SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைணவத் தலத்தில் தைப்பூசத் திருவிழா!

2018-01-31@ 08:39:45

திருச்சேறை

நான்கு வேதங்களையும் நமக்கு அருளியவன் எம்பெருமான். வேதத்தின் மூலமாகத்தான் நாம் முன்ஜென்ம பாவத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறோம். வேத கோஷம் மூலம் பகவானை நேரிடையாக தரிசிக்க இயலும் என்பார்கள். அத்தகைய கீர்த்திவாய்ந்த வேதங்களுக்குப் பிரளயத்தினால் மிகப்பெரிய ஆபத்து வந்தபோது அந்த வேதங்களைக் காப்பாற்ற மஹாவிஷ்ணு முடிவு செய்தார். பிரளய காலத்தில் இந்த உலகம் அழிய நேர்ந்தபோது அங்குள்ள வேதம், ஆகமம், சாஸ்திரம், கலை போன்றவற்றைக் காக்கும் பொருட்டு மகாவிஷ்ணு பிரம்மாவை அழைத்து மண்ணினால் குடம் ஒன்று செய்து அதில் அந்த வேத, ஆகம, சாஸ்திர கலைகளை ஆவாஹனம் செய்து பிரம்மனிடம் கொடுத்தார். உயிர்களை சிருஷ்டி செய்ய பிரம்மன் முற்பட, குடம் உடைந்துபோனது. பல திவ்விய க்ஷேத்திரங்களுக்குச் சென்று அதுபோல் குடம் செய்து  வேதம் முதலானவற்றை அவற்றில் இட்டு, சிருஷ்டிக்க முயற்சித்தபோதும் குடம் மீண்டும் மீண்டும் உடைந்துதான் போனது.

மனம் கலங்கிய பிரம்மன் பெருமானிடம் வந்து தனது இயலாமையைத் தெரிவித்தார். உடனே பகவான் காவிரிக்கரை வந்து ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே எப்பேர்ப்பட்ட இயற்கைச் சூழ்நிலைகளிலும் உடையாதவாறு மண்ணால் திரும்பவும் குடம் செய்து அதனுள் வேதம் முதலானவற்றை வைத்துக் காப்பாற்றித் தந்திருக்கிறார். இம்முறை எந்த விக்னமும் இல்லாமல் பிரம்மனின் சிருஷ்டித் தொழில் எந்தக் குறையுமின்றி நிறைவேறியது. அதோடு வேதங்கள், மற்றும் கலைகள் அனைத்தும் காப்பாற்றப்பட்டன. அந்த மண் குடத்தின் வாய்தான் குடவாயில், அதாவது குடவாசல் எனப்பட்டது. குடத்தின் மூக்குப்பாகம் குடந்தை. அதாவது அது கும்பகோணம் எனப்பட்டது. அனைத்து சிருஷ்டி பீஜங்களும் ஒரே இடத்தில் சேர்ந்ததால் அந்த இடம், ‘திருச்சேறை’ என்றாயிற்று. குடம் செய்யப்பட்ட மண் நல்ல சக்தியுடன் கூடிய சாரமானதாக இருந்ததால் இதற்கு ‘சாரக்ஷேத்திரம்’ என்று பெயர் உண்டாயிற்று. இந்த சார க்ஷேத்திரத்தில் உறைபவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.

கும்பகோணம் - குடவாசல் - திருவாரூர் வழித்தடத்தில் 24 கி. மீ. தொலைவில் திருச்சேறை உள்ளது. சார க்ஷேத்திரம், வளநகர் என்றும் பெயர்கள் உண்டு. ரங்கநாதர் எப்படி காவிரியையும், அதன் கிளைநதியான கொள்ளிடத்தையும் ஒரு மாலையாகச் சூடிக்கொண்டு அருளாட்சி புரிகிறாரோ, அதேபோல் இத்திருத்தலத்தில் சாரநாத பெருமாள் காவிரியின் கிளை நதிகளாக முடி கொண்டான் ஆற்றுக்கும், குடமுருட்டியாற்றுக்கும் இடையில் திருக்கோயில் கொண்டுள்ளார்.‘சார க்ஷேத்திரம்’ எனப்படும், திருச்சேறை சாரநாதப்  பெருமாள் கோயில் மிகப்பெரிய பரப்பளவில், ஏழு நிலை ராஜகோபுரம், மூன்று பிராகாரங்களுடன் கம்பீரமாக அமைந்துள்ளது. கருவறையில் மூலவராக சாரநாதப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயாரின் திருநாமம் சாரநாயகி. இங்குள்ள இறைவன் கிழக்கே திருமுகம் கொண்டுள்ளார். பெருமானுக்கு வலப்புறம் காவிரி அன்னையும், தென்புறம் மார்க்கண்டேய முனிவரும் சிலா வடிவில் காணப்படுகின்றனர். இங்குள்ள புஷ்கரணி சார புஷ்கரணி என்றும், விமானம் சார விமானம் என்றும் வழங்கப்படுகின்றன.

