SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கசப்பான நினைவுகளைப் போக்கி வசந்தத்தை கொண்டு வருவது போகி

2018-01-13@ 09:46:34

தமிழ் மரபு சார்ந்த அடையாளங்களாக கருதப்படுகின்ற ஏறு தழுவுதல், உறி அடித்தல், இளவட்டக்கல் வரிசையில் தவறாமல் இடம் பெற வேண்டியது போகிப் பண்டிகை. ஆனால், யார் கண் பட்டதோ... தெரியவில்லை, 1980களின் தொடக்கத்தில், இந்தப் பண்டிகைக்கு இருந்த ‘மவுசு’ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குறைந்து கொண்டே போகிறது. ‘சுற்றுச்சூழல் மாசு’ என்பது காரணமாக கூறப்பட்டாலும், மூத்த தலைமுறையினர் இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை; ஏனென்றால், அவர்களின் காலக்கட்டத்தில் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்றைய தலைமுறையினருக்குப் போகி என்பது பத்தோடு பதினொன்று என்ற நிலையில்தான் இருக்கிறது.

தமிழ் நாட்காட்டி அடிப்படையில், மார்கழி மாதத்தின் கடைசி நாளில், வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இப்பண்டிகை ‘போக்கி' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டது. அதாவது, கடந்தகால வாழ்வில் அனுபவித்த துயரங்கள், எதிர்கொண்ட தீமைகள், மறக்கக்கூடிய கசப்பான நினைவுகள் ஆகியவற்றைப் போக்கி, வசந்தத்தை எல்லோர் வாழ்வில் கொண்டு வருவதால், ‘போக்கி’ என்ற பெயர் பெற்றது. மக்களின் பேச்சு வழக்கு காரணமாக, நாளடைவில் ‘போக்கி’ என்பது ‘போகி’ என மருவியதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கால வழக்கப்படி, வருடத்தின் கடைசி நாள் என்பதால், நடைபெற்ற மங்கல நிகழ்வுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் என ஒரு சாரார் இந்நாளிற்கு விளக்கம் சொல்கின்றனர்.

தேவர்களின் அதிபதியாக கருதப்படும் இந்திரனுக்குப் ‘போகி’ என்றொரு பெயரும் இருக்கிறது. அவன் உட்பட, பல கடவுளர்களை வழிபட்டு சிறப்பு செய்யும் நாள் என்பதாலும், இப்பெயர் வந்ததாக சொல்லிக்கொள்கிறார்கள். மண் சார்ந்த தமிழின் அடையாளமான பொங்கல் தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநில மக்களாலும் கொண்டாடப்படுவது தமிழ் ‘மா’நிலத்தின் சிறப்பு. மார்கழியில், இறுதி நாளான போகி அன்று சில கிராமங்களில் பெண்கள் ஒன்றுகூடி, ஒப்பாரி வைக்கும் வழக்கம் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இது குறித்து ஆராய்ந்த  வரலாற்று அறிஞர்கள் ‘‘ புத்தர் பெருமான் உயிர்நீத்த நாள்தான் போகியாக அனுசரிக்கப்படுகிறது. அவர் நினைவாகத்தான் ஒப்பாரி வைக்கும் பழக்கம் தொடங்கியது’ என்கின்றனர்.

அதே நேரத்தில் வட மாவட்டங்களில் போகியன்று அதிகாலை அந்த ஆண்டு இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நினைவாக ஒப்பாரி வைப்பது இன்றும் தொடரும் வழக்கம். அடுத்து, தமிழர்களிடையே தொன்று தொட்டு வரும் மரபான ‘காப்புக்கட்டு’ நடைபெறும். இந்நிகழ்வில், மாவிலை, வேம்பு, சிறுகண் பீளை(பொங்கல் பூ), ஆவாரம், தும்பை, பிரண்டை, துளசி ஆகியவற்றின் இலை, பூ, தண்டு ஆகியவற்றை கொண்டு வீடுகளை அலங்கரிப்பார்கள். இந்த மூலிகைகளால் வீட்டில் உள்ளோர் நலன் பேணப்படும் என்பது நம்பிக்கை. ஆனால் இப்போது பொங்கல் அன்று காலைதான் இந்த அலங்கரிப்புகளை செய்கின்றனர்.
முன்பு போகியன்று,  அதிகாலைப் பொழுதில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும். இதில், குடும்பத்தலைவி முன் நின்று முதல் வாசல் நிலை மீது மஞ்சள், குங்குமம் பூசி, அதன் அருகில் பசுந்தோகை உடைய கரும்பைச் சார்த்தி வைப்பார்.

