SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்தனை எத்தனை பாவங்கள்?

2018-01-31@ 08:43:04

‘வாடிய பயிரைக் கண்டு வாடிய’ தளிர் மனதுக்காரர், ராமலிங்க வள்ளலார். காலில் மிதிபடும் புல் பூண்டுக்கும் உயிருண்டு, உணர்வுண்டு என்பதை விஞ்ஞானம் நிரூபித்ததை, அஞ்ஞானம் கொண்டு பலர் அதை மதிக்க மனமில்லாதிருக்க, உலகமே போற்றும் மகான் அந்த உண்மையை ஒவ்வொருவர் மனதிலும் நிலைநிறுத்த முயன்றார். அவர் மனம்தான் எவ்வளவு இளகியது! ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்று ஔவையார் பாட, ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று கூடாததைக்கூட எதிர்மறையாகச் சொல்லாத ஏந்தல் அவர். இந்த அஹிம்சை உணர்வாலேயே, சரித்திரஆன்மிக சம்பவம் ஒன்றை உள்ளம் நடுங்க அவர் விவரிக்கிறார். தன் மகன் தேரோட்டிச் சென்றபோது அந்தத் தேர்ச் சக்கரத்தில் ஒரு கன்று சிக்கி உயிர்நீத்ததை அறிந்த மனுநீதி சோழன், இப்படி ஒரு சம்பவம் தன் மகனால் நிகழ்ந்ததற்குத் தான் என்ன பாவம் செய்தேனோ என்று எப்படியெல்லாம் புலம்பியிருப்பான் என்று சிந்திக்கிறார், வள்ளலார். ‘மனுமுறை கண்ட வாசகம்’ தொகுப்பிலிருக்கும் அந்தத் துயரச் சிந்தனை:

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொல்லை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந் தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித் தேனோ!
கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் கூசிநின் றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத் தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்துவைத்தேனோ!
சிவனடி யாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ!
என்ன பாவஞ் செய்தேனோ!
இன்னதென் றறியேனே!

மகன் செய்த கொலைபாதகத்துக்கு, தான் செய்திருக்கக் கூடிய பாவம் ஏதாவதுதான் காரணமாக இருக்குமோ என்று மன்னன் வேதனைப்பட்டதாகச் சொல்கிறார் அடிகளார். இந்த பாவப் பட்டியல் மனதை உலுக்கத்தான் செய்கிறது, இல்லையா?

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • franceworldleaders

  பிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: உலகத்தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி

 • 13-11-2018

  13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • HodeidahYemen

  ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

 • PizzaGuinnessArgentina

  அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

 • JordanFloodPetra12

  ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்