SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனப்பூசல் நீக்கும் தைப்பூச விரதம்

2018-01-31@ 08:48:01

31.1.2018 - தை பூசம்

கல்யாணவீடு கலகலப்பாக இருந்தது. திருமண தம்பதியின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து சிலர் மெய் மறந்து நின்றிருந்தார்கள். வேறு சிலரோ ‘மொய்’ மறந்தும் நின்றிருந்தார்கள். மண்டபத்துக்குள் நுழைந்த புவனேஸ்வரி, தனக்குத் தெரிந்தவர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். கூடவே கிருத்திகாவும் தீபாவும் அதே கண்ணோட்டத்திலேயே உள்ளே நுழைந்தார்கள். பளிச்சென்று மூவர் கண்களும் ஒரேயிடத்தில் லயித்தன. ஆமாம் பவானி மாமி சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க, அவரைச் சுற்றிலும் பல வயதுகளில் பெண்கள் அவரிடம் பலவிதமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த ஆடியன்ஸோடு இந்தப் பெண்களும் போய்ச் சேர்ந்து கொண்டார்கள்.‘‘அடுத்த வாரம் தைப்பூசம் வருகிறதாமே மாமி, அதற்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்வது வழக்கமா? விரதம், வழிபாடு என்று...’’ கூடியிருந்தவர்களில் ஒரு பெண் கேட்டாள். ‘‘நிச்சயமா...’’ மாமி விளக்க ஆரம்பித்தாள்.

‘‘அதுக்கு முன்னாலே அந்த விரதம் இருப்பதற்கான புராண காரணம் அல்லது கதை ஏதேனும் இருக்குமே மாமி, அதையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன் ஸ்வாரஸ்யமா இருக்கும்’’ ஏற்கனவே மாமியிடம் நெருக்கமாகப் பழகிய உரிமையில் கேட்டாள் புவனேஸ்வரி.‘‘வா, புவனேஸ்வரி, உன் பெண்களும் வந்திருக்காங்களா? சரி, எல்லோருக்குமாக சேர்த்து சொல்றேன். இந்த தைப்பூச விரதமே, மனப்பூசலை நீக்குவதற்காகத்தான். தாரகாசுரன்ங்கற அசுரனை வேலவன் மாய்த்த நாள்தான் தைப்பூசத் திருநாள். தை மாசத்தில் வரும் பூச நட்சத்திர தினம். அரக்கன் ஒழிந்த மகிழ்ச்சியைத்தான் தைப்பூச விரதமாக நாம் கொண்டாடுகிறோம்.’’‘‘அரக்கன் ஒழிந்த நாளை நாம் மகிழ்ச்சியாகத்தானே கொண்டாடணும், தீபாவளி மாதிரி? ஆனா நீங்க விரதம் இருக்கச் சொல்றீங்களே?’’ என்று ஒரு பெண் கேட்டாள்.

  ‘‘அரக்கனை ஆறுமுகன் வதம் செய்தார். அந்த நாளை சந்தோஷமான நாளாகக் கொண்டாடுவதுதான் நியாயம். ஆனா, அரக்கன் என்பவன் அகங்கார குணமுடையவன். ஆணவம் பிடிச்சவன், பிறர் துன்பத்திலேயேதான் சுகம் காண்பவன். அவன் இறந்த நாளில் நாம் விரதம் இருந்து வதம் செய்த முருகனைப் போற்றித் துதிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம், அந்த அரக்கனுக்குச் சமமாக நம் மனசுக்குள் இருக்கற தீய எண்ணங்களை நாம் அழிக்கணும்கறதுதான். நம் துர் சிந்தனைகள் நம்மை விட்டுப் போய்விட்டதுன்னாலேயே நமக்கு அது சந்தோஷம்தானே?’’ மாமி கேட்டாள். ‘‘சரியாகச் சொன்னீங்க மாமி.’’ கிருத்திகா மாமியை ஆமோதித்தாள்.‘‘இந்த தைப்பூச விரதம் மகிமை வாய்ந்தது. அதுக்குக் காரணமான கதையை சொல்றேன். ‘‘தாரகாசுரன்ங்கற அசுரன் தனக்குச் சமமாக யாருமே கிடையாதுங்கற அகங்காரத்தோட திரிஞ்சான்.

