SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்துயிர் பெறுவார்!

2018-01-13@ 10:13:47

பிறந்தது முதல் இன்று வரை கஷ்டப்படுகிறேன். எம்.ஏ. படித்தும் வேலை கிடைக்கவில்லை. பூர்வீகச் சொத்தும் விற்க முடியவில்லை. வாழ்க்கையில் போராடிப் போராடி நடைப்பிணமாக வாழ்கிறேன். கஷ்டம், நஷ்டம், அவமானம், வரும் போகும். ஆனால், அதுவே எனக்கு நிரந்தர சொத்தாகிவிட்டது. வாழ்க்கையில் முன்னேற ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள். இரவிக்குமார், வேப்பம்பட்டு.

விரக்தியின் உச்சத்திற்கு நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் கடிதம் காட்டுகிறது. எதுவுமே இல்லை என்றால் 57 வயது வரை எப்படி ஐயா உயிர் வாழ்கிறீர்கள்? இரண்டு பெண்களைப் பெற்று, அவர்களை நன்றாக படிக்க வைத்து, அதில் ஒருவருக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டீர்கள். இன்னமும் என்ன வேண்டும்? படுத்த படுக்கையாக இருக்கும் தாய்க்கு சேவை செய்வதற்காவது நீங்கள் பயன்படுகிறீர்களா, இல்லையா? பின் ஏன் இந்த விரக்தி? சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சூரிய புக்தி நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் முதலே நல்ல நேரத்தினைக் கண்டு வருகிறீர்கள்.

உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குருவுடன், சனி இணைந்து பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், சுப கிரஹங்கள் ஆன சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் இணைந்து கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் இணைந்திருப்பதும் உங்கள் முன்னேற்றத்தைத் தடை செய்கிறது. உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகளை வாழ்வினில் பின்பற்றுங்கள். அவரது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள். பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமிதோறும் பைரவர் சந்நதியில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வருவதோடு சாலையில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளித்து வாருங்கள். வாழ்வினில் உயர்வடைவீர்கள்.

டிப்ளமோ படிப்பில் அரியர் வைத்திருக்கும் என் மகன் கல்லூரிக்கும் போவதில்லை. வீட்டிற்கும் வருவதில்லை. இதுவரை பலமுறை வீட்டைவிட்டு சென்றுள்ளார். எங்களுக்கு இருப்பது ஒரே மகன். அவரது எதிர்காலம்தான் எங்களுக்கு வாழ்க்கை. அவர் நல்லபடியாக மனம்திருந்தி வாழ வழி கூறுங்கள். மகாலட்சுமி, ஈரோடு.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் எட்டில் அமர்ந்திருப்பதும், குரு மற்றும் சனி ஆகிய இருவரும் வக்ர கதியில் சஞ்சரிப்பதும் பலவீனமான நிலை ஆகும். தற்போதைய கிரஹ நிலையின்படி உங்கள் பிள்ளையை  கட்டுப்படுத்த இயலாது. அவரை அவரது போக்கில் செல்லவிடுங்கள். தற்போது அவர் சந்தித்து வரும் அனுபவங்கள் அவரது எதிர்கால வாழ்விற்கு பயனளிக்கும். வீட்டிற்குத் திரும்பி வரும் அவரை மீண்டும் படிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். தற்போது அவர் தங்கியிருக்கும் இடத்தில் என்ன தொழில் நடக்கிறதோ, அதையே அவர் தனது எதிர்கால தொழிலாக மாற்றிக் கொள்வார்.

22வது வயதில் அவர் சந்திக்கும் பெண் ஒருவரால் அவரது வாழ்க்கைப் பாதை சீரடையும். 26.10.2018 முதல் அவருடைய ஜீவன ஸ்தானம் செயல்படத் துவங்குவதால் இந்த வருட இறுதியில் அவருடைய நடவடிக்கையில் மாற்றத்தை உணர்வீர்கள். சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் பிள்ளையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் கோயிலில் அவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். நல்லதே நடக்கும்.

