SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தை களைவார் ஆபத்சகாயேஸ்வரர்

2018-01-20@ 09:50:08

திருப்பழனம்

பிரபஞ்சம் தன் பார்வையை பாற்கடல் எனும் மையத்தை நோக்கித் திரும்பியது. பேரலைகளால் கொந்தளித்துக் கிடந்த பெருங்கடலின் மையமாக நிமிர்ந்திருந்த மேருவின் உச்சியில் சூரியனின் பொன்கிரணங்கள் பட்டு பாற்கடல் தங்கமாக தகதகத்திருந்தது. எல்லையில்லா அலைகடலின் மத்தியில் காணுதற்கரிய மகரிஷிகளும், வேதமுனிகளும் கண்கள் மூடி தவத்தில் ஆழ்ந்திருந்தனர். ஈசனும், வைகுந்தவாசனும், நான்முகனான பிரம்மாவும் வீற்றிருக்க அண்ட சராசரங்களையும் அசைவிக்கும் பெருஞ்சக்திகளும் பாற்கடலில் சங்கமித்திருந்ததைக் கண்ட தேவர்கள் கண்ணீர் பெருக்கி திகைத்துப் போய் கிடந்தனர். மரணமிலாப் பெருவாழ்வு தரும் தேவாமிர்தத்தைத் தேடிக் கடையும் அரும்பெரும்நாளின் அருகே இருப்பதை அறிந்த அசுரர்கள் இறுமாந்திருந்தனர். அமிர்தத்தை கடைந்து வழித்தெடுத்து தேவர்களின் முகத்தில் கரி பூசுவோம் என்று தொடைதட்டி சூளுரைத்தனர்.

வாசுகி எனும் மாபெரும் பாம்பு மேருவை சுற்றி வலிமையாக இறுக்கும்போது கௌசிக மகரிஷி சட்டென்று கண்கள் திறந்து தேவர்களையும், மகரிஷிகளையும் பார்த்தார். கௌசிக முனிவரின் முகக்காந்தி தேவர்களை ஈர்க்க மாமுனிவரின் பக்கம் திரும்பி கைகூப்பினர். கௌசிகர் புன்னகைத்தார். முகத்தில் பொங்கிய பிரகாசம் அலையாக நகர்ந்து தேவர்களை தழுவிச் சென்றது. தேவர்கள் வைரம் பாய்ந்த வஜ்ஜிரமாக மாறினர். அசுரர்கள் மனம் இடையறாத சலனத்தால் கலங்கியபடி இருந்தது. மேரு எனும் மந்திரமலையை வாசுகிப் பாம்பு இடதும், வலதும் தன்னை அசைத்துச் சுழற்ற அகிலமே அதிர்ந்தது. தேவர்களும் அசுரர்களும் அசைவுக்கு உந்தம் சேர்த்தனர். கடைதல் துரிதமாகியது. காட்டாற்றின் வேகத்தில் தோன்றும் நீர்ச்சுழலாக பெருவட்டச் சக்கரத்தின் மையத்திலிருந்து அற்புதமான விஷயங்கள் பொத்துக்கொண்டு கிளர்ந்தெழுந்தது. பார்கடலின் மகத்துவத்தை அறிந்தவர்கள் ஆனந்தத்தால் நிறைந்தார்கள்.

திருமகள் திவ்யவடிவோடும், வெண்குதிரை உச்சைச்சிரவஸ் அதிவேகத்தோடும், ஐராவதம் அசைந்தெழுந்து வந்தது பார்த்து பரவசமாயினர். அதன் பிறகு ஆலகாலம் என்ற கடும் விஷத்தை வாசுகி கக்க நெடியால் தேவர்களும், அசுரர்களும் கலங்கித்தவிக்க கயிலைநாயகன் தன் கண்டத்தின் மேலேற்றி அடைத்து திருநீலகண்டனாக காட்சி தந்தான். இறுதியில் பேரொளிப் பெருமையத்தின் நடுவே அமிர்தக்குடம் நிறைந்துத் தளும்பியது. ஆராவமுதனான நாராயணன் அமிர்தத்தை அள்ளி எடுத்து சகல தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும் ஈந்தான். தேவர்கள் மரணக்காட்டை அழித்துத் தாண்டினார்கள். கௌசிகமஹரிஷி மாந்தர்களுக்கும் உதவுமே என தாம் பெற்ற அமிர்தத்தை கைமேற்கனியாகப் பெற்றுப் பூவுலக்கு நகர்ந்தார். அசுரர்கள் அமிர்தத்தைப் பறிப்பாரோ என்றெண்ணிய ஈசன் ஐயனாரையும், மாகாளியையும் உடன் அனுப்பினார்.

