SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்களைத் தூய்மையாக்குங்கள்!

2017-12-30@ 10:44:18

உங்கள் கண்களில் உள்ள உத்திரமா? அல்லது பிறர் கண்களிலுள்ள துரும்பா? எது  முதலாவது அகற்றப்பட வேண்டும்? முதலாவது உங்கள் கண்களிலுள்ள  உத்திரத்தை எடுத்துப் போடுங்கள். உங்களை மற்றவர்கள் குற்றம் சாட்டுவது எளிது.  ஆனால், தனது தவறுகளை உணர்கின்றவர் யார்? இப்படிப்பட்ட தங்களது  குறைபாடுகளையும், தவறுகளையும். குற்றங்களையும் உணர்வதில்லை. உணர  விரும்புவதும் இல்லை. தங்களை நேர்மையானவர் என ஆக்கிக்கொண்டு  முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல தங்களுடைய குறைகளை  மறைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் உங்கள் நேர்மையான வாழ்வைப்  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

‘‘நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள்.  ஆனால், அவற்றின் உட்புறத்தையோ, கொள்ளைப் பொருட்களாலும், தன்னல  விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத்  தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும். ‘‘நீங்கள்  வெள்ளையடித்த கல்லறைக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத்  தோற்றமளிக்கின்றன. அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும், எல்லா  வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே  மக்களுக்கு நேர்மையாளராய் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால், உள்ளேயோ  போலித்தனமும், நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.’’ - (மத்தேயு  23:25-28)

நீங்கள் இரண்டு கண்களால் உலகத்தைப் பார்க்கிறீர்கள். ஆனால், உலகமோ ஆயிரம்  கண்களால் உங்கள் கண்களில் இருக்கிற உத்திரத்தை நோக்கிக் கொண்டிருக்கிறது.  இறைவனுடைய கண்களும்  அலகையினுடைய கண்களும் உங்களைப் பார்த்துக்  கொண்டிருக்கின்றன. ஒருவர் தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து  பொதுச்சொத்திலிருந்து அபகரித்துத் தனக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கும்  பகிர்ந்துகொடுக்கும் பாவச் செயலைச் செய்பவராக இருந்தால் அவர் அந்தப் பாவச்  செயலில் இருந்து விடுபட்டு வெளியில் வர அவர்களுக்காக இறைவனிடம்  கண்ணீரோடு மன்றாடுங்கள்.

உலகத்தில் வாழ்வது கொஞ்ச காலம்தான். ஏன் மனக்கசப்பையும்,  பழிவாங்குதலையும், வைராக்கியத்தையும் உள்ளத்தில் வைத்துக்கொண்டு  நம்முடைய வாழ்க்கையை நாமே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்? இறை  ஒன்றிப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமானால் நம் உள்ளத்தில்  அழுத்திக்கொண்டிருக்கிற சகல பாவ எண்ணங்களையும் அகற்றி விடுங்கள். இதற்கு  மன்னிக்கும் குணமும், பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியமாகும்.

ஒருவர் ஒரு வெள்ளைப் பேப்பரில் ஒரு சிறிய கறுப்புப் புள்ளியை வைத்து, நீங்கள்  எதைப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். அனைவரும் ‘கறுப்புப் புள்ளி’ என்று  சொன்னார்கள். ஆனால், அவர் சொன்னார். ‘கறுப்புப் புள்ளி’ சிறியதுதான். ஆனால்  அதைச்சுற்றி எவ்வளவோ வெண்மையான பகுதிகள் இருக்கின்றன. நீங்கள்  ‘வெள்ளைப்’ பகுதியைப் பார்க்காமல் ஏன் கறுப்புப் புள்ளியைப் பார்க்கின்றீர்கள்?  எப்பொழுதுமே மற்றவர்களிடத்தில் நன்மையானவற்றைப் பாருங்கள். கறுப்புப்  புள்ளிகளை இறைவனிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். உங்களுடைய  வாழ்க்கையிலே கறை திரை, கறுப்புப் புள்ளி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்  என்றார்.

- ‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்