SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரண பயமகற்றும் மகாசிவராத்திரி

2018-02-13@ 09:34:49

திருவைகாவூர்

திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி போன்ற மகாசிவராத்திரி தலங்களின் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது திருவைகாவூர். காலம் காலமாக வேடனொருவன் சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த சம்பவம் நிகழ்ந்த தலமே இதுதான்! வேடன் ஒருவன் மானை பார்த்தான். வேடன் நோக்குவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த பிரதேசமான வில்வாரண்யத்திற்குள், அங்கிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் விடாது துரத்தி, உள்ளே நுழைந்தான். தவநிதி என்ற அந்த முனிவர் ‘‘மானைக் கொல்லாதே. வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘இதோ பாருங்கள். என் வேலை வேட்டையாடுவது. உங்கள் பேச்செல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காக மானை விடுவியுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டு மானை பிடித்துச் செல்வேன்’’ என்றான்.

முனிவர் மெல்ல சிரித்தபடி, ‘‘உன்னைவிட பலமான விஷயத்தைக் கண்டால் நீ பயப்படுவாய் அல்லவா? நான் புலியாக மாறினால் நீ என்ன செய்வாய்? இதோ நானே புலி வடிவில் உன்னை கொல்கிறேன் பார்’’ என்று சொல்லி, புலியாக மாறினார். வேடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பயந்துபோய் அந்தப் புலியிடமிருந்து தப்பிக்க, அருகேயிருந்த வில்வமரத்தின் மீது ஏறினான். கீழே, சிவமே புலியாக, இவன் எப்படியானாலும் வந்துதானே ஆகவேண்டும் எனக் காத்திருந்தது. அன்று மகாசிவராத்திரி இரவு. உறங்காது உலகமே விழித்திருந்தது. பசியும், பயமும் வேடனை பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல், எதை பறிக்கிறோம் என்று கூடத் தெரியாமல் வில்வத் தளிர்களை உருவினான். புலியின் மீது போட்டான். புலிச் சிவம் பரவசமாக ஏற்றுக் கொண்டது. சிவராத்திரி இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்தின் எல்லா இலைகளையும் பறித்துக் கீழே போட்டபடி இருந்தான்.

ஈசனுக்குள் கருணை பீறிட்டது. சட்டென்று மரத்தினடியில் லிங்க உருவில் தோன்றினார். வேடனை ஆட்கொண்டு மோட்சமளித்தார். பிரம்மனும், விஷ்ணுவும் அங்கே தோன்றினார்கள். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் அவன் உயிரை வேட்டையாட அருகே வந்தான். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி, எமனை விரட்டினார். சற்று தொலைவில் இருந்த நந்திதேவரை ஈசன் முறைக்க நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனைத் தள்ளி நிறுத்தினார். எமன் பயந்தான். அங்கேயே சிறிது காலமிருந்து, அருகேயே தீர்த்தம் உருவாக்கி நீராடி வேண்டினான். ஈசனும் எமனை விடுவித்தார். இந்த புராணக் கதையை பல்வேறு விதங்களாக சொன்னாலும் இத்தலத்தில்தான் இதைப்பற்றி முழுமையாக விஷயத்தை அறிய முடிகிறது. ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஈசன் எமனைக் கட்டுப்படுத்தியதால், இத்தலத்தில் எமபயம் நீங்கும். மகாசிவராத்திரியின் முழு மகத்துவத்தையும் விளக்கும் தலமும் இதுதான்.

திருவைகாவூர், பச்சை வயல் பூசிய அழகிய கிராமம். கோயிலுக்கு எதிரேயே எம தீர்த்தம். தலத்தின் தொன்மையை கோயிலின் ராஜகோபுரம் உணர்த்துகிறது. உள்ளே உள்கோபுரமொன்றும் இருக்கிறது. நீண்ட நெடிய வழியாக இருக்கிறது. ஈசனுக்கு முதுகு காட்டி, வாயிலை நோக்கும் நந்திதேவர். கோயிலுக்குள் ஆங்காங்கு வேடன் மோட்சம் பெற்ற கதையை சுதைச் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். இங்கே வேதங்களே வில்வ விருட்சங்களாக நின்று தவம் புரிவதாக புராணம் கூறுகிறது. மிகப் பழமையான ஆலயமாதலால் உட்கோபுர வாயிலில் நிறைய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். மகாமண்டபத்தின் அருகேயே தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில். தன் கையில் கோலோடு, மான், மழுவோடு ஜடாதாரியாக அருள்வது இத்தலத்தில்தான். அருகில் துவாரபாலகர்களாக பிரம்மனும், விஷ்ணுவும் நிற்கிறார்கள். அடுத்து அர்த்த மண்டபத்திலுள்ள நந்திதேவரும் வாசலையே நோக்கியிருக்கிறார்.