அப்பாவிகளையும் முனிவர்களையும் துன்புறுத்தறது அவனோட பொழுதுபோக்கு. தவம் இருக்கற ரிஷிகளை, அவங்களோட தவம் நிறைவேறாமச் செய்யறது, அவனுக்கு விளையாட்டு. அதேபோல, யாகம் நடத்தி, உலகமெல்லாம் ஆன்மிக மணம் பரப்பி, நன்மை விளைய பாடுபடற வேதாசாரியர்களை வேதனைக்குள்ளாக்குறது அவனுக்கு வேடிக்கை. தாரகன் இப்படி நடந்துகிட்டதுக்கு முக்கியமான காரணம், யாரும் தன்னைவிட மேலானவங்களா வந்துடக்கூடாதுங்கறதுதான்... ஆச்சா, அந்த தாரகாசுரனால பாதிக்கப்பட்டவங்கள்ளாம் கண்ணீரும் கம்பலையுமாக அழுது அரற்றியபடி சிவபெருமான்கிட்டே வந்து தஞ்சமடைந்தாங்க.’’ ‘‘ஆமாம். அல்டிமேட் அவர்தானே?’’ தீபா சொன்னாள். ‘‘ஆமாம்,’’ மாமி ஆமோதித்தாள். ‘‘தன்னிடம் முறையிட்ட அவர்களின் துன்பத்தைப் பார்த்து மனம் கசிந்தார் ஈசன். அதேசமயம் தன் மகன் முருகனின் ஆற்றலையும் உலகம் அறியச் செய்யணும்னு ஆசைப்பட்டார். அதனால முருகனைக் கூப்பிட்டார். ‘‘நம்முடைய அன்பர்களையெல்லாம் தாரகாசுரன் ரொம்பவும் படுத்தறான். அதனாலே அவனை அடக்க வேணும்.

அது உன்னால முடியும். போய், வென்றுவா...ன்னு அனுப்பிவெச்சார். கூடவே, தோமாரம், துஜாயுதம், பட்டாக்கத்தி, வஜ்ராயுதம், அம்பு, அங்குசம், தண்டாயுதம், கமலாயுதம், கோதண்டம், ஈட்டி, புரச்வதாயுதம்னு பதினோரு வகையான ஆயுதங்களையும் கொடுத்தனுப்பினார்’’‘‘அப்பா சரி, அம்மா எதையும் கொடுத்தனுப்பலியா?’’ ஒரு பெண் கேட்டாள். ‘‘அம்மா கொடுக்காமலிருப்பாங்களா என்ன?’’ மாமி பதில் சொன்னாள். ‘‘அவங்க அவனோட தலையைத் தடவி, ‘வெற்றி உனக்குதான். இந்தா இந்த வேலாயுதத்தையும் வாங்கிக் கொள்’னு சொல்லிக் கொடுத்தனுப்பினாள். முருகன், தன் தளபதி வீரபாகுவோடும் ஏராளமான படைவீரர்களோடும் புறப்பட்டுப் போய் கநமானம்ங்ற மலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே தங்கி தன் படைவீரர்கள்கிட்டே போர் உத்திகளைப் பத்திப் பேசி, ஆலோசனை பண்ணினான். அப்புறம் அங்கேயிருந்து புறப்பட்டு ஏமகூடம் வந்தாங்க. அங்கேயிருந்து பார்த்தபோது ஒரு பெரிய மலையும் பக்கத்திலேயே ஒரு வண்ணமயமான நகரமும் தெரிஞ்சுது...’’

‘‘மாமி, நீங்க வர்ணிக்கற முருகனோட போர் ஏற்பாடுகள் எல்லாம் ரொம்ப ரியலிஸ்டிக்கா இருக்கு...’’ ஒரு சூடிதார் பெண் சொன்னாள். மாமி தொடர்ந்தாள்: ‘‘அந்த இரண்டையும் பாத்து மிச்சவங்கள்ளாம் அந்த அழகிலே லயிச்சும் போயிருந்தாங்க. ஆனா முருகனுக்கு மட்டும் அதிலே ஏதோ மர்மம் இருக்கறதாகப் பட்டது. உள்ளுணர்விலே ஏதோ சந்தேகம் தட்ட அந்த மலையையே பார்த்துகிட்டிருந்தான். அப்போ அங்கே நாரதர் வந்தார். அவர் முருகனை வணங்கிவிட்டு, ‘‘முருகா, இதோ உன் முன்னாலே இருக்கற இந்த மலைக்கு கிரெளஞ்ச மலைன்னு பேரு. கிரெளஞ்சங்கிற அரக்கன் ஒருத்தன் அகஸ்திய முனிவரோட சாபத்தினால இப்படி மலையாக மாறிவிட்டான். ஏதோ சும்மா ஆடாம அசையாம இருக்கானேன்னு இவனைப் பத்தி குறைவாக மதிப்பிட்டுடாதே. இவனைப் பொடிப் பொடியாக அழிச்சாதான் இவன் மொத்தமா அழிவான். பக்கத்திலே தெரியறதே ஒரு நகரம், அதுக்கு பேரு மாயாபுரி.