பின்னர், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்ற அனைவரும் குலதெய்வத்தை வணங்கி மகிழ்வர். இத்தகைய சிறப்பு வாய்ந்த போகிப் பண்டிகை முன்பு கொண்டாட்டமாகவே இருந்துள்ளது. அதாவது, ஆன்மிகம், சமூக பழக்கம் ஆகியவற்றைக் கடந்து சிறுவர்கள், இளைஞர்கள் என ஆண், பெண் என வேறுபாடின்றி பலரின் விருப்பமாக திகழ்ந்தது. அதற்காக, ஒரு மாதத்துக்கு முன்பே, பழைய பொருட்களை சேகரிக்க தொடங்கி விடுவார்கள். செடி, கொடிகளும்சேகரிப்பு பட்டியலில் இருக்கும். சமூக மாற்றத்தால் போகிக்கு பழைய டயர், டியூப் ‘சேகரிக்கும் பழக்கம்’ தொடங்கியது. சைக்கிள் கடை நடத்தும் அண்ணன்களிடம், அரிதாக யெஸ்டி, ஜாவா, புல்லட் வைத்திருக்கும் ஊர்களில் இருப்பவர்களிடம் கெஞ்சி உபயோகமில்லாத டயர், கந்தலாய் கிழிந்து போன டியூப் ஆகியவற்றை சேகரிப்பார்கள்.

இது ஒருபுறம் நடைபெற, சேகரித்தவற்றைப் பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் செய்யப்படும். ஏனென்றால், ஒட்டுமொத்த ஊரும் ‘சேகரிக்கும் படலத்தில்’ ஈடுபட்டு இருக்கும். வாலிபப் பட்டாளம் கைவரிசையால், விறகு தொட்டிகளில் இருந்து, சுள்ளி, சவுக்கு கட்டை கணிசமாக மாயமாகும். இதைத் தடுப்பதற்காகவே, விறகு தொட்டி உரிமையாளர்கள் காவலைப் பலப்படுத்துவார்கள். கண் விழிப்பார்கள். ஒரு வழியாக, ‘சேகரிப்பு படலம்’ முடிய, யார் ‘முதலில் கொளுத்துவது?’ என்பதில் போட்டாபோட்டி இருக்கும். எனவே, கோழி தூக்கம் போட்டும், தூங்காமல் தூங்கியும், இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வந்தும் நள்ளிரவிலும் அந்தப் பகுதியில், போகி கொளுத்தப்படும்.

போகி ஊர்வலம்:

எரியும் நெருப்பை சுற்றி சிறுவர்கள் போகி மேளம் எனப்படும் சிறுபறையை அடிப்பார்கள். பின்னர் ஒவ்வொரு வீடாக உலா சென்று மற்றவர்களை எழுப்புவார்கள். இந்த உலா படலத்தில், கொழுந்து விட்டு எரியும் டூ வீலர் டயர் ஒன்றை கொம்பில் தொங்கவிட்டு, அதிலுள்ள கம்பிகள் முழுவதுமாக வெளியே தெரியும்வரை வீதிவீதியாக பவனி வருபவர்கள்தான் போகி கொண்டாட்டத்தின் ‘ஹீரோ’க்கள் காலம் செல்லச்செல்ல, கொஞ்சமாக இருந்த இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது போல் டயர், ரப்பர் ஆகியவற்றை அதிகமாக எரித்து போகியின் அடையாளத்தை மாற்றிவிட்டனர். அதனால் காற்று மாசு, மக்கள் நலம் கெடவே அரசு விழித்துக் கொண்டு ‘புகையில்லா போகி’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நகர்மயமாக்கல், கட்டுப்பாடுகள் என பல்வேறு சமூகமாற்றங்களால் இப்போது ‘பாரம்பரிய போகி’ ‘பேருக்குப் போகி’ என்றாகிவிட்டது.

ச.விஜயகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்