SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உழைப்பே உங்கள் மூலதனம்!

2018-02-05@ 15:45:12

என் மகளின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிஎன்பது போல் ஆகி, அவர்களே முன்வந்து மன்னிப்பு கேட்டு விவாகரத்தும் கொடுத்துவிட்டார்கள். வாழாமலேயே இரண்டாம் திருமணம் என்ற பெயர் உண்டானதை எண்ணி என் மகள் வருந்துகிறாள். நல்லவழி காட்டுங்கள். பாக்யவதி, வத்தலகுண்டு.

கேட்டைநட்சத்திரம், விருச்சிக இராசி, துலாம்லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்மகளின் ஜாதகத்தில் தற்போது சுக்கிரதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் குரு பகவான் சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெற்றிருப்பது இதுபோன்ற தோஷத்தைத் தந்திருக்கிறது. நடந்த முடிந்த நிகழ்வினால் தோஷத்திற்கு பரிகாரம் ஆகிவிட்டது என்றுஎண்ணிக் கொள்ளுங்கள். ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் நான்காம் வீட்டில் உச்சபலத்துடன் அமர்ந்துள்ளார்.

உங்கள் உறவு முறையிலேயே உங்கள் மகளுக்கான மணாளன் காத்திருக்கிறார். ஏற்கெனவேஅவர்கள் பெண் கேட்டு வந்தபோது சந்தர்ப்ப சூழல் காரணமாக நீங்கள் மறுத்திருக்கலாம். இப்பொழுதும் அந்தப் பிள்ளை உங்கள் பெண்ணை மணக்க மனதளவில் தயாராகவே உள்ளார். எப்படிக் கேட்பது என்ற தயக்கம் உங்கள் இரு தரப்பிலும் இருக்கக் கூடும். உறவு முறையைச் சேர்ந்த அந்தப் பிள்ளைக்கு உங்கள்மகளை மணம் முடித்து வையுங்கள். திருமணத்தை பழனிஆண்டவனின் சந்நதியில் நடத்துவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். பழனிமலை ஆண்டவனின் திருவருளால் வருகின்ற 01.10.2018க்குள் உங்கள்மகளின் ம(று)ணவாழ்வு மலர்ந்து விடும். கவலை வேண்டாம்.

எனது பேரன் 15வயது வரை நன்றாகத்தான் நடந்தான். இப்போது இரண்டு வருடங்களாக சரியாக நடக்க முடியாமல் தடுமாறுகிறான். ஆட்களைப் பிடித்துக் கொண்டு நடக்கிறான். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. சரியான தீர்வினைச் சொல்லுங்கள். ராஜூ, அத்தாணி.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சனிதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. சனிதசையின் துவக்கத்தில் இருந்து இந்தப் பிரச்னையை உங்கள் பேரன் சந்தித்து வருகிறார். செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகிய கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்திருப்பது இது போன்ற சங்கடத்தை உருவாக்கியுள்ளது. எனினும் இதனை முற்றிலுமாக குணப்படுத்த இயலும். முழங்கால் மூட்டுப் பகுதியில் பிரச்னை தோன்றியுள்ளது. அவர் உண்ணும் ஆகாரத்தில் கருப்பு உளுந்தினை அதிகமாக பயன்படுத்துங்கள். கருப்பு உளுந்து ஊறவைத்து, தோலினைக் கழுவி இட்லி, தோசைக்கு உபயோகப்படுத்துங்கள்.

உளுந்து கழுவிய கழிநீரை சுடவைத்து அவரது முழங்கால் பகுதியில் கைகளால் பதமாக அடித்துத் தடவி விடுங்கள். நாட்டு மருந்து கடையில் உளுந்து தைலம் வாங்கி இரவினில் படுப்பதற்கு முன்னால் அவரது முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தடவி விடுங்கள். உள்ளுக்குள் இருக்கும் சுரப்பிகள் நன்றாக வேலை செய்யத் துவங்கும். பேரனுக்கு முற்றிலுமாக குணமானதும் அவனை அழைத்துக் கொண்டு திருப்பதி திருமலையில் கீழிருந்து பாதயாத்திரையாக மேலேறி வந்து பெருமாளை தரிசிப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சரியான மருத்துவரின் பார்வை உங்கள் பேரனின் மீது விழும். ஏழுமலையான் அருளால் வருகின்ற 25.05.2018 முதல் உங்கள் பேரன் முன்னேற்றம் காணத் துவங்குவார்.

என் தாயார் தெருமுனையில் இட்லி கடை நடத்தி என்னை பி.டெக் படிக்க வைத்தார்கள். குடும்ப சூழ்நிலையை விளக்கி, நான் படித்த கல்லூரியில் கட்டணச்சலுகை கேட்டு விண்ணப்பித்தேன். நிர்வாகம் நிராகரித்த நிலையில் என்னால் படிப்பை முடிக்க இயலவில்லை. இந்நிலையில் நான் பணிபுரிந்து வரும் பில்டர் என்னை தனது செயல்பங்குதாரராக ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறார். என் முன்னேற்றத்திற்கு உரியபரிகாரம் கூறவும். சரவணன், மாடம்பாக்கம்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தில் தற்போது கேது தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் கல்வியைப்பற்றிச் சொல்லும் நான்காம் வீட்டின் அதிபதி சந்திரன் 12ல் அமர்ந்திருப்பது பலவீனமான நிலை என்றாலும் தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சனியின் இணைவு மிகச்சிறப்பான உயர்வினைத் தரும். கல்விதடைபட்டிருந்தாலும், தொழில் முறையில் நன்றாக முன்னேறுவீர்கள். 23.05.2018 முதல் சுக்ர தசை துவங்குகிறது.சுக்கிரன் 12ம் வீட்டில் இருந்தாலும் உச்சபலத்துடன் சஞ்சரிப்பதால் அடுத்த 20 வருடங்களுக்கு கடுமையான அலைச்சலை சந்திப்பீர்கள்.

