SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்கள் கொடுத்த கூரத்தாழ்வான்

2018-02-05@ 09:52:26

கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்: 05.02.2018

ராமானுஜருடைய முதல் சீடர்கள் என்கிற வகையில் முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் குறிப்பிட்டுச் சொல்வார்கள். குரு பக்திக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கூரத்தாழ்வான் என்று பின்னால் அழைக்கப்பட்ட திருமறுமார்பன். இவர் கூரம் நாட்டு அரசர். அரச போகங்களுடன், அதிகார மதிப்புகளுடன் கோலோச்சியவர். அரச வழக்கப்படி இரவு நேரங்களில் நாட்டு நிலைமையை கண்காணிக்க நகர்வலம் வருவார் அவர். ஒருநாள் ஒரு வீட்டில் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதையும், நடுநடுவே அழுகுரலும் கேட்டு பிறர் அறியாத வண்ணம் அந்த வீட்டுக்கு அருகே சென்று கவனித்தார்.  விவரம் தெரிந்தது. அதாவது அந்த வீட்டுப் பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஜாதகப் பொருத்தம் பார்த்த ஜோதிடர்களோ, அந்தப் பெண்ணுக்குத் திருமணமானால் திருமணம் ஆன அன்றே அவளுடைய கணவன் இறந்துவிடுவான் என்று கணித்துச் சொல்லி அந்தக் குடும்பத்தில் வேதனையை விதைத்திருந்தார்கள்.

அது பெரிதாக வளர்ந்து வீட்டுப் பெரியவர்களை வாக்குவாதத்தில் ஈடுபடுத்தியது; அப்பாவிப் பெண்ணை மனங்கலங்கி அழ வைத்தது. இந்தத் தகவல் ஊரெங்கும் பரவவே அவளை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. இந்த அவமானமும் சேர்ந்து பெற்றவர்களைப் பெரிதும் பேதலிக்க வைத்தது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது இப்படி வேதனைப்பட்டு  மருகி நித்தம் நித்தம் உருக்குலைவதைவிட அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிட்டால் என்ன என்று வக்கிரமாக யோசிக்க ஆரம்பித்தார்கள். இது சம்பந்தமான விவாதங்களைத்தான் மன்னர் கேட்டார். ஒரு முடிவுடன் தன் அரண்மனைக்குத் திரும்பினார். மறுநாள் மன்னர், அந்தக் குடும்பத்தினரை அழைத்துவரச் செய்தார். அவர்களுடைய துயரங்களை அவர்கள் சொல்லக் கேட்டார். பிறகு அவர்களைப் பார்த்து தீர்க்கமாகச் சொன்னார்:

‘‘உங்கள் பெண் ஆண்டாளை நானே மணந்து கொள்கிறேன்.’’ அதைக் கேட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மட்டுமல்லாது அந்த அரசவையே அதிர்ந்தது. ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது! அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடக்கவில்லை என்றால் அது அவளுடைய விதி. அதற்காக மன்னர் தன்னையே தியாகம் செய்துகொள்வது என்பது என்ன நியாயம்?’ என்று பலரும் முணுமுணுத்தார்கள். ஆனாலும் மன்னர் தன் முடிவிலிருந்து மாறவில்லை. ராஜ ஜோதிடர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபோது அவர்களிடம் தனியே பேசினார் மன்னர். பிறகு அவர்களும் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்து அந்தத் திருமணத்துக்கு சம்மதித்தனர். ஒரு திருமணம் என்பது தாம்பத்திய வாழ்வில்தான் நிறைவடைகிறது. அந்த உறவை மேற்கொள்ளாவிட்டால் தனக்கு எந்த பாதிப்பும் நிகழாது என்ற ஜோதிட கணிப்பாலேயே அந்தப் பெண்ணின் விதியை அவர் மாற்றினார்.

அவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமறுமார்பன் மிகவும் ரகசியமாக தன் முடிவை ஆண்டாளிடமும் அவளுடைய பெற்றோரிடமும் கூறினார். மன்னர் தன் உயிரையும் துச்சமாக மதித்துத் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்ததில் அந்தக் குடும்பமே ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. அவர் தன் முடிவைச் சொல்லக் கேட்டதுமே அவருடைய தியாகத்துக்கு எல்லையே இல்லையோ என்றும் வியந்தது. மணமுடித்து, கணவன் இல்லாது போவதைவிட, மணமாகி, தாம்பத்திய உறவு இல்லாமல் இருப்பது பெரிய துன்பமில்லை என்றே ஆண்டாளும் கருதினாள். அவருக்கு ஓர் அடிமைபோலவே தான் பணியாற்றி வாழ்க்கையை மேற்கொள்ள மனதுவந்து முன்வந்தாள். திருமணத்துக்குப் பிறகு, அவர் மரிக்காதது, விவரம் தெரியாதவர்களுக்கு மர்மப் புதிராக இருந்ததை உணர்ந்து மன்னரும் ஆண்டாளும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