அதுக்குள்ளேதான் தாரகாசுரன் இருக்கான். அந்த தாரகாசுரனை அழிக்கறத்துக்குத்தான் நீ வந்திருக்கே. ஆனா, அவனை அழிக்கறத்துக்கு முன்னாடி கிரெளஞ்சனை அழிக்கணும்’’ அப்படீன்னார். ‘‘அட.. நாரதர் கலகம்தானே செய்வார்? இங்கே நன்மை செய்ய வந்திருக்கார் போலிருக்கே?’’ கிருத்திகா கேட்டாள்.
  ‘‘நாரதர் சொன்னதைக் கேட்டதும் முருகன், ‘‘நான் போய் சண்டை போடணுன்னே இல்லே நாரதரே, என்னோட தளபதியும் படைகளும் அதை சுலபமாகச் செய்துடுவாங்க’’ ன்னு சொல்லிட்டு தளபதி வீரபாகுவையும் படைவீரர்களையும் தாரகாசுரன் வாழும் நகரத்துக்கு அனுப்பி வெச்சான். கிரெளஞ்சமலை அசையாம இருக்கறதுனால, அது தங்களை ஒண்ணும் செய்யாதுன்னு நினைச்சு, அந்த மலைக் குகைக்குள்ள புகுந்து நகரத்தை நோக்கிப் போனாங்க. அங்கே தாரகாசுரனோடு கடுமையான போர் நடந்தது. அசுரன் அவங்களையெல்லாம் ஆவேசமாகத் தாக்கினான்.

முருகனோட தளபதிகள்ல ஒருத்தனான வீர கேசரியைத் தன்னோட கதாயுதத்தால் தாக்கி மூர்ச்சையடைய வெச்சான். வீரபாகுவுக்குக் குழப்பமாக இருந்தது. அது என்னவோ தெரியலே, அவங்களோட சுறுசுறுப்பும் வேகமும் ரொம்பவும் குறைஞ்சமாதிரி தெரிஞ்சுது...’’‘‘அட முருகா, அப்புறம்?’’‘‘இதைப் பார்த்த நாரதர் முருகன்கிட்ட ஓடி வந்தார். ‘முருகா, இனிமேலும் நீ தாமதிக்காதே. உன்னோட வீரர்கள் எல்லோரும் பலமிழந்தவங்களா ஆகறாங்க. மிகப் பெரிய வீரர்களான அவங்கள்ளாம் தாரகாசுரனை எதிர்க்க முடியாம தவிக்கறதுக்குக் காரணம் இந்த கிரெளஞ்ச மலைதான். இதுக்குள்ள போற யாருக்கும் அவங்க பலம் குறைஞ்சிடும். அது தாரகாசுரனோட தந்திரம். தன்னை எதிர்க்க வர்றவங்களையெல்லாம் இந்த மலை வழியா வரும்படி அவன் மாயம் செய்வான்; எதிராளிகள் எல்லோரும் பலம் இழந்து மயங்கி விழுந்திடுவாங்க. அதனால முதல்ல கிரெளஞ்ச மலையை உடச்சுத் தூளாக்கு. அப்புறமா தாரகாசுரனை வதம் பண்றது ரொம்ப ஈஸி’ அப்படீன்னார் நாரதர். அதைக் கேட்டதும் முருகனுக்கு அப்படியே கோபம் பொத்துகிட்டு வந்தது.

உடனே தன்னோட அப்பா கொடுத்த ஆயுதங்களை எடுத்துகிட்டுபோய், கிரெளஞ்ச மலைமேல வீச அந்த மலை அப்படியே பொடிப் பொடியாக நொறுங்கி தரைமட்டமாச்சு. இதைப் பார்த்த தாரகாசுரனுக்கு ஆத்திரம் பொங்கிகிட்டு வந்தது. தன்னோட உத்தியைப் புரிஞ்சுகிட்டு, தன் பலத்தை அழிச்சுட்டானேன்னு முருகன் மேல வெறியோட தாக்க ஆரம்பிச்சான். உடனே வேலவன் தன்னோட அம்மா கொடுத்த வேலை எடுத்து அவன் மேல எறிஞ்சான். குறி தப்பாம அந்த வேல் அப்படியே அவனோட மார்பிலே பாய்ஞ்சு அவனை மாய்ச்சுது. அசுரனாலே அதுவரைக்கும் வேதனைப்பட்டவங்க எல்லோரும் இப்ப ரொம்பவும் சந்தோஷப் பட்டாங்க. ‘முருகனுக்கு அரோகரா, எங்கள் வினை தீர்த்த வேலவனுக்கு அரோகரா’ அப்படீன்னு ஓங்காரமிட்டுப் பாடி அவனை வாழ்த்தி தங்களோட நன்றியைத் தெரிவிச்சுக்கிட்டாங்க.’’

