SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்தர்களைக் காக்கும் பஞ்சவடீஸ்வரர்

2013-12-11@ 16:00:48

சோழவள நாட்டின் பல புண்ணிய க்ஷேத்திரங்களில் கௌரி மாயூர க்ஷேத்திரம் எனும் மயிலாடுதுறைக்கு வடக்கிலும் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு தெற்கிலும் நந்தனாருக்காக நந்தி விலகிய திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோயிலுக்கு கிழக்கிலும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு மேற்கிலும் அமைந்திருக்கிறது, ஆனந்ததாண்டவபுரம்.
இத்தலத்திற்கு பாரிஜாத வனம் என்ற பெயரும் உண்டு.

 பரத்வாஜ முனிவர் பாரிஜாத மரத்தின் அடியில் தவம் செய்து, ஈசனின் கல்யாணத் திருக்கோல காட்சியைக் கண்டார். மேலும் ஆனந்த மகா முனிவர் என்கிற சித்தருக்கு சித்சபேசன் முக மண்டல ஆனந்த தாண்டவம் ஆடி காட்சி அருளியுள்ளார். 63 நாயன்மார்களில் ஒருவராகிய மானக்கஞ்சாற நாயனார் அவதரித்து, முக்தி அடைந்ததும் இவ்வூரிலேயே.

 மானக்கஞ்சாற நாயனார் தன்னுடைய பெண் புண்யவர்த்தினியின் கூந்தலை மாவிரதியார் வேடத்தில் வந்து சிவபெருமான் கேட்க, மனம் கோணாது பெண்ணின் முடியை அரிந்து அளிக்க அதை ஈசன் பஞ்சவடியாக தரித்துக் கொண்ட தலம் இது. பின் ஈசன் புண்யவர்த்தினியின் கூந்தலை வளரச் செய்து விருஷபாரூடராக காட்சியளித்தார். ஆகவே, இத்தல ஈசனுக்கு பஞ்சவடீஸ்வரர் என்றும் ஊருக்கு கஞ்சனூர் என்ற பெயரும் இருந்திருக்கிறது.

நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி காட்சி அளித்ததால் இவ்வூரின் பெயர் ஆனந்த தாண்டவபுரம் என்றே இன்றும் பிரசித்தமாக விளங்குகிறது. சிதம்பரம் நடராஜப் பெருமான் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியவரும் திருவையாறு தியாகப் பிரம்மத்திற்கு ஒப்பானவரும் அவரது காலத்தியவருமான கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த பெருமை பெற்ற ஊர் இது.

கிழக்கு நோக்கிய நான்கு நிலை ராஜகோபுரம் கோயிலின் அழகுக்கு அழகூட்டுகிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே செல்ல, பலிபீடம், கொடிமரம், பிராகாரம், அர்த்த மண்டபம் ஆகியவை உள்ளன.  இம்மண்டபத்தில் ப்ருஹன்நாயகி அம்மன் சந்நதியும் முகத்திற்கு நேராக இடது திருவடியைத் தூக்கி ஆனந்த தாண்டவமாடும் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சந்நதியும் உள்ளன. இரண்டும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.

அடுத்த மண்டபத்தில் மானக்கஞ்சாற நாயனாருக்கு அருள்காட்சி அளித்த சர்வாலங்கார ஸ்ரீஜடாநாத சிவபெருமாள் தெற்கு நோக்கி தரிசனமளிக்கிறார். அவருக்கு அருகில் பக்கத்தில் உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. கருவறையில் கிழக்கு நோக்கி தேஜோமயமான சிவபெருமான் பஞ்சவடீஸ்வரராக லிங்க வடிவில், ஆவுடையார் மீது சர்வ அலங்காரங்களுடன் வீற்றிருந்து பக்த கோடிகளுக்கு எல்லா சௌபாக்கியங்களையும் அளித்து வருகிறார்.

பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்வயம்பு விநாயகரும் பக்கத்தில் சுப்ரமணியரும் தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகிறார்கள்.

வடக்கு பிராகாரத்தில் மண்டபத்துடன் கூடிய சந்நதி கல்யாண சுந்தரி அம்பாளுக்கு. சர்வ அலங்கார பூஷிதையாய் கிழக்கு நோக்கி புன்சிரிப்புடனும் கருணைப் பார்வையோடும் பக்தகோடிகளுக்கு வேண்டியவற்றை பூர்த்தி செய்து அருள்கிறாள். பௌர்ணமி தினத்தில் பக்தைகள் இந்த சந்நதியில் ஸ்தோத்திரங்களை பாடி, துதிக்கிறார்கள்.

தேவக்கோட்டத்தின் வடக்குப் பக்கத்தில், கல்யாணசுந்தரி அம்மன் மண்டபத்திற்கு அருகே தனி சந்நதியில் ஜெயதுர்க்கையம்மன் முகம் பிரகாசிக்க கருணையுடனும், கனிவுடனும் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். கிராமத்தின் பல குடும்பங்களுக்கு இந்த துர்க்கையே குலதெய்வம். துர்க்கை சந்நதிக்கு வடபுறம் சண்டிகேஸ்வரர் வீற்றுள்ளார்.

கிழக்கு பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் பைரவரும் பக்கத்தில் நவகிரக நாயகர்களும், தனித்தனியாக, சனீஸ்வரர், சந்திரன், சூரியன் ஆகியோரும் அருள்கின்றனர். நவகிரக நாயகர்களின் எதிரில் ஆஞ்சநேயர் சந்நதி. கோபுர வாயிலின் தெற்கு பக்கத்தில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தல விருட்சம், பாரிஜாத மரம்.

கோயிலுக்கு எதிரே அம்ருத பிந்து தீர்த்தம்.  கருட பகவான் தன் தாயாரின் தீராத நோயை தீர்க்க தேவலோகம் சென்று அம்ருதம் கொண்டு வந்தபோது ஒரு துளி(பிந்து) இந்த தீர்த்தத்தில் விழுந்ததால் இத்தீர்த்தம் அமிர்த பிந்து எனப் பெயர். இத்தீர்த்தத்தில் நீராடி, ஈசனை மனமாற பிரார்த்தித்தால் குஷ்டரோக நோயும் குணமாவதாக சொல்கிறார்கள்.  

ஆனந்த தாண்டவபுரம் கிராமம், மயிலாடுதுறையில் இருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்