SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரக தோஷங்களுக்கு பரிகாரம் செய்துதான் தீர வேண்டுமா?

2018-02-05@ 15:33:30

பரிகாரம் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய சூழலில் அவரவர் ஜாதகங்கள் ஆராயப்பட்டு நவகிரகங்களின் சஞ்சார நிலையை வைத்து பெரும்பாலான பரிகாரங்கள் சொல்லப்படுகின்றன. நவகிரகங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக அந்தந்த கிரகங்களுக்குரிய திருத்தலங்களை நாடிச் சென்று கொண்டிருக்கிறோம். உண்மையில் அக்காலத்தில் ஆலயங்களை எழுப்பும்போது  நவகிரகங்களுக்கு என உருவ வழிபாடோ சந்நதிகளோ அமைக்கப்படவில்லை.

கடந்த 200 ஆண்டுகளாகத்தான் சிவாலயங்களில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு  நடந்து கொண்டிருக்கிறது. இறைவன் இட்ட பணிகளைச் செய்யும் பணியாட்களே  நவகிரகங்கள், பலன்களை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. உதாரணத்திற்குச் சொல்லவேண்டும் என்றால் நியாய அநியாயங்களை அறிந்து தீர்ப்பு வழங்கும் நீதிபதி எம்பெருமான், அந்த தீர்ப்பினுக்கான உரையே நம் ஜாதகம், அதை நிறைவேற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களே நவக்ரஹங்கள்.

ஜனன ஜாதகத்தின்படி அவரவருக்குரிய தசாபுக்தி காலங்களில் அதற்கென விதிக்கப்பட்ட பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும். பூர்வஜென்ம பாவ - புண்ணியத்தின் அடிப்படையில்தான் நமது விதிப்பலன்கள் எழுதப்படுகின்றன. தீயகிரகங்களின்  தசாபுக்தியும், சரியில்லாத கிரக நிலையும் நிலவும்போது கெடுபலன்களை அனுபவித்து ஆகவேண்டும் என்பது விதி. இந்த நிலையில் பிறந்த ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக இருந்துவிட்டால் அம்மனிதன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் பலிக்கும். கெடுபலன்கள் மறைந்து நிச்சயம் நற்பலன்கள் கிடைக்கும்.  மாறாக பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவற்று இருந்தால் அவன் அனுபவிக்க வேண்டியதை  நிச்சயமாக அனுபவித்தே ஆக வேண்டும்.

அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறையைத் தேடக்கூடாது. பலனை அனுபவிப்பதே அவன் செய்யும் பரிகாரம். மாறாக தப்பிக்கும் வழிமுறையாக பரிகாரங்களைத் தேடத் தொடங்கினால் நல்ல தசாபுக்தி காலத்திலும்  நற்பலன்களை அனுபவிக்க இயலாது போய்விடும். கெட்ட நேரத்தில் அவன் கெடுபலன்களை அனுபவித்து விட்டானேயாகில் நல்ல தசாபுக்தி நடக்கும் காலத்தில் நற்பலன்களையும் அனுபவிப்பான். ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பதையே ஜோதிட சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

பரிகாரங்கள் செய்வதால்  கெடுபலன்கள் உண்டாக்கும் தாக்கத்தினை வேண்டுமானால் குறைத்துக்கொள்ள  முடியும். ஆயினும் அதன் அடிப்படைப் பலனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். ஊழ்வினைப் பயன் என்ற கூற்று உண்மை என்பதை உணர வேண்டும். அதே நேரத்தில் முந்தைய ஜென்மத்தைப் பற்றிக் கவலை கொள்ளாது இறைவன் நமக்கு அளித்த வரப்பிரசாதமான இந்த மானுட ஜென்மத்தில் ஒருவருக்கொருவர் துரோகம் இழைக்காமல், தன்னலம் கருதாது வாழ்வோம். நம்மால் இயன்றவரை ஆதரவற்ற நிலையில்  இருப்பவர்களுக்கு உதவி செய்வோம்.