எனக்குத் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிறது. ஏழு வருடங்களுக்கு முன் நீரிழிவு நோய் உண்டானது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. என் கணவரும் வெளி மாநிலத்தில் தொழில் செய்கிறார். பல வருடங்களாக சூழ்நிலை காரணமாக சேர்ந்த வாழ முடியாமல் இருக்கிறோம். நீங்கள்தான் நல்லவழி காட்ட வேண்டும். சுதா, பேராவூரணி.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தையும், மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் உங்கள் இருவருக்கும் பிள்ளைப்பேறு என்பது நன்றாக உள்ளது. எனினும் தற்போதைய தசாபுக்தியும், கிரஹங்களின் அமர்வு நிலையும் இன்னமும் ஒன்றரை ஆண்டுகளுக்கு துணை புரியாது. உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அவருடைய 45வது வயதிலும், உங்களுடைய 40வது வயதிலும் பிள்ளைப்பேறு அடைவதற்கான வாய்ப்பு கூடி வருகிறது. உங்கள் கணவர் தொழில் ரீதியாக இன்னமும் ஐந்தரை ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரிடும். அதன் பின்னர் அவர் குடும்பத்தோடு இணைந்து வாழ இயலும்.

உங்களுக்கு உண்டாகியுள்ள நீரிழிவு நோயினை முறையான உடற்பயிற்சியின் மூலமும், உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருந்து மாத்திரைகள் மூலமும் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். பிரதி மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்து, அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்டு களித்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கணவர் ஊருக்கு வரும்போது அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். விரைவில் வம்சவிருத்தி காண்பீர்கள்.

என் மகள் 11வது வயதில் ருதுவான நாளில் இருந்து சீரான மாத சுழற்சி கிடையாது. மூன்று நான்கு மாதம் தள்ளிப்போவதும், பின்பு கட்டுப்பாடு இல்லாமல் பெரும்பாடுபடுவதும், ரத்த சோகையினாலும் அவதிப்படுகிறாள். தற்போது கல்லூரியில் படித்து வரும் அவளது கல்வி பாதிக்கப்படுமோ என்று கவலையாக உள்ளது. உரிய பரிகாரம் கூறும்படி வேண்டுகிறேன். பானுமதி, ஆழ்வார்திருநகரி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் சூரியன், புதன், கேதுவின் இணைவும், ஐந்தில் குரு  சனியின் இணைவும் அவரது உடல்நிலையில் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது. எனினும் 28.12.2019க்குள் இந்தப் பிரச்னையை முற்றிலுமாக சரிசெய்துவிட இயலும். உஷ்ணமான உடலமைப்பினைக் கொண்டிருக்கும் உங்கள் மகளை தினமும் இரவு நேரத்தில் பசும்பாலுடன் சுத்தமான தேன் கலந்து அருந்தி வரச் சொல்லுங்கள்.

அதேபோல காலை எழுந்தவுடன் நீராகாரம் சிறிதளவு பருகி வருவதும் நல்லது. ஆங்கில மருந்துகளை குறைத்துக்கொண்டு சித்த மருத்துவ முறையை பின்பற்றி வாருங்கள். உங்கள் ஊரில் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் நரசிம்ம ஸ்வாமி சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். உடல்நிலை சீரடையும்.

“ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநாம் அபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.”


முப்பத்து இரண்டு வயதாகும் என் மகன் அரசுத் தேர்வுகளை எழுதியும் தேர்வாகவில்லை. தனியார் துறைக்கு முயற்சிக்க மறுக்கிறான். திருமணம் வேண்டாம் என்கிறான். டி.வி. பார்ப்பதும், தூங்குவதுமாக இருக்கிறான். ஒரே வீட்டில் எதிரிகளாக வாழ்ந்து வருகிறோம். அவன் எதிர்காலத்தைப் பற்றி கவலையாக உள்ளது.
மாணிக்கம் மூர்த்தி, வாலாஜாபேட்டை.


மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குருதசை நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவான் என்பதால், குரு தசை முடிவடைவதற்குள் அவர் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் சனி  கேதுவின் நிலை மனநிலையில் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. அவர் வேலை ஏதுமின்றி வீட்டில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நாளும் அவருடைய எதிர்காலத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை பெற்றோர் நீங்கள் உணர்வதோடு அவருக்கும் சொல்லிப் புரிய வையுங்கள். சனி வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் அடுத்து வரவுள்ள தசையில் புதிதாக வேலை வாய்ப்பு கிடைப்பது கடினம்.

அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் புதனும், சுக்கிரனும் இணைந்து அமர்ந்திருப்பது நல்ல பலமான அமைப்பே ஆகும். நிதி நிறுவனம் அல்லது பணம் புழங்கும் இடங்களில் இவரது உத்யோகம் அமையும். அரசுத்துறைதான் வேண்டும் என்று காத்திராமல் தனியார் வங்கிகளில் வேலைக்கு முயற்சித்தால் தற்போதைய கிரக சூழலின்படி உத்யோகம் கிடைத்துவிடும். சோம்பல்தன்மையை விடுத்து உடனடியாக ஒரு உத்யோகத்தை அமைத்துக் கொள்ள அறிவுறுத்துங்கள். ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அவரை அழைத்துச் சென்று கருட கம்பத்தில் விளக்கேற்றி ஆலயத்தை வலம் வந்து வணங்கச் செய்யுங்கள். அனுமனின் அருளால் 03.10.2018ற்குள் உத்யோகம் கிடைத்துவிடும்.

அறுபத்தொன்பது வயதாகும் நான் ஐந்து வருடங்களுக்கு முன் மனைவியை இழந்து விட்டேன். என்னுடைய இரண்டு மகன்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டனர். சொத்து, பணவசதி, தேக ஆரோக்யத்திற்கு குறைவில்லை. வாழ்க்கைத்துணை வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்கான பிராப்தம் எனக்கு உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ராமச்சந்திரன், சென்னை.

கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில், பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் சனி வக்ர கதியில் அமர்ந்துள்ளார். நிராதரவாக தன்னைத் தனிமையில் விட்டிருக்கும் பிள்ளைகளின் மீதான உங்களின் வருத்தம் உங்களை இவ்வாறு யோசிக்க வைத்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல உங்கள் ஜாதகப்படி உங்கள் தேக ஆரோக்கியத்திற்கும், தீர்க்காயுளுக்கும் எந்தவிதமான குறைவும் இல்லை. அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேதுவின் அமர்வு நிலையும், தற்போதைய கிரஹ சூழலும் தாம்பத்திய வழியில் உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.

உங்களுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு துணை தேவை என்ற உங்களின் எண்ணம் நியாயமே. உங்களைப் போன்றே மனைவியை இழந்து, எவருடைய துணையுமின்றி ஏழ்மை நிலையில் தனிமையில் வாழும் ஒரு ஆண்பிள்ளையை 10.02.2018ற்குப் பின் ஒரு பெருமாள் கோயிலில் சந்திப்பீர்கள். உங்களை விட வயதில் குறைந்த அந்த மனிதரை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். அவருடன் உரையாடும்போது உங்கள் கவலைகளை மறப்பீர்கள். உலகம் இன்பமயமாகத் தோன்றும். வைகுண்ட ஏகாதசியில் பிறந்த நீங்கள் பெருமாளை வணங்கி வாருங்கள். மனத்தெளிவு பெறுவீர்கள்.

இருபத்தைந்து வயதாகும் என் மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது மனநலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறாள். 2015ம் ஆண்டில் 30 அடி பள்ளத்தில் விழுந்து முதுகு தண்டுவட ஆப்ரேஷன் ஆகி நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டாள். கஷ்டம் மேல் கஷ்டம் வந்து வேதனைப் படுகிறோம். நல்ல வழி காட்டுங்கள். ஜெயராம், பெங்களூரு.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது. 2010ம் ஆண்டு வாக்கில், செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வந்த காலத்தில் அவர் சந்தித்த சம்பவம் அவரது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. மனநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதனை சரி செய்ய முயற்சிக்காமல் நீங்கள் மருந்து மாத்திரைகளை மட்டும் நம்பியது அவரது மனநிலையில் பாதிப்பினை உருவாக்கி உள்ளது. எளிதில் முடிய வேண்டிய சிறிய விஷயம் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.

அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் அவரால் மீண்டும் நன்றாக நடமாட இயலும். மனநோய்க்கான மாத்திரைகளை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து வாருங்கள். 18.05.2019க்குள் அவரை முழுமையாக குணப்படுத்த முடியும். நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர்களின் ஆலோசனையை சரிவர பின்பற்றி வாருங்கள். ஞாயிறு தோறும் மாலையில் ராகு காலம் முடிவுறும் தருவாயில் சரபேஸ்வரரை கீழேயுள்ள துதியினைச் சொல்லி வணங்கி வாருங்கள். இறைவனின் அருளால் விரைவில் புத்துயிர் பெறுவார்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2018

  12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்