SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடர்கள் களையும் இடைமருதன்!

2018-02-03@ 09:56:22

திருவிடைமருதூர்

பாண்டிய நாட்டை ஆண்ட வரகுணன் வேட்டையாடி விட்டு குதிரையில் விரைவாக நாடு திரும்பினான். அவன் வரும் வழியில் ஓர் அந்தணன் உறங்கிக் கொண்டிருந்தான்.  எதிர்பாராத விதமாக அந்த அந்தணன் குதிரையின் அடியில் அகப்பட்டு இறந்தான்.  மன்னன் இதை அறியவில்லை. பின்னால் வந்த காவலர்கள் இந்தச் செய்தியை மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் நடுங்கினான். பிரம்மஹத்தி (கொலைப்பழியால் ஏற்படும் தோஷம்) அவனைப் பிடித்தது. பல தான தருமங்கள் செய்தும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.  மன்னனின் மனநலம் பாதிப்படைந்தது. மதுரைப் பெருமானை வலம் வந்து வழிபட்டான். ஒருநாள் மதுரை சோமசுந்தரப் பெருமான், மன்னா... சோழ அரசன் ஒருவன் உன்னோடு போர் செய்ய வந்து போரிட்டுத் தோற்று ஓடுவான். நீயும் அவனுடன் தொடர்ந்து செல்.  இடைமருது அடைவாய். அப்போது இந்தப்பழி உன்னை விட்டு அகலும் என்று அருளினார்.

இறைவன் அருளியதைப் போலவே நிகழ்ந்தது. மன்னன் திருவிடைமருதூரை அடைந்து இறைவனைப் பணிந்து, கீழைக் கோபுர வாயில் வழியே கோயிலினுள் புகுந்தான்.  அவனைத் தொடர்ந்த பிரம்மஹத்தி கோயில் வாயிலிலேயே நின்றுவிட்டது. (அமர்ந்த நிலையில் முழங்கால் குத்திட்டு பிரம்மஹத்தி சிற்பம் கோபுரத்தின் நுழைவாயிலில் உள்ளது) மன்னன் பெருஞ்சுமை கழிந்தது போன்று உணர்ந்தான். இறைவன், மன்னனே நீ கீழைக் கோபுரவாயில் வழியில் செல்லாது, மேலை வாயிலின் வழியே செல் என்றருளினார். இவ்வாறு பிரம்மஹத்தி தோஷம் கழிந்ததால் மன்னன் மகிழ்ந்து இறைவனுக்குத் திருப்பணிகள் பல செய்து வழிபட்டான். இந்த வரலாறு திருவிடைமருதூர் தல புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றும் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருக்கோயில் வந்து வழிபட்டு நல்ல நிலையை அடைகிறார்கள்.

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத மனநோயை மகாலிங்கப் பெருமான் மருத்துவராக இருந்து சரி செய்வது வியப்புக்குரியது. ஒரு சமயம் குரு பகவானால் சந்திரனுக்குச் சாபம் ஏற்பட்டது. அதனால் பதவி, அரச செல்வம் அனைத்தையும் இழந்தான். துர்வாச முனிவர் கூறியபடி, சந்திரனின் 27 மனைவிமார்கள் தனது கணவனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இடைமருதூரில் 27 நட்சத்திர லிங்கங்களை நிறுவி நாள்தோறும் பூஜைகள் செய்தனர். இப்பூஜையின் பலனால் சந்திரன் இழந்த பதவி, அரச செல்வத்தைப் பெற்றான். இதன் காரணமாக இத்திருக்கோயிலில் உள்ள நவகிரகங்களில் சந்திரனின் உருவம் மட்டும் உயர்ந்து காணப்படுகிறது.  

நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கி வளம் பெறுவர். திருக்கோயில் இரண்டாம் சுற்றுப் பிராகாரத்தின் தென்பாகத்தில் பிரகத்சுந்தரகுஜாம்பிகை அருள்பாலிக்கின்றாள்.  இவ்வன்பிற் பிரியாளை மனமுருகி வழிபட்டால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை உண்டாகும். மேலும் இத்தலத்தில் சாந்த சொருபியாக அருள்பாலிக்கும் அன்னை முகாம்பிகையை அன்புடன் வழிபட்டால் நீண்ட நாள் திருமணத் தடைகள் விலகும். இன்னும் பல சிறப்புகள் கொண்ட திருவிடைமருதூர், கும்பகோணம்   மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 
எஸ். ஜெயசெல்வன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

 • sirya_dead123

  சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X