‘‘அப்பாடா, இப்பதான் நிம்மதியாச்சு!’’ ஒரு வயதான பெண்மணி சொன்னாள். ‘‘சரி, இந்த விரதத்தை எப்படி கடைப்பிடிக்கிறது?’’‘‘இந்த தைப்பூச விரதத்தன்னிக்கு சில பக்தர்கள் ஏதாவது வேண்டுதல்னு வெச்சிருந்து அதை நிறைவேற்ற முருகனோட அறுபடை வீடுகள்ல ஏதாவது ஒரு தலத்துக்குப் போய் பிரார்த்தனை செய்வாங்க. காவடி எடுக்கறது, அலகு குத்திக்கறது, மொட்டை அடிச்சுக்கறதுன்னும் சிலர் பிரார்த்தனையை நிறைவேற்றுவாங்க. சபரிமலை யாத்திரைக்கு மாலை போட்டுக்கறா மாதிரி இந்த தைப்பூச விரதத்தையும் சிலபேர் மாலை போட்டுகிட்டு குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்து நடைப்பயணமாக ஏதாவது முருகன் திருத்தலத்துக்குப் போய் வருவாங்க. இதெல்லாம் அவங்கவங்க வழக்கப்படியோ பரம்பரை பரம்பரையாக குடும்பத்திலே அனுசரிச்சுகிட்டு வர்ற மரபுப்படியோ பண்ணிக்கலாம்...’’

‘‘வீட்டிலேயே இருந்தபடி என்ன செய்யலாம் மாமி? கோயில் பயணம் மேற்கொள்ள முடியாதவங்க எப்படி செய்யலாம்?’’ ஒரு பெண் கேட்டாள். ‘‘தைப்பூசத்தன்னிக்கு அதிகாலையிலேயே எழுந்து, வழக்கமா பண்ற பூஜையைப் பண்ணுங்க. பக்கத்திலே இருக்கற முருகன் கோயிலுக்குப் போய் மனமுருக வேண்டிக்கோங்க. அன்றைக்கு முழுவதும் எதுவும் சாப்பிடாம பட்டினி இருக்கறது நல்லது. உடம்பு ரொம்ப முடியாதவங்க கொஞ்சமா சாத்வீக உணவை எடுத்துக்கலாம். நீராகாரம் மட்டுமே எடுத்துக்கறதும் நல்லதுதான். அன்னிக்கு முழுசும் வேறே எந்த சிந்தனையும் இல்லாம முருகனை மட்டுமே நினைச்சுகிட்டு, முருகன் பாடல்களையே பாடிகிட்டிருங்க. ஆடியோ சி.டி.யிலும் முருகன் துதி கேட்கலாம். ராத்திரி பால், பழம்னு சாப்பிட்டுட்டு அன்றைய பொழுது நல்லபடியா முடிஞ்சதுக்கும் இனி வர்ற நாட்கள் எல்லாம் நல்லபடியா நடக்கணும்னும் வேண்டிகிட்டு தூங்கப் போகலாம்...’’

‘‘அப்படீன்னா இந்த விரதத்தை ஏதேனும் பலன் எதிர்பார்த்து இருக்கணுங்கறதிலே, இல்லையா மாமி?’’ கிருத்திகா கேட்டாள். ‘‘அப்படியில்லே, தீய அரக்கன் அழிஞ்ச தினமான தைப்பூசத்தன்னிக்கு விரதமிருந்து வேலவனை வேண்டிக்கிட்டா, அவன் நம்ம மனசில எந்தவித தீய எண்ணமும் ஏற்படாம பார்த்துக்குவான். அதோட, வேண்டியன எல்லாமும் தருவான். மனசிலே பூசல் இல்லாம எண்ணத்திலே தூய்மை இருந்தா, எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும், இல்லையா? அப்படிப்பட்ட ஏற்றமான வாழ்க்கையை ஏறு மயில் ஏறி விளையாடும் முருகன் தருவான்....’’ மாமி முடிக்கவும், ‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்ற முழக்கம் கேட்கவும் சரியாக இருந்தது. அனைவரும் கையிலிருந்த அட்சதை, பூக்களை மணமக்கள் மீது தூவி ஆசிர்வதிக்க மணமேடையை நோக்கிப் போனார்கள்.

பிரபுசங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்