SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும்!

2018-02-08@ 14:57:04

பி.ஈ., சிவில் படித்து முடித்து வேலை கிடைக்காமல் சிம்கார்டு விற்பனை செய்கிறேன். என் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம் கிடைக்கும்? என் தந்தை  பார்ட்னர்ஷிப் முறையில் தொழில் நடத்தி ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார். ஏன் இந்தச் சோதனை? நல்ல பதிலைத் தாருங்கள். - பிரசன்னா ராஜேஷ், மதுரை.

சிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்தும், வேலை கிடைக்கவில்லை என்று சும்மா இருக்காமல் சிம்கார்டு விற்பனை செய்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த  பாராட்டுக்கள். அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்துள்ளதும், லக்னாதிபதி  சுக்கிரன் வக்கிரம் பெற்றுள்ளதும் சாதகமான அம்சம் அல்ல. குரு பகவானும் வக்கிரம் பெற்றுள்ளதால் இதுபோன்ற  சோதனைகளை அனுபவித்து வருகிறீர்கள்.  லக்னாதிபதி சுக்கிரன் வக்கிரம் பெற்றிருந்தாலும் அவர் வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பது நினைப்பதைச் சாதிக்கும்  யோகத்தினைத் தரும். எல்லோரும் சிந்திப்பதைப்போல் இல்லாமல் மாற்றி யோசியுங்கள்.

சாதாரணமாக அடுத்தவர்கள் நினைப்பதற்கு மாற்றாக நீங்கள் யோசித்து செயல்பட்டீர்களேயானால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். உங்கள் ஜாதகத்தின்படி தற்போது  குருதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு நிரந்தர உத்யோகத்தைத் தரக்கூடியவர் சனிபகவான். சனிபகவான் சந்திரனுடன்  இணைந்திருப்பது நல்லதா என்று கேட்டிருக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை அது நல்லநிலையே ஆகும். 27.09.2018 முதல் உங்கள் வாழ்வினில்  திருப்புமுனையை சந்திக்க உள்ளீர்கள். அரசுப்பணியை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சுயதொழிலில் இறங்குங்கள்.

சனி+சந்திரனின் இணைவு சமையல் தொழிலைக் குறிக்கிறது. திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளுக்கான கான்டிராக்டராக நீங்கள் உருவெடுக்க இயலும் அல்லது  ஸ்வீட் ஸ்டால் போன்ற பலகாரக் கடையை குறைந்த முதலீட்டில் துவக்கி அதனை பிரம்மாண்டமாக பிற்காலத்தில் விரிவுபடுத்த இயலும். அனுஷம் நட்சத்திரம்,  விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தந்தையை உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள். அவருடைய 67வது வயது வரை  அவரால் உங்களுக்கு பக்கபலமாகத் துணைநிற்க இயலும். 15 வருட காலமாக பார்ட்னர்ஷிப் தொழில் நடத்தி நஷ்டத்தோடு அவமானத்தையும் சந்தித்த அவருக்கு  இந்தப் புதிய தொழில் மனநிம்மதியைத் தரும்.

நல்ல பணியாட்கள் அமையும் யோகம் உங்களுக்கு உள்ளதால் கவலைப்படாதீர்கள். கொஞ்சம், கொஞ்சமாக இந்தத் தொழில் குறித்த அறிவினை வளர்த்துக்  கொள்ளுங்கள். வருகின்ற ஆவணி மாதத்திற்குப் பின் உங்கள் புதிய முயற்சியைத் துவக்கலாம். உங்கள் தந்தையின் ஜாதகத்தில் சந்திரதசையில் செவ்வாய் புக்தி  நடக்கிறது. அவருடைய பார்ட்னர் உங்கள் உறவினரே என்பதால் மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள். துரோகம் இழைத்தவர் என்றாலும் அவர் நன்றாக  வாழட்டும் என்று மனதளவில் அவரை மன்னித்து ஆசிர்வதிக்கச் சொல்லுங்கள்.

மனதில் தோன்றும் தீயஎண்ணங்கள் உடல்நிலையை பாதிக்கும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். நடந்ததை மறந்து நடக்கப் போவதை எண்ணி உற்சாகமாய்  செயல்படுங்கள். அவமானம் என்பது காணாமல்போய் வாழ்வினில் வெகுமானம் காண்பீர்கள். திங்கட்கிழமை தோறும் மாலை வேளையில் மீனாக்ஷிஅம்மன் ஆலய  வளாகத்தில் எழுந்தருளியுள்ள வன்னிமரத்தடி விநாயகர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நான் ஓய்வுபெற்று எட்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. இதுவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.  குடும்பம் வறுமையில் வாடுகிறது. கஷ்டங்கள் தீர நல்லபதிலைத்தாருங்கள்.
- பெரியாண்டவர், புதுச்சேரி.


உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும் வேளையை அடைந்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது. தற்போது நடந்து  முடிந்துள்ள சனிப்பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு சாதகமான பலனையே தருகின்ற வகையில் அமைந்துள்ளதால் கவலைப்பட வேண்டாம். ரேவதி நட்சத்திரம், மீன  ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள நீங்கள் பணியில் இருந்த காலத்தில் அலட்சியத்தின் காரணமாக கவனிக்காமல் விட்ட ஒரு சிறு தவறின் காரணமாக  இத்தனை காலம் சிரமத்தை அனுபவித்து வந்துள்ளீர்கள். தற்போது துவங்கியுள்ள ராகு தசையில் சந்திர புக்தியின் காலத்தில் உங்கள்பிரச்னைகள் முடிவிற்கு  வந்து நிலுவையில் உள்ள ஓய்வூதியத்துடன் சேர்த்து மொத்தமாக வந்து சேரக் காண்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் சந்திரனே தனஸ்தானத்திற்கு அதிபதி  என்பதாலும், அவர் ஜீவன ஸ்தானத்தில் புதனின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதாலும் தற்போதைய தசாபுக்தியில் தனலாபம் காண்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் புதன்  உச்ச பலத்துடன் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதும் கூடுதலாக வலிமை சேர்க்கிறது.

உங்களுடைய வறுமை நீங்குவதுடன் அசையாச் சொத்து ஒன்று வந்து சேர்வதற்கான வாய்ப்பும் உண்டு. பிரதி திங்கட்கிழமை தோறும் ராகுகால வேளையான  காலை 07.30 மணிக்கு மேல் 09.00 மணிக்குள்ளாக பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் விநாயகப் பெருமானின் சந்நதியை 11 முறை வலம் வந்து  வணங்குங்கள். விநாயகரின் திருவருளால் வினைகள் அகன்று வறுமை நீங்கி வளம் பெறுவீர்கள்.

ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு வருமானம் பெறும் யோகம் உண்டா? பி.எஸ்சி., பௌதீகமும், ஜோதிடவியலில் டிப்ளமோவும் படித்திருக்கும் நான்  மேற்கொண்டு முதுகலை பட்டப்படிப்பு படிக்க இயலுமா? எனது நோய் எப்போது தீரும்? தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.- எம்.பி.கே.வள்ளிநாயகம்

பர்கிட் மாநகரம். நீங்கள் பிறந்த தேதி, நேரத்தினைக் கொண்டு உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் ஒரு நல்லசிந்தனையாளர் என்பது  தெளிவாகிறது. அஸ்வினி நட்சத்திரம், மேஷராசி, மீனலக்னத்தில் பிறந்துள்ளீர்கள். ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு வருமானம் ஈட்டுவதற்கு புதன் மற்றும்  குருபகவானின் அருள் துணை புரியவேண்டும். மேலும், வாக்கு ஸ்தானம் வலிமையுடன் இருக்க வேண்டும். தங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு  பகவான் ஐந்தாம் வீட்டில் உச்சபலம் பெற்றிருப்பதும், ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே ஆகும்.

தற்போது உங்கள் ஜாதகப்படி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுவின்தசை நடப்பதால் உங்களால் சம்பாதிக்க இயலும். ஜோதிடவியலில்  மேற்படிப்பினைத் தொடருங்கள். உடன் ஜோதிடம் பார்ப்பதையும் தொழிலாகக் கொள்ளுங்கள். அன்பான வார்த்தைகள் உங்களுக்கு அதிக அளவில்  வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரும். தனிமையில் அமர்ந்திருந்தால் தேவையற்ற சிந்தனைகள் உங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் பாதிக்கும்.  முடிந்தவரை தனிமையைத் தவிர்த்து விடுங்கள். ஜோதிடவியலில் மேற்படிப்பிலும், ஜோதிடம் சார்ந்த உங்கள் கருத்துகளை கட்டுரைகளாக எழுதி வைப்பதிலும்  கவனம் செலுத்துங்கள்.

புதன் உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய எழுதும் திறமை சிறப்பாக உள்ளது. உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். 82  வயது வரை ஆயுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திற்குச்  சென்று தாமிரசபையில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். புதன்தோறும் அருகிலுள்ள  சிவாலயத்தில் நடராஜரை தரிசனம் செய்யுங்கள். ஆடல்வல்லானின் திருவருளால் பெயரும் புகழும் அடைவீர்கள்.

