SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைப்பூசத் திருநாளில் திருமுருகன் தேரோட்டம்!

2018-01-31@ 08:40:36

தைப்பூசத்தை ஒட்டி பழனி மலையில் தொடர் உற்சவம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தப் பத்து நாள் பெருவிழாவில் கலந்துகொள்ள ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குழுமுகிறார்கள். எவ்வளவுதான் வருடத்துக்கு வருடம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அனைத்து பக்தர்களும் மனம் மகிழ, நெகிழ பாலதண்டாயுதபாணியான முருகன் அருள் பாலிக்கிறான் என்பது உண்மை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆன்மிக அனுபவமாகும்.

இந்தத் தொடர் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக முருகன் திருக்கல்யாணமும், அடுத்த நிறைவு நாளில் அதாவது தைப்பூச தினத்தன்று தேரோட்டமும் நடைபெறும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்து முருகனுக்கு மகத்தான பக்தி சேவை புரிவார்கள். மாலை நேரத்தில் ஆரம்பிக்கும் இந்தத் தேர்த்திருவிழா, சிலசமயம் நள்ளிரவுவரைகூட நடைபெறுவதுண்டு.

ஆனால் இந்த ஆண்டு தைப்பூச தினத்தன்று (31.01.2018) சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. கிரகண காலத்தில் கோயில்களை மூடிவிடுவது சம்பிரதாயம். அந்தவகையில் மாலையில் தேரோட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஆனாலும் பக்தர்களின் ஆன்மிக உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆண்டு தைப்பூச தினத்தன்று காலையிலேயே தேரோட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது, பழனி கோயிலில்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால், பழநி கோயில் நடை, மாலையில் அடைக்கப்படுகிறது. ஆகவே, மாலையில் நடைபெறவேண்டிய தேரோட்டம் காலையில் நடக்கிறது. பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3ம் தேதிவரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஜன. 30ம் தேதி திருக்கல்யாணமும், ஜன. 31ம் தேதி, தைப்பூசத்தன்று தேரோட்டமும் நடக்கின்றன.

இந்த ஆண்டு தைப்பூசம் நாளில், பவுர்ணமி திதியில் சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் இரவு 8.41வரை நிகழ்கிறது. இதனால், மாலையில் நடைபெறவேண்டிய தேரோட்டம் பகல் 11 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அதேபோல கோயிலில் வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45க்கு துவங்கி 3.45 மணிவரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வித்தியாசமான ஏற்பாடு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். அன்றும் தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் ஏற்பட, தைப்பூசத் தேரோட்டம் மாலைக்கு பதிலாகக் காலையில்  நிகழ்ந்திருக்கிறது!

- சுபஹேமா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்