கதலி வனம் எனும் அந்த வாழைக்காட்டிலுள்ள இலைகள் சிலிர்த்தன. வானிலிருந்து பார்க்க வாழை பொன்னிறத்தில் பழுத்தும், மாங்கனிகள் சரம்சரமாக அணிவகுத்தும், வேர்பலாக்கள் வெடித்து விண்முட்டும் அளவுக்கு மணம் பரப்பியது. நூற்றுக்கணக்கான கனிமரங்கள் கானம் முழுதும் நிறைந்திருந்து, காட்டினின்று வீசும் காற்றின் மணமே அமிர்தவாசமாக நாசியை வருடியது. அமிர்தம் ஏந்திவரும் கௌசிகமஹரிஷி சிருங்காரமாக ஒளிரும் அந்த தலத்தில் தம் திருவடி பதித்தார். மக்கள் கூடி நின்று வணங்கி வரவேற்றனர். பழங்களைப்போலவே மென்மையாக அவர்கள் அகம் கனிந்திருந்தது. கௌசிக மாமுனிவர் குடில் அமைத்தவுடன் அகமகிழ்ந்து தொண்டு புரிந்தனர். மெல்ல அவ்வூரை வேறொரு பெருஞ்சக்தி சூழ்ந்தது. சதாகாலமும் சதாசிவனை நினைந்தவர் ஓரிடத்தில் மகாதேவனை இருத்த பேருவகை கொண்டார். பரமசிவனின் பேரருளை எண்புறமும் எழுப்பி தீங்கருணையாக மாற்றும் விதத்தை விதையாக பொதித்து வைக்கத் தயாரானார்.

ஈசனின் லிங்கத் திருமேனிக்குள் அமிர்தத்தை அரூபமாக அடக்கி அருகே வருவோரை ஆற்றுப்படுத்த பெருங்கருணை கொண்டார். பிறப்பறுத்து பெரும்பேரு நல்கும் அமிர்தத்தையே மகாதேவனின் பேருருவமான லிங்க உருவில் தாபனம் செய்திடத் தவித்தார். அமிர்தத் திரட்சியை ஒன்றாக்கி வில்வதளங்களால் அர்ச்சிக்க, வில்வத்தின் வாசம் மகேசனை ஈர்த்தது. முக்கண் நாயகனான ஈசன் மூவிலைகளுக்குள் அருவமாகப் பரவினார். சட்டென்று புறத்திலும் நெடும் பனையாக வளர்ந்தார். ஆலகாலம் உண்டவன் அழைத்தவுடன் வந்ததைப் பார்த்தவர்கள் மகாதேவா...மகாதேவா... என அங்கிங்கெனாதபடி யாவினிலும் உறையும் ஈசனைப் பார்த்துப் பிளிறினர். கதலிவனத்தை கயிலைநாதன் பேரன்பால் மூழ்கடித்தார். கௌசிகமுனிவர் அகத்தில் கண்ட அரனை புறத்தில் பார்த்து தன் வயம் இழந்தார். ஈசனோடு ஈசனாகக் கலந்து களிப்புற்றுத் திளைத்தார்.