ஒரு ஜீவனுக்கு ஒருவேளை வயிறார உணவளித்தாலே அவன் அறியாமல் செய்த பாபம் அகலுகிறது என்கிறது தர்மசாஸ்திரம். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்போம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்வோம்.  பொருளாதாரரீதியாக மட்டுமல்ல, படிப்பறிவு உள்ளவர்கள் பாமரனுக்கு படிக்கக்  கற்றுக் கொடுக்கலாம். அதுவும் ஒருவகையில் பரிகாரமே. பரிகாரம் என்பது செய்த  தவறுக்கான பிராயச்சித்தம் அல்ல. விதிப்பயனை மாற்றி அமைக்கும் வழிமுறையும்  அல்ல. பரிகாரம் செய்வதால் விதிப்பயனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்  கிடைக்கிறது.மனம் பக்குவம் அடைந்தாலே துன்பம் என்பது காணாமல் போகிறது.

பூர்ணா புஷ்கலாவுடன் ஐயப்பன் இருக்கும் புகைப்படம் வீட்டில் வைத்து வருடம் முழுவதும் பூஜை செய்து வரலாமா? - மோகன்ராம்.

தாராளமாக பூஜை செய்து வரலாம். ஆசார, அனுஷ்டானத்தினை சரிவர கடைபிடிக்க இயலும் எனும் பட்சத்தில் நீங்கள் உங்கள் வீட்டிலேயே பூர்ணா-புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமியின் படத்தினை வீட்டினில் வைத்து வருடம் முழுவதும் ஆராதனை செய்து வருவதில் எந்தவிதமான தவறும் இல்லை. அதே நேரத்தில் ஐயப்பன் அன்னதானப்ரியன் என்பதால் வாரம் ஒரு முறையாவது தவறாமல் உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். வீட்டினில் செல்வ வளம் பெருகும்.

அந்திம ஸம்ஸ்காரங்கள் செய்வதற்கு பெண்களுக்கு உரிமை கிடையாதா? - கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

உரிமை என்பது வேறு, அனுமதி என்பது வேறு. ஒரு நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதங்களை வைக்கும் உரிமை ஒவ்வொரு வாதி, பிரதிவாதிக்கும் உண்டு. ஆனால், அவர்களால் சட்டம் படித்த வழக்கறிஞரின் துணையின்றி நேரடியாக வாதம் செய்ய அனுமதி கிடையாது. அதேபோல, அந்திம ஸம்ஸ்காரங்கள் செய்வதற்கு பெண்களுக்கு உரிமை உண்டு. ஆனால், நேரடியாக செய்வதற்கு அனுமதி இல்லை. அவர்கள் சார்பாக, அவர்களிடமிருந்து தர்ப்பைப்புல் வாங்கி எந்த ஒரு ஆணும் அந்த ஸம்ஸ்காரங்களைச் செய்யலாம். இதுபோன்ற ஸம்ஸ்காரங்களைச் செய்வதற்கு பெண்களின் உடல்நிலையும், மனநிலையும் ஒத்துழைக்காது என்பதால் இதற்கு அனுமதி மறுத்தார்கள். மற்றபடி அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு, ஆனால் நேரடியாகச் செய்வதற்கு மட்டும் அனுமதி இல்லை.

எலி தொல்லை தருகிறது. அதை விஷ மருந்து வைத்து சாகடித்தால் அது பாவச் செயலாகுமா? - இரா.வைரமுத்து, இராயபுரம்.


ஒரு ஜீவராசியைக் கொல்வது என்பது பாவச் செயலே. எலித்தொல்லை உண்டாகாத வண்ணம் நாம்தான் நம் சுற்றுப்புறத்தினைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதனை விடுத்து எலி வரும் அளவிற்கு வீட்டினிலும், கடைகளிலும் சாமான்களை அடைத்து வைத்து அதன் பின்பு எலி வருகிறது, தொல்லை தருகிறது என்று அதை விஷம் வைத்துக் கொல்வது என்பது தவறு. இதே விதி கரப்பான் பூச்சி, கொசு உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசியையும் கொல்லும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அந்தந்த ஜீவராசிகள் அவற்றிற்குரிய இடத்தில் உயிர்வாழ்கின்றன. அந்த ஜீவராசிகள் வசிக்கும் விதமாக நாம் நமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அவற்றைக் குறை சொல்வது தவறு. விஷமருந்து வைத்து எலியைச் சாகடிப்பது என்பது பாவச் செயலே. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஸ்லோகங்கள் சொல்லும் போது நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ அல்லது ஏதாவது வேலை செய்துகொண்டோ சொல்லலாமா? ஒரு இடத்தில் ஆசனம் போட்டு அமர்ந்துதான் சொல்ல வேண்டுமா?
 - கே.பானுமதி, சென்னை-91.