ஆனால், நாளடைவில் தன் வாழ்க்கை செல்லவேண்டிய திசை வேறு என்பதைப் புரிந்துகொண்ட மன்னர், தன் செல்வங்களையெல்லாம் ஏழை எளியவர்களுக்கு  வழங்கி விட்டு, ஆட்சியை, பொதுநலம் நாடும் ஓர் அமைச்சரின் பொறுப்பில் விட்டுவிட்டு மனைவியுடன் புறப்பட்டார். போகும் வழியில் ஆண்டாள், அவரிடம், ‘இங்கே கள்வர் பயம் உண்டா?’ என்று கேட்டாள். கள்வரை நினைத்து எதற்காக பயப்படவேண்டும்? தம்மிடம் ஏதாவது பொருள் இருந்தால் அது களவாடப்படுமோ என்று வேண்டுமானால் அச்சம் கொள்ளலாம். ஆனால், எதுவுமே வேண்டாம் என்று உதறிவிட்டு வந்த பிறகு மனைவி இப்படிக் கேட்டது அவருக்கு வியப்பாக இருந்தது. ஆனால் ஆண்டாளோ தான் மடியில் மறைத்து வைத்திருந்த ஒரு தங்கத் தட்டை எடுத்துக் காட்டினாள். ‘இதனால்தான் கேட்டேன். தாங்கள் உணவருந்த வசதியாக இருக்குமே என்று கொண்டுவந்தேன்’ என்றும் சொன்னாள்.

உடனே கோபமடைந்த திருமறுமார்பன், அந்த தட்டைப் பற்றி, வெகுதொலைவுக்குத் தூக்கி எறிந்தார். ‘இனி கள்வர் பயம் உனக்கு இருக்காது’ என்றும் கூறினார். ஒரு ஆசானைத் தேடிக் கண்டுபிடித்து அவர் நிழலில் தன் வாழ்க்கையை உய்வடையவைக்க அவர் விரும்பினார். நேராக காஞ்சி மாநகருக்கு வந்து அங்கு கோயில் கொண்டிருக்கும் வரதராஜப் பெருமாளுக்கு விசிறி வீசும் திருப்பணியை மேற்கொண்டார். இந்தப் பணியில் அவருக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்ன தெரியுமா? பெருமாளுடன் நேரடியாக பேசும் பேறு! அதோடு இறைத்தன்மை நிறைந்த ஆசார்யார்களை சந்திக்கும் அரிய வாய்ப்புகளையும் அவர் பெற்றார். அந்த வகையில் திருக்கச்சி நம்பிகளைக் கண்டு அவரை வணங்கிய அவர், அவர் மூலம் ராமானுஜரை சரணடைந்து அவருக்கு சேவை செய்வதே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டார்.

 ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்ய விரும்பிப் புறப்பட்டபோது இவரும் உடன் சென்றார். அரங்கன் மேலும் இவருக்கு ஆழ்ந்த பக்தி உண்டாயிற்று. ஒருநாள் உண்ண உணவேதும் கிடைக்காத நிலையில் கணவர் சற்று களைப்பாய் இருப்பதைக் கண்ட அவர் மனைவி, மனம் பொறுக்காமல், அரங்கனை நினைத்து ‘உன் பக்தன் பசியால் வாடி இருப்பது உமக்குத் தெரியவில்லையா?’ என்று மனமுருக பிரார்த்தனை செய்தாள். சிறிது நேரத்தில் அரங்கன் கோயிலிலிருந்து பணியாளர்கள் வந்து பல பிரசாதங்களை ஆழ்வானிடம் கொடுத்து ‘அரங்கனின் ஆணைப்படி இதை தங்களுக்கு கொடுக்கிறோம்’ என்று சொல்லிச் சென்றார்கள். இதைக்கண்ட திருமறுமார்பன், நடந்ததை ஊகித்து, ஆண்டாளிடம் ‘நீ அரங்கனிடம் எனது பசியாற்ற வேண்டிக் கொண்டாயா? யாருக்கு எதை, எப்போது, எப்படித் தரவேண்டும் என்பது அவனுக்குத் தெரியாதா? அவனிடம்போய் இவ்வளவு அற்பமாக நடந்துகொண்டு விட்டாயே’ என்று கடிந்து கொண்டார்.