அலைச்சல் அதிகமானாலும் சம்பாத்தியம் வெகுசிறப்பாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கான பலன் இரட்டிப்பாகக் கிடைக்கும். தற்போதைய சூழலில் தேடி வருகின்ற செயல் பங்குதாரர் வாய்ப்பினை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக தனிப்பட்ட முறையில் நீங்களே
பெருமுதலாளியாக உருவெடுப்பீர்கள். கடினமான சூழலிலும் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்ற தாயையே கண்கண்ட தெய்வமாக எண்ணி
வணங்குங்கள். உழைப்பே உங்கள்மூலதனம். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

நான் ஒரு வழக்கில் 10 ஆண்டுகள்தண்டனை பெற்றுகடந்த மூன்று ஆண்டு காலமாக கடலூர் மத்திய சிறையில் கைதியாக உள்ளேன். எனக்கு தந்தை, மனைவி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தாயாரும் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தினரின் நினைவாகவே உள்ளது. உரிய பரிகாரம் சொல்லுங்கள். செல்வகணபதி, கடலூர் மத்தியசிறை.

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. பலம் பொருந்திய சிம்ம லக்னத்தில் செவ்வாய், சூரியன் இணைவுடன் பிறந்திருக்கும் நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். ஏழரைச் சனியின் தாக்கமும், உடன் இணைந்த சனிதசையும் உங்களுக்கு இந்த நிலையைத் தந்திருக்கிறது. அதிகப்படியான கோபமும், உணர்ச்சி வசப்பட்டு செய்த செயலும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தவறை உணர்ந்தவனுக்கு மன்னிப்பு என்பது கிடைத்துவிடும். உங்கள் ஜாதகத்தின்படி உங்கள் பிள்ளைகள் நல்லபடியாக வளர்வார்கள். கவலைப்பட வேண்டாம்.

தற்போது ஏழரைச்சனியின் காலமும் முடிவடைந்து விட்டதால் உங்கள் மனநிலையில் மாற்றத்தை உணர்ந்து வருவீர்கள். சிறையில் உள்ள அதிகாரிகளிடமும் நற்பெயரை சம்பாதிக்கத் துவங்குவீர்கள். உங்கள் மனைவியிடம் சொல்லி பிரதிமாதந்தோறும் வருகின்ற சுவாதி நட்சத்திர நாளில் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று எட்டு அகல் விளக்குகள்ஏற்றி வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். அரசியல்வாதி ஒருவரின் பரிந்துரையும் உங்கள் விடுதலைக்குத் துணை செய்யும். 2020ம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் உங்கள் விடுதலைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விடுதலைக்குப் பிறகு உங்கள் உழைப்பினால் வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். மனநிம்மதியுடன் வாழ வாழ்த்துக்கள்.

நான் காதலிக்கும் நபர் வேறு சாதி என்பதால் அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். என் எதிர்கால வாழ்வினை நினைத்து பயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுமா? அவரது பெற்றோர் ஒத்துக்கொள்ள ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள். மகேஸ்வரி, சென்னை.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின் படி வேறுசாதியைச் சேர்ந்த நபரை காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது.அதே நேரத்தில் நீங்கள் காதலிக்கும் நபரின் ஜாதகத்தின்படி அவர் தயக்க குணத்தினைக் கொண்டவர் என்பது தெளிவாகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் காதலரைப் பொறுத்தவரை வரும் மனைவியினால் அவர் ஆதாயம் காணும் யோகம் உள்ளது. தயக்க குணத்தினைக் கொண்ட அவர் தனது பெற்றோரிடம் தைரியமாகப் பேசுவார் என்பதை எதிர்பார்க்க இயலாது. நீங்களே நேரடியாக அவரது பெற்றோரிடம் சென்று பேசிப் பாருங்கள்.

தற்போதைய சூழலில் உங்கள் இருவரின் ஜாதகத்தின்படியும் திருமணத்திற்கான நேரம் கூடி வந்திருப்பதால் அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. கௌரவம் கருதி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக எதிர்க்க மாட்டார்கள். எது எப்படி இருந்தாலும், காலதாமதம் செய்யாமல் அதிகபட்சமாக வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் உங்கள் திருமணத்தை நடத்தி விடுவது என்பது இருவருக்குமே நல்லது. உங்கள் இருவரின் எதிர்காலமும் சிறப்பாக உள்ளது. ஏதேனும் ஒரு திங்கட்கிழமைநாளில் சென்னையை அடுத்துள்ள பெரியபாளையத்திற்கு இருவருமாகச் சென்று அம்மன் சந்நதியில் நின்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மனம்போல் மாங்கல்யம் அமையும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்