SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவையாறு தியாகராஜர் ஆராதனை

2018-01-06@ 09:45:59

தியாகராஜரின் தந்தை ராம பிரம்மம். அவர் சகல சாஸ்திரங்களையும் கற்றவர். ஞானி,  சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர். தம் இல்லத்தில் ஸ்ரீராமபிரானின் அர்ச்சாவதார பகவானைக் கொண்டு ஆராதித்து வந்தார். இவர் திருவையாறு காவிரிக் கரையருகில் வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள். பெரிய மகனுக்கு திருவையாறு தட்சிணாமூர்த்தியின் பெயரான ஜெயபேரரசன் என்ற திருநாமம். இரண்டாவது மகனுக்கு சுந்தரேசன் என்று பெயர். அவன் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டான். மூன்றாவது மகனுக்கு தன்னுடைய ஆராதனை பகவானான ஸ்ரீராமபிரானின் தியாகத்தை நினைத்து மனமுருகி ‘தியாகராஜன்’ என்று பெயரிட்டார். பெரிய மகன் லௌகிகமாக இருந்தான். பூஜை, புனஸ்காரம் பிடிக்காது. தனக்குத் தெரிந்தவரை கொண்டு நாட்டியம் சொல்லிக் கொடுப்பான். பச்சிலை வைத்தியம் செய்வான். இதில் வரும் வருமானத்தைக் கொண்டே ஜீவனம் நடந்தது. தியாகராஜர் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார்.  பரம ராம பக்தராக இருந்தார். தந்தை காலகதி அடைந்தபிறகு இவர் ஸ்ரீராமபிரானை ஆராதிக்கத் தொடங்கினார்.

காலை திருப்பள்ளியெழுச்சியிலிருந்து இரவு டோலோத்சவம் வரை இவரே செய்து வருவார். பஜனைகளும் செய்வார். ராமாயண பாராயணம் செய்வார். அவருக்கு வருமானம் ஒன்றும் கிடையாது. பாகவதர்களைப் பார்த்தால் உணவிற்கு அழைத்து வந்துவிடுவார். இதெல்லாம் ஜெபேசனுக்கு கோபத்தை உண்டாக்கியது. ஒருநாள் மிக கோபத்துடன் இனி உன் குடும்ப பொறுப்பை நீ பார்த்துக்கொள், என் குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். வீட்டில் பாதி இடத்தையும் கொடுத்து, பாத்திரங்களையும் கொடுத்தார். ஸ்ரீராமரே கதி என்று அமர்ந்துவிட்டார். தியாகராஜர் தளரவில்லை அக்ஷய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உஞ்சவிருத்திக்கு சென்றால் 10 பாகவதர்களுக்கு உணவு கிடைக்கும் என்றார். தினமும் அதுவே நடந்தது. பல பாகவதர்கள் வரத்தொடங்கினர். தியாகராஜனுக்கு ஒரே மகள்.

அவர் நலத்தை பகவான் பார்த்துக்கொண்டார். தியாகராஜரின் பக்தரான ஒருவர் தன்னுடைய மகனுக்கு இவர் மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். சிஷ்யர்களின் உதவியால் திருமணம் நடந்தது. தியாகராஜரின் கீர்த்தனங்களும் இப்பொழுது பிரசித்தி பெற்றுவிட்டன. மகாராஜாவே தன் அவைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் தியாகராஜர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஸ்ரீராம கைங்கர்யங்கள் அரசரின் கட்டளையால் தடைபடும் என்று நினைத்தார். ஸ்ரீராமருக்கு மட்டுமே தன் கைங்கர்யங்கள் என்பதில் திடமாக இருந்தார். எனவே ராம சேவையை விட்டு அவைக்கு வர இயலாது என்று கூறி மறுத்துவிட்டார். இதைப் பார்த்ததும் ஜெபேசனுக்கு மிகக் கோபம் வந்தது. அரசனைப்பற்றி பாடி சன்மானம் பெற அனைவரும் ஏங்கும் நிலையில் அரசன் அழைத்தும் நீ போக மறுத்து விட்டாயே? உன் பின் நானும் வந்திருப்பேன். எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். எல்லாவற்றையும் உன் முட்டாள் தனத்தினால் கெடுத்துவிட்டாயே என்று கத்தினான். அவன் கோபமெல்லாம் ஸ்ரீராமபிரான் மீது பாய்ந்தது.

