SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டைஃபாய்டு பரவ சனிப்பெயர்ச்சி காரணமா?

2018-01-12@ 16:53:06

ஜோதிடம் என்கிற மருத்துவம் - 39

சூரிய நமஸ்காரம் என்பது உடல் நலத்திற்காக மட்டுமின்றி, மன நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில் சூரியனின் மகனான சனி பகவானின் வழிபாடு குறித்து காண்போம். கடந்த மாதத்தில் எங்கு பார்த்தாலும் சனிப் பெயர்ச்சி குறித்த பரபரப்பு தொற்றியிருந்தது. பேருந்தில் உடன் பயணிக்கும் பயணி முதல் அலுவலகத்தில் உடன் பணி செய்வோர் உட்பட எல்லோர் மத்தியிலும் சனிப் பெயர்ச்சி குறித்த பேச்சே பிரதான இடத்தினைப் பிடித்தது. சனி பகவானின் பெயர்ச்சி குறித்த பலனை அறிந்து கொள்ள ஜோதிடர்களை நாடியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் கூடிக் கொண்டே செல்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சாதாரண மக்கள்கூட தங்களுக்கு சாதாரணமாக உண்டாகும் பாதிப்பிற்கும் சனிப் பெயர்ச்சிதான் காரணம் என்று சொல்வதைக் கேட்கும்போது வேடிக்கையாக இருக்கும். “சனிப்பெயர்ச்சி வர்றதுக்கு முன்னாடியே அதோட வேலைய காட்டிடிச்சிபா...

வீட்ல எல்லோருக்கும் ஒரே ஜூரம், மாத்தி மாத்தி உடம்பு சரியில்லாம போவுது”, “சார், ரிஷப ராசி எனக்கு... அஷ்டமத்துச் சனி ஆரம்பம்... கையில கண்ணாடி கிழிச்சிடுச்சி”, “கண்டச்சனி ஆரம்பம்னு தெரிஞ்சே வண்டி எடுத்துட்டு போனேன்... வண்டியிலிருந்து கீழ விழுந்துட்டேன்”, “பாதச் சனி ஆரம்பிக்குது... தொடர்ந்து காலிலேயே அடிபட்டுகிட்டு இருக்கு”, “ஜென்மச் சனின்னு ராசிபலன்ல போட்டிருந்தது, அதேமாதிரி வீட்ல ஒரே பிரச்னைபா” என்று கடந்த மாதம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சனியின் பிரதாபங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. “திருநள்ளாறு போய்ட்டு வரும்போது வேறெங்கும் போகக் கூடாதாமே... பிரசாதத்தகூட கையில கொண்டு வரக் கூடாதாமே” என்று நமக்கு அலைபேசியில் அழைத்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். ஏன் இந்த பயம்? குறிப்பாக இவர்களின் குரல் அதிகமாக ஒலித்தது மருத்துவமனைகளில்தான் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

பனிப் பொழிவின் தாக்கமும், தட்பவெப்பநிலை மாற்றமும் எங்கு பார்த்தாலும் காய்ச்சலைத் தோற்றுவித்திருந்தது. தமிழகம் முழுவதும் பரவலாக ஜுரம் கண்டவர்கள் ஏராளம் பேர். டெங்கு காய்ச்சல் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து தற்போது டைஃபாய்டு ஜுரம் முன்னணியில் இருக்கிறது. குடிநீரின் மூலமாக பரவுகின்ற இந்த ஜுரத்தினை டைஃபாய்டு என்று பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளவே ஒரு வாரம் பிடிக்கும். இந்த காலதாமதத்தினால் உடல்நிலையில் உண்டாகும் சோர்வு நம் மனதினை வெகுவாக பாதிக்கிறது. அதற்குரிய காரணத்தைத் தேடும்போது சனிப் பெயர்ச்சியின் காரணமாகத்தான் டைஃபாய்டு பரவியுள்ளது என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். நமது கவனமின்மையால் நாம் சந்திக்கும் இடர்களுக்கு சனியினை சாக்காக வைத்துக் கொள்கிறோம். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்குக் காரணம் என்ன” என்று அலசப்பட்ட நிகழ்ச்சியில் ‘‘இப்ப நடந்த சனிப் பெயர்ச்சி சரியில்லைங்க” என்று ஒருவர் சொன்னதுதான் உச்சபட்ச ஆச்சரியம்.

வாகனங்களை உபயோகிப்போரின் எண்ணிக்கை உயர உயர, விபத்துகளின் எண்ணிக்கையும் உயருகிறது என்பதுதான் உண்மை. தற்போது நடந்து முடிந்த சனிப் பெயர்ச்சிக்கும், அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதே நிதர்சனம். மருத்துவ ஜோதிடத்தைப் பொறுத்தவரை சனி தனுசு ராசியின் தொடக்க நட்சத்திரமான மூலம் நட்சத்திரக்காலில் வந்து அமரும்போது ஒரு சில தொற்றுநோய்கள் பரவக்கூடும் என்பது உண்மையே. அதிலும் தோல் சம்பந்தமான நோய் அதிகமாகப் பரவலாம். மக்களில் பலரும் அலர்ஜி, அரிப்பு, படை, சொறி முதலான பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். மனிதர்கள் மட்டுமல்லாது நாய், ஆடு, மாடு, கோழி முதலான வளர்ப்புப் பிராணிகளும் சொறி முதலான பிரச்னைகளுக்கு அதிகமாக ஆட்படக் கூடும். வளர்ப்புப் பிராணிகளின் மேல் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தும் நோய் தொற்றுக் கிருமிகள் மெதுவாக அதனை வளர்க்கும் எஜமானனின் மீதும் பாயக்கூடும்.