பெருவட்டப் பேரொளியொன்று மாமுனியின் அமிர்தலிங்கத்தில் ஒடுங்கியது. சட்டென்று கதலிவனமே கயிலையின் சாயலையுற்றது. திருமாலும், லட்சுமி தேவியாரும் தம் திருவடியை திருப்ப, தேவலோகமே அவ்விரு தம்பதியர் பின்னே பயணித்தது. சப்தரிஷிகளும் மகாதேவன் மாளிகை கொள்ளும் மண்ணுலகிற்குள் இறங்கினர். அஷ்டதிக் பாலகர்களும் ஈசனைச் சுற்றி நின்றனர். குபேரன் மாபெரும் குழுவோடு வந்து குதூகலமாக நின்றான். சந்திரன் அமிர்தத்தின் சாரலில் நனைந்தெழுந்து தம் அமுதக் கிரணங்களை குளுமையாகப் பரப்பினான். சூரியன் தன் செங்கதிர்களை ஈசனின் திருவடிக்கழலில் பரப்பி பிரகாசித்திருந்தான். பொற்குடத்திலிருந்த அமிர்தம் ஈசனோடு இயைந்து வைரமாக மின்னியது. காலாகாலத்திற்கும் வற்றாத ஜீவநதியாக பெருக்கெடுத்தது. கௌசிகரின் கருணையால் பூத்தலிங்கம் இன்னும் பல மொட்டுக்களை அருகே அழைத்து மலர்வித்தது.

சுசரிதன் எனும் பாலகன் கௌதமநதி தீரத்தின் கரையில் அமர்ந்து வேதகானம் செய்தான். கானத்தில் லயித்தவனின் வாழ்வில் வேதநாயகனான மகேசன் விளையாடல் புரியத் தொடங்கினார். பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பான பந்தத்தில் கட்டுண்டு இருந்தவனை பிறவிக்கட்டிலிருந்து அறுத்தெறிந்து தம்மோடு இணைத்துக் கொள்ள இசைந்தார். பெற்றோர்கள் அடுத்தடுத்து சிவலோகப் பிராப்தியுற்றனர். தம் மகனின் பக்தி வலிமை தந்தையையும், தாயையும் உன்னத இடத்தில் அமர்த்தியது. ஆளில்லா அடர்ந்த கானகத்தில் தனியே விடப்பட்டவனுக்கு அனாதரட்சகனாக இருந்தார் ஈசன். மெல்ல தென்திசைப்பக்கம் திருப்ப அகமும், புறமும் எந்தப்பற்றும் இல்லாது பற்றற்றவனாய் திரிந்தான். ஈசன் இன்னும் ஒரு படி மேலேறி மெல்லிய நூலாக இருந்த உயிர்பற்றையும் அறுத்தெறிய அவா கொண்டார். சுசரிதன் கதலிவனமான பழங்கள் மண்டிக்கிடக்கும் கௌசிகமஹரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட புண்ணியத்தலமான திருப்பழனம் வந்தடைந்தான்.

அந்தி நெருங்கி இருள்கவ்வும் நேரம் அது. வழிக்களைப்பால் கண்கள் சொருக கோயிலின் வாயிலில் தன்னை மறந்து உறங்கினான். அவன் கனவில் பெரிய எருமையுடன் கருத்த உருவோடு எமதர்மன் பாய்ந்தோடி வந்தான். இன்றிலிருந்து ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய் என்று கூறி பேரிரைச்சலோடு நகர்ந்தான். சுசரிதன் விதிர்த்தெழுந்தான். உடல் நடுக்கமுற்றிருந்தது. அவன் நடுக்கம் அவனுக்கே ஆச்சரியம் அளித்தது. இன்னும் எமனின் ஆளுகையிலிருந்து மீளாத வலைப்புழுவாக இருக்கும் தன் நிலை கண்டு மீளா துக்கமடைந்தான். மற்றொரு புறம் மரணம் தன்னைக் கவ்வுமோ, எண்ணற்ற பிறவிகள் எடுக்க வேண்டி வருமோ. இத்தனை நாள் பக்தியை எமன் சுருக்கிட்டு எடுத்துக் கொள்வானோ... பழனப்பிரானே என்று தனியாக அமர்ந்து கதறித் தீர்த்தான். மனம் விண்டு போயிற்று. சோர்வாக சந்நதியில் சாய்ந்திருக்க சட்டென ஒரு அசரீரி ஒலித்தது. திருவையாறை அடைந்து ஐயாறப்பனை சரணுற உயிர் பிழைத்துக் கொள்வாய் என்றார் ஈசன்.

