SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளத்து ஒளி பிரகாசிக்கும்

2018-01-09@ 15:17:34

என் கணவர் கடந்த 17 வருடங்களாக மனநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். முழுமையாக குணம் அடையாது என்று மருத்துவர்கள்கூறிவிட்டனர். தற்போது தெளிவாகப் பேசி வருகிறார். எம்.சி.ஏ., படித்துள்ள அவருக்கு நல்லகாலம் எப்போது பிறக்கும்? வேலைக்குச் செல்ல பரிகாரம் கூறுங்கள். ஆஷா, புதுச்சேரி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் கேதுவுடன் இணைந்திருப்பது பலவீனமான அம்சம் ஆகும். அவர் பிறந்திருக்கும் நேரத்தில் சந்திர கிரகணத்திற்கு உரிய கிரக அமைப்பும் நிலவுவதால் மருத்துவர்களின் கூற்றுப்படி அவர் நிரந்தரமாக குணமடைய இயலாது. எனினும் லக்னாதிபதி குரு சாதகமாக அமர்ந்திருப்பதால் நிரந்தரமாக மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வருவதன் மூலம் மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.

தற்போதைய கிரகநிலையின் படி 16.03.2018க்கு மேல் உங்களுடைய கண்காணிப்பில் அவர் பணிக்குச் செல்ல இயலும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலோ அல்லது அவரது நண்பர் பணிபுரியும் இடத்திலோ இணைந்து பணியாற்ற இயலும். 19.04.2019 முதல் அவருக்கு குரு தசை துவங்க உள்ளதால் நீங்கள் எதிர்பாராத மாற்றத்தினைஅப்போது காண்பீர்கள். அதுவரை செவ்வாய் கிழமை தோறும் அருகிலுள்ள முருகனின் ஆலயத்திற்கு அவரையும் அழைத்துச் சென்று சந்நதியை ஏழு சுற்றுகள் வலம் வந்து அவரை வணங்கச் செய்யுங்கள். ஆறுமுகனின் திருவருளால் அவரது உள்ளத்து ஒளி பிரகாசிக்கும்.

21 வயது நிரம்பிய என் மகள் கடந்த ஆறு மாதகாலமாக வேற்றுமதத்தைச் சார்ந்த ஒருவரை காதலிப்பதாகக் கூறுகிறாள். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவள் யார் பேச்சையும் கேட்பதில்லை. அவள் அவனை மறந்து மனம் மாற உரியபரிகாரம் சொல்லுங்கள். தனலட்சுமி, சென்னை.


புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனிதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன், புதன், குரு ஆகிய மூன்று கிரகங்கள் இணைந்துள்ளது சாதகமான நிலை அல்ல. லக்னாதிபதி புதன் ஏழாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எல்லா விஷயங்களிலும் அவருடைய செயல்பாடுகள் ஏறுக்கு மாறாகவே அமைந்திருக்கும். எனினும் குருவுடன் இணைந்திருப்பதால் முன்னுக்குப் பின் முரணான அவரது செயல்கள் சாதகமான பலனையே தரும். எந்த ஒரு விஷயத்திலும் அவரை யாராலும் கட்டாயப்படுத்த இயலாது.

அவராகவே செயலில் இறங்கி அனுபவித்து உணர்ந்தால்தான் உண்டு. திருமண விஷயத்திலும் அவ்வாறே நடக்கும். அவருடைய ஜாதகம் வலிமையானது என்பதால் நீங்கள் அவரைப்பற்றிக் கவலைப்படவோ, வருத்தப்படவோ தேவையில்லை. மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரோடு உங்கள் பெண் நல்லபடியாக குடும்பம் நடத்தி நற்பெயரைச் சம்பாதித்துத் தர வேண்டும் என்பதே உங்கள் பிரார்த்தனையாக அமைய வேண்டும். எவர் தடுத்தாலும் 01.08.2018க்குப் பின் உங்கள் மகளின் திருமணம் நடந்து விடும். வரவிருக்கும் மாப்பிள்ளையால் உங்களுக்கு எந்தவிதமான கௌரவக் குறைவும் உண்டாகாது. புதன்கிழமை தோறும் பெருமாளை வணங்கி வாருங்கள். கவலை தீரும்.

எம்.ஈ., படித்து யுனிவர்சிட்டி ரேங்க் பெற்றிருந்தும் நல்ல வேலை கிடைக்கவில்லை. திருமணமும் கைகூடவில்லை. நல்ல உத்யோகம் கிடைக்கவும், திருமணம் கைகூடி வரவும் நல்ல பரிகாரம் கூறுங்கள். பூரணி, பெரம்பலூர்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் சூரியனும், குருவும் இணைந்திருப்பது நல்ல அம்சம் ஆகும். வருகின்ற 09.05.2018ற்குள் நல்ல கௌரவமான உத்யோகம் கிடைத்துவிடும். கிடைக்கின்ற உத்யோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உடன் அரசுத் தேர்விற்கும் பயிற்சி பெற்று வாருங்கள். 30வது வயதில் அரசாங்க உத்யோகத்தில் உயர் பதவியில் அமர்வீர்கள். திருமணத்தைப் பொறுத்தவரையில் உங்கள் ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை.

