ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 49
2018-01-05@ 12:46:49

எரிமேலியில் இருக்குது ‘புத்தன் வீடு’
மகிஷியை அழுதாநதி பகுதியிலே வதம் செய்த ஐயப்பன் எரிமேலி திரும்புகிறார். போரிட்டு களைத்திட்டவர், ஓய்வெடுத்திட இங்கிருக்கும் ஒரு வீட்டிற்குச் செல்கிறார். தங்கள் வீட்டில் ஐயப்பனைக் கண்ட அக்குடும்பத்தினர், அவரை வணங்கி மிகுந்த பாசத்தோடு விருந்தோம்பல் செய்கின்றனர். அவர்களின் உபசாரங்களை ஏற்று, சிறிது ஓய்வுக்குப் பிறகு, ஐயப்பன் சபரிமலைக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவ்வீட்டினர் தனக்களித்த பணிவிடைக்குப் பரிசாகவும், தனது நினைவாகவும் தான் பயன்படுத்திய வாள் ஒன்றை அவர்களிடம் கொடுத்துச் செல்கிறார். தன் நினைவாக ஐயப்பன் கொடுத்த வாள் அந்த ‘புத்தன்’ என்ற பக்தரின் வீட்டில் இன்றும் தனி அறையில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அந்த வாள் இருக்கிற வீட்டை ‘புத்தன் வீடு’ என்றே மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவ்வீடு இன்றளவும் அக்காலத்துப் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எரிமேலி தர்மசாஸ்தா ஆலயத்திலிருந்து, வாபர் சன்னதி செல்லும் சாலையின் இடையே சிறிய சந்தில் இந்த வீடு இருக்கிறது. பலமுறை மாலையிட்டுச் சென்ற ஐயப்ப பக்தர்களும் அறிந்திடாத, தரிசித்திடாத இடமாக இவ்வீடு இருக்கிறது. இம்முறை எரிமேலி செல்லும்போது, அவசியம் ஐயப்பமார்கள், சுவாமி ஐயப்பனை அன்பில் குளித்தெழச் செய்த இந்த ‘புத்தன் வீடு’ மற்றும் ஐயப்பனின் அரிய வாளை தரிசிக்க மறக்க வேண்டாம். ஐயப்பன் வாழ்ந்த வீட்டில் அவர் பயன்படுத்திய ஏடுகள், பொருட்கள் போன்றவை இன்றும் பந்தளத்தில் பாதுகாப்புடன் இருக்கிறது. இவற்றைப் பார்த்து பரவசமடைகிற பக்தர்கள், இதைப்போலவே எரிமேலியில் இருக்கிற புத்தன் வீட்டையும் அவசியம் பார்த்து விட்டு வர வேண்டும். இந்த புத்தன் வீட்டை பார்த்துத் திரும்புகிற பக்தரின் இதயத்தில், ஒரு வித பக்தி பரவசம் நிரம்பி வழிகிற சுகானுபவம் நிச்சயம் கிடைக்கும்.
(நாளையும் மலையேறுவோம்...)