முக்கியமாக வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் அதிக கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும். அவற்றின் மீது லேசாக ஏதேனும் அலர்ஜி தோன்றினால்கூட உடனடியாக கால்நடை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு செல்வது நல்லது. மனிதனின் உடற்கூறு இயலைப் பொறுத்தவரை கணுக்கால், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, தலைமுடி, தோல் ஆகியவற்றில் சனியின் ஆளுமை செயல்படுகிறது. மூலம் நட்சத்திரக் காலில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் உடலின் மேற்தோலில் அலர்ஜி தோன்றுவதைப்போல, பூராடம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் பற்கள் விழுதல், வாய்ப்புண், முகத்தில் தேமல், முகப் பருக்கள் அதிகமாகுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். பொதுவாக அந்த நேரத்தில் வெளிப்புற அழகிற்கு பாதிப்பு உண்டாகும். உத்திராட நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் தலையில் சிறங்கு, முகத்தில் கொப்புளங்கள் உருவாகுதல், உடல் சூடு அதிகரிப்பதால் தோன்றும் நோய்கள், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் உபாதைகள், வாந்திபேதி, டயேரியா முதலானவை பலரையும் பாதிக்கும்.

அதிலும் தசாபுத்தியின்படி சனியின் ஆதிக்கத்திற்குள் இருப்போருக்கு இதுபோன்ற நோய்கள் வரக்கூடும். இவ்வாறு சனி சஞ்சரிக்கும் நட்சத்திரப் பாதங்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பரவும் நோய்களும் மாறுபடும். அதனை விடுத்து நாம் தினசரி சந்தித்து வரும் பிரச்னைகள் எல்லாவற்றிற்கும் சனிப் பெயர்ச்சியை காரணம் சொல்லக் கூடாது. காலில் முள் குத்துவது முதல் காதில் பனி புகுந்து வலி எடுப்பது வரை எல்லாவற்றிற்கும் சனியின் பெயர்ச்சிதான் காரணம் என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் எந்த ஒரு வேலையும் நடக்காது. செயல்படாமல் சோம்பிக் கிடக்க வேண்டியதுதான். சோம்பல் தன்மைக்கு அதிபதியே சனிதான். எதற்கெடுத்தாலும் சகுனம் பார்த்துக் கொண்டும், பயந்து கொண்டும் செயல்படாமல் அமர்ந்திருப்பவனை சனி எளிதில் வந்து பிடித்துக் கொள்வார் என்பதுதான் உண்மை.

தற்போது நடந்திருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் தோல் அலர்ஜி பிரச்னையே பிரதான இடத்தினைப் பிடிக்கும். குருவின் சொந்த வீடான தனுசு ராசியில் சனி அமர்ந்திருப்பதால் உண்டாகும் இந்தப் பிரச்னையை சரி செய்ய எளிய மருந்து உள்ளது. குருவின் நிறமான மஞ்சளையும், சனிக்கு உரிய எள்ளு தானியத்திலிருந்து உருவாகும் நல்லெண்ணெயையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உச்சி முதல் உள்ளங்கால் வரை எங்கு அலர்ஜி தோன்றினாலும் பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து அதோடு நல்லெண்ணெய் சேர்த்து பசைபோல் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர மூன்று நான்கு நாட்களுக்குள் பிரச்னை முற்றிலும் சரியாகி விடும். பச்சையாக மஞ்சள் கிழங்கு கிடைக்காத தருணத்தில் மஞ்சள் பொடியையும், நல்லெண்ணையையும் கலந்து தடவி வரலாம்.

அதேபோல அன்றாட உணவிலும் இவை இரண்டும் சேர வேண்டியது அவசியம். தினசரி சாப்பாட்டில் சிறிது அளவு மஞ்சள் பொடி சேர்ப்பதால் குடற் புண்கள் குணமாகும். நல்லெண்ணெய் உட்கொள்வதால் உடலில் கொழுப்பு சேரும் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. உடல் நலத்தைக் காக்கும் தன்மையைப் பெற்றிருப்பதால்தான் அதற்கு நல்லெண்ணெய் என்றே பெயர். போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் சாதாரணமாக எள்ளு தானியத்தை செக்கில் அரைத்து உருவாக்கப்படும் நல்லெண்ணெயை தாராளமாக சாப்பிட்டு வாருங்கள். சனிபகவானின் பிரசாதமே நல்லெண்ணெய்தான். இதனை உணர்ந்து கொண்டு அந்தப் பிரசாதத்தை விளக்கேற்றுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், உணவிலும் பயன்படுத்துங்கள். சனியின் அருளினால் ஆயுள் கூடுவதுடன் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

திருக்கோவிலூர் கே.பி. ஹரிபிரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்