கிரக மாறுதல்களால் ஜோதிட சக்கரம் சுழல, அரங்கன் பிரசாத அருளாலும் திருமறுமார்பனுக்கும் ஆண்டாளுக்கும் இரண்டு குமாரர்கள் அவதரித்தார்கள். அவர்களே பராசர பட்டர், வேதவியாச பட்டர். திருமறுமார்பனுடைய தொண்டு, குருபக்தி, வைராக்யம், ஞானம், அனுஷ்டானம் ஆகியவற்றைக் கண்ட பகவத் ராமானுசரே அவரை ‘ஆழ்வான்’ என்று அழைக்க ஆரம்பித்தாராம். அதுவே நாளடைவில், இவர் பிறந்த தலத்தையும் சேர்த்து கூரத்தாழ்வான் என்று நிலைத்து விட்டது. சன்யாசிகளுக்கு மிக முக்கியமான ஆபரணங்கள் தண்டும், பவித்ரமும் ஆகும். பகவத் ராமானுசர் இவரையும் முதலியாண்டானையும் தனது தண்டும் பவித்திரமும் என்றே கூறிக்கொள்வாராம். கடும் சோதனைகளுக்கு பிறகு திருக்கோட்டியூர் நம்பிகளிடம் உபதேசம் பெற்ற ராமானுஜருக்கு தான் உபதேசித்ததை யாருக்கும் சொல்லக் கூடாது என்று நம்பிகள் நிபந்தனை விதித்தார்.

ஆனால், ராமானுஜர் தனது தண்டும், பவித்திரமுமான முதலியாண்டானுக்கும் கூரத்தாழ்வானுக்கும் அந்த திருமந்திர உபதேசம் செய்ய அனுமதி பெற்றார். இதிலிருந்தே அந்த சீடர்களின் தெளிந்த குரு பக்தியும் குருவின் சீரிய திருவருளும் புரிகிறது.       ஒருமுறை ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் எழுத காஷ்மீரம் சென்றபோது கூரத்தாழ்வானையும் அழைத்துச் சென்றார். அங்கு அதிகாரிகள் சில கட்டளைகளை விதித்து சில பழைய கிரந்தங்களை ராமானுஜரிடம் கொடுத்தபோது அவற்றை ஒரே ஒருமுறை படித்தே நினைவில் இருத்திக்கொண்ட கூரத்தாழ்வான், தான் ஸ்ரீபாஷ்யம் எழுத, பெரிதும் உதவி புரிந்ததை ராமானுஜரே பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தில், சோழ மன்னனால் ராமானுஜரின் உயிருக்கு ஆபத்து நேரிட இருந்தது. தன் குருநாதரைக் காப்பதற்காக, கூரத்தாழ்வான் தானே ராமானுஜராக வேடம் பூண்டு அரசபைக்குச் சென்று நாராயணனின் மகிமையை தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

இதனால் கோபம் கொண்ட அரசன் அவர் கண்களை பிடுங்க உத்தரவிட்டான். உடனே ஆழ்வானோ ‘உன்னைப் போன்ற பாவிகளை காண்பதைவிட கண்கள் இல்லாமல் இருப்பதே மேல்’ என்று கூறி, தன் கண்களைத் தானே பிடுங்கிக் கொண்டார். பின் பல வருடங்கள் கழித்து ராமானுஜரின் வேண்டுதலால் காஞ்சி வரதராஜன் இவருக்கு கண்பார்வை அருளினான். ஒருகாலத்தில் தனக்கு விசிறி வீசியவரல்லவா!  தள்ள இயலாத முதுமையைத் தான் அடைந்துவிட்டதால், தனக்கு முக்தியளிக்குமாறு கூரத்தாழ்வான் அரங்கனை வேண்டிக்கொள்ள, அரங்கனும் அவ்வாறே அருளினான். இதையறிந்த ராமானுஜர் ‘எனக்கு முன்பாக நீவிர் வைகுந்தம் செல்வது முறையா?’ என்று விரக்தியுடன் கேட்டார். அதற்கு, ஆழ்வான், ‘நான் முன்னே சென்று தங்களை வரவேற்கும் பாக்கியத்தைப் பெறவே இவ்வாறு வேண்டிக் கொண்டேன்’ என்று கூறி ராமானுஜரைத் தேற்றினார். வைராக்கியம், ஆழ்ந்த புலமை, ஞானம் நிறைந்தவரும், ஆசாரியனுக்காக தன் கண்களையே இழந்தவரும் பேரறிவாளனுமாகிய கூரத்தாழ்வானை வணங்குவோம்.

எம்.என்.ஸ்ரீநிவாசன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • raavana_2018

  டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

 • delhi_skywalkopns

  டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

 • 6thday_tirupathifestiv

  நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

 • odisa_andhratitli

  ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

 • trumph_floodareaameric

  அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்