும்போது உங்கள் மகன் பூரண ஆரோக்கியம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. மேலும் சூரிய கிரஹண காலத்தை ஒட்டி இவர் பிறந்திருப்பது இவருடைய ஜாதகத்தைக் காணும்போது தெளிவாகிறது. இறைநம்பிக்கையும், இவரது அண்ணனின் ஆதரவும் இவருடைய வாழ்விற்கான ஆதாரங்கள். 22வது வயது முதல் துவங்க உள்ள குருதசை காலத்தில் இவருடைய உடல்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண இயலும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் தரும் மருந்துகளை இவருக்கு தொடர்ந்து அளித்து வாருங்கள். தினந்தோறும் காலை வேளையில் ஒரு மணி நேரத்திற்கு சூரிய ஒளி படும் இடத்தில் இவரை வைத்திருப்பது இவரது உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று இவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். அங்கு தரப்படுகின்ற விபூதி பிரசாதத்தைக் கொண்டு வந்து “மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் தீரு ஆலவாயான் திருநீறே”என்ற ஞானசம்பந்தரின் பதிகத்தைச் சொல்லி தினமும் இரவினில் இவரது உடம்பினில் பூசி வாருங்கள். நலம் பெற வேண்டுவோம்.

எழுபத்தெட்டு வயதாகும் எனக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டேன். எனது மனைவியும் இறந்துவிட்டார். என் மகள்கள் என்னை கவனிப்பது இல்லை. தற்போது உறவினர் வீட்டில் மாதாமாதம் பணம் கொடுத்து சாப்பிட்டு வருகிறேன். சொந்த பிள்ளை போன்று கவனித்து வருகிறார்கள். எனது மனநிம்மதிக்கு வழி காட்டுங்கள். பாலகிருஷ்ணன்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஆயுட்காலம் பற்றிக் கேட்டுள்ளீர்கள். ஆயுளை நிர்ணயிக்கும் தகுதி ஆண்டவனுக்கு மட்டுமே உண்டு. ஜோதிடவியல் ரீதியாக 81வது வயதில் உடல்நிலையில் சற்று கூடுதல் பிரச்சினையைக் காண்பீர்கள். அந்த நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சொத்துக்களை உங்கள் மகள்களுக்கு கொடுக்க விரும்பவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்கள் உங்களை கவனிக்கவில்லை என்றாலும் நீங்கள் பெற்ற பிள்ளைகள் என்பதால் அவர்களிடம் குற்றம் காண்பது தவறு. அவர்களிடமிருந்து பிரதிபலனை எதிர்பாராது நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

உங்கள் ஜாதகத்தின்படி ஜென்ம லக்னத்தில் குருசந்திரன்சனி ஆகியோரின் இணைவு பூர்வஜென்ம பாவமும், புண்ணியமும் சரிசம அளவில் இணைந்துள்ளதைக் காட்டுகிறது. அதனை சரிசெய்யும் வாய்ப்பு இந்த ஜென்மத்தில் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் சொத்துக்களை நான்கு பாகமாக சரிசம அளவில் பிரித்து உயில் எழுதி முறையாகப் பதிவு செய்துவிடுங்கள். முதல் இரண்டு பாகத்தை உங்கள் இரு மகள்களுக்கு என்று பிரித்துவிடுங்கள். மூன்றாவது பாகத்தை ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிட்டு உங்கள் ஆயுட்காலம் வரை அங்கேயே சென்று தங்கி விடுங்கள். அந்த ஆசிரமத்தில் இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உடல் உதவியைச் செய்வதன் மூலம் முழுமையான மனதிருப்தியைக் காண்பீர்கள்.

நான்காவது பாகத்தை இத்தனை நாள் வரை சொந்தமகனாக நினைத்து உங்களுக்கு ஆதரவு அளித்து வரும் நபரின் பெயரில் எழுதி வைத்து, உங்களுக்கான அந்திம கிரியைகளைச் செய்யும் அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள். என்னதான் மாதாமாதம் பணம் வாங்கிக்கொண்டு சாப்பாடு போட்டிருந்தாலும், பணம் ஒன்று மட்டும் மனநிம்மதியைத் தந்துவிடாது என்பதை இத்தனை வருட வாழ்வினில் உணர்ந்திருப்பீர்கள். இதனை அவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கியாக எண்ணிச் செய்யுங்கள். பூர்வஜென்மத்தில் விட்ட குறை நீங்குவதோடு உங்கள் மனமும் தெளிவடையும். நிம்மதி காண வாழ்த்துக்கள்.