சுசரிதன் கண்களில் நீர் பொங்க இந்த அற்பனுக்கு ஆபத்து என்றவுடன் சகாமாக அமிர்த வாக்குரைத்த ஆபத்சகாயேஸ்வரா...நின் கருணை இன்னதென யாரிடம் கூறுவேன் என்று ஆனந்தமாக திருவையாறு அடைந்தான். காலசம்ஹார மூர்த்தியாக கிளர்ந்தெழுந்த பரமன் எமனை தம் காலால் அழுத்தியிருக்கும் கோலம் கண்டு நெக்குருகினான். ஞானம் அளித்து ஆட்கொண்டார். எமன் நெருங்கமுடியாத மிக உயர்ந்த நிலையை அடைந்தான். இன்றும் திருவையாற்றில்
ஆட்கொண்டேஸ்வரர் சந்நதியைக் கண்ணுறலாம். பழனப்பிரான் பேராபத்தான மரணபயம் அறுத்து சகாயம் செய்ததால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற திருநாமம் சூடினார். திருப்பழனம் பெரும்பதியானது. ஞானிகளின் காலடியால் இன்னும் பழனம் கனிந்தது. ஆன்மிகத்தில் மொட்டாக இருந்தவர்களை மட்டுமல்லாது மலர்ந்த தாமரைகளையும் தன்னகத்தில் சூடி சிருங்காரித்துக் கொண்டது.

திருப்பழனம் சிவனடியார்களால் நிறைந்திருந்தது. வெண்ணீற்றை மேனி முழுதும் பூசி விபூதி நாதனைச் சரணுற்ற அப்பூதியடிகள் அன்னமும், மோரும் கொடுத்து இன்சுவை அமுது பரிமாறினார். அப்பரடிகளின் திருவடிகளை உள்ளத்தில் ஏந்தி வாக்கீசரைப் வாழ்நாளெல்லாம் பேசிப்பேசி களித்தவர் அவர். அவர் துணைவியாரும், புதல்வனும் அப்பூதியடிகளின் பாதையில் பயணித்தனர். முகமறியாத அப்பரை மானசீகமாக பக்தி செய்த அற்புதக்குடும்பம் அது. திருப்பழனத்திற்கு திருக்குழாமோடு வந்திருந்த திருநாவுக்கரசர் எங்கு காணினும் நாவுக்கரசரின் புகழ்பாடும் மானிடர்களும், திருநாவுக்கரசர் திருநாமம் தாங்கி நிற்கும் தண்ணீர் பந்தல்களைக் கண்டு அகமகிழ்ந்தார். அப்பூதியடிகளின் மாறாத பக்தியை ஊரார் மெச்சிப் பேசுவதை செவியுற்றார். நாவுக்கரசர் சாதாரணராய் நடந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று அப்பூதியடிகளின் தன்மையை கண்ணுற்றார்.

கூட்டம் அமைதியாக நகர்ந்தது. வாக்கீசர் வரிசையில் நின்றிருப்பதைப் பார்த்து பிரமித்தது. கண்கள் மூடி கரம் குவித்தது. அப்பூதியடிகள் முகம்பார்க்காது அமுதும், மோரும் கைகளில் இட்டு நிரப்பும் மாண்பு கண்டு மகிழ்ந்தார். அது அப்பரடிகளின் முறை. ஞானச் சூரியன் வந்து நின்று கைநீட்டியது. உழவாரப்பணி செய்து
செய்து தேய்ந்த கைகளல்லவா இது. எங்கோ மனதில் பட்டென்று மின்னல்கீற்று வெட்டியது. ஏதோ இனம் புரியாத பேரின்பப் பெருக்கு ஏற்படுகிறதே என்று கணநேரத்தில் நூறு சிந்தனைகள் எழ சட்டென்று நிமிர்ந்து முகம் பார்த்தவர் ஆனந்த அதிர்ச்சியடைந்தார். ஐயனே...ஐயனே என தடேரென்று விழும் மரக்கொம்பாக அவர் திருவடியில் வீழ்ந்தார். இந்த எளியேனை காண வந்தீரே என விம்மினார். ஞானத்தாமரை முகம் மலரச் சிரித்தது. அப்பூதியடிகளுக்குள் ஞானஊற்று கொப்பளித்துப் பொங்கியது. திருக்கூட்டம் பழனப்பிரானின் சந்நதியை நெருங்கியது.