என் பெற்றோருக்கு இடையே இருக்கும் சச்சரவினால் என் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. என்னையும் அறியாமல் தலையை முட்டி முட்டி தற்கொலைக்கு  முயற்சிக்கிறேன். என் பெற்றோர் ஒன்று சேரும் காலம் வருமா? என் எதிர்காலம் நல்லபடியாக அமையுமா? பரிகாரம் சொல்ல வேண்டுகிறேன்.- பெயர் வெளியிட விரும்பாத ஒன்பதாம் வகுப்பு மாணவன்.

ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் குடும்பப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் உங்கள் பிரச்னை விரைவில் தீர்வடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.  ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசை தொடங்கியுள்ளது. கேது மனநிலையில்  விரக்தியினை ஏற்படுத்தக் கூடியவர் என்றாலும், உங்கள் லக்னாதிபதி செவ்வாய் என்பதாலும், நீங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதாலும் சற்று  மனஉறுதி கொண்டவராகத்தான் தெரிகிறீர்கள்.

குடும்பப் பிரச்னையைப் பற்றியோ, மற்றவர்கள் பேசுவதைப் பற்றியோ கவலைப்படாதீர்கள். குறைசொல்லும் உலகம் உதவப்போவதில்லை என்பதை மனதில்  கொண்டு உங்கள் எதிர்காலத்தினை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் போல நீங்கள் நன்கு படிக்க இயலும். வங்கி சார்ந்த பணியில் உயர்ந்த  அதிகாரியாக எதிர்காலத்தில் உருவெடுப்பீர்கள். உங்கள் பெற்றோரின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் தாயாரின் ஜாதகநிலைப்படி இந்தக் குழப்பம் உண்டாகியுள்ளது.  எனினும் தற்போது 26.02.2018 முதல் அவருக்கு நல்ல நேரம் என்பது துவங்குவதால் வெகுவிரைவில் தன் தவறை உணர்ந்து உங்களை நாடி வருவார்.

மூன்றாவது மனிதர்களின் தூண்டுதல் அவரை உங்கள் தந்தையின் மீது வழக்கு போட வைத்துள்ளது. உங்கள் தந்தையின் ஜாதகப்படி தற்போது நல்ல நேரமே  நடப்பதால் வெகுவிரைவில் குடும்பம் ஒன்றிணையும். தந்தையோடு தனிமையில் நீங்கள் பேசும்போது, நாடிவரும் தாயாரின் மனதைப் புண்படுத்தாமல் அவரை  ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். வயதிற்கு மீறிய பேச்சாக இருந்தாலும் உங்கள் நலனில் உங்கள் தந்தைக்கு மிகுந்த அக்கறை இருப்பதை அவரது ஜாதகம்  காட்டுகிறது.

இறைவன் நம்மை இந்த பூமியில் படைத்ததன் காரணம் நம்மால் இந்த பூமிக்கு ஏதாவது ஒரு சிறு நன்மையாவது நடக்க வேண்டும் என்பதால்தான் என்பதை  புரிந்து கொள்ளுங்கள். இறைவன் நமக்கு அளித்த உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை நமக்கில்லை. தற்கொலை செய்து கொள்வதால் பிரச்னை தீர்ந்து விடப்  போவதில்லை. இதுபோன்ற தீய எண்ணங்களை அறவே மறந்து படிப்பினில் கவனம் செலுத்துங்கள்.

கடக ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கும், மேஷ ராசியில் பிறந்துள்ள உங்கள் தாயாருக்கும், சிம்மராசியைச் சேர்ந்த உங்கள் தந்தைக்கும் தற்போதைய  சனிப்பெயர்ச்சி சிறப்பான நற்பலன்களைத் தரஉள்ளதால் 2018ம் ஆண்டின் துவக்கத்திலேயே உங்கள் குடும்பம் ஒன்றிணையும். கவலை வேண்டாம். ஞாயிறு  முதலான விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உள்ளத்தில்  உற்சாகம் ஊற்றெடுக்கக் காண்பீர்கள்.

அறுபத்தைந்து வயதாகும் நான் ஹனுமார் கோயிலில் சேவை செய்து வருகிறேன். ஆந்திர மாநிலத்திலுள்ள காமாக்ஷிஅம்மன் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிய  அழைக்கிறார்கள். என் மனைவி வேண்டாம் என்கிறாள். இங்கேயே இருந்து விடலாமா? வயதான காலத்தில் எனக்கு ஒரு நல்லவழி காட்டுங்கள். - வேணுகோபால் சர்மா, திருத்தணி.

