SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும்!

2018-02-13@ 15:54:55

எனது மகனின் திருமணம் 2010ம் ஆண்டு நடந்து அவன் மணவாழ்வு நன்றாக அமையவில்லை. நீதிமன்றம் மூலமாக விவாகரத்து பெற்றுவிட்டோம். எனக்கு  வயது 62 ஆகிறது. என் மனைவி 2012ல் காலமாகி விட்டார். என் மகனுக்கு மறுமணம் எப்போது நடைபெறும்? அதைக்காண நான் உயிருடன் இருப்பேனா?  - சந்திரசேகரன், பெருமாள்பட்டு.

தாயை இறைவனிடத்திலும், தாரத்தினை வழக்கு மன்றத்திலும் இழந்து தனிமையில் தவிக்கும் மகனை நினைத்து வருந்திக் கடிதம் எழுதியுள்ளீர்கள். ஆயில்யம்  நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் மணவாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குருபகவான்,  சுக்கிரன் மற்றும் சனியுடன் இணைந்து நான்கில் அமர்ந்துள்ளார். ஏழாம் வீடு சுத்தமாக இருந்தாலும் திருமணம் நடந்த 2010ம் ஆண்டில் சுக்கிர தசையில் சனி புக்தி  காலமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் சரியில்லாததாலும், அந்தப் பெண்ணின் ஜாதக அமைப்பு சரியில்லாததாலும் முதல் திருமணம் விவாகரத்தில்  முடிந்திருக்கிறது.

இவரது ஜாதகத்தில் கால சர்ப்பதோஷமும் நிம்மதியைக் குலைத்திருக்கிறது. இவரது ஜாதகத்தில் ஏழாம் வீடு சுத்தமாக உள்ளதால் கவலைப்பட வேண்டாம்.  தற்போது 14.09.2018 வரை சூரிய தசையில் ராகு புக்தி நடைபெறுவதால் அதுவரை பொறுத்திருங்கள். அதன்பிறகு உங்கள் பிள்ளைக்கு மறுமணம் செய்து வைக்க  முடியும். 14.09.2018 முதல் சூரிய தசையில் குருபுக்தி துவங்குகிறது. மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் என்பதால்  அவருடைய புக்தி நடைபெறும் காலத்தில் நடைபெறஉள்ள திருமணம், உங்கள் மகனுக்கு நல்ல குடும்ப வாழ்வினை ஏற்படுத்தித்தரும்.

வியாழக்கிழமை நாளில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்வதோடு,  திருமணத்தை அந்தப் பெருமாள் சந்நதியிலேயே நடத்துவதாக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். அவருடைய திருமணத்தைக் காண்பது மட்டுமல்ல,  பேரப்பிள்ளையைக் கொஞ்சும் பாக்கியமும் உங்களுக்கு உள்ளது. கவலையை விடுத்து கடவுளை நம்புங்கள். உங்கள் கனவுகள் நனவாகும்.

எனக்கு அடிக்கடி நெஞ்சுவலி, இறுக்கம் உண்டாகிறது. அஷ்டமத்துச் சனியினால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? என் சகோதரர் என் பாகத்தை எழுதி  வாங்கிக்கொண்டு பணம்தர மறுக்கிறார். சொத்து முழுப் பணம் எப்போது கிடைக்கும்? - ஒரு வாசகர், பண்ருட்டி

சொத்திற்கான முழு பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் எழுதிக்கொடுத்தது உங்கள் தவறுதானே? தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறுதான்  என்பது தெரியாதா உங்களுக்கு? உங்கள் ஜாதகத்தில் சகோதர ஸ்தானத்தைக் குறிக்கும் மூன்றாம் வீட்டில் சகோதரகாரகன் செவ்வாயுடன் கேது இணைந்திருப்பது  பலவீனமான நிலை ஆகும். மேலும் உங்கள் லக்னாதிபதி செவ்வாய், சகோதர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், நீங்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் எதிர்காலத்தில்  உங்கள் சகோதரரைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கும். மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, தற்போது புதன்  தசையில் கேது புக்தி நடந்துகொண்டிருக்கிறது.

08.08.2018ற்குப் பின் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையில் கொஞ்சம் வந்துசேரும். மொத்தமாக எதிர்பார்க்க இயலாது. பணம் வராவிட்டாலும் அதைப்பற்றி நீங்கள்  கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. அஷ்டமத்துச் சனி பற்றி நினைத்துக் கவலைப்படாமல் கடமையைச் செய்யுங்கள். கடமையைச் சரிவர செய்பவர்களை  சனி பகவான் எப்போதும் எதுவும் செய்ததில்லை. ஆயுளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்துவாருங்கள். அமாவாசை தோறும் பண்ருட்டியை அடுத்த  திருவதிகை திருத்தலத்தில் அருள்பாலிக்கும் சரநாராயணப்பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்து வாருங்கள். பெருமாளின் திருவருளால் உங்கள்  பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும்.

எனது கணவருக்கு ஒரு வருடமாக சரியாக வேலை அமையவில்லை. நல்ல வேலை கிடைக்குமா அல்லது ஏதாவது தொழில் தொடங்கலாமா? உத்யோகம்  நிரந்தரமாக அமைய ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? - சரஸ்வதி, பெங்களூரு.

உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசை நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் பிறந்துள்ள அவர் தற்போது ஏழரைநாட்டுச் சனி  காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். கும்ப லக்னத்தில் பிறந்துள்ள அவருடைய ஜாதகத்தின்படி ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய், ஒன்பதில் கேதுவின்  இணைவினைப் பெற்றுள்ளதால் சுயதொழில் செய்யும் அம்சம் அவருக்கு துணைபுரியவில்லை. தன, லாப ஸ்தான அதிபதி குரு ஆறில் அமர்ந்திருப்பதும்  சுயதொழிலில் லாபத்தினைத் தராது. அவருடைய ஜாதகப்படி அவர் சொந்தமாக தொழில் தொடங்குவதை விட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணி செய்வதுதான்  நல்லது.

இரும்பு சம்பந்தப்பட்ட துறையிலேயே அவர் பணி ஆற்ற இயலும். கௌரவம் பார்க்காமல் ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனத்திலேயே முயற்சிக்கச்  சொல்லுங்கள். இவருடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் நிச்சயமாகக் கிடைக்கும். தை அமாவாசை நாளில் பிறந்துள்ள இவரது ஜாதகத்தின்படி ஏற்றத்தாழ்வுகள்  அவ்வப்போது உண்டாவது சகஜமே. ஒருநேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்; மற்றொரு நேரத்தில் ஏதுமின்றி வெறுமனே அமர்ந்திருக்க நேரிடும். இந்த  மாறுபாடான நிலை அவ்வப்போது உருவாகிக்கொண்டுதான் இருக்கும்.

இதனைப் புரிந்து கொண்டு நல்ல நேரத்தில் சேமிக்கவும், நேரம் சரியாக இல்லாதபோது இருக்கும் சேமிப்பினைக் கொண்டு வாழ்க்கையை நடத்தவும்  பழகிக்கொள்வது நல்லது. அமாவாசையில் பிறந்த உங்கள் கணவரை மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு  இயன்ற அன்னதானத்தினைச் செய்துவரச் சொல்லுங்கள். முதியவர்களின் ஆசிர்வாதம் அவரை நன்றாக வாழவைக்கும்.

என் மருமகன் நெடுநாட்களாக நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார். உடல்நிலை எப்போது சீரடையும்? அடுத்து வரும் தசாபுக்திகள் மற்றும் ஆயுர்பாவம் எவ்வாறு  உள்ளது? - சாவித்திரி, சென்னை-41.

நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலாது என்பதை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். பூரம்  நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. குரு நீசம்  பெற்றிருந்தாலும், ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பயம் தேவையில்லை. அரசு உத்யோகத்தில் அவர் இருந்தால் தற்போதைய கிரஹ நிலையில் உயர்ந்த  பதவியினை அவர் வகிப்பார். எதிர்பார்க்கும் பதவி உயர்வு வந்து சேர்வதோடு அந்தஸ்து, மதிப்பு, மரியாதை அனைத்தும் உயர்வு பெறும். மேலும் சுக்கிரன் தன  ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தற்போது நடைபெற்று வரும் சுக்கிரபுக்தி காலத்தில் புதிய சொத்துகளும் வந்து சேரும்.

63வது வயதுவரை குருதசை நீடிப்பதால் அதுவரை எந்தக் கவலையும் இல்லை. 64வது வயதில் சனி தசை துவங்க உள்ளதாலும், ஆயுள்காரகன் சனி எட்டாம்  வீடான ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும் அந்த வயதில் அவர் பல உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடும். அதுவரை எந்தக் கவலையுமின்றி சர்க்கரை  அளவை மட்டும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருந்தால் போதுமானது. வீட்டில் அம்பாள் பூஜையை தினசரி மேற்கொள்ளச் சொல்லுங்கள். லலிதா  ஸஹஸ்ரநாமம், தேவி கட்கமாலா, மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம் போன்றவற்றை படிப்பதும், கேட்பதும் நல்லது. அம்பாளிள் அருளால் அவரது ஆரோக்யம்  வலுப்பெறும்.

பணம் கொடுக்கல்-வாங்கலில் கண்ணியமாக நடக்க முடியவில்லை. வட்டிக்கு வாங்கிய கடன்களை எப்போது கொடுப்பேன், அடமானம் வைத்துள்ள நகைகளை  எப்படி மீட்பேன்? கடன் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? எந்த கோயிலுக்குச் சென்றால் விடிவு ஏற்படும்?  - வாசன், வந்தவாசி.