இன்றைய இயந்திரமயமான உலகில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனின் திருநாமத்தினைச் சொல்வதில் தவறில்லை. இறை வழிபாட்டிற்குரிய ஸ்லோகங்களை ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே சொல்லலாம். அதேநேரத்தில் நமது வழிபாடு என்பது சிரத்தையுடன் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் உதட்டளவில் பகவான் நாமாவினைச் சொல்லிக்கொண்டு மனதளவில் பகவானைப் பற்றிய சிந்தனையின்றி வேறு காரியத்தின் மீது கவனம் வைத்தோமேயாகில் அதனால் எந்தவிதப் பயனும் கிட்டப் போவதில்லை.

ஸ்லோகங்களையும், இறைவனின் திருநாமத்தையும் நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ அல்லது ஏதாவது ஒரு செயலைச் செய்யும்போதோ சொல்லலாம். தவறில்லை. அதே நேரத்தில் வேத மந்திரங்களை அவ்வாறு உச்சரிக்கக்கூடாது. வேதமந்திரங்களைச் சொல்லி பூஜை செய்யும்போதும், ஜபம் செய்யும்போதும் ஒரு இடத்தில் ஆசனம் போட்டு அமர்ந்து அதற்குரிய விதிமுறையின்படிதான் செய்ய வேண்டும். வேத மந்திரங்களுக்கும், ஸ்லோகங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

பெற்றோருக்குச் செய்யும் வருடாந்திர சிராத்தத்தை 12 வருடத்திற்கு மேல் செய்ய வேண்டியது இல்லை, காரணம் அந்த ஆத்மா மறுபிறவி எடுத்திருக்கும் என்கின்றனர். இது சரியா? - வெங்கட்நாராயணன், மயிலாடுதுறை.


தவறு. கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் அவனது ஆயுள் உள்ளவரை பெற்றோருக்குச் செய்யும் வருடாந்திர சிராத்தத்தை நிச்சயமாகச் செய்ய வேண்டும். எந்தச் சூழலிலும் செய்யாமல் இருக்கக் கூடாது. நம் அனைவருக்குள்ளும் ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என்ற மூன்றும் செயல்படுகிறது. ஜீவாத்மா என்பது உயிர்சக்தியைக் குறிக்கும். கிரியா சக்தி என்றும் சொல்லலாம். கிரியை என்றால் செயல்பாடு என்று பொருள்.நமது உடல் இயங்குவதற்கான சக்தியைக் கொடுப்பது இந்த ஜீவாத்மா. பரமாத்மா என்பது நமக்குள் இருக்கும் இறைசக்தியைக் குறிக்கும்.

இதனை ஞானசக்தி என்றும் சொல்லலாம். அன்பு, கருணை, இரக்கம் என அத்தனை நற்குணங்களையும் தருவது இந்த பரமாத்மா எனும் ஞானசக்தி. அந்தராத்மா என்பது நமக்குள் இருக்கும் ஆசையைக் குறிக்கும். இதனை இச்சாசக்தி என்றும் சொல்லலாம். இச்சை என்றால் ஆசை அல்லது விருப்பம் என்று பொருள். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என இந்த மனம் அலைகிறதல்லவா... அதாவது இந்த உலகில் நாம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளைத் தேடத் தூண்டுவது இந்த அந்தராத்மா.

இந்த மூன்றும் சரியான விகிதாச்சாரத்தில் சராசரி மனிதனின் உடம்பினில் இடம் பிடித்திருக்கின்றன. வெறும் பொம்மை ஆகிய இந்த உடம்பிற்குள் ஜீவாத்மா என்கிற உயிர்சக்தி உடலை இயங்கச் செய்கிறது. ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்கிறார் திருமூலர். இந்த பைக்குள் காற்று எனும் ஜீவாத்மாவை அடைத்தால் பிண்டம் உயிர் பெறுகிறது. மற்ற இரண்டு ஆத்மாக்களும் இந்த உடம்பினில் இணையவில்லை எனில் உயிர் இருந்தாலும் இது வெறும் ஜடமாகவே கருதப்படும். ஒரு சில குழந்தைகள் எந்த வித அசைவுமின்றி அப்படியே கிடப்பதைக் காண்கிறோம். இந்த குழந்தைகளுக்கு உயிர் இருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பது எதுவுமே தெரியாது.