எதிரே வில்வாரண்யேஸ்வரர் அற்புதக் காட்சி தருகிறார். அருட்பிரவாகமானது அலை அலையாக அவ்விடத்தில் எழுந்தவண்ணம் உள்ளது. மனதை துளைத்ததொரு சக்தி நமக்குள் ஊடுருவுகிறது. நெஞ்சம் நிறைந்து பிராகாரத்தை நோக்கி நகர்கிறோம். கருவறை கோஷ்டத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் நேர்த்தியாக உள்ளன. அகத்தியர், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர் போன்றவை பார்க்கப் பார்க்க பிரமிப்பூட்டுகின்றன. அதிலும் வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியின் சிலையானது அருள் உலகம் மட்டுமல்லாது, கலையுலகத்திற்கும் பொக்கிஷமுமாகும். அருணகிரிநாதரின் பாடல் பெற்றது. கோயிலை வலம் வரும்போதே துர்க்கையை வணங்கி அருகேயுள்ள அம்பாள் சந்நதியை அடையலாம். ஸ்ரீசர்வ ஜன ரட்சகி எனும் திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலிக்கிறார். அழகிய தமிழில் வளைக்கை அம்மன் என்று பெயர். அழகும், அருளும் சேர்ந்து இலகும் திருமுகம். அபய வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள். கோயிலை வலமாக வரும்போது நடராஜர் சந்நதியை தரிசிக்கலாம். இக்கோயிலில் பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் காட்சியளிக்கிறார்கள்.

முதலாம் குலோத்துங்கச் சோழன் இந்த கோயிலுக்காக கொடுத்த நிலங்கள் பற்றி நிறைய கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. மாசி மாத மகாசிவராத்திரி விழா நான்கு கால பூஜையும், வேடனுக்கு மோட்சமளித்த நிகழ்வும், அமாவாசை அன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரியின் மகிமை சொல்லும், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த ஆலயம், பலரால் இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளது. புராணங்கள் இதன் அருமையை பக்கம் பக்கமாக பேசுகின்றன. வரலாறு இவ்வூரை தலையில் வைத்து கொண்டாடுகிறது. ஒருகாலத்தில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் இத்தலத்தை நோக்கி நடந்த வண்ணமிருந்தனர். ஆனால், இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு மட்டும் ஆங்காங்கிருந்து சில பக்தர்கள் வருகிறார்கள்.

பழமையின் கம்பீரமும், தொன்மையின் அழகும் கொட்டிக் கிடக்கும் இந்த ஆலயத்தை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாடி நலம் பெறாதிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. நோயின் கடுமை தாங்க முடியாதவர்கள், மரண பயம் கொண்டவர்கள் இத்தலத்தை மிதித்தவுடன் குணமாகிறார்கள். இத்தலத்தின் எல்லையில் நின்று அவரை காப்பாற்றுங்கள் என்று யாரையேனும் குறிப்பிட்டுச் சொன்னாலே போதும், பாதிக்கப்பட்டவர் குணமாவார் என்கிறது தலபுராணம். ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான எமபயம் போக்கும் தலம் இது. பொதுவாகவே இது மோட்ச பூமியாதலால் பயம் குறைத்து அபயத்தை கூட்டும் தலமாகும். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருவைகாவூர். பேருந்து வசதிகள் உள்ளன.

கிருஷ்ணா, படங்கள்: சி.எஸ். ஆறுமுகம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • raavana_2018

  டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

 • delhi_skywalkopns

  டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

 • 6thday_tirupathifestiv

  நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

 • odisa_andhratitli

  ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

 • trumph_floodareaameric

  அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்