உற்சவர் சாரநாதப் பெருமாள், பூமிதேவி - நீளாதேவி - சார நாயகி - ஸ்ரீதேவி - ஆண்டாள் சகிதம் காட்சியளிக்கிறார்.  அதனால் இவர் ‘பஞ்சலட்சுமி சமேத பெருமாள்’ எனவும் அழைக்கப்படுகிறார். இவர்களுக்கு முன்னால் மாமதலைப்பிரான், தவழும் திருக்கோலத்தில் உற்சவ மூர்த்தியாய் திகழ்கிறார். இங்கு பிராகாரத்தில் மணவாள மாமுனிக்கு மூலவரும், உற்சவரும் கூடிய தனிச்சந்நதி உண்டு. இதேபோன்று உட்பிராகாரத்தின் தென்புறம் ஒரு தனி மண்டபத்தில் ஆழ்வார்களுக்கென்று தனிச்சந்நதி உள்ளது. மற்றொரு பக்கம் வனவாச ராமர், கானகம் போகும்போது எப்படி இருந்தாரோ, அப்படியே மரவுரி தரித்த கோலத்தில் சீதையுடன் காட்சியளிக்கிறார். லட்சுமி நரசிம்ம மூர்த்தி வரப்பிரசாதியாய் விளங்குகிறார். நினைத்த காரியங்களை எல்லாம் பூர்த்தி செய்து வைப்பவர் இவர். சாரநாயகி தாயார் சந்நதியில், மூலவராகத் தாயார் காட்சியளிக்கிறார். உற்சவ மூர்த்தி சாரநாயகி, கஜலட்சுமியாக தரிசனம் தருகிறார்! இருவரும் கிழக்கு நோக்கிய திருமுகம் கொண்டுள்ளனர்.

இந்த சாரநாயகி தாயார் கொடிமரம் கடந்து ஆலயத்திற்கு வெளியே செல்ல மாட்டார். இதனால் இவருக்குப் ‘படிதாண்டா பத்தினி’ என்ற பெயரும் உண்டு. சாரபுஷ்கரணி குளத்தின் கீழ்க்கரையில் ‘தீர்த்தக்கரை ஆஞ்சநேயர்’ என்ற பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் இருக்கிறது. ‘அன்னை காவிரி’க்குத் தனிக்கோயில் அமைந்துள்ள இடம் இங்குள்ள திருச்சேறையில் மட்டும்தான். வேறு எங்கும் இல்லை. ஒருசமயம் கங்கைக்கும், காவிரிக்கும் தங்களுள் பக்தியில் யார் சிறந்தவர் என்கிற வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் பிரம்மனிடம் சென்று தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று தீர்ப்பு வழங்குமாறு கேட்டனர். திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது அவர் பாதத்திலிருந்து கங்கை பெருகி ஓடினாள். சிவபெருமானின் திருமுடியிலும் கங்கை ஓடுகிறாள். இதனால் பக்தியில் சிறந்தவள் கங்கைதான் என்று பிரம்மாவிடமிருந்து தீர்ப்பு வரவே, காவிரிக்கு மகா கோபம் ஏற்பட்டது. உடனே சாரக்ஷேத்திரத்துக்கு வந்து அங்கிருந்த சாரபுஷ்கரணி குளக்கரையில் அரச மரத்தடியில் நீண்டகாலம் கடுந்தவம் செய்தாள்.