இவர்களது உடம்பினில் வெறும் ஜீவாத்மா மட்டுமே இயங்கும். பிறந்த குழந்தை வளரத் தொடங்கும்போது பசியென்று அழுகிறது. ஒரு பொம்மையைப் பார்த்து விளையாடுவதற்கு வேண்டும் என்று விரும்புகிறது. இவ்வாறாக கொஞ்சம், கொஞ்சமாக அதன் மனம் இந்த உலக வாழ்க்கையை விரும்பத் தொடங்குகிறது. இதுவே அந்தராத்மா என்னும் இச்சாசக்தியின் செயல்பாடு. இச்சாசக்தியின் வேகம் அதிகரிக்கும்போது இந்த மனம் பேராசைப்படுகிறது. தவறு செய்யத் தூண்டுகிறது. இவை அனைத்தும் வெறும் மாயை., உலகினில் வாழ இது மட்டும் போதாது.

ஆண்டவனின் அருளும் தேவை, அதற்கு பிற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்ற ஞானத்தை நமக்குள் தோற்றுவிப்பது பரமாத்மா எனும் ஞானசக்தி. அந்தராத்மாவின் சக்தியை வெகுவாகக் குறைத்து பரமாத்மாவின் சக்தி அதிகரிக்கப் பெற்றவர்களை ஞானிகள் என்று போற்றுகிறோம். அதனால் இவர்களை கடவுளுக்குச் சமமாக ஆலயங்கள் எழுப்பி வழிபாடு செய்கிறோம். இயேசுநாதர், சாயிபாபா, இராகவேந்திரர் ஆகியோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இப்பொழுது உங்கள் கேள்விக்கான பதிலைக் காண்போம். உடலை விட்டு உயிர் பிரியும்போது நமது உடம்பிற்குள் இருந்த ஜீவாத்மா எனும் கிரியாசக்தி வேறு ஒரு பிண்டத்தினைச் சென்றடைகிறது. அந்த பிண்டம் உயிர்பெற்று உலகினில் பிறவி எடுக்கிறது. இந்த ஆத்மாவைத்தான் வேறுபிறவி எடுத்துவிட்டதாக நாம் கருதுகிறோம். நமக்குள் இடம்பெற்றிருந்த பரமாத்மா எனும் ஞானசக்தி இறைவனின் பாதத்தைச் சென்றடைகிறது. இதனைத்தான் பரமபதம் அடைந்தார் அல்லது இறைவனடி சேர்ந்தார் என்று குறிப்பிடுகிறார்கள்.

அந்தராத்மா என்று அழைக்கப்படும் இந்த இச்சாசக்தியே ஆவியாக அலைகிறது. இந்த ஆத்மாவிற்கு நாம் இறந்துவிட்டோம் என்பது அவ்வளவு எளிதாகப் புரிவதில்லை. அந்த ஆத்மாவை அமைதி கொள்ளச் செய்து, அதனை பித்ருலோகத்திற்குச் சென்றடையச் செய்வதற்குத்தான் நாம் கரும காரியங்களைச் செய்கிறோம். அவரவருக்கு உரிய மத சம்பிரதாய சடங்குகளைச் செய்து பித்ருலோகத்திற்குச் சென்றடையச் செய்வதற்கான கடமை பிள்ளைகளுக்கு உரித்ததாகிறது.

இந்த அந்தராத்மாவிற்குத்தான் பிரதி வருடம் திவசம் கொடுக்கிறோம், அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்கிறோம். ஆக நீங்கள் கேட்ட உயிர் எனும் ஆத்மா மூன்று வகைப்படுகிறது.அதில் ஒன்று வேறு ஒரு இடத்தில் மீண்டும் பிறக்கிறது.ஒன்று இறைவனின் பாதத்தைச் சரணடைகிறது.மூன்றாவது பித்ருலோகத்தைச் சென்றடைகிறது என்கிறது தர்மசாஸ்திரம். ஆக பித்ருலோகத்தில் வாழுகின்ற நம் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர அவசியம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வம்சம் நல்லபடியாக வாழும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்