SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்!

2018-02-13@ 15:33:41

மன இருள் அகற்றும் ஞானஒளி- 34

மார்கழி மாதம் அதிகாலை பனிக்காற்று சில்லென்று நம் உடலில் பட்டுச் செல்கிறது. ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் நம்மை, நம் மனதை தெய்வத்தின் சந்நிதானத்திற்கே அழைத்துச் செல்கிறது. அடடா... இருவரின் தமிழும், அதில் ததும்பும் தெய்வீக ரசமும் சொல்லில் அடங்கக்கூடியதா என்ன? தமிழுக்கு தங்கப் புதையலைத்தானே இருவரும் தந்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் கோலாரில் முடிந்த வரை தங்கம் வெட்டியெடுத்தாகி விட்டது. நெய்வேலியில் முடிந்த வரை நிலக்கரியை எடுத்து விட்டோம். ஆனால் ஆண்டாள் படைத்த திருப்பாவை, நாச்சியார் திருமொழி அதேபோல் மாணிக்கவாசகர் படைத்த திருவாசகமும், திருவெம்பாவை என்னும் தங்கச்சுரங்கத்தில் பக்தித் தமிழை காலம் முழுவதும் வெட்டி எடுத்துக் கொண்டே இருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக, கற்பக விருட்சமாக, காமதேனுவாக வளர்ந்து கொண்டே வருகிறது.

என்ன தமிழ்! அடடா!! படிக்கப் படிக்க வியப்பால் விழித்திரைகள் விரிவடைந்து கொண்டே போகிறது. உதாரணத்திற்கு ஒரு பாசுரத்தைப் பார்ப்போம். மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். பாசுரத்தில் கையாண்டிருக்கிற அழகிய தமிழ்ச் சொற்களின் அற்புதத்தைப் பாருங்கள் மாயனை - மாயன் என்றால் யார் எனக் கேட்டுவிட்டு ஆண்டாள் நாச்சியாரே பதில் தருகிறார். இணையற்ற தனது மாயையால் சகலத்தையும் மறைக்க வல்லவன் யார் அவன்?

வேறு யார்? சாட்சாத் பரம்பெருளான கிருஷ்ண பரமாத்மாதான். அவன் வடமதுரை என்கிற ஊரின் மண்ணின் மைந்தன், அவனைப் போற்றி புகழ்ந்தால் என்ன கிடைக்குமாம்?

‘‘வாயினாற் பாடி மனதினாற் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!

வாயினால் அவனுடைய திருநாமங்களை உரக்கச் சொல்ல வேண்டுமாம். அவன் நாமங்களை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நம் மனது அவனை, அதாவது, பரம்பொருளான கிருஷ்ண பகவானை நினைக்க வேண்டுமாம். இப்படிச் செய்தால் நம்முடைய பழைய துன்பங்கள், துயரங்கள் அதாவது, வினைப்பாடுகள் நம்மை விட்டு ஓடிவிடுமாம். பழைய பாவச்செயல்களும் அதனால் உண்டான துயர்களும் தற்போது நம்மை அறியாமல் செய்கிற துன்பங்களும் பகவான் நாமா என்கிற உயர்ந்த ஜோதி ஸ்வரூபத்தில் அந்தத் தீப ஒளியில் கரைந்து விடும். காற்றில் கற்பூரம் கரைவது போல் நம் பாவங்கள் நம்மை விட்டு ஓடி விடும்.

பகவானின் நாம சங்கீர்த்தனத்திற்கு அத்தனை ஏற்றம் என்கிறாள் ஆண்டாள்! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பெண் எப்படிப்பட்ட தேன் தமிழ் பாசுரத்தை படைத்திருக்கிறாள் பாருங்கள்! ஓர் இளம் பெண்ணுக்குள் இத்தனை ஞானமா? என நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆண்டாள் படைத்த திருப்பாவை முப்பது பாசுரங்களும் சரணாகதி மற்றும் தத்துவத்தின் உச்சத்தைத் தொட்டவை! அவள் காட்டிய உயர்ந்த வழி இது! அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிற நம்மை போன்றவர்களுக்கு சரணாகதியைத் தவிர வேறு உபாயம் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறாள் ஆண்டாள்!