இதற்கெல்லாம் காரணம் இந்த ராமனே என்று கத்தினான். தியாகராஜர் அமைதியாக ஸ்ரீராமபிரானுக்கு டோலோத்சவத்தை முடித்துக்கொண்டு தானும் சென்று படுத்தார். காலை சுப்ரபாதத்திற்கு பகவானை எழுப்ப கதவைத் திறந்தார் தியாகராஜர். அங்கு ஸ்ரீராமபிரானை காணவில்லை. என் ராமன் எங்கே! எங்கே! என்று தேடினார். ராமா! ராமா! என்றே அலறிக் கொண்டிருந்தார். ஒரு வாரமாகியும் உணவு, உறக்கமின்றி ராமா! ராமா! என்றே அழுது கொண்டிருந்தார். அவர் மனைவியும் சாப்பிடவில்லை. அன்றிரவு தியாகராஜரின் கனவில் ஸ்ரீராமபிரான் தோன்றி ‘‘ஜெபேசன் என்னை காவிரியில் போட்டுவிட்டான். ஒரு வாரமாக காவிரியில் வெள்ளம் நிறைய இருந்தமையால் நீ மூழ்கிவிடுவாய் என்பதால் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என்று கூறி தான் இருக்கும் இடத்தை காண்பித்தார். பொழுது விடிந்ததும் தியாகராஜரும், சிஷ்யர்களும் காவிரிக்கு ஓடினார்கள். ஸ்ரீராமபிரானை மீண்டும் இல்லத்திற்கு எழுந்தருளச் செய்தார்.

தியாகராஜர் சாஸ்திரம் அறிந்தவராதலால் ஹோமம், பாராயணம் முதலியவை செய்து பிரதிஷ்டை செய்துதான் ராமபிரானுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதை அறிந்தார். ராமபிரானுக்கும், தியாகராஜனுக்கும் தொண்டு செய்ய காத்திருந்த மக்கள் திரண்டு வந்தனர். பாராயணம் செய்பவர்களுக்கு தட்சணை கொடுப்பதற்கும், தேர் கட்டுவதற்கும், பலர் முன்வந்தனர். தியாகராஜரின் பாடல்களை அவர் முன்னே பாட முடிகிறதே என்று பாடிக்கொண்டு வந்தனர் சிலர். சிலர் பஜனை செய்தனர். தியாகராஜரின் இல்லத்து வாசலில் ஸ்ரீராமபிரான் கம்பீரமாக தேரிலிருந்து இறங்கினான். ஜெபேசனுக்கு கண்களிலிருந்து நீர் வழிந்தது. ஓடி வந்து தியாகராஜரை கட்டிக்கொண்டான். ‘‘நீ சிறியவன். ஆனால் நான் உனக்கு மிகவும் அபசாரம் செய்துவிட்டேன்.

ராமன் என்னைப் பார்த்து சிரிக்கிறான். என்னை காவிரியில் வீசி எறிந்தாயே என்னைப் பார். இப்பொழுது கோலாகலமாக எழுந்தருளியிருக்கிறேன்” என்று என்னைக் கண்டு சிரிக்கிறான். நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நாம் இருவரும் ஒரே குடும்பமாகவே இருந்து ராமருக்கு சேவை செய்யலாம் என்றான். வருத்தப்படாதே அண்ணா! உன்னை பக்திமானாக செய்வதற்காக இது ராமன் லீலை என்றார் தியாகராஜர். தியாகராஜர் மார்கழி மாதம் பகுள பஞ்சமி அன்று ஸ்ரீராமர் திருவடியை அடைந்தார்.  இன்றும் திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை அவர் கீர்த்தனைகளுடன் நடைபெற்று வருகிறது.
 
வைதேகி கிருஷ்ணமாச்சாரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10-12-2018

  10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-12-2018

  09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 08-12-2018

  08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • roborestchina

  சீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்!

 • KungFuBullFighting

  குங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்