‘பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’ என்று ஒவ்வொருவரின் ஜாதகத்தை கணிக்கும்போது ஜோதிடர் ஒரு ஸ்லோகத்தை எழுதியிருப்பார்.  உங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்தவரை அது நூற்றுக்குநூறு பொருந்தியுள்ளது. பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியத்தின் பலன்களை அனுபவிக்கும்  விதமாகத்தான் இந்த ஜென்மம் அமைந்துள்ளது. நீங்கள் பிறந்த தினம் வைகாசி மாத அமாவாசை நாள் மட்டுமல்ல, சூரிய கிரஹணம் உண்டான நாளில்  பிறந்திருக்கிறீர்கள். அதிர்ஷ்டவசமாக அந்த நாளில் நம் தேசத்தில் கிரஹணம் தெரியவில்லை. தெய்வாதீனமாக தப்பிப் பிழைத்திருக்கிறீர்கள். எனினும் கிரஹண  காலத்திற்கு உரிய கிரஹ அமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருப்பதால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

துலாம் லக்னம், ரிஷப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் கஷ்டம் தரும் எட்டாம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன், கேது ஆகிய நான்கு கிரஹங்கள்  இணைவினைப் பெற்றிருக்கின்றன. லக்னாதிபதியும், தனகாரகனும் ஆன சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் வக்கிரம் பெற்றுள்ளார். சுக ஸ்தான அதிபதி சனியும்  வக்கிரம் பெற்றுள்ளார். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு உங்களைக் காப்பாற்றி வருகிறார். ராகுவின் துணையோடு திறமையாகவும், முன்னெச்சரிக்கையுடனும்  செயல்பட்டு எந்த சிக்கலிலிருந்தும் எளிதாக வெளியேறிவிடுவீர்கள். உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசை நடந்து வருகிறது. 2020ம் ஆண்டு வாக்கில் சனி  தசை முடிவடைந்து புதன் தசை துவங்கும்.

அந்த புதன் தசை காலத்திலும் பெரிதாக மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது. உங்கள் பிள்ளை தலையெடுத்த பின்புதான் உங்கள் குடும்பச் சூழலில்  முன்னேற்றத்தைக் காண இயலும். கடன் பிரச்னைகளிலிருந்து உங்களால் முற்றிலுமாக வெளியேற இயலாது. அப்படி வெளியேற நினைத்தால் எட்டாம்  இடமாகிய ஆயுள் ஸ்தானம் தனது பணியினைச் செய்யத் துவங்கும். கடனைக் கண்டு அஞ்சாது, தொடர்ந்து வழக்கம்போல் உங்கள் பணியில் ஈடுபடுங்கள்.  தைரியம் ஒன்றே உங்களை வாழவைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். செவ்வாய்தோறும் ராகு கால வேளையில் துர்க்கை சந்நதியில் விளக்கேற்றி  வழிபட்டு வாருங்கள்.

என் தம்பிக்குக் குழந்தைகள் கிடையாது. இவனுக்குக் கடன் சுமை அதிகமாக உள்ளது. மேலும் குடிப்பழக்கமும் உள்ளது. கடன் தொல்லையில் இருந்தும்,  குடிப்பழக்கத்தில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காட்டவும். இவரது எதிர்காலம் எப்படி இருக்கும்? - எஸ். களஞ்சியம், ராமநாதபுரம்.


குடிப்பழக்கத்தை நிறுத்தினாலேயே கடன்சுமை குறைந்துவிடுமே! பங்குனி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்  தம்பியின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே ராகு தனித்து அமர்ந்து தீய பழக்கத்திற்கு அவரை அடிமையாக்கி உள்ளார். எனினும் அவருடைய ஜாதகத்தில் சுக  ஸ்தானமாகிய நான்காம் வீட்டில் செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் இணைந்திருப்பதால் சுகமான வாழ்விற்கு அவருக்கு எந்நாளும் குறைவில்லை.

அவருடைய கடன்சுமை குறித்து நீங்கள் கவலைப்படும் அளவிற்குக்கூட உங்கள் தம்பி கவலைப்படுவது போல் தெரியவில்லை. தற்போது நடைபெறும் சந்திர  தசை காலத்தில் அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடல்நலனைக் கருத்தில் கொண்டாவது குடிப்பழக்கத்தினை நிறுத்தச்சொல்லி  அறிவுறுத்துங்கள். 08.06.2019ற்குப் பின்னர்தான் இவரது வாழ்வியலில் முன்னேற்றத்தைக் காண இயலும். வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புதனும், தைரிய  ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சூரியனும் இவருக்கு பிரச்னைகளை சமாளிக்கும் திறனை அளிப்பார்கள்.

இவரது கடன் சுமையை பெரிதாக எண்ணி நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனைச் சமாளிக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு. அவருடைய  உடல்நிலையை மட்டும் கருத்தில்கொண்டு அவரை நல்வழிப்படுத்த முயற்சியுங்கள். ராமேஸ்வரம் அழைத்துச் சென்று அக்னிதீர்த்தத்திலும், ஆலய  வளாகத்திற்குள் அமைந்திருக்கும் 21 தீர்த்தங்களிலும் இவரை ஸ்நானம் செய்ய வைத்து ராமநாத ஸ்வாமியை தரிசிக்க வையுங்கள். தனுஷ்கோடி முனைக்குச்  சென்று இவர் ஸ்நானம் செய்வதும் நல்லது. ஞானம் மட்டுமே இவரை நல்வழிப்படுத்தும்.

- சுபஸ்ரீ சங்கரன்


தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும்  முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்