பதிகங்களை மழையாகப் பொழிந்தது. திருப்பழனமே ஈசனின் இணையற்ற அருளாலும், அப்பரடிகளின் பதிகத்தாலும் அப்பூதியடிகளின் சிவத்தொண்டாலும் மணந்தது. இன்றும் இத்தலத்தில் அவர் அமைத்த தண்ணீர் பந்தல் உள்ளது. திருப்பழனத்தின் இன்னொரு சிகரச் சிறப்பு சப்தஸ்தானங்களில் இதுவும் ஒன்று. நந்திப்பெருமானின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்சுவை கனிகள் மலையாகக் குவிந்தன. அதனால் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஏழுர் திருவிழாவிற்கும் இக்கோயிலிலிருந்தும் இத்தலநாதர் பல்லக்கில் எழுந்தருள்வார். ஊர் கூடி பெருவிழாவாக அதைக் கொண்டாடும். திருப்பழனம் புராணப் பெருமையும், சரித்திரப்புலனும், சங்ககாலக் கதைகளும் நிறைந்த அற்புதத் தலம். வயலும், வாழையும் சூழ்ந்து நிற்கும் எழில் கொஞ்சும் கிராமம். எட்டாம் நூற்றாண்டில் முதல் ஆதித்தனால் கட்டப் பெற்று சோழச் சக்ரவர்த்திகள் கலைநுணுக்கத்தால் மிக அழகான கற்றளியாக உருவெடுத்தது.

ராஜராஜசோழன் இக்கோயிலுக்குக் கொடுத்த நிலநிவந்தங்களும், மூன்றாம் குலோத்துங்கன் கொடுத்த செல்வங்களும் கல்வெட்டில் பதித்திருக்கின்றனர். திருப்பழனத்திற்கு மகாலட்சுமியும், பெருமாளும் திருப்பயணம் மேற்கொண்டதால் வடமொழியில் ஸ்ரீபிரஸ்தானபுரி என்றழைக்கிறார்கள். அப்பெயரிலேயே இத்தல மகாத்மியம் செய்துள்ளனர். சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் என்று மூவராலும் பாடல்பெற்ற தலம். கிழக்கு நோக்கிய நெடிதுயர்ந்த ராஜகோபுரம். சற்று உள்ளே நகர பலிபீடம் தாண்ட, முன்பக்கம் வாகன மண்டபமாக உள்ளது. ராஜகணபதி மிக கம்பீரமாக வீற்றிருக்கிறார். கோயில் வாயிலிலிருந்து நேரே இருக்கும் கருவறை வாயில் சிறிய புள்ளியாகத் தெரிகிறது. வாயிலுக்கும் கருவறைக்கும் மிக நீண்ட தொலைவுள்ளது. உள்ளே பயணிக்கும்போது வடபுறம் நடராஜர் சபையும், அருகேயே பைரவரும், நவகிரகங்களும் கண்ணுற்று அர்த்த மண்டபம் தாண்டி கருவறை முன்பு நிற்க ஆபத்சகாயேஸ்வரர் அழகுற காட்சியளிக்கிறார்.

சந்நதியின் சாந்நித்யத்தாலும், அமிர்தத்தின் இருப்பாலும் மனமும், உடம்பும் சட்டென்று குளுமை கொள்கிறது. அப்பர், ‘‘பழனம் பழனம் என்பீராகில் பயின்றெழுந்த பழவினை நோய்பாற்றலாமே’’ என்று தனித் திருந்தாண்டகத்தில் தெளிவாகக் கூறுகிறார். மெய்யன்பர்கள் நாள்தோறும் ஓதும் ‘‘மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை’’ என்று தொடங்கி பழனம்சேர் அப்பனை வாக்கியம் இடைபுகுந்து வரும் நிகரற்ற பதிகம் பெற்றவரே பழனப்பிரானான ஆபத்சகாயேஸ்வரர். வாழ்வினில் வரும் ஆபத்தைக் களைவதில் அசகாயச் சூரன் இப்பிரான். பேராபத்து வரும் கணம் பழனப்பிரானே...சகாயம் புரிவாய் என வேண்ட முதல்வனாய் வந்து நிற்கும் முக்திநாயகன். வாழ்வின் வெம்மை களைந்து குளுமை சேர்க்கும் அமிர்தலிங்கம். பாலிப்பு தெய்வம் திருமாலுக்கே அருட்செய்த எம்பிரான். அவன் அருட்சுழலில் சிக்கிய நம் மனம் எங்கேயோ சொருகி தன்னை மறந்து கிடக்கும் அற்புதச்சந்நதி அது. அகம் முழுதும் அவனருளை தேக்கி பிரகாரம் நோக்கி நகர்வோம்.