எனது மகன் கணிதப் பாடத்தை முதன்மையாகக் கொண்டு பட்டம் பெற்று பி.எட்., முடித்து நான்கு வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. நாங்கள் வயோதிகத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் திருமணத்தை முடித்து எங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்ற கவலையில் உள்ளோம். வேலை கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். முத்துலட்சுமி முருகேசன், திருப்புவனம்.


ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ராகுவும், குருவும் இணைந்து ஆறில் அமர்ந்திருப்பது பலவீனமான நிலை என்றாலும், ஜென்ம லக்னத்தில் சூரியனும், புதனும் இணைந்திருப்பது பலமான அம்சம் ஆகும். தொழிலைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சனி ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பது கூடுதல் பலத்தினைத் தருகிறது. பி.எட்., படிப்பிற்கேற்றவாறு ஆசிரியர் உத்யோகம்தான் வேண்டும் என்று காத்திருக்காமல், அரசுத்துறை சார்ந்த அனைத்துத் தேர்வுகளையும் எழுதி வரச் சொல்லுங்கள்.

ரெவின்யூ துறையில் நிரந்தர உத்யோகம் பார்ப்பதற்கான வாய்ப்பு அவரது ஜாதகத்தில் பிரகாசமாய் உள்ளது. அவர் கற்றகல்வி என்றுமே வீணாகாது என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லி தற்போதைய சூழலில் பிற அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கு முயற்சிப்பது நல்லது என்பதை அவருக்குப் புரிய வையுங்கள். வருகின்ற 23.04.2018ற்குப் பின் நல்ல நேரம் துவங்குவதால் வெகு விரைவில் நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும். வேலை கிடைத்தவுடன் குன்றக்குடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். வேலவனின் திருவருளால் வேலை கிடைத்து விடும்.

என் மகனுக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. மருத்துவ சிகிச்சை எடுத்தும் இதுவரை எந்தப் பலனும் இல்லை. திருக்கருகாவூர், திருப்புல்லானி போன்ற ஸ்தலங்களுக்கும், சபரிமலைக்கும் சென்று வந்துள்ளான். குழந்தை பாக்கியம் கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். சாந்தாராஜ், மதுரை.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்திலும், ரேவதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகத்திலும் தத்துபுத்திரயோகம் என்பது இணைந்துள்ளது. எனினும் இவர்கள் இருவரின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானஅதிபதிகள் மீது புத்திரக்காரகன் குருவின் பார்வை விழுவதால் இவர்களுக்கு என்று சொந்தமாகப் பிள்ளை பிறக்கும் பாக்கியமும் உண்டு. தத்துபுத்திர யோகம் பலமாக உள்ளதால் முதலில் உங்கள் உறவினர் வகையில் இல்லாமல் வெளியில் இருந்து, பிறந்து சில நாட்களே ஆன ஒரு ஆதரவற்ற ஆண் குழந்தையை முறையாக தத்தெடுத்து வளர்த்து வரச் சொல்லுங்கள்.

அந்தக் குழந்தையின் ஸ்பரிசம் உங்கள் மருமகளின் உடலில் உள்ள கர்ப்பப்பையினைத் தூண்டி வலிமை பெறச் செய்யும். இந்தக் குழந்தை வீட்டிற்குள் விளையாடத் துவங்கும் நேரம் இவர்களுக்கு என்று தனியாக மற்றொரு குழந்தையும் பிறக்கும். தத்து எடுத்த பிள்ளையையும் சொந்தப் பிள்ளையாகவே பாவித்து வளர்த்து வரச் சொல்லுங்கள். அழகர் கோயிலுக்குச் சென்று சுந்தரராஜப் பெருமாளை சேவிப்பதுடன், மேலே உள்ள பழமுதிர்சோலைக்குச் சென்று கந்தக் கடவுளையும் வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். தத்தெடுக்க உள்ள பிள்ளைக்கு ஆறுமுகனின் பெயரையே சூட்டி வளர்ப்பதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். முருகனின் அருளால் உங்கள் வம்சம் முழுமை பெறும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்