வயதான காலத்தில் பேரப்பிள்ளைகளோடு தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்றுகாலத்தைக் கழிப்பவர்கள் மத்தியில் பகவானுக்கு சேவை செய்வதை  பெரிதாக எண்ணும் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷபராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள  உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரனின் அமர்வு உள்ளதால்  நீங்கள் அம்பாளுக்கு கைங்கரியம் செய்ய இயலும். 25.04.2018 முதல் அதற்கானகாலம் கனிந்து வருகிறது.

அதற்குள் உங்கள் மனைவியின் மனமும் மாறிவிடும். ஆந்திர மாநிலத்திலுள்ள காமாக்ஷிஅம்மன் ஆலயத்தில் பணிபுரிய சித்திரை மாதத்திற்கு மேல் வருவதாக  சம்மதம் தெரிவித்து விடுங்கள். அதற்குள் தற்போது நீங்கள் பணிசெய்து வரும் ஆலயத்தை நிர்வகிக்க வேறு அர்ச்சகர் கிடைத்து விடுவார். வயதான காலத்தில்  அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று உங்கள் மனைவி அச்சப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. அம்பாளின் அருள் இருக்க அச்சம் எதற்கு என்பதை  நிதானமாக உங்கள் துணைவியாருக்குப் புரிய வையுங்கள். 81வயது வரை நீங்கள் எந்தவித பிரச்னையுமின்றி அம்பாளுக்கு சேவை செய்ய இயலும்.  உங்கள்எண்ணம் நிறைவேற அன்னை காமாக்ஷியை பிரார்த்திக்கிறேன்.

என் வயது 76. எனக்கு ஒரே ஒரு மகன் மட்டும். மகனுக்குத் திருமணமாகிவிட்டது. நானும் எனது மனைவியும் தனியாக வாழ்கிறோம். மகன், மருமகள்,  பேரப்பிள்ளைகளுடன் கூட்டாக வாழ பரிகாரம் சொல்லுங்கள். - ஆர்.கோபாலன், காஞ்சிபுரம்.

நீங்கள் பிறந்த தேதி, நேரத்தினைக் கொண்டு உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் ஒரு குழந்தையின் குணம் கொண்டவர் என்பது புரிகிறது.  ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்துள்ள நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப்போல எப்போதும் தன்னைச் சுற்றி ஆட்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று  எண்ணுவதில் ஆச்சரியம் இல்லை. உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. தற்போதைய கிரகச் சூழலின்படி நீங்கள்  மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வது அத்தனை சிலாக்கியமில்லை. அவர்களோடு சேர்ந்து இருந்தாலும் நீங்கள் நினைக்கும்படியான  நிம்மதியும், சுகமும் அங்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அவர்களுடைய பணிச்சுமையும், சூழ்நிலையும் உங்கள் மனநிலையுடன் ஒத்துப்போவது கடினம். சிறிது காலம் பொறுத்திருங்கள். 05.11.2018க்குப் பின் உங்கள்  விருப்பம் நிறைவேறும். ஓய்வாக இருக்கும் நேரத்தில் தனிமையில் இருக்காமல் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வேதபாடசாலைக்குச் சென்று வாருங்கள்.  அங்கு வேதம் படிக்கும் சிறுவர்களை உங்கள் பேரப்பிள்ளைகளாக எண்ணி அவர்களோடு உரையாடி மகிழுங்கள். அங்கு ஒலிக்கும் வேதமந்திரங்களின் அதிர்வு  உங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். நீங்கள் எதிர்பார்க்கும் சுகம் அங்கு கிடைக்கும். பாடசாலை மாணவர்களுக்கு உங்களால் ஆன சிறுசிறு உதவியினைச்  செய்து வாருங்கள். வேதமாதாவின் திருவருளால் உங்கள் ஏக்கம் காணாமல் போகும்.

இப்பகுதிக்குக் கேள்வி கேட்டு பதில் பெற விரும்பும் வாசகர்கள் எந்த ஜாதகருக்கு பிரச்னையோ அவருடைய ஜாதகம் மட்டும் அனுப்பிவையுங்கள். தங்கள்  பிரச்னை என்ன என்பதை சுருக்கமாக, தெளிவாக எழுதுங்கள். தமது குலதெய்வம் தெரிந்தவர்கள், அதை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004


- சுபஸ்ரீ சங்கரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vaanvali_makal111

  நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

 • delta_kadai111

  காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

 • prathmar_rajiv1

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

 • kerala_makkal111

  மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

 • 20-08-2018

  20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்