SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக இருள் நீக்கி அருள் ஒளியேற்றும் மகா சிவராத்திரி விழா

2018-02-13@ 14:56:21

திருவண்ணாமலை: ‘ஞான தபோதனரை வாவென்று அழைக்கும் அண்ணாமலை போற்றி’ என அடியார்கள் மெய்யுருகி வணங்கும் தீபத் திருநகரில், ‘திருமாலும், நான்முகனும் அடிமுடி காணாமல் திகைத்தபோது, லிங்கோத்பவ மூர்த்தியாக அண்ணாமலையார் அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி. ஆம்..! மகா சிவராத்திரி உருவான திருத்தலம் எனும் தனிச்சிறப்பு பெற்றது திருவண்ணாமலை. உமையாளுக்கு உகந்தது நவராத்திரி. உமையாளுக்கு இடபாகம் வழங்கிய சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. நம்முடைய அக இருளை நீக்கி, அகந்தை அழித்து, அருள் ஒளியேற்றும் மகத்துவம் மிக்கது மகா சிவராத்திரி. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகை. அதில், மாசி மாதம், சதுர்த்தசி நாளில் அமைவதே ‘மகா சிவராத்திரி’ ஆகும். மகா சிவராத்திரி உருவான திருவிளையாடலை நாம் காண்போம்.!

படைத்தல் தொழில்புரியும் பிரம்மாவுக்கும், காத்தல் தொழில் புரியும் திருமாலுக்கும் இடையே, தங்களில் ‘யார் பெரியவர்’ எனும் எண்ணம் எழுந்தது. அதனால், இருவரும் தங்கள் தொழிலை நிறைவேற்றும் கடமையை தவறினர். உலக இயக்கம் தடுமாறியது. முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவபெருமானிடம் முறையிட்டனர். இந்த சிக்கலுக்கு தீர்வுகாண அருள் வேண்டினர். முற்றும் உணர்ந்த முக்கண்ணன், தமது திருவிளையாடலை நிறைவேற்றும் தருணம் வந்ததை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தார். ‘நான்’ எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே ‘சிவம்’ எனும் பரம்பொருளை அடைய முடியும் எனும் உண்மையை உலகுக்கு உணர்த்த விரும்பினார். அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக விஸ்வரூபம் கொண்டார். தனது அடியையும், முடியையும் கண்டு திரும்புவோரே உயர்ந்தவர் என திருவாய் மலர்ந்தார்.

வலிய கொம்புடைய வராக வடிவு கொண்டு, இறைவனின் அடியை திருமால் தேடினார். அன்ன பட்சியாக வடிவு கொண்டு, இறைவனின் முடியை காண வானில் பறந்துசென்றார் பிரம்மா. ஆனால், அடியையும், முடியையும் காண இயலாமல் இருவரும் தவித்தனர். அப்போது, இறைவனின் திருமுடியில் இருந்து கீழே விழுந்த தாழம்பூவை, பிரம்மா தமக்கு துணையாக அழைத்தார். சிவபெருமானின் முடியில் இருந்து தாழம்பூவை கொண்டுவந்ததாக பொய் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, தாழம்பூவும் பொய் சொன்னது. எல்லாம் அறிந்த சிவன், தமது முக்கண் சிவந்தார். பொய் சொன்ன தாழம்பூ, இனி சிவபூஜைக்கு உதவாது என சபித்தார். அதேபோல், பூவுலகில் பிரம்மாவுக்கு தனியாக கோயில் அமையாது என்றார். அதன்பின், பிரம்மாவும், திருமாலும் தங்கள் தவறை உணர்ந்தனர். மனம் இரங்கிய இறைவன், ‘லிங்கோத்பவ மூர்த்தி’யாக காட்சியளித்த திருநாளே சிவராத்திரி திருநாளாக நாம் வழிபடுகிறோம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, மாசி முதல் நாளான இன்று (13ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணிவரை லட்சார்ச்சனை நடைபெறும். மதியம் 12.05 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெறும்.தொடர்ந்து, இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும். மேலும், இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு இரண்டாம் கால  பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும். முதல்கால பூஜையை பிரம்மாவும், இரண்டாம்கால பூஜையை திருமாலும், மூன்றாம்கால பூஜையை உமையாளும், நான்காம்கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

மேலும், நள்ளிரவு 12 மணிக்கு, கருவறையின் மேற்கு திசையில் அருள்தரும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். இன்று மட்டும் தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தப்படும். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமான அண்ணாமலையார் திருக்கோயிலுடன் நேரடி தொடர்புடையது லிங்கோத்பவர் திருமூர்த்தம். இறைவன் திருமேனியான அண்ணாமலையும், அதன் மீது காட்சி தரும் தீபமும் இந்த திருமூர்த்தத்தில் காட்சி தருகிறது. மேலும், உமையாளுடன் கூடிய இடபம் பின் நிற்க, சிவபெருமான் காட்சிதருகிறார். இதுபோன்ற தனிச்சிறப்பு மிக்க லிங்கோத்பவரை வேறெந்த திருத்தலத்திலும் தரிசிக்க இயலாது என்பது விசேஷமானது.

மகா சிவராத்திரி தினமான இன்று மாலை 6 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் பிரகாரங்களில் லட்ச தீபங்கள் ஏற்றப்படும். மேலும், பூக்கோலம், மா கோலம், உப்பு கோலம் ஆகியவற்றில் இறைவன் திருவடிவங்கள், கோயில் பிரகாரங்களில் வடிவமைத்து, பக்தர்கள் வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு, கோயில் கலை அரங்கத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12 மணிவரை இசை, பரதநாட்டியம், தேவார பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ராஜகோபுரம் எதிரில், 108 தவில், நாதஸ்வர கலைஞர்கள் இன்று காலை தொடங்கி, நாளை அதிகாலை 5 மணி வரை தொடர் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்