பகவான் மகாவிஷ்ணு காவிரியில் தவத்துக்கு மகிழ்ந்து, தை மாதம் பூசம் நட்சத்திர தினத்தன்று தவமிருந்த காவிரியின் மடிமீது குழந்தையாக வந்து தவழ்ந்தார். மகாவிஷ்ணுவே குழந்தையாக வந்து தன் மடியில் தவழ்கிறார் என்ற பெரும்பேறு பெற்றதையெண்ணி மெய்சிலிர்த்த அன்னை காவிரி, அக்குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். காவிரி அன்னை அக்குழந்தையை நோக்கி, ‘சுவாமி, வந்திருப்பது யாரென்று தெரிந்துகொண்டேன். ஆகவே தயவு செய்து தங்களது சுயரூபத்தைக் காட்ட வேண்டும்!’ என்று கேட்க, மடியிலிருந்த குழந்தை சாரநாதப் பெருமானாக கையில் சங்கு, சக்கரம், கதை, தாமரை புஷ்பத்துடன் சாரநாயகி தாயாருடன் சார விமானத்தில் திருக்காட்சி தந்தருளினார். அன்னை காவிரிக்கு முதலில் குழந்தை வடிவிலும், அடுத்து சாரநாயகி சமேத சாரநாதனாகவும், மூன்றாவதாக கருடாரூடராகவும், வைகுண்டத்தில் இருப்பதுபோல் ஸ்ரீதேவி - பூமாதேவி - நீளாதேவி - மகாலட்சுமி - சாரநாயகி ஆகிய ‘பஞ்சலட்சுமி’களுடன் காட்சி தந்து பெரும்பேற்றை வழங்கினார். இன்றைக்கும் உற்சவர், பஞ்ச லட்சுமிகளுடன் காட்சி தந்து அருளாட்சி புரிகிறார்.

இப்படி அன்னை காவிரிக்கு மூன்றுவிதமாக திவ்ய தரிசனம் தந்தருளியது ஒரு தை மாதம் பூசம் நட்சத்திரத் தினத்தில்தான். அதனால் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூசம் நட்சத்திரத்திற்கு குருபகவான் வரும்பொழுது இந்தத் திருத்தலத்தில் சாரநாதப் பெருமாள் ஐந்து தேவியர்களுடன் சேவை சாதிக்கிறார். இத்தரிசனம் மகாமகக் குளத்தில் புனித நீராடிப் பெறும் புண்ணியத்திற்கு ஒப்பானதாகும். பஞ்சலட்சுமிகள் சமேதராக சாரநாதப் பெருமாள் காவிரிக்குக் காட்சி தந்தபோது, அவள் பெருமாளிடம் மூன்று வரங்களைக் கேட்டாள்:  ‘இந்த சாரநாத க்ஷேத்திரத்துக்கு வந்து பகவானை தரிசனம் செய்தால், அவர்கள் கேட்கும் வரங்களைக் கொடுத்து அவர்களுடைய அந்திமக் காலத்தில் மோட்சம் அளிக்க வேண்டும். இரண்டாவதாக கங்கையில் புனிதமானது காவிரி என்ற வரத்தை அளிக்க வேண்டும். மூன்றாவதாக, குழந்தை வடிவில் வந்த பெருமாள், பாலரூபமாகவும், சுயரூபமாகவும், கருவறையில் பஞ்சலட்சுமிகளுடன் சேர்ந்து, இந்த க்ஷேத்திரத்திலேயே நித்ய வாசம் செய்து, இங்கு வரும் பக்தர்களுக்கு சேவை சாதிக்க வேண்டும்.’

சாரபுஷ்கரணியின் தென்மேற்கு மூலையில் இத்திருக்கோயிலின் தலவிருட்சமான அரச மரத்திற்குத் தெற்கில் சிலா வடிவில் மாமதலை பிரானாக முதலில் தரிசனம் தந்த குழந்தைப் பெருமாளை அணைத்த வண்ணம் இங்கு காணப்படுகிறாள் காவிரி அன்னை. பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் இந்த சந்நதியில் தரிசனம் தந்த வண்ணம் சிலா ரூபியாக உள்ளனர். மார்க்கண்டேய மகரிஷி முக்தியடைந்த க்ஷேத்திரம் இது. 108 வைணவ திவ்ய திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இங்கே பாஞ்சராத்திர ஆகம முறைப்படியும், தென் ஆச்சாரிய சம்பிரதாயப்படியும் தினசரி பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகிறது. நாடெங்கும் உள்ள வைணத்திருத்தலங்களில் ‘தைப்பூசப் பெருவிழா’ நடைபெறும் ஒரே திருத்தலம் இதுதான். இது தவிர திருஅத்யயன உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மணவாள மாமுனிகள் சாற்றுமுறை உற்சவம் மற்றும் பல வைணவ உற்சவங்கள் இங்கே தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சாரநாதப் பெருமாள் கோயில் கும்பகோணம் என்ற க்ஷேத்திரம் ஏற்படவும், பிரசித்தி பெற்ற கும்பமேளா நடைபெறுவதற்கும் மூல காரணமாக அமைந்திருக்கிறது.

- டி.எம்.இரத்தினவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SouravGangulyBCCI

  பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

 • SkyCityFireAuckland

  நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

 • NorthKarnatakaRain23

  கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

 • DiwaliPrep2k19

  நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

 • DanishLightHouse

  கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்