SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெற்றோர் பிள்ளைகள் பிணக்கு போக்கும் தலம்!

2018-01-31@ 08:43:56

உறையூர் நகரில் ஒருசமயம், காட்டு விலங்குகளால் விவசாய பயிர்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்தக் காட்டு விலங்குகளை வேட்டையாடி குடிமக்களின் துன்பம் தீர்க்க காட்டிற்குப் புறப்பட்டான் மன்னன். பல விலங்குகளை வேட்டையாடிய மன்னனுக்கு அந்தக் களைப்பில் தாகம் ஏற்பட்டது. அருகில் எங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஓர் இடத்தில் மூன்று கிளைகளுடன் வளர்ந்திருந்த கரும்பினைக் கண்டான். அதைக் கடித்து உறிஞ்சி அந்தச் சாறால் தாகம் தணித்துக் கொள்ள விரும்பினான். ஆனால், கரும்பை உடைத்தபோது, அதிலிருந்து சாறுக்கு பதிலாக ரத்தம் பெருகியது. அந்தக் கரும்பு ஏதோ தெய்வீகத் தகவலை தெரிவிப்பது போல மன்னனுக்குத் தோன்றியது. உடனே காவலர்களை அழைத்து அந்த இடத்தினை சோதித்து பார்க்கும்படி கட்டளை இட்டான். கரும்பு புதருக்கு அடியில் ஒரு சிவலிங்கம் தென்பட்டது. மன்னன் பெரிதும் மகிழ்ந்து, அதே இடத்தில், அந்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் கட்டினான். அந்தத் தலம்தான் தற்போதைய வயலூர்.

இங்குள்ள சிவபெருமானை ஆதிநாதர் என்றும், மூலநாயகன் என்றும், மறபிலிநாதர் என்றும் அழைக்கிறார்கள். பராசக்திக்கு ஆதிநாயகி என்று பெயர்.
சுவாமிமலை திருத்தலத்தில் தந்தைக்கு உபதேசம் செய்தார் முருகன். பெற்றவருக்கே பாடம் சொன்ன அந்தப் பாவத்தைப் போக்க, வயலூர் வந்த முருகன் இங்கே தன் வேலால் சக்தி தீர்த்தத்தை உருவாக்கினார். வள்ளிதெய்வானையுடன் சேர்ந்து தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து பெற்றோருக்கு ஆத்ம பூஜை செய்து அமர யோக வரம் பெற்றார். அதனாலேயே இந்தக் கோயிலில் சிவபெருமானின் சந்நதிக்குப் பின்னால்தான் முருகனுக்கு சந்நதி அமைந்துள்ளது. இப்படி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தான் அடக்கமாகப் பின்னால் சந்நதி கொண்டிருக்கிறார்.  காமத்தில் மூழ்கி பெரும் துன்பத்திற்கு ஆளான அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த சமயம், கம்பத்தடிநாயனாராக வந்து அவரைத் தடுத்தாட்கொண்டு காட்சி கொடுத்தார், முருகன்.

அப்போதுதான் அருணகிரிநாதர் முதன் முதலாக ‘முத்தைத்தரு’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடினார். ஆனால், அதன் பிறகு தொடர்ந்து பாடும் சக்தியை அவர் இழந்துவிட்டார். அதோடு, ஏற்கெனவே ஏற்பட்டிருந்த சரும நோயும் பெரும் உபாதை தந்தது. அப்போது அவர் மனமுருகி  முருகனை பிரார்த்தனை செய்தார். ‘வயலூர் பதிக்கு வா’ என்று அசரீரி கேட்டது. அருணகிரிநாதர் வயலூருக்குச் சென்று சக்தி தீர்த்தத்தில் குளித்து தவம் மேற்கொண்டார். அப்போதும் முருகனின் அருள் கிடைக்கவில்லை. அசரீரி வாக்கு பொய்யோ என வருந்திய அவர் விநாயகரிடத்தில் முறையிட்டார். ‘அசரீரி வாக்கு பொய்க்காது’ என்று பதிலளித்த விநாயகர், முருகன் இருக்கும் இடத்தைக் காண்பித்தார். அங்கே அழகன் முருகன், முத்துக்குமார சுவாமியாக வள்ளிதெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தந்தார். அந்த அழகிய கோலத்தில் சொக்கி நின்ற அருணகிரிநாதருடைய நாவில் தனது வேலால் ‘ஓம்’ என்று முருகப் பெருமான் எழுத, பீறிட்டு வந்த பக்தி பிரவாகத்தில் திருப்புகழ் பாடல்களை பொழிந்தார், அருணகிரிநாதர்.

‘அசரீரி பொய்யாகாது’ என்றதால் இந்த விநாயகர் ‘பொய்யா கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதருக்காக முருகன் திருமணக்கோலம் காட்டியதால், விரும்பும் பக்தர்களுக்காக இங்கு முருகனுக்கு திருமணக்கோல அலங்காரம் செய்யப்படுகிறது. முருகத் தலங்களை பற்றி அருணகிரிநாதர் பாடிய 30 பாடல்களில் 18, வயலூர் முருகனைப் பற்றியது. மீதிப் பாடல்களிலும் ‘தனக்கு ஞானம் தந்தவன் வயலூர் முருகன்’ என்ற அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். பொய்யா கணபதி, ஆதிநாதர், ஆதிநாயகி, சுப்பிரமணிய சுவாமி, அருணகிரிநாதருக்கு என தனித்தனியாக சந்நதிகள் உள்ளன. ஆதிநாயகி அம்மனுக்கு அருகே உள்ள தூணில் முத்துக்குமார சுவாமி மயில் மேல் அமர்ந்த தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உருவத்திற்கும் தினசரி பூஜை நடைபெறுகிறது.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது வயலூர். இங்கு சஷ்டி, கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சுவாமி வீதி உலாவும், வைகாசி விசாக நட்சத்திரத்தன்று நடைபெறும் பால்குட அபிஷேகம், பிரம்மோற்சவம், தேரோட்டம், தெப்போற்சவம் எல்லாம் வெகு பிரபலம். தை அமாவாசை, மாசிக் கார்த்திகை, பங்குனி உத்திர நாட்களில் மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. தைப்பூசத் தன்று வயலூருக்கு அருகில் உள்ள சோமரசம் பேட்டை, அதவத்தூருக்கு முருகன் எழுந்தருளுகிறார். ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் அருணகிரிநாதருக்கு விழாவும், ஆவணி மாதத்தில் விநாயகர் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.‘பெற்றோரை வணங்கினால் பெருவாழ்வு கிட்டும்’ என்ற தத்துவத்தை இத்தலத்தில் முருகன் உணர்த்துகிறார். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு மிடையே ஏதேனும் கருத்து வேற்றுமை இருந்தால், எந்தத் தரப்பினராவது இங்கு வந்து முருகனை வேண்டிக் கொண்டால், மனப்பிணக்குகள் நீங்கும் என்கிறார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்