நேர்த்தியான நீண்ட உட்பிராகாரம். தட்சிணாமூர்த்தியின் மூர்த்தம் முன்பு மனம் கரையும் அமைதி சூழ்கிறது. அருகே சனகாதியருக்குப் பதிலாக சப்தரிஷிகளும் வரிசையாக அமர்ந்து தவத்தில் ஆழும் கோலம் காணக்கிடைக்காதது. குருவின் அருகேயே பசு லிங்கத்திற்கு பால் சொரியும் புடைப்புச் சிற்பமும், பசுவின் அருகே முனிவர் கண்மூடி அமர்ந்து தவம் புரியும் காட்சியும் ஆச்சரியப்படுத்தும். குருவின் அண்மையில் அப்பூதியடிகளின் நின்ற வண்ணம் கைகூப்பி நிற்கும் விதம் பார்க்க நெகிழ்ச்சியூட்டும். அஷ்டதிக்பாலகர்களையும் திருமாலோடு சூழ்ந்து நின்று ஈசனை வணங்கியதற்கு ஆதாரமாக பிராகார கோஷ்டத்தை வலம் வரும்போது ஆங்காங்கு அஷ்டதிக்பாலகர்களும் நின்ற வண்ணம் இருக்கும் சிலைகளையும் பார்க்கலாம். வேணுகோபாலன் கால்மாற்றி அழகாய் சாய்ந்து, அரைக்கண் மூடிய நிலையில் குழல் ஊதும் சிலையைக் காண நமக்குள்ளும் வேணுகானம் பாயும். கானத்தால் கனிந்த உள்ளத்தோடு உட்பிராகாரத்திற்குள்ளேயே அம்பாள் திருமண கோலத்தோடு காட்சி தருகிறாள்.

அதுவும் ஆவுடையாரின் மீது நின்ற கோலம் பார்ப்பதற்கு அபூர்வமானது. ஆனால், தனிச் சந்நதியில் இத்தலத்தின் மூலநாயகி வீற்றிருக்கிறாள். தலவிருட்சம் வில்வமரம் கோயிலுக்குள்ளேயே உள்ளது. கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தனிச்சந்நதியில் பிரஹன்நாயகி எனும் பெரிய நாயகி முகத்தில் கொப்பளிக்கும் புன்னகையோடு நின்ற கோலத்தில் நல்லன செய்ய காத்திருக்கிறாள். ஆபத்து என்று ஓடோடி வருவோரை அஞ்சேல் என அபயக்கரம் காட்டி நிற்கிறாள் பெரிய நாயகி. அம்பாள் சந்நதிக்கு அருகேயே முருகப்பெருமானின் சந்நதியுள்ளது, ஆறுமுகத்தான் ஒரே கல்லில் வடித்த மயில்வாகனத்தின் மீதமர்ந்து அமர்ந்திருக்கும் மூர்த்தியைப் பார்க்க விழிவிரிகிறது. எவ்வளவு நுண்மையான சிற்பம். அதன் அருகேயே வள்ளி, தேவசேனா சமேதராய் அருட்காட்சி தருகிறார். திருப்பழனம் செல்லுங்கள். உங்கள் வாழ்வு கனியும் பாருங்கள். தஞ்சாவூரிலிருந்து திருவையாறை அடைந்து அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 6 கி.மீ. தொலைவில் திருப்பழனம் உள்ளது.

படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்

கிருஷ்ணா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்