நம்மை பகவான் பக்கம் திருப்பிட திருப்பாவையை விட ஆகச்சிறந்தது வேறு என்ன இருக்க முடியும்? அதனால் தான் கண்ணதாசன் சொன்னார்.

‘‘ஆண்டாள் ஆண்டவனை ஆண்டாள் தமிழையும் ஆண்டாள்
நம்மையும் அவள் ஆளுமையால் ஆள்கிறாள்’’

எத்துனை சத்தியமான வார்த்தை இது. ஆண்டாள்தாள் பணிந்து விட்டு மாணிக்கவாசகருக்கு செல்வோம்! திருவாசகத்திற்கு உருகாதார் இந்தப் பூவுலகில் யார் இருக்க முடியும். தேன் தமிழ் திருவாசகம் அதில் ஒரு பகுதிதான் திருவெம்பாவை. ஈசனை நாயகனாக நாயகியாக நம் முன் படம்பிடித்துக் காட்டுகிறார். மனித வாழ்க்கைக்கு உலகறிவு மட்டும் போதாது, இறையறிவும் இன்றியமையாதது. திருப்பாவையும் திருவெம்பாவையும் தமிழ் மணம் கமழும் இனிய பிரபந்தங்கள் மட்டும் அல்ல, கனிச் சுவை சொட்டும் பக்திப் பனுவல்கள்! எனவேதான் நினைக்க நினைக்க நம் நெஞ்சே தித்திக்கும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன! திருவெம்பாவையில் ஓர் அற்புதமான பாசுரத்தைப் பார்ப்போம்.

‘‘முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்’’

தமிழில் விளையாடி இருக்கிறார் மாணிக்கவாசகப் பெருந்தகை! சிவபெருமான் எப்படி இருப்பாராம்? அத்தன், ஆனந்தன், அமுதம் போன்று இருப்பாராம். மனத்தூய்மையும் அதாவது, உடலும் உள்ளமும், பரிசுத்தமாக உள்ளவர்கள் சிவனை சதா தியானித்துக் கொண்டே இருப்பார்களாம். சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை என்கிறார்.

பாசுரத்தில் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? ‘‘முத்துப் பற்கள் காட்டி முறுவலிக்கும் பெண்ணே! முன்பு சிவபெருமானை நாவினிக்க வாயாரப் பலவாறு புகழ்ந்து பேசிய நீ, இன்று வாயிற் கதவைக் கூட திறக்காமல் தூங்குகிறாயே!’’ என்கிறார்கள் அந்தத் தோழிகள்! அதற்கு இந்தத் தோழி அதாவது, உள்ளே படுத்து உறங்கும் தோழி பேசுவதுபோல் அருமையாக காட்சிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.

‘‘நீங்கள் சிவபக்தியில் பற்றும் பழக்கமும் உடையவர்கள்! நானோ புதிது. என்னுடைய சிறுமையைப் போக்கி எனக்கு நல்வழி காட்டினால் ஆகாதா? என்னிடம் உங்களுக்கு அன்பு என்பதெல்லாம் வெறும் ஏமாற்றுதானா?’’ என்று கேட்கிறாள். அதற்கு மற்ற தோழிகள் ‘‘உன் அன்பு எங்களுக்குத் தெரியாதா? அழகிய நல்ல உள்ளம் படைத்தவர்கள் விஷமுண்ட ஆண்டவனைப் பாடாமலா இருப்பார்கள்? நாமும் அப்படிப் பாட வேண்டுமென்று பதில் சொல்லி அழைக்கிறார்கள் தோழிமார்கள்! இதிலே ஒரு அற்புதமான தத்துவக் கருத்து இருக்கிறது.

மனிதர்கள் பலவீனமானவர்கள். பலவீனமான எண்ணம் தோன்றினால் அப்போது உறுதி வாய்ந்த சிந்தனைகள் தோன்றி மனதை நல்வழியில் செயல்படுத்த முனைய வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர். திருப்பாவையும் திருவெம்பாவையும் நமக்கு நல்வழியில் பயணம் செய்ய உதவும் வழிகாட்டி. திசைகாட்டி.

ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்