உங்களை விட கல்வித் தகுதியில் குறைந்த மாப்பிள்ளையாகப் பாருங்கள். உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் எதிர்காலத்திற்கு பக்கபலமாய்த் துணை நிற்கும். ஒருவர் உங்களுக்கு வாழ்க்கைத் துணைவராக அமைவார். உங்கள் ஜாதகம் வலிமையான ஜாதகம் என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரதி வியாழன்தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று ஐந்து அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள துதியினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இறைவனின் அருளால் ஒளிமயமான எதிர்காலம் உங்களை வந்தடையும்.

“மாப்பிணைதழுவியமாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணைதழுவியநமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கிடுக்கண் இல்லையே.”


என் தம்பி அவன் நண்பனுடன் கோயிலுக்குச் சென்று வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. எனது தம்பி நல்லபடியாக வீடு வந்து சேர உரிய பரிகாரம் சொல்லி உதவுங்கள். கார்த்திகேயன், செய்யார்.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தம்பியின் ஜாதகத்தின்படி தற்போது புதன்தசையில் சூரிய புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனோடு, ராகு இணைந்திருக்கும் நிலை அவரது ஸ்திரமற்ற மனநிலையைக் குறிக்கிறது. மேலும், 12ம் பாவத்தில் சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைந்திருப்பது அவரை ஓரிடத்தில் நிலையாக நிற்க விடாமல் கடுமையான அலைச்சலைத் தந்து கொண்டிருக்கும். எனினும் லக்னாதிபதி புதன் வலிமையாக அமர்ந்துள்ளதால் இன்னல்களை அவரால் சமாளிக்க இயலும். கருங்கல் பாறைகள் சூழ்ந்த பகுதியில் உங்கள் தம்பி தற்போது வசித்து வருவதுபோல் தோன்றுகிறது. வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள்அவர் வீடு வந்து சேருவதற்கான வாய்ப்பு உண்டு.

வந்தாலும் மறுபடியும் இவ்வாறு செல்வார். அவர் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்யுங்கள். 33 வயதிற்கு மேல் ஸ்திரபுத்தியோடு ஓரிடத்தில் நிலையாக இருப்பார். அருகிலுள்ள பெருமாள் கோயிலில் பிரதி தமிழ் மாதம் முதல் தேதியன்று அவர் பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள். ஆலய வளாகத்தில் அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற சிற்றுண்டியை வாங்கி தானம் செய்யுங்கள். இல்லாதவர்களுக்கு நீங்கள் இங்கே செய்யும் அன்னதானம் உங்கள் தம்பிக்கு உணவளிக்கும். நாராயணனை நம்புங்கள். தம்பி நலமுடன் வாழ்வார்.

ஆலய அர்ச்சகராக பணிபுரியும் என் அக்கா மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பத்தாம் வகுப்பு வரையே படித்துள்ளான். மனநிலை சரியில்லாத தங்கை ஒருத்தி இருக்கிறாள். இதனாலேயே திருமணம் தடைபடுகிறது. சொந்தமாக வீடு உள்ளது. அவரது திருமணம் நல்லபடியாக நடக்க பரிகாரம் சொல்லுங்கள். ஈஸ்வரிகுமார், சூரமங்கலம்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் (மீனலக்னம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்துள்ள உங்கள் அக்கா மகனின் ஜாதகத்தின் படி தற்போது குரு தசை நடந்து வருகிறது. அவர் பிறந்த தேதியையும், நேரத்தையும் கணக்கிடும்போது நீங்கள் அவருடைய ஜாதகத்தை தவறாக கணித்துள்ளீர்கள் என்பது தெரிய வருகிறது. நீங்கள்அனுப்பியுள்ள ஜாதகத்தில் திருமணத்தைச் சொல்லும் ஏழாம் வீட்டில் சந்திரன், குரு, சனியின் இணைவும், 12ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், செவ்வாயின் இணைவும் உள்ளதால் இதனைக் கடுமையான தோஷ ஜாதகம் என்று பார்க்கின்ற ஜோதிடர்களும், பெண் வீட்டாரும் விலக்கி விடுவார்கள். உண்மையில் இவர் கும்ப லக்னத்தில் பிறந்திருப்பதால் களத்ர தோஷமோ, செவ்வாய் தோஷமோ இவருக்கு இல்லை.

சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தைப் பெண் வீட்டாருக்கு கொடுங்கள். இவரது ஜாதகப்படி வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் முடிவாகிவிடும். சமையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக அமைவார். ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர் அர்ச்சகராக இருக்கும் கோயிலிலேயே இவரது சொந்த செலவில் தயிர்சாதம் நிவேதனம் செய்து வருகின்ற பக்தர்களுக்கு வழங்கி வரச் சொல்லுங்கள். வீட்டு சாஸ்திரிகளின் உதவியோடு சுயம்வரா பார்வதி ஹோமம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். ஆவணி மாதத்திற்குள் திருமணம் முடிவாகிவிடும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகன் சரியாகப் படிப்பதில்லை என்று மாற்றுச் சான்றிதழ் தந்து விட்டார்கள். தற்போது வேறு பள்ளியில் சேர்த்துள்ளோம். பெயர் வைத்தது சரியில்லை என்று ஜோதிடர் சொல்கிறார். இவன் நன்றாக படித்து வாழ்வினில் முன்னேற உரிய பரிகாரம் சொல்லுங்கள். ராஜகோபால், வாணியம்பாடி.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. பொதுவாக ராகு தசையில் சந்திரபுக்தி காலத்தில் மன சஞ்சலம் என்பது சகஜமே. அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 22.03.2018 முதல் தசாபுக்தி மாறுவதால் உங்கள் பிள்ளை 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுவார். தொழில் நுட்பக் கல்வியில் அவரை சேர்க்காதீர்கள். அறிவியல் பாடத்தினை கடினமாக உணர்வார். அக்கவுன்டன்சி குரூப்பில் 11ம் வகுப்பில் சேர்த்து விடுங்கள். 10.04.2019 முதல் துவங்கவுள்ள குரு தசை அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றும். விநாயகப் பெருமானின் பெயரை அவருக்குச் சூட்டியுள்ளீர்கள். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

அவருடைய பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. வராத பாடத்தைப் படிக்கச் சொல்லி அவரை மிகவும் வற்புறுத்தாதீர்கள். அவரது ஜாதகத்தின்படி ஒன்பதாம் வீட்டில் இணைந்துள்ள சூரியன், சந்திரன், புதன், சனி ஆகிய கோள்களும், அவர் பிறந்துள்ள அமாவாசை நாளும் பித்ரு தோஷத்தைக் காட்டுகின்றன. உங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய கடன்களை சரிவரச் செய்து வருகிறீர்களா என்பதை கவனித்து அதனைசரிசெய்ய முயற்சியுங்கள். பிரதி அமாவாசை தோறும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்கள் பிள்ளையை வாழ வைக்கும்.

திருமணமாகி நிறைய கஷ்டத்தையும், அவமானத்தையும் சந்தித்துள்ளேன். என் கணவரின் கடனால் எனது அனைத்து நகைகளையும் விற்று விட்டோம். நான் எனது தாய் வீட்டில் இருக்கிறேன். எனக்கு வேலை கிடைக்கவும், உடல்நிலை நன்றாக இருக்கவும் பரிகாரம் கூறி உதவுங்கள். ஷர்மிளாதேவி, திருவாரூர்.


அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் குருபுக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் சனியுடன் இணைந்து எட்டாம் பாவத்தில் அமர்ந்திருப்பதும், சிரமத்தைத் தரும் ஆறாம் வீட்டில் சூரியன்  செவ்வாயின் இணைவும், 12ம் வீட்டில் சந்திரனின் அமர்வும் பலவீனமானஅம்சம் ஆகும். உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டிய சூழலில் உள்ளீர்கள். அதிர்ஷ்டத்தையும், அடுத்தவர்களின் உதவியையும் (பெற்றோராக இருந்தாலும் கூட) நம்பாமல் உங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சியுங்கள்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் உபாதை உண்டாகக் கூடும் என்பதை உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது. உஷ்ணமான உடல் வாகினைக் கொண்ட நீங்கள் எளிதில் ஜீரணம் அடைகின்ற உணவாக உட்கொள்வது நல்லது. எப்பொழுதும் வெந்நீரை மட்டும் பருகி வாருங்கள். படிப்பிற்கேற்ற வேலைதான் பார்ப்பேன் என்று இருக்காமல் எதுவாக இருந்தாலும் கிடைக்கின்ற வேலையை ஏற்றுக் கொள்ளுங்கள். சென்னை போன்ற பெருநகரத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு அமையும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வீட்டினில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி அம்பிகையை வணங்கி வாருங்கள்.

“யாதேவீஸர்வபூதேஷூ தயா ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யைநமஸ்தஸ்யைநமஸ்தஸ்